ஆணவம்
ஆணவம்
மகராசி பெயருக்கு ஏற்றபடி
முகராசியானப் பொண்ணு.
பார்க்கிறவர்களைத் திரும்பிப்
பார்க்க வைக்கிற அழகு.
எப்போதும் துருதுருவென்று வருவாள்.
படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்து
வைத்திருந்தாள்.எந்தக் கேள்வி
கேட்டாலும் முதலாளாய் பதில்
சொல்வாள்.
வகுப்பிற்குள் ஆசிரியர்
நுழைந்ததும் ஆசிரியரின் கண்கள்
மகராசியைத்தான் தேடும்.
அன்று முதலாவது பாடவேளை.
தமிழ் பாட வகுப்பு. தமிழாசிரியர் தான்
பள்ளி தலைமையாசிரியர்.
வகுப்பிற்குள் ஆசிரியர் நுழைந்ததும்
மாணவ மாணவிகள் அனைவரும்
எழும்பி நின்று காலை வணக்கம் ஐயா
என்றனர்.
வணக்கம். உட்காருங்கள் என்ற ஆசிரியரின்
கண்கள் தானாக மகராசியைத் தேடின.
மகராசி இருக்கும் இடத்தில் மகராசியைக்
காணவில்லை. ஒரு வேளை தாமதமாக
வருவாளோ...?
என்று கண்கள்
வாசலுக்கு நகர்ந்தன.
அங்கே மகராசியின் தோழி
புவனேஸ்வரி
உள்ளே வரலாமா என்று கேட்கவா....வேண்டாமா
என்பதுபோல தயங்கி தயங்கி வாசலில்
நின்று கொண்டிருந்தாள்.
ஆசிரியர் பார்ப்பதைத் பார்த்ததும்
எங்க அம்மா தண்ணீர் எடுக்க அனுப்பிட்டாங்க சார்.
ஊர் பைப்புல தண்ணீர் வர நேரம்
ஆயிட்டு சார்... அதுதான்
நேரம் ஆயிட்டு சார் "என்று
சொல்லிக் கொண்டிருக்கும்போதே
அழத் தொடங்கினாள்.
"இப்போ எதுக்கு அழுற...
கண்ணை துடைச்சுட்டு போய்
இடத்துல உட்கார் "என்றார் ஆசிரியர்.
விறுவிறுவென்று போய் இடத்தில்
உட்கார்ந்த புவனேஸ்வரி
படபடவென்று பைக்குள்
புத்தகத்தைக் தேடினாள்.
புத்தகத்தைக் காணவில்லை.
அவசர அவசரமாக வந்ததால்
புத்தகத்தை எடுத்து வைக்க மறந்துவிட்டாள்.
"அதற்குள் ஆசிரியர் எல்லாரும்
தமிழ் புத்தகத்தை எடுத்து
மனப்பாட செய்யுளை எல்லாம்
ஒருமுறை சத்தமாக பாராமல்
சொல்லுங்கள் "என்றார் ஆசிரியர்.
ஒரு நான்கு குறள் சொல்லும்வரை அனைவரின்
குரலும் ஓங்கி ஒலித்தது.
மெல்ல மேல்ல தணிந்து போய்க்கொண்டே இருந்தது.
ஐந்தாவது குறள் சொல்லும்போது
துவக்கம் தெரியாமல் அனைவரும்
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துவிட்டு
தலைகுனிந்து கொண்டனர்.
"என்ன ஒருத்தருக்கும் தெரியாதா?"
"மகராசி இல்லல்லா சார்....மகராசி
இருந்தா அவள் கூடச் சேர்ந்து
சொல்லிடுவோம் "என்றான் ஒரு
சேட்டைக்கார மாணவன்.
"ஆமா...நானும் கேட்கணும்
என்றுதான் இருந்தேன்.மகராசி எங்க.....?
காணல...அவள் லீவே எடுக்காமாட்டாளே...!
உடம்புக்கு சரியில்லையா?"
மொத்த வகுப்பையும் பார்த்து கேட்டார்
ஆசிரியர்.
