செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது
செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிக
பெண் என்றால் முன்பின் யோசிக்காமல் ஆத்திரத்தில் ஏதாவது ஒன்றைச் செய்துவிடுவார் என்பது பலரது எண்ணம் .நம்பிகாகை..
நம் நம்பிக்கைக்குத் தீனி போடுவதுபோல பெண் ஒருத்தி ஒரு முடிவு எடுத்து காலத்திற்கும் தீராத பழியைச் சுமந்து நிற்கிறார். வாருங்கள். யார் அந்தப் பெண் என்று பார்த்து விடுவோம்
அந்தப் பெண்ணின் கதையைச் சுமந்து நிற்கும் நீதி வெண்பா பாடல் இதோ உங்களுக்காக...
"செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே - செய்ய ஒரு
நற்குடியைக் காத்த நகுலனை முன் கொன்ற மறைப்
பொற்கொடியைச் சேர் துயரம் போல் "
-நீதிவெண்பா
நாம் செய்யப்போகும் ஒரு செயலால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னரே, எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆராய்ந்து பார்க்காமல் தன் குழந்தையைப் பாதுகாத்த கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்டுப் பின்னால் வருந்திய பார்ப்பனப் பெண்ணைப் போல் நினைந்து நினைந்து வருந்த வேண்டியது ஆகிவிடும்.
இதுதான் பாடலின் பொருள்.
இப்போது யார் அந்தப் பார்ப்பனப் பெண்?
எதற்காக அவள் நினைத்து நினைத்து வருந்தினாள்?
அப்படி அவள் வருந்தும்படியாக என்ன செயல் செய்துவிட்டாள்? என்ற கேள்விகள் வந்து விடை கேட்டு நிற்கின்றன.
அதற்கு விடையாக கிடைத்ததொரு கதை.
பார்ப்பன பெண் ஒருத்தி நெடுநாட்களாக பிள்ளை இல்லாமல் இருந்தாள்.
அந்த மன வருத்தத்தைத் போக்க அவள் ஒரு கீரிப்பிள்ளையைத் தன் குழந்தையாக வளர்த்து வந்தாள் .ஒரு சில வருடங்களில் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இப்போது அவளுக்கு இரண்டு குழந்தைகள்.
இருவரையும் பிரியத்தோடு வளர்த்து வந்தாள்.
ஒருநாள் தன் மகன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீர் எடுத்துவர வெளியே செல்ல வேண்டியிருந்தது. உடனே அந்தப் பெண் அந்தக் கீரிப்பிள்ளையிடம் நான் வரும்வரை தம்பியை நன்றாக பார்த்துக்கொள் என்று கீரிப்பிள்ளையிடம் தன் மகனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் தண்ணீர் எடுக்கச் செல்கிறாள்.
கீரிப்பிள்ளை தம்பிக்குக் காவலாக தொட்டில் அருகில் இருந்துகொண்டிருக்கிறது.
அப்போது ஒரு பாம்பு வீட்டிற்குள் வந்து தொட்டிலில் கிடந்த பாலகனைக் கடிக்கப் பார்த்தது. உடனே கீரிப்பிள்ளை பாம்போடு சண்டையிட்டு அதனைக் கொன்றுவிட்டது.
வெளியில் சென்ற அம்மா வரும் நேரம்ஆகிறது.. வாயெல்லாம் இரத்தத்துடன் வாசலிலேயே காத்திருந்தது கீரிப்பிள்ளை.. அந்தப் பெண் வந்தார். வாயில் இரத்தத்தோடு கீரிப்பிள்ளையைப் பார்த்தார். தன் மகனைக் கொன்றுவிட்டுதான் இந்தக் கீரிப்பிள்ளை வாசலில் வந்து நிற்கிறது என்று தவறாக நினைத்து தண்ணீர் குடத்தைக் கீரிப்பிள்ளை தலையில் ஒரே போடாகப் போட்டு கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்டார்.
பரபரப்புடன் வீட்டிற்குள் சென்று பார்க்கிறார். அஙாகே மகன் அமைதியாக தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் கீழே பாம்பு ஒன்று கடித்துக் குதறி கொல்லப்பட்டுக் கிடக்கிறது.
உண்மை புரிந்து போயிற்று
ஐயோ...என்ன காரியம் செய்தேன்? என் அருமைப் பிள்ளையைக் கொன்று தீராத பழியைப் சுமந்து நிற்கிறேனே என்று
கீரிப்பிள்ளையைப் கதறி அழுதாள்.
முன்பின் யோசிக்காததால் தீராத பழி அவள் மேல் விழுந்தது..
ஒரு செயலை யோசிக்காமல் செய்தால் இப்படித் தீராத பழிதான் வந்து சேரும் என்கிறார் நீதி வெண்பா ஆசிரியர்.
ஆராயாமல் எந்தச் செயலையும் செய்யக்கூடாது என்பதற்கு ஏற்புடைய ஒரு கதையைச் சொல்லி நம்மைப் புரிய வைத்தப் பாங்கு மிகவும் சிறப்பு.
நல்ல பாடல் இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக