மகளிர் தின வாழ்த்து
மகளிர் தின வாழ்த்து
போராளியோ பேராழியோ
விளங்கிட முடியா
வேதம்தான் பெண்ணோ!
மகளாம் மலருனக்கு
பேதை என்ற முதற்பெயர்
தந்தது முத்தமிழோ!
வீசிடும் கையொடு
வீதியில் நடந்து
வினாக்கணை தொடுத்து
விடைதனைக் கேட்டு
விளையாட்டுக் காட்டியவள்
பெதும்பை என்றது இயற்றமிழோ!
மாசிமாதக் கொண்டலாய்
மாலை நேரத் தென்றலாய்
மயங்கிட வைத்து
மனமதைத் துவைத்த
மடவரல் நின்னை
மங்கை என்றது வண்டமிழோ!
உள்ளதை உரைத்து
உவப்பினில் திளைத்து
உன்மத்தம் கொண்டு
ஊமைமொழி பேசி
உலகினை மறந்ததால்
மடந்தை என்றது தீந்தமிழோ!
இமையாய்க் காத்து
இசையாய்க் கலந்து
இதயத்தில் சுமந்து
இனிமையில் நனைந்து
இல்லம் வந்த இளங்கொடி
அரிவை என்றது அருந்தமிழோ!
உள்ளங் கையில்
உறவினைத் தாங்கி
உலகத்தை அறிந்து
உண்மையாய் உழைத்து
உயர்வு தந்தவரை
தெரிவை என்றது நற்றமிழோ!
பேராளுமையோடு
வீட்டாளுமை செய்து
நாட்டாமையாய்
நற்பணி முடித்ததால்
நற்பெயர் தந்து
பேரிளம்பெண் என்றது பைந்தமிழோ!
பெண்ணே!
நற்றுணை உனக்கு
இத்துணை நாமம்
தந்தது தண்டமிழோ?
போராளியோ பேராழியோ
விளங்கிட முடியா
வேதம்தான் பெண்ணோ!
மகளிர் தின நல்வாழ்த்துகள்!
போராளியே பேராழியோ பெண்ணே நீ! ......அம்மையே நீ ர் எழுதிய மகளிர் தின கவிதை மிக அருமை. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteExcellent kavithai Selvabai. God bless you more and more. Happy Women's day to you.
ReplyDeleteமிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநட்பே வியப்பில் ஆழ்த்தியது கவிதை யுந்தன் வரிகள்...
ReplyDeleteVery Very nice
ReplyDeleteமிக மிக அருமை டீச்சர்.நீவீர் வாழ்க வளமுடன் நூறாண்டு.
ReplyDelete