கையில் சாட்டையுடன் நாயை அழைக்காதீர்கள்
கையில் சாட்டையுடன் நாயை அழைக்காதீர்கள்
"கையில் சாட்டையுடன் நாயை அழைக்காதீர்கள்"
இது ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் பழமொழி.
அன்பை எதிர்பார்ப்பவர்கள் அச்சத்தை விதைக்கக் கூடாது என்பதுதான் இந்தப் பழமொழி உணர்த்தும் செய்தி.
ஒரு நாயை நம்மிடம் வருமாறு அன்போடு அழைக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் நம் கையில் சாட்டையையும் வைத்திருக்கிறோம். நாய் நம்மை நோக்கி வரும் என்று நினைக்கிறோம்.
ஆனால் இப்போது அந்த நாய்க்கு நம் அழைப்பைவிட நாம் கையில் வைத்திருக்கும் சாட்டைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்.
இப்போது நாய் நம்மை நெருங்கி வருமா? அல்லது அடித்து விடுவாரோ என்று அச்சத்தால் விலகிச் செல்லுமா?
அன்பை விட இங்கு அச்சம்தான் மேலோங்கி நிற்கும்.
அதனால் நாய் நம் பக்கத்தில் வர தயங்கும்.
இதுதான் இந்தப் பழமொழி நமக்குக் கற்றுத்தரும் மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்.
அன்பைக் காட்ட வேண்டிய இடத்தில் அதிகாரத்தைக் காட்டுவதும், நம்பிக்கையை உருவாக்க வேண்டிய இடத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதும் ஒருபோதும் நல்லுறவை வளர்க்காது.
மனிதர்களின் வாழ்க்கையிலும் இதே நிலைதான் பல நேரங்களில் ஏற்படுகிறது. ஒருவரிடம் அன்பை எதிர்பார்த்துக்கொண்டே அவரிடம் கடுமையாகவும் நடந்துகொள்கிறோம். நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதேவேளையில் அவர்களுடைய உணர்வுகளை மதிக்கத் தவறிவிடுகிறோம்.
.நம்மைச் சுற்றி அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நமக்கு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உளவியல் உண்மை புரியவில்லை.
அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மைவிட்டு விலக நாமே காரணம் ஆகிவிடுகிறோம்.
அழைப்பது என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் நிகழ்வதல்ல. நமது அணுகுமுறை, முகபாவம், பேசும் தொனி ஆகிய அனைத்தும் ஒருவருக்கு அழைப்பாகவோ அச்சுறுத்தலாகவோ அமையலாம்.
அன்பும் அதிகாரமும் ஒன்றாக இருக்க முடியுமா?
குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே நேரத்தில், தங்களுடைய விருப்பங்களையும் கருத்துகளையும் அவர்கள் மீது திணிக்கிறார்கள். பிள்ளைகள் தங்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் பேசும்போது குறுக்கிட்டு அறிவுரை கூறுகிறார்கள்; தவறு செய்யும்போது கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
அலுவலகங்களில் உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதிகாரத்தையும் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி அவர்களை வழிநடத்த நினைக்கிறார்கள். அங்கே வேலை நடைபெறலாம்
ஆனால் மனப்பூர்வமான ஈடுபாட்டோடு பணி நடைபெறுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன்.
அச்சத்தால் கிடைப்பது கீழ்ப்படிதல் மட்டுமே .அன்பால் கிடைப்பதுதான் மனப்பூர்வமான ஒத்துழைப்பு.
இனிய சொற்களே இதயத்தின் திறவுகோல்!
இனிமையான சொற்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது, பழுத்த கனியை விட்டுவிட்டுக் காயைப் பறிப்பதற்கு ஒப்பானது என்பார் வள்ளுவர்.
ஒருவரைத் திருத்துவதற்கும் நல்வழிப்படுத்துவதற்கும் கடுமையான சொற்கள்தான் தேவை என்பதில்லை. அன்பான அணுகுமுறையும் கனிவான வார்த்தைகளும் சில நேரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அச்சுறுத்தி வேலை எளிதாக வேலை வாங்கிவிடலாம். ஆனால், விரும்பிச் செயல்பட வைப்பதுதான் உண்மையான தலைமைத்துவம்.
வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, பணியிடத்திலும் சரி, சமூகத்திலும் சரி, மனிதர்களை அணுகும்போது அவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
நாம் சொல்லும் வார்த்தைகள் மட்டுமல்ல, அவற்றைச் சொல்லும் விதமும் முக்கியம்.
ஒரு புன்னகை செய்யும் வேலையைச் சில நேரங்களில் ஆயிரம் அறிவுரைகளால் செய்துவிட முடியாது.
கையிலிருக்கும் சாட்டையைக் கீழே வைத்துவிட்டு நாயை அழைத்துப் பாருங்கள். அது ஓடிவந்து வாலை ஆட்டிக்கொண்டு உங்கள் கண்களையே பார்த்துக்கொண்டு நிற்கும்.
அந்தப் பார்வையில் அன்பு இருக்கும்..
அந்தப் பார்வை உங்களை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.
நம்மைச் சுற்றி மனிதர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.
நம்மை நம்ப வேண்டும் என்று விரும்பினால் நம்பிக்கைக்குரியவையாக நமது பேச்சு இருக்க வேண்டும்.
நம்மை மதிக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் நாம் மற்றவர்களை உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருக்க வேண்டும்.
நாம் பிறரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோமோ அந்த உயரிய பண்பு நம்மிடமும் இருக்க வேண்டும்.
ஒருவரை நெருங்கி வருமாறு அழைத்துக்கொண்டே அவரை அச்சப்படுத்துவதும் அடக்குமுறை செயல்களில் ஈடுபடுவதும் அடிபணிய வைக்க வேண்டும் என்று நினைப்பதும் முரண்பாடான அணுகுமுறை.
எனவே, உறவுகளிடம் அன்பை எதிர்பார்ப்பதற்கு முன்பாக நமது அணுகுமுறைகளைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.
அன்பை எதிர்பார்ப்பவர்கள் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை
நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது..
"கையில் சாட்டையுடன் நாயை அழைக்காதீர்கள்"
ஒற்றை வரியில் உறவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்ற உளவியல் சிந்தனையைச் சொல்லித் தந்த அருமையான பழமொழி.
கருத்துகள்
கருத்துரையிடுக