மறதி போயே போச்சு

                                   மறதி போயே போச்சு

மறதி என்பது இயற்கையாக அனைவருக்கும்
இருக்கும்.

முதுமையில் மறதி வரலாம்.

அதிகப்படியான மன அழுத்தத்தினால் மறதி

வரலாம்.ஆனால் எப்போதும் மறந்துவிட்டது..

மறந்துவிட்டது என்று

சொல்வோமானால் எங்கேயோ

சிக்கல் இருக்கிறது

என்றுதான் அர்த்தம்.

மறதி சாதாரண ஆட்களுக்கு வரலாம்.

பேரறிவாளிகளுக்கு வரலாமா?

ஏன் ....வரக்கூடாது என்று ஏதேனும் 

விதிவிலக்கா என்ன ?

இதோ இங்கே ஒருவருக்கு மறதியாம்.

யார் என்று கேட்டால் அசந்து போவீர்கள்.

தாமஸ் ஆல்வா எடிசனுக்குத்தான் மறதியாம்.

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல்

 உருவாக்கங்களை உலகிற்கு அறிமுகம்

செய்து வைத்த அருமையான அறிவியலாளர் இவர்.

இவர் இல்லை என்றால் மின்சாரம் இல்லை.

மின்சாரம் இல்லை என்றால் இன்றைய 

ஆடம்பர வாழ்க்கையும் இல்லை.


பத்து நிமிடம் மின்சாரம் இல்லை என்றால் 

உஸ்சு புஸ்சு என்று உருண்டு கொண்டு

வந்து விடுவோம். இந்த மாபெரும் மனிதர்

எடிசன்  ஒருமுறை மின்கட்டணம்

 செலுத்த அலுவலகம் சென்றாராம். 

 மின் கட்டணம் பெறுபவர்  உங்க பெயரைச் 

சொல்லுங்க என்று கேட்க மலங்க மலங்க 

விழித்திருக்கிறார் எடிசன்.

சட்டென்று பெயர் நினைவுக்கு வரவில்லையாம்.

சற்று நேரம் அமைதியாகிப் போன

 எடிசன் "ஞாபகம் இல்லை" என்றாராம்.

 தன் பெயரே மறந்து போன ஒரு 

ஆளை முதன் முறையாக பார்க்கிற 

அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்த்தார் 

மின் கட்டணம் பெறுவதற்காக 

அமர்ந்திருந்த நபர்..

 ஆ..எடிசன்.... தன் முன்னால் தன் 

பெயரையே மறந்து நின்று கொண்டிருப்பவர் 

 மின்சாரத்தையே கண்டுபிடித்த எடிசன். 

எடிசனைத் தெரியாதவர் இருக்க முடியுமா என்ன?

எடிசனுக்கே மறதியா? கேட்டவருக்கு 

ஆச்சரியமாக இருந்தது.

விளையாட்டாக கூறுகிறாரோ என்று கூட

 நினைத்தார். ஆனால் உண்மை அதுதான்.

எடிசனுக்கு உண்மையாகவே தன் பெயர்

மறந்து போய்விட்டது.


மறதி எடிசனுக்கு மட்டுமல்ல .

சாதாரணமாக எல்லோருக்கும் நிகழக் 

கூடிய ஒன்றுதான்.

இருபத்து நான்கு மணி நேரமும் 

ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று தன் முழு 

கவனத்தையும்ஆராய்ச்சி மீதே

 வைத்திருந்ததால்அதிகப்படியான

மன அழுத்தம் இருந்திருக்கலாம் .

அதனால் எடிசனால் தன் 

பெயரை நினைவில் வைத்துக்கொள்ள 

முடியவில்லை.

மன அழுத்தத்தினால் மறதி

ஏற்படும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

இது பெரிய குற்றமே அல்ல.

மறதி ஏற்பட்ட

நிகழ்வுகள் நமக்கும்  நிகழ்ந்திருக்கும்.

நம்மோடு பள்ளியில் படித்த நண்பரை 

பல ஆண்டுகளுக்குப் பின்னர் 

சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது

 சட்டென்று பெயர் நினைவுக்கு 

வராமல் எத்தனைமுறை தடுமாறியிருப்போம்.

 பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று 

விட்டு என்ன வாங்க வந்தோம் என்பதை

 மறந்து கடைக்காரரைப் பார்த்து

பரிதாபமாக விழித்துக்கொண்டு

நின்றிருப்போம்.

மூக்குக் கண்ணாடியை கண்களிலேயே

போட்டுவிட்டு வீடு முழுவதும் தேடிவிட்டு

வீட்டையே அமர்க்களப்படுத்தியிருப்போம்.


வீட்டுச்சாவியை கைப்பைக்குள் போட்டுவிட்டு

கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேடுவோம்.

இவற்றில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக

நம் வாழ்வில் நிகழவில்லை என்று

யாராவது ஒருவர் சொல்ல முடியுமா?

இவை யாவும் சாதாரணமாக

அனைவர் வாழ்விலும் நிகழக்கூடிய 

நிகழ்வு தான். 


 ஆனால் அடிக்கடி நாம் மறந்துவிட்டது... 

மறந்துவிட்டது என்ற சொல்லைச் 

சொல்வோமானால் சற்று யோசிக்க 

வேண்டிய விசயம்தான்.