"கமலம் வீடுதான் மகராசி வீட்டு திட்ட
இருக்கு சார் கமலத்திற்குத் தான்
தெரியும் "என்றான் துரை.
"கமலம் எழும்பு ...மகராசி ஏன் வரல....?"
"அவள் பள்ளிகூடத்த விட்டுட்டாளாம் சார்?"
அதைக் கேட்டதும் அனைவரும்
குபீர் என்று சிரித்துவிட்டனர்.
அதுக்கு எதுக்குப் சிரிப்பு?
மகராசி பள்ளிகூடத்தைப்
பிடித்து வைத்துர்ந்தாளாம்.
இப்போ விட்டுட்டாளாம் சார்"
கிண்டலாகக் சொல்லிசிரித்தான் துரை.
ஆசிரியருக்கும் துரை சொன்ன நகைச்சுவை
பிடித்திருந்ததோ என்னவோ கூட
சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டார்.
பின்னர்"என்னது ...மகராசி
பள்ளிக்கூடத்த
விட்டுட்டா ளாமா?
யார் சொன்னது?" என்றார்.
"அவங்க பாட்டி தான் சார்
சொன்னாவ..."
"ஏன்? ....."
"தெரியல சார் "என்று கையை விரித்து
உதட்டைச் பிதுக்கினாள் கமலம்.
அப்படியே அனாறைய பாடவேளை
முடிந்து போனது.
விக்ரம் ஒன்று ஆகியது.
மகராசி பள்ளிக்கு வரவில்லை.
ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வராததால் ஒரு
பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி
விசாரித்து வரச் சொன்னார்
தலைமை ஆசிரியர்.
மகராசி வீட்டுக்குச் சென்று வந்த
அந்த மாணவி் வெட்கத்தோடு
தலைமையாசிரியர் முன்னால் வந்து நின்றாள்.
"மகராசி வீட்டுக்குப் போனனியா?
என்ன சொன்னாங்க?"
விசிரித்தார் ஆசிரியர்.
"மகராசி இனி பள்ளிக்கு வர மாட்டாளாம்...."
" என்ன ..."என்பது போல அந்த
மாணவி முகத்தைப் பார்த்தார்
தலைமை ஆசிரியர்.
"சார் .... மகராசி பள்ளிகூடத்தை விட்டுட்டாளாம்..."
" பள்ளியை விட்டுட்டாளா.?
.மகராசி சொன்னாளா?..."?
"அது... வந்து ....அவுங்க
பாட்டிதான் சொன்னாங்க..."
" ஏன் என்று ஏதாவது சொன்னார்களா?..."
"அவ...அவ...பெரிய மனுசி ஆகிட்டாளாம்...
"சொல்லிவிட்டு
வெட்கப்பட்டாள் அந்த சிறுமி.
"சரி..நீ போ. நான் அவள் அப்பாவிடம்
பேசிக் கொள்கிறேன்."
அந்தப் பிள்ளையை வகுப்பிற்கு
அனுப்பி வைத்தார் தலைமை
ஆசிரியர்.
அன்று மாலையே மகராசி வீட்டிற்குப்
போனார் தலைமை ஆசிரியர்.
ஆசிரியரைக் பார்த்ததும் திண்ணையில்
இருந்த மகராசி யின் பாட்டி...
" ஏல...சுந்தரம் வீட்டுக்கு யாரு வந்துருக்கா என்று
பாரு."..என்று குரல் கொடுத்தபடியே..."வாங்கைய்யா
வாங்க....அந்த குறுங்கட்டிலுல இருங்க...
மவன் இப்பத்தான் வயலுல இருந்து வந்தான்.
பின்னால் கால் கை கழுவிட்டு நிற்ப்பான்
நீங்க இருங்க....இப்போ வந்துருவான் என்று
மகன் வரும் வரை ஆசிரியரிடம் பேச்சு கொடுத்துக்
கொண்டிருந்தார் பாட்டி.
அதற்குள் மகராசியின் அப்பாவும் வந்துவிட்டார்.
வாங்க சார்வாள்....வாங்க
சார்வாளுக்கு ஒரு காப்பிக் தண்ணி
போட்டுக் கொடுக்கப்பிடாது....
போ...காப்பி போட்டு எடுத்துட்டு வா...
என்று மனைவியை
வீட்டிற்கும் விரட்டினார்.
நீங்க இருங்கம்மா....அதெல்லாம் வேண்டாங்க....
இப்பதான் சாப்பிட்டுவிட்டு வந்தேன்
என்று சொல்லும்போதே கண்கள்
வீட்டுக்குள் மகராசியைத்
தேடின.
"சார்வாள், யாரைத் தேடுறாவ
மகராசியையா?"
கேட்ட பாட்டி அத்தோடு நிற்காமல்
"அவள் குத்த வச்சி ஒரு வாரம்
ஆகுது ....
இனி பள்ளிக்கூடம் அனுப்புவது அவ்வளவு
தோதவா இருக்காது" என்று சொல்லியபடி
வெற்றிலை இடிப்பதில் என்பதில்
மும்முரமானார்.
"ஆமாங்க...நானே உங்களுக்கு சொல்லி
அனுப்பியிருக்கணும்.
உங்கள இவ்வளவு தூரம் வர வச்சி
சிரமமபபடுத்தியதற்கு மன்னிக்கணும்"
என்று அம்மா சொல்லியதை ஆமோதிப்பது போல
பேசினார் மகராசியின் அப்பா.
"இதுல என்னங்க சிரமம் இருக்கு?
நல்லா படிக்கிறப் பொண்ணு.
ஒரு வாரமாக பள்ளிக்கு வரலன்னதும்தான்
என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று
கேட்டுட்டுப்
போகணுன்னு வந்தேன்." என்றார் ஆசிரியர்.
வந்தது நல்லது.
இனி அவளைப் பள்ளிக்கு அனுப்பலங்க.
காலம் கெட்டுக்கெடக்கு...பொட்டப்பிள்ள..
ஒண்ணக்கெடக்க ஒண்ணு ஆயிட்டுன்னா?
எவன் கட்டிக்குவான்? என்ற ஒரு கேள்வியைத்
கேட்டுவிட்டு அப்புறம் நீங்க கிளம்பலாம்
என்பதுபோல ஆசிரியர் முகத்தைப்
பார்த்தார்.
"பொட்டப்பிள்ளையை பள்ளிக்கூடம்
அனுப்பிட்டு நாங்க வீட்டுல நெருப்பைப்
கட்டிக்கிட்டு இருக்கணும்... "
ரெண்டு வருசம் வீட்டுல வச்சிகிட்டு
யாதும் தோதுவா மாப்பிள்ளைவீடு
அமைஞ்சுன்னா தள்ளிவிடப் பாக்கணும்"
என்றார் மகராசி யின் பாட்டி.
"என்ன பெரியம்மா பேசுறீங்க?
இந்த காலத்துல போயி
பொட்டப்பிள்ள அம்பும் புள்ளன்னு
பிரிஞ்சி பார்த்துகிட்டு...
பொம்புள புள்ளைக்கு படிப்பு
ரொம்ப அவசியம்.படிப்பு இருந்தா அவள்
தன் காதுல சும்மா நிற்கலாம்."
"நின்றது போதும்...
இவ படிச்சு கலெக்டராவப் போறாளா?"
"ஏன் ஆகமாட்டாளா?
நாட்டுல பாதி கலெக்டர்
பொம்பள பிள்ளைகள்தான்."
"அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க.
நாங்க அவளை பள்ளிக்கூடம்
அனுப்புவதாக இல்ல....
என்ன அப்பு....நீ அந்த கீழத் தோட்டத்தில்
களை வெட்ட ஆள் வரும்னு சொன்னா
இல்லியா? கஞ்சியை குடிச்சிகிட்டு
போய் பாரு....ஆழு இல்லன்னா
நிழலுல உட்கார்ந்து நல்லா
கதை பேசுவாளுக..."
என்று பேச்சின் திசையை மாற்றினார்
பாட்டி.
அது தலைமையாசிரியரை கிளம்பும் என்று
சொல்லாமல் சொல்லுவது போல்
இருந்தது.
"யாதுக்கும் யோசிச்சு முடிவு
எடுங்க...நன்றாக படிக்கிற புள்ள..."
கடைசியாக ஒருமுறை சொல்லிவிட்டுக்
புறப்பட்டார் ஆசிரியர்.
இதுக்குத் தான் காத்திருந்தோம் என்பது போல
"சரி போயிட்டு வாங்க...செல்லத்தாயி
சார்வாள் வீட்டுக்கு தோட்டத்துல
இருந்து பறிச்சுட்டு வந்த காய்கறிகளைக்
குடுத்து அனுப்பு."என்றார் மனைவியைப் பார்த்து
மகராசி யின் அப்பா.
"அதெல்லாம் வேண்டாங்க....
நான் வர்றேன் "என்று கும்பிட்டுவிட்டு
அங்கிருந்து கிளம்பினார்.
கிளம்பும்போது கண்கள் மறுபடியும்
மகராசியைத் தேடின.
நான் இங்கேதான் இருக்கிறேன்
என்பதுபோல கதவில் சாய்ந்து கொண்டு
ஆசிரியரைக் பார்த்து கையெடுத்து
கும்பிட்டாள் மகராசி.
பார்த்தும் பார்க்காதது போல
வீட்டு உள்பக்கம் பார்த்து மொத்தமாக ஒரு
பெரிய கும்பிடு போட்டுவிட்டு
திரும்பினார் ஆசிரியர்.
வாசல் நிலை தலையில் தட்டியது.
"பார்த்துப் போங்க....அந்த காலத்து வீடு.
கொஞ்சம் குனிஞ்சு தான் போகணும் "
என்றார் பாட்டி.
கொஞ்சம் எங்க...நிறையவே குனிய
வேண்டியிருக்கு...நானும் நிலைய மாத்துங்க...
நிலைய மாத்துங்க
என்று கட்டியா கத்துரேன்...சவத்து மனுசன்
எண்ணெக்கி என் பேச்சைக் கேட்டாரு?
மகராசி அம்மா தனது பேச்சை இன்னொரு
திசைக்கு தன் திருப்பினார்.
அதற்குள் ஆசிரியர் தெருவுக்குள் இறங்கி
நடந்து கொண்டிருந்தார்.
மனம் எங்கோ வலிப்பது போல இருந்தது.
ஒரு அருமையான புள்ளையின் வாழ்க்கையை
முடக்கிப் போடப் போகிறார்களே என்ற வருத்தம்
ஒரு ஆசிரியராக நிறையவே வலித்தது.
ஒரு குறிப்பிட்ட அளவு தான்
சொல்ல முடியும். பிறகு பெற்றோர் இஷ்டம்
என்று விடாடுவிடுவதைத் தவிர
இப்போது ஆசிரியருக்கு வேறு வழி தெரியல...
அரசு பெண் புள்ளைகள் கல்விக்கு எவ்வளவோ உதவி
செய்யுது...ஏன் இந்த மக்கள் இப்படி
இருக்கிறார்கள்?
இன்னும் எத்தனை மகராசிகளுக்கு இடைநிற்றல்
நடைபெறப்போகிறதோ?
தன் கையாலாகாத்தனத்தை உணர்ந்து
உள்ளுக்குள்ளே வெம்பினார் ஆசிரியர்.
ஆசிரியர் போன பிறகு
மகராசியும்
"அப்பா...அப்பா...நான் படிக்கப் போறேன்ப்பா..."
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.
ஆனால் அப்பா இறங்கி வருவதாக இல்லை.
இப்படியே...ஒரு ஆறுமாதம் ஆகிவிட்டது.
மகராசிக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதாக பேச்சு அடிபட்டது.
அப்போதுதான் பக்கத்து ஊரிலிருக்கும்
அவளது அத்தை மகன் நவநீதன்
வீட்டிற்கு வந்து போய்
இருக்க ஆரம்பித்தான்.
நவநீதனுக்கு மகராசிமேல ஒரு கண்.
மாமா மகள்தான் ...
இருந்தாலும் மாமா பிடிவாதக்காரர்.
அதுவும் நவநீதன் வேலை வெட்டி
இல்லாம ஊர் சுத்துகிற பய
என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் முயற்சி செய்து பார்ப்போமே
என்று ஏதோ ஒரு கங்கணம் கட்டி களத்தில்
இறங்கினான்.
எதுவும் சரிப்பட்டு வருவதாக தெரியவில்லை.
ஆரம்பத்தில் மகராசி நவநீதனிடம்
மூஞ்சி கொடுத்துப் பேசுவதில்லை.
மகராசியிடம் நெருங்க என்ன செய்யலாம்
என்று யோசித்தான்
பாட்டிக்கு அம்மா வாங்கிக் கொண்டு
கொடுக்கச் சொன்னார்கள் என்று
பண்டமாக வாங்கி வந்து கொடுத்தான்.
மகராசியின் தம்பிமார் இருவரையும்
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்கிறேன்
என்று கூடவே கூட்டிகிட்டு
திரிய ஆரம்பித்தான்.
சிரிக்கப் சிரிக்கப் பேசுவான்.
மகராசியும் மறைந்து நின்று
இதை ரசிக்க ஆரம்பித்தாள்.
மெதுவாக வீட்டிற்குள் இருந்து
மகராசி எட்டி எட்டிப் பார்ப்பதை வைத்து
மகராசியை நம்ம பக்கம் எளிதாக
திருப்பி விடலாம் என்பது
நவநீதனுக்குப் புரிந்து போயிற்று.
அவன் நினைத்தது நடந்தது.
மெல்ல மெல்ல மகராசியும் தம்பிகளிடம்
பேசுவதுபோல் நவநீதனிடம்
பேச ஆரம்பித்தாள்.
நாளடைவில் தம்பிகள்
பள்ளிக்குப் போன பின்னர்
வீட்டிற்கு வந்து தனியாக
மகராசியிடம்பேச ஆரம்பித்தான்.
பேச்சு ஒரு கட்டத்தில் காதலாக
மாறியது.
ஆனாலும் மகராசிக்கு அப்பாவை நினைத்து
உள்ளுக்குள் பயம்.
இந்த பயம் நவநீதனிடமும் இருந்தது.
"மாமா சம்மதிக்கலன்னா உன்னை தூக்கிட்டுப்
போயிடுவேன்" என்றான்.
"எவ்வளவு தூரம்? "கிண்டலாகக் கேட்டாள்
மகராசி.
"எவ்வளவு தூரமும் தூக்குவேன். காலம்
முழுவதும் என் மகராசியைத்
தூக்கி சுமப்பேன்" என்றான்
"ரொம்ப ஆசைதான்"
என்றாள் மகராசி.
"பின்ன ஆசை இல்லாமலா இங்கேயே வந்து
காத்துக்கிடக்கிறேன்" என்றான்.
எப்படி எப்படி எல்லாமோ பேசி
இனி இவன் இல்லை என்றால் வேறு எதைப்
பற்றியும் நினைக்கவிடாமல் செய்து
விட்டான்.
மகராசியின் மீது கொண்ட காதலால்
அம்மாவிடம் சொல்லி மகராசியை பெண்
கேட்டுப் பார்க்கச் சொன்னான்.
நவநீதனுடைய அம்மாவுக்கும்
நம்ம பிறந்த வீட்டுத் தொடர்பு
அத்துப் போகாமல் இருக்குமே என்று ஒரு
ஆசை இருந்தது.
அண்ணணிடம் போய் பெண் கேட்டுப் பார்த்தார்.
" இதுக்குத்தான் மவனை
அத்தம் பார்க்க அனுப்பினியோ...
வேலை சோலியத்த பையனுக்கு
பெண் கொடுக்க மாட்டேன்
என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார் மாமா.
ஆனால் பய மகாராசியிடம் மெதுவாக பேசி
வசியம் பண்ணி வைத்திருந்த ருக்கிறான்
என்பது அவருக்கு இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்
போன பின்னர்தான் அவருக்குத் தெரிய வந்தது.
தையாத்தக்கா...என்று குதிக்க ஆரம்பித்தார்.
" ஒண்ணுக்கு இரண்டு பொம்பிளைகள் இருந்து
பிள்ளைகளை பார்த்துக்கிற
லட்சணம் இதுதானா?
முதலாவது இந்த கிழவியை சொல்லணும்?
உன்னால் தான் இத்தனைக் கேடும் "என்று கையில்
வைத்திருந்த வெற்றிலை கடிதத்தைப்
புடுங்கி தூர வீசினார்.
"உன் புள்ள ஓடுனதுக்கு
என் மேல் எதுக்கு சாடுறா?
ஓடுகாலிப் பிள்ளைய
பெத்து வச்சுகிட்டு....."
மூணுமுணுத்தார் பாட்டி.
"கேட்டியா...கிழவி என்ன சொல்லுறான்னு
கேட்டியா... உன் புள்ள ஓடுகாலியாம்.
உன்னைச் சொல்லணும்...
தலையை சீவிபுடுவேன் . பயபுள்ள
என்ன என்ன கேணப்பய என்று
நெனெச்சானா?"
கையில் வீச்சருவாளைத்
தூக்கிட்டுப் புறப்பட்டார் .
" போனதுதான் போயிட்டா
வேறு யாரு...உங்க தங்கை
மவன்தானே.. எதுக்கு இவ்வளவு ஆத்திரத்துல
நிற்குறிய. ஒரு வீட்டுலேயும் நடக்காததா
நடந்து போச்சு ."மகராசியின் அம்மா
எவ்வளவோ சொல்லி தடுத்துப்
பார்த்தும் அவர் கேட்கிறதாக இல்லை.
தங்கச்சி வீட்டுக்குப் போய்
" இப்போ என் மகளை
வெளியில் விடுறியா இல்லையா..
மறுவாதி கெட்டுப்பேரும்."
என்று காட்டுக் கத்தல்
போட்டுக்கொண்டு நின்றார்.
ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது.
கூனிக்குறுகிப் போனாள் மகராசி.
மகராசி வராமல் நான் இங்கிருந்து
செல்ல மாட்டேன்
என்று பிடிவாதமாக
வெளியில் நின்று
கொண்டிருந்தார்.
நேரம் ஆகிக் கொண்டிருந்தது.
யாரும் வெளியே வருவதாக
தெரியவில்லை.
கதவை ஓங்கி இரண்டு
மிதி மிதித்தார்.
கதவு தானாக திறந்து கொண்டது.
வீட்டுக்குள் நுழைந்தவரை நவநீதன்
தடுத்து நிறுத்தப் பார்த்தான்.
ஒத்த கையில் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு
மகராசியைத்
தலைமுடியைப் பிடித்து இழுத்து
வெளியில் கொண்டு வந்தார்.
"எண்ணே! சின்ன புள்ளைகள்
ஆசைப்பட்டுட்டு...விட்டுருண்ணே "
என்று காலில்
விழுந்த தங்கையை எட்டி
உதைத்து உதறி தள்ளிவிட்டு
பலி கொடுக்க கொண்டு போகும்
ஆட்டை இழுத்துப் போவதுபோல்
மகராசி கொண்டை முடியை
பிடித்து தரதரவென்று இழுத்து
வீட்டிற்குள் போட்டார்.
"அம்மா..."ஓடிப் சென்று அம்மாவைக்
கட்டி பிடித்துக் கொண்டு அழுதாள் மகராசி.
வீடே சாவு வீடு மாதிரி சோகத்தில்
மூழ்கிக் கிடந்தது.
ஊர் பெரியவர்கள் எல்லாம்
சொல்லிப் பார்த்தார்கள்.
" ஓடி போனவளை இனி யார் கட்டுவார்கள்.
