நூற்றாண்டு விழா மகிழ்வில் மாதுங்கா
நூற்றாண்டு விழா மகிழ்வில் மாதுங்கா
அனைவர்க்கும் வணக்கம் 🙏
பார்த்துப் பழகிய
முகங்கள்
பேசி உறவாடிய உதடுகள்
ஒற்றைப் புன்னகையோடு
கடந்து போன ஆசிரியர்கள்
கண்டும் காணாமல்
கடந்து போன நிகழ்வுகள்
ஒவ்வொன்றாய்
வரிசைகட்டி வந்து நின்று
முட்டி மோத
உள்ளம் உறவாட
கண்கள் கருத்துப்
பரிமாற்றம் நிகழ்த்த
மலரும் நினைவுகள்
மனதுக்குள் கொஞ்சி விளையாட
நினைவுகள் நெஞ்சைத் தாலாட்ட
மிஞ்சும் மகிழ்வில்
நெஞ்சம் தொலைத்து
மகிழ்வோடு பள்ளியில்
பணியாற்றிய நாட்களைத்
திரும்பிப் பார்க்க
வாய்ப்பளித்தது இந்த
நூற்றாண்டு விழா
மாதுங்கா பள்ளியின்
பழைய நினைவுகள்
ஒவ்வொன்றாய்
கண் முன்னர் வந்து
நலம் விசாரித்து நிற்க
பணிசெய் நாட்களை
அணிசெய் வினைகளை
அளவளாவிய நாட்களை
மனம்
அசைபோட்டுப் பார்க்கிறது
கரும்பலகையோடு
கைகலப்பு நடத்திய
வகுப்பு வாசலில்
வாய்தா கேட்டு
கிஞ்சித்தும் தயக்கமில்லாக்
கண்கள்
கெஞ்சி நிற்கிறது
மாதுங்கா
பள்ளி வெறுமனே
ஒரு சொல்லல்ல ...
இது ஒரு சரித்திரம்
கற்றவர்க்கும் கற்பித்தவர்க்கும்
கல்வித் திறன் மேம்பாட்டு
பயிற்சிப் பாசறை
இது ஒரு கட்டிடம் அல்ல...
கனவுகளை கட்டி எழுப்பிய
கவின்மிகு கனவுத் தளம்!
புத்தகப் படிப்புக்கான
இடம் அல்ல...
புலமைகளின் தேர்வுக் களம்
அறிவு விதை போட்ட இடம் -இது
அகிலம் ஆள
அட்சதையிட்ட இடம்
மடம் தொலைத்து
மதி கொடுத்த இடம்
பணிசெய் ஆசான்களுக்கு
அணிசெய் அடையாளம்
அளித்ததில் மாதுங்கா
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
உண்டு தனியிடம்
இது ...நல்லாளுமைகளைச்
சிம்மாசனமேற்றி
சிறப்புச் செய்த இடம்
வல்லாண்மையொடு
சொல்லாண்மை இணைந்து
கோலோச்சிய இடம்
சொற்போர் பல கண்ட இடம்
சுவைப்போர் களிப்போர்
காட்சிப்போர் நடத்தி
காண்போரைக் கவர்ந்த இடம்
பன்மொழிப் புலமையாளரும்
படியேறிப் பாராட்டிய இடம்
எப்பள்ளியைச் சார்ந்தோர்க்கும்
எம்பள்ளி என்று
உரிமை கொண்டாடும் இடம்
வாய்ப்புகளுக்கு
வாசல் திறந்து வைத்த இடம்
புலமைகள் கூடி
கொண்டாடிய இடம்
கருத்துரு மேடையாக
பயிற்சித் தளமாக
பரிணமித்த இடம்
கற்பித்தலின் படிநிலைகளுக்கு
மாதுங்காதான் அடித்தளம்
கருத்தரங்கம் கலையாக்கம்
மொழியாக்கம்
தமிழ்ப் பாடநூலாக்கம் என்று
ஆக்கப்பணிகளுக்கு
அடித்தளம் இட்ட இடம்
பன்னரு மொழி பேசி
எண்ணரு கலை கற்பித்து
சொல்லரு சுவை கூட்டி
கூடுகைகளும்
கொண்டாட்டமுமாய்
மகிழ்ச்சியில் மாதுங்கா
பெற்றது முதலிடம்
இன்று மாதுங்கா பள்ளிக்கு
அகவை நூறு
நூறாண்டு என்பது
வெறுமனே கழிந்த
நாட்கள் அல்ல
வெற்றிகளால்
சிகரம் தொட்ட நாள்
கோநகர் மும்பை மாநகராட்சி
வரலாற்றுப் பக்கங்களில்
பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட்ட நாள்
தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சியில்
பெரும்பங்காற்றிய
அனைத்து உள்ளங்களையும்
நூற்றாண்டு விழா மேடையில்
நினைவுகூர்கிறேன்
நெஞ்சார வாழ்த்துகிறேன்
வாழ்க மாதுங்கா தமிழ்ப்பள்ளி
தொடரட்டும் பலநூறு ஆண்டுகள்
மாதுங்கா தமிழ்ப் பள்ளியின்
கல்விப்பணி
நனிநன்றி ...
நல்வணக்கம்..
நல்வாழ்த்துகள் 🌹
கருத்துகள்
கருத்துரையிடுக