உனக்கென ஒரு முத்திரை பதித்திடு
உனக்கென ஒரு முத்திரை பதித்திடு
ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு மாறுபட்ட சிந்தனை, ஆற்றல், கனவு என ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்யும்.ஆனால், பலர் தங்கள் தனித்தன்மையை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை மற்றவர்களைப் போலவே வாழவும், செயல்படவும் முயன்று தங்களுக்கான அடையாளத்தைத் தொலைத்துவிடுகின்றனர். தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்திறமைகளையே மறந்து விடுகின்றனர்.பிறரைப் போல வாழ்வது என்பது பின்பற்றுதல்.உனக்கென வாழ்வதுதான் தனித்துவம்.. தனித்துவமாக வாழ்ந்தால்தான் அதுமற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும்.
தன்னம்பிக்கை என்னும் முதற்படி:
உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முதலில் உன்னை நீ நம்ப வேண்டும். பிறருடன் உன்னை ஒப்பிட்டுப் பார்த்தால் உன்னிடம் இருக்கும் சிறப்புகளை உன்னாலேயே உணர முடியாது.‘அவரிடம் இருக்கும் திறமை என்னிடம் இல்லையே!’ என்று வருந்துவதற்குப் பதிலாக, ‘என்னிடம் இருக்கும் தனித்திறமை என்ன?’ என்று சிந்தித்துப் பார்.விவேகானந்தர், மனிதனுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து எழுச்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தன்னம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கையல்ல; நம்மிடம் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, அதைச் செயலாக்கும் ஊக்கசக்தி.
தனித்திறமையை வளர்த்துக்கொள்:
சிலர் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள். சிலர் சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பர் .சிலர் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் தனித்திறன் பெற்றிருப்பர் இன்னும் சிலரோ தங்களது அன்பாலும் பேச்சாலும் பிறர் மனங்களில் இடம்பிடிக்கும் திறன் பெற்றிருப்பர்.ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.. நம் திறமையைக் கண்டறிவதுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து கற்றலும் பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டால் மட்டுமே அத்திறமை ஆற்றலாக மலரும்.
ஒரு விதை ஒரே நாளில் மரமாவதில்லை. மண்ணுக்குள் புதைந்து, மழையையும் வெயிலையும் தாங்கி, மெல்ல மெல்ல வளர்ந்து விருட்சமாகிறது. அதுபோலவே உனது திறமையும் பொறுமையாலும் பயிற்சியாலும் வளர வேண்டும்.
திறமை உனது மூலதனம்; முயற்சி உனது முதலீடு; சாதனை உனது அடையாளம்!பதவி ஒருவருக்கு அதிகாரத்தைத் தரலாம்; பணம் வசதியைத் தரலாம்; நற்பண்பு மட்டுமே ஒருவரை மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைநிறுத்துவதாக இருக்கும்.நீ பேசும் வார்த்தைகளைவிட, நீ நடந்துகொள்ளும் விதமே உன்னைப் பற்றிய ஆழமான அறிமுகத்தைப் பிறருக்கு வழங்குகிறது.
வேறுபட்டுச் சிந்திக்கத் தயங்காதே:
உலகம் ஏற்கெனவே பலரைப் பார்த்துவிட்டது. இன்னொரு நகல் மனிதனைவிட, புதிய சிந்தனையுடன் சமூகத்திற்குப் பயனளிக்கும் மனிதனையே உலகம் எதிர்பார்க்கிறது.பிறரிடமிருந்து கற்றுக்கொள். சாதனையாளர்களின் அனுபவங்களைப் படித்தறிந்து கொள்.நல்ல அறிவுரைகளை ஏற்றுக்கொள். ஆனால், அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் உனது தனித்தன்மையை இழந்துவிடாதே.பிறரின் வெற்றி உனக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
ஒருவரைப் பார்த்து ஊக்கம் பெறுவது தவறல்ல. அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று உன்னை நீ மாற்றிக்கொள்வதுதான் உனது தனித்தன்மையை மறைக்கும்.னஉனது சிந்தனை, உனது அனுபவம், உனது அணுகுமுறை ஆகியவற்றின் வழியாகப் புதிய பாதையை உருவாக்கு. உலகம் உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உன்னை இழந்துவிடாதே!
தொடர்ச்சியான முயற்சியே நிரந்தர அடையாளத்தை உருவாக்கும்!
ஒரே நாளில் எவரும் தனித்த அடையாளத்தைப் பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய செயல்களே காலப்போக்கில் நமது ஆளுமையை வடிவமைக்கின்றன.
தொடர்ந்து கற்றுக்கொள். தவறுகளைத் திருத்திக்கொள். திறமைகளை மேம்படுத்து. உனது கொள்கைகளில் உறுதியாக இரு. வெற்றி தாமதமானாலும் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து போராடு
“சொல்லைவிடச் செயல் வலிமையானது” என்ற முதுமொழி நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான்.
நீ செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும் உனக்கான கையொப்பமாகட்டும். உனது நற்பண்புகள் உனது அறிமுக அட்டையாளமாகட்டும். அடையாளம் என்பது ஒருமுறை பெற்றுக்கொள்ளும் பட்டமல்ல; ஒவ்வொரு நாளும் நமது செயல்களால் செதுக்கப்படும் சிற்பம்!
முடிவுரை
பிறரது நிழலில் வாழ்வதற்காக நீ பிறக்கவில்லை. மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்பதை நிரூபிப்பதில் உனது காலத்தை வீணாக்காதே. நேற்று இருந்த உன்னைவிட இன்று சிறந்தவனாக வளர முயற்சி செயய வேண்டும் .பிறருடன் போட்டியிடுவதைவிட உனது திறமையுடன் போட்டியிடு. பிறரது பாதச்சுவடுகளைப் பின்தொடர்வதைவிட, உனக்கான புதிய பாதையை உருவாக்கு!நீ சென்ற இடத்தில் எல்லாம் உனது நல்ல பண்புகள் பேசப்படட்டும். நீ இல்லாதபோதும் உனது பணிகள் உன்னை நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும்.
உன்னை நீ அறிந்து,
உனது திறமையை வளர்த்துக்கொள்
உனது தனித்தன்மையைப் பாதுகாத்து
உனக்கென ஒரு பாதையை உருவாக்கு
உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு.
உனது முத்திரையை உலகில் பதித்துவிட்டுச் செல்ல தயங்காதே!
கருத்துகள்
கருத்துரையிடுக