காத்திரு, காலம் மாறும்
காத்திரு, காலம் மாறும்
"இருள் நிரந்தரம் என்று நினைக்காதே, விடியலுக்காகவே இருள் படைக்கப்பட்டது."
இரவு என்று ஒன்று இருந்தால் பகல் வந்தே ஆக வேண்டும்.
இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒருமுறை துன்பம் வந்துவிட்டது என்று சோர்ந்து போய் எல்லாம் முடிந்தது என்று முடங்கிப் போய்விடக்கூடாது.
அடுத்து வரப்போகும் விடியலுக்காக
காத்திருக்க வேண்டும்.
காத்திருத்தல் என்பது வெறுமனே சும்மா இருப்பதல்ல . அது வளர்ச்சியை நோக்கிய ஒரு பயணம் .
பலர் காத்திருப்பதை சோம்பல் என்று நினைக்கிறார்கள்..
சீன மூங்கில் விதையை போட்டால் முதல் 4 வருடங்கள் மண்ணுக்கு மேலே ஒன்றுமே தெரியாது. நாளும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் எந்தவித மாற்றமும் நிகழாது.
5-வது வருடத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும். 4 வருடங்கள் வரை அது வேரை பலப்படுத்திக் கொண்டே இருக்கும் .
நாமும் அந்தக் காத்திருக்கும் காலத்தில் வேர் போல நம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயி விதைத்த அன்றே அறுவடை செய்ய முடியுமா? மழை,வெயில் என்று அத்தனைப் பருவங்களையும் கடந்து வர வேண்டும்.பயிர் வளர காத்திருக்க வேண்டும். பலன் கொடுக்கும் வரை போதுமான பராமரிப்பு தந்திட வேண்டும்.அந்த காத்திருப்புதான் நல்ல அறுவடையை தரும். நாம் எதிர்பார்த்தப் பலனைத் தந்திடும்.
"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி" -
என்பார் வள்ளுவர்.
முயற்சி இல்லாமல் இருப்பதே பழி, காத்திருப்பது பழி அல்ல.
காலம் யாரையும் அப்படியே விட்டு விடுவதில்லை
இன்று உன்னை அழ வைக்கும் நிகழ்வு நாளை உன்னை மகிழ்விக்கும்
நிகழ்வாக மாறலாம்.
ஆயிரம் முறை தோற்ற பின்னர்தான்
தாமஸ் ஆல்வா எடிசனால் பல்பைக் கண்டுபிடிக்க முடிந்தது.
அவர் சோர்ந்து போகவில்லை . மாறாக அவர் "நான் தோற்கவில்லை, பல்பை உருவாக்காமல் போனதற்கான 1000 வழிகளை கண்டுபிடித்தேன்." என்று தன்னைத்தானே தேற்றி கண்கொண்டு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
"கஷ்டம் வரும் போது கலங்காமல், அது நமக்கான பாடத்தை நடத்த வந்த ஆசிரியர்." என்று கடந்துபோய்விட வேண்டும்.
நமக்கான காலம் ஒருநாள் வந்தே தீரும்.
காத்திருக்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
மூன்று பழக்கங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை என்னும் நீரை ஊற்றி நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கை என்னும் செடியை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எனக்கான காலம் வராமல் போகாது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி வெறுமனே சொல்லிக்கொண்டே இருந்தால் எல்லாம் மாறுமா என்ற கேள்வி எழலாம்.
மாறாது கூடவே மெதுவாக உயர்வை நோக்கிய நகர்ச்சிக்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டும்.பெரிய வெற்றி வரும் வரை காத்திருக்கக்கூடாது. இன்றைய இந்தச் சின்ன முயற்சிதான் நம் செயலுக்கான வேர்.
மூன்றாவதாக அவர்கள் இவர்கள் என்று எவர்களோடும் உன்னை ஒப்பிட்டுப் பார்த்து அந்த இடத்திலேயே நின்றுவிடாதே.பக்கத்து கொடி பூத்துவிட்டது என்று முல்லை அழுவதில்லை. அது அதற்கென்று காலம் வரும் போது அது பூக்கும்.
அதுபோல உங்களுக்கான காலம் வரும். அன்று பலரைப் போன்ற மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையிலும் மலரும். ஒப
இன்று உன் உழைப்புக்கான அங்கீகாரம் பெறாமல் போகலாம்.
யாரும் உன்னைக் கவனிக்காது கடந்து போகலாம். தொடந்து நறுமணம் துரத்தும் போது யாராக இருந்தாலும் திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள்.
உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போனதாக சரித்திரம் இல்லை.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்.
காட்டில் யாரும் பார்க்காத மூலையில் கூட முல்லை பூக்கிறது. அதன் வாசம் காற்றில் பரவுகிறது. எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
உன் நேரமும் வரும்.
நீயும் பூப்போல பூத்துக் குலுங்கும் காலம் வரும்.. பூவின் வாசம் போல உன் திறமையும் எல்லோரையும் சென்றடையும்
காத்திரு, காலம் மாறும்.
காலம் மாறும் போது
சூழ்நிலைகள் மாறும் .
சூழ்நிலைகள் மாறும்போது செயல்கள் எல்லாம் சாதகமாகவே நிகழும்.
நீ வரலாறு ஆவாய்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக