உன் எல்லைகளை நீயே உடைத்தெழு

   உன் எல்லைகளை நீயே உடைத்தெழு 


"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்."  என்பார் விவேகானந்தர் . 

என்னிடம்  ஒரு பலவீனம் இருக்கிறது.

எந்தச் செயலையும் உடனே செய்வதில்லை. நாளை நாளை என்று நாளைக் கடத்திக் கொண்டிருப்பேன்.

அதனால் எதுவும் அதற்காக குறிக்கப்பட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க மாட்டேன் அந்தக் குணம் மட்டும் இல்லாதிருந்தால்...

நான் என்றோ எங்கோ இருந்திருப்பேன். அதுதான் என் பலவீனம்.

என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால்...

எப்போதோ தொழில் தொடங்கி பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன்.

இங்கே பணம் தனது பலவீனமாகிப் போனது.

நான் மட்டும் நன்றாக படித்திருந்தால்....

நல்ல பதவிக்குப் போயிருப்பேன்.

வாழ்க்கை நல்லமுறையில் அமைந்திருக்கும்.

இங்கே பணம் ஒருவரின் பலவீனமாகிப் 

போனது.

இப்படி ஒவ்வொரு வரும் தன்னிடம் எது இல்லையோ அது தங்களது பலவீனம் என நினைத்துக்கொண்டு நமக்கு நாமே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.

அந்த எல்லையை விட்டு வெளிவர மறுக்கிறோம்.


உங்களிடம் இருக்கும் பலம் என்ன என்பதை சற்றே ஆய்வுக்குட்படுத்திப் பாருங்கள்.

நிறைய பலம் இருக்கும். ஒரே ஒரு பலவீனம் மட்டும் தான் இருக்கும்.

அந்த ஒற்றை பலவீனத்தைப் பிடித்துக்கொண்டு என்னால் முடியாது என்று  அந்த எல்லைக்குள் அப்படியே முடங்கிக் கிடக்கலாமா?

ஏன் இருக்கிற பலத்தை வைத்துச் சாதிக்கக்கூடாது?

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றிப் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் . இயற்பியலுக்காக பெரும்பங்களிப்பைச் செய்தவர் அவர். 

இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருந்தவர். சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உடல் பாகங்கள் எதுவுமே அசையாத நிலை. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும். 

பார்ப்பவர்கள் பரிதாபப்படும் நிலைமை அவருடையது.

மொத்த உடம்புமே பலவீனமானது. அதில் ஒன்று மட்டும் அதிக பலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது.

மூளைதான் அவருடைய பலம். சிந்தித்தார். பலவீனங்களை ஒதுங்கிக் தள்ளினார். பலத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.

முழு நேரமும் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவிட்டார். சாதனைகளைப் படைத்தார். அறிவியல் உள்ளவரை அழியாத கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

பலவீனங்கள் இல்லாத மனிதர் இல்லை. இந்த உண்மையை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்னும் உண்மை புரியும்.

பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருந்தது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.

ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்குப் பலமாய் இருக்கும்.

புல்லாங்குழலுக்குத் துளைதான் பலம். துளைகள் இல்லையேல் புல்லாங்குழலில் இசை இல்லை. 

மாறாக மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

துளைகள் இருந்தால் அதில் இசை

வராது.

புல்லாங்குழலுக்குத் துளை பலம்.

மிருதங்கத்திற்குத் துளையே பலவீனம்.


நமது மனதில்  நிறைய திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன . ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது.

அதைக் கண்டறிய நாம் வெளியே வந்துதான் ஆக வேண்டும்.

பிறரைப் பற்றிய நினைப்பு நமது வாழ்க்கை ஓட்டத்தில் வேகத்தடையாக அமைந்துவிடும்.

சில நேரங்களில் பிறரின் விமர்சனங்கள்கூட நம்மை குப்புறத் தள்ளிவிடலாம். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு மேல் என்னால் முடியாது என்று நினைத்தால் அங்கேயே நாம் நின்று விடுவோம். இதைத் தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பலவீனம் இல்லாத மனிதனில்லை.பலவீனத்தைப் பலமாய் மாற்றத் தெரிந்தவர்க்கு தோல்வி என்பது ஒரு போதும் இல்லை. 

“நம்முடைய பலவீனங்களை அறிந்து கொள்வது தோல்வி அல்ல; அவற்றை வெல்ல முயற்சி செய்யாமல் இருப்பதே உண்மையான தோல்வி.”

பலவீனம் என்பது முடிவு அல்ல; அது மாற்றப்பட வேண்டிய ஒரு நிலை மட்டுமே.

ஒருவருக்கு பயம் இருக்கலாம். இன்னொருவருக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கலாம். ஒருவரால் விரைவாகப் பேச முடியாமல் இருக்கலாம். இன்னொருவரால் கணக்கில் சிறந்து விளங்க முடியாமல் இருக்கலாம். இவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கைக்கான தீர்ப்புகள் அல்ல. முயற்சி, பயிற்சி, பொறுமை ஆகியவற்றால் பலவீனங்கள் படிப்படியாகப் பலங்களாக மாறலாம்.

தடைகள் பெரிதாக இருக்கும்போது அவற்றைக் கடந்து பெறுகின்ற வெற்றியானது பெரிதாக இருக்கும்.

தோல்வி நம்முடைய பலவீனத்தைச் சுட்டிக்காட்டலாம்; ஆனால் முயற்சிதான் அதை பலமாக மாற்றுகிறது.

“உங்கள் சூழ்நிலை உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்காது; உங்கள் கனவும் உழைப்புமே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.”

தனிமையைச் சிந்தனையாக மாற்றுங்கள்

சில நேரங்களில் நம்மைச் சுற்றி யாரும் இல்லை என்று தோன்றலாம். ஆனால் தனிமை என்பது எப்போதும் தண்டனை அல்ல; சில நேரங்களில் அது நம்மை நாமே அறிந்துகொள்ளும் வாய்ப்பு.

உலகத்தின் சத்தத்திலிருந்து விலகி, நம்முடைய திறமைகளையும் குறைகளையும் ஆராயும்போது புதிய பாதை பிறக்கிறது.

மெதுவாகச் செல்வது தோல்வியல்ல

சிலர் வேகமாக முன்னேறுவார்கள். சிலர் மெதுவாக முன்னேறுவார்கள்.

ஆனால் வாழ்க்கையின் வெற்றியை வேகத்தால் மட்டும் அளக்க முடியாது.

ஆமை மெதுவாகச் சென்றாலும் இலக்கை அடைகிறது. ஆகவே பிறருடன் நம்மை ஒப்பிடுவதைவிட, நேற்று இருந்த நம்மைவிட இன்று சிறிது முன்னேறுகிறோமா என்பதுதான் முக்கியம்.

பலவீனத்தைப் பலமாக மாற்றும் ஐந்து வழிகள் இதோ..

1. பலவீனத்தை முதலில்  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்ள மறுப்பதால் குறை காணாமல் போய்விடாது.

2. பலவீனத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

ஏன் இந்தப் பயம்? ஏன் இந்தத் தயக்கம்? ஏன் இந்தத் தன்னம்பிக்கைக் குறைவு? காரணத்தை அறிந்தால் மட்டுமே தீர்வைத் தேட முடியும்.


3. சின்னச் சின்ன இலக்குகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் பெரிய மாற்றத்தை

நிகழ்த்தி விட முடியாது.


4. தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

திறமை கூடவே பிறப்பதில்லை. வேண்டியதில்லை. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாதனைகளை எட்ட முடியும்.

5. தோல்வியை ஒரு படிப்பினையாகப்  பாருங்கள்.

நான் தோற்றுவிட்டேன் எனறு மனம்  உடைந்து போவதற்குப் பதிலாக நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது  என்ற எதார்த்தத்தை  ஏற்றுக்கொள்ளுங்கள்.


பலவீனத்தைக் கண்டு பயப்படாதீர்கள்;

அதைப் பயிற்சியாக மாற்றுங்கள்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்;

அதை அனுபவமாக மாற்றுங்கள்.

விமர்சனத்தைக் கண்டு உடையாதீர்கள்;

அதை முன்னேற்றமாக மாற்றுங்கள்.

உங்கள் குறைகள் உங்கள் கதையின் முடிவு அல்ல;

அவற்றை வெல்லும் முயற்சிதான் உங்கள் வெற்றியின் தொடக்கம்.


பலவீனங்களோடு கொள்ளுங்கள் பிணக்கு.பலத்துடன் தொடங்கட்டும்  உங்கள் வெற்றிக் கணக்கு.

கருத்துகள்

Popular Posts