பேசாம தங்கச்சி
பையனுக்கே கட்டி வச்சிரும் ஒய்...."என்று ஊர்
பெரியவர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
" என் மூஞ்சில கரியை பூசிட்டு ஓடிட்டா...
அந்த ஓடுகாலியை
இனி வீட்டை விட்டு வெளியில் விடக்கூடாது ...
அப்படியே
கிடந்து சாகட்டும் "என்று கடைசியில்
ஒரு அறையில் வைத்து பூட்டியும்
வைத்துவிட்டார்.
"அம்மா....அப்பாட்ட சொல்லும்மா.
இனி நான் எங்கேயும் போக மாடடேம்மா"
கதறிப் பார்த்தாள்.
பிள்ளை கதறுவுங்க....கதவைத் திறந்து
விடுங்க...கெஞ்சினார் அம்மா.
எதாவது பேசினா சங்க அறுத்து கொலை செய்து புட்டு
ஜெயிலுல போய் இருந்தூருவேன்
வெறி கொண்டவராக கத்தினார்.
இனி என்ன செய்ய முடியும்?
சாயங்காலம் வரை அழுது அழுது பார்த்து
ஒரு கட்டத்தில் அழுகை அப்படியே அடங்கிப்
போனது.
சாப்பாடு தண்ணீர் எல்லாம் ஒரு நாளைக்கு
இரண்டுமுறை கதவு
இடுக்கு வழியாக வைத்து விடும்படி உத்தரவு.
" யாரும் பேச்சு வார்த்தை கொடுக்கக் கூடாது.
மீறி பேசினால் உங்களுக்கும் இதே கதிதான் "
என்று அனைவருக்கும் கடுமையான
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் "என்னை திறந்து விடுங்கள் "என்று
ஒரு நாளைக்கு ஒருமுறை அழுது
பார்த்தாள் மகராசி.
"அம்மா ....அம்மா....எனக்கு தனியாக
இருப்பது பயமா இருக்கும்மா.....எம்மா....
எம்மா என்ற கதறல் சற்று நேரத்தில்
விசும்பலாக அடங்கிப் போகும்.
கதறி கதறி தொண்டைத்தண்ணி எல்லாம் வற்றி
ஒரு விசும்பலில் வந்து நின்றது.
அப்பாவுக்கு தன் கௌரவம்தான் பெரிதாக தெரிந்தது.
.
ஒரு புலம்பலும் விசும்பலும் மட்டும்
எப்போவாவது கேட்கும்.
கிறுக்கி புலம்புகிறாள் என்று
அப்படியே விட்டுவிட்டார்கள்.
நாளடைவில் கிறுக்கி இந்த அறையில் கிடக்கிறாள்
என்று சொல்லும்படி கிறுக்கியாகவே மாறிப்போனாள்.
இல்லை.... இல்லை மாற்றிவிட்டார்கள்.
கிறுக்கி..மகராசி..கிறுக்கி மகராசி என
கிறுக்கியாக்கப்பட்டாள்.
பதிமூன்று வயசு பொண்ணுக்கு
என்ன தெரியும்...?
உலகம் எப்படிப்பட்டது என்பது
தெரியுமா?
பாடித்திரியும் பருவம்.
சிறகுகள் ஒடிக்கப்பட்டு
கூண்டுக்குள் அடைக்கப்பட்டு
கிறுக்கியாகிப் போனாள்
மகராசி.
அன்று ஆணவத்தோடு வீட்டுக்குள்
அடைக்கப்பட்டவள்தான்.
ஆறு ஆண்டுகாலம் வெளி உலக
காற்று தொட்டுப் பார்க்ககூட
அனுமதி கிடைக்கவில்லை.
ஆறு வருடங்களுக்குப்
பிறகு......
இன்றுதான் கதவு திறக்கப்பட்டது.
பிணமாக வீட்டைவிட்டு மறுபடியும் ஒருமுறை
வெளியேறினாள் மகராசி.
அப்பாவின் ஆணவம் மட்டும்
இன்னும் வெளியேற
மறுத்து அவருக்குள்ளே இருந்தது.
Comments
Post a Comment