எது எப்படியாக இருந்தாலும்  எங்கோ 

ஒரு இடத்தில்  தவறு நடந்திருக்கிறது

என்பதை மட்டும் நாம்

ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

 மாணவப் பருவத்தில் அனைவர் 

வாயிலும் சரளமாக வந்து போகும்  ஒருசொல்

 உண்டென்றால் அது மறந்து விட்டது 

என்பதுதான்.
 

வீட்டுப்பாடம் எழுதி வரவில்லையா ...

மாணவர்கள் வாயிலிருந்து சட்டென்று

வரும் பதில் மறந்துவிட்டது என்பதுதான்.

புத்தகம் கொண்டு வரவில்லையா ....

மறந்துவிட்டது.

தேர்ச்சி அட்டையில் பெற்றோர் கையொப்பம்

வாங்கி வரவில்லையா ....மறந்துவிட்டது.

எதற்கு எடுத்தாலும் மறந்துவிட்டது....

மறந்துவிட்டது....மறந்துவிட்டது.

உண்மையாகவே மறந்துவிட்டதா? 

இல்லை மறந்து விட்டது என்று கூறி 

ஆசிரியரை ஏமாற்றினீர்களா?

 அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும். 


 யாரை ஏமாற்றுவதற்காக இந்த 

சொல்லைப் பயன் படுத்தினீர்களோ தெரியாது.

 ஆனால் ஒன்றை மட்டும் நினைவில்

 வைத்துக் கொள்ளுங்கள்.

 ஏமாற்றுவது நீங்களாக இருந்தாலும்

இதில் ஏமாற்றப்பட்டிருப்பதும் நீங்கள் தான்.

புரிய வில்லையா? உங்கள் தவறை 

மறைப்பதற்குத் தானே மறதி என்ற 

சொல்லை சாட்சிக்கு அழைத்து வந்தீர்கள்.

அதுவே உங்கள் முன்னேற்றத்திற்கு 

முட்டுகட்டையாக முன்னே வந்து நிற்கும்.

  

எத்தனை நாளைக்குத்தான் இந்த மறதி

விளையாட்டு விளையாடுவீர்கள் ?

 கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்

எட்டு நாளைக்குத்தானே !

 ஒருநாள் உண்மை வெளிச்சத்துக்கு

வரத் தானே செய்யும். 

அப்போது முகத்தை எங்கே கொண்டு 

வைத்துக் கொள்ள  முடியும்.  

உண்மையாகவே மறந்து விட்டதா?

 அது ஒன்றும் இமாலய குற்றமே் அல்ல.

 ஆனால் மறதி என்ற போர்வையைப் 

போர்த்திக் கொண்டு நம்மை நாமே 

ஏமாற்றிக் கொள்ளலாமா?


 மறதி என்பது அக்கறை இன்மையால்

வருவது என்று தான் சொல்லுவேன்.

எதிலும் சிரத்தை இல்லாதிருந்தால் 

மறதிதான் ஏற்படும்.

மறதி பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்குத் 

தடையாக அமையும். 

 மறந்துவிட்டது என்ற சொல்லையே 

மறந்துவிட வேண்டும் என்று கங்கணம்

 கட்டுங்கள். தடைகளைத்தாண்டி 

வெற்றிக் கோப்பையைத் தட்டிச் 

செல்ல வேண்டும் என்பதுதானே 

உங்கள் விருப்பம்.

அப்படியானால்  அந்த சொல்லைப் 

பயன்படுத்தி இதுவரை நீங்கள் 

இழந்தது போதும்.இனி இழப்பதற்கு 

ஒன்றும் இல்லை.

 உண்மையாகவே மறந்து விட்டதா? 

நினைவூட்டலுக்காக எழுதி வைக்கும் 

பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 எழுதி வைப்பதை உங்கள் கண்ணில்

 படும்படியான ஓரிடத்தில் வையுங்கள்.

அதைப் பார்க்கும் போது எல்லாம் 

என்னென்ன செய்ய வேண்டும் 

என்பதை அது நினைவுபடுத்தும்.

அடிக்கடி நம் கண்முன் காணும் காட்சி

 ஒரு போதும் மறந்துபோக வாய்ப்பே இல்லை.

 எடுத்து வைக்கப்பட்ட புகைப்படமாக 

நம் கண் முன்னால் வந்து நிற்கும்.


இதுவரை மறதி என்ற சொல்லைப் 

பயன்படுத்தி நாம் இழந்தது போதும்.

இழந்தவை இழந்தவையாகவே இருக்கட்டும்.

 இனி இழப்பு அந்த சொல்லுக்கு 

மட்டுமே ஏற்படட்டும்.

 மறப்பதற்கு ஒன்றும் இல்லை என்று

 உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

 நினைவில் வைத்துக் கொள்ள 

வேண்டிய அத்தனை செயல்களும் 

உங்கள் முன் வரிசை கட்டி வந்து நிற்கும்.

 உங்கள் அகராதியில்  இருந்த மறந்தது விட்டது 

என்ற சொல்லை நீக்கி விட்டீர்களல்லவா?

 உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக

 இருந்த ஒரு எதிரி இன்றோடு வீழ்ந்தான்.

எதிரியை வீழ்த்தி விட்டீர்கள் என்றால் 

வெற்றி உங்களுக்குத்தானே !

இன்றுமுதல்  மறதியோடு கொள்ளுங்கள்

 பிணக்கு.

தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு !

  

Comments

Post a Comment

Popular Posts