உன் வார்த்தை உன் முகவரி
உன் வார்த்தை உன் முகவரி
சிலர் பதவியால் அடையாளப்படுத்தப் படுவார்.இன்னும் சிலர் ஆடையால் அடையாளப்படுத்தப்படுவர்.
பணத்தால் அடையாளப்படுத்தப் படுவோரும் உண்டு.
சிலர் அழகால் அடையாளப்படுத்தப் படலாம். இன்னும் சிலர் பண்பால் அடையாளப்படுத்தப்படலாம்.
இப்படி ஆளுக்கு ஆள் அடையாளங்கள் மாறுபடுகின்றன ;வேறுபடுகின்றன.
“ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவன் முகத்தைப் பார்க்க வேண்டியதில்லை; அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்டாலே போதும்.” என்பார் மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.
வீட்டின் முகவரி ஒருவரை அவர் வசிக்கும் இடத்தை பொருளாதாரத்தை அடையாளப் படுத்துகிறது . ஆனால் ஒருவர் பேசும் வார்த்தை அவரின் உள்ளத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
இங்கு அவர் பேசும் பேச்சுதான் அவருக்கான முகவரி.
நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நம் எண்ணத்தையும், பண்பையும், பண்பாட்டையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதனால்தான் உன் வார்த்தை உன் முகவரி என்று உறுதியாகச் சொல்கிறேன்.
நான் இங்கே குறிப்பிட்டிருப்பது
வெறுமனே வெறும் தலைப்பு அல்ல.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டிய அடையாளம் இந்த ஒற்றை வரிக்குள் புதைந்து கிடக்கிறது.
சொல் நம் உயிர்.
சொல் நமது அடையாளம்.
சொல் நம் முகவரி.
திருவள்ளுவர்
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
என்று சொல்வார்.
இனிமையாகப் பேசக்கூடிய சொற்கள் இருக்கும்போது, பிறர் மனதைப் புண்படுத்தும் சொற்களைத் தேர்ந்தெடுப்பது, கையில் கனியிருக்கக் காயைப் பறிப்பதற்கு ஒப்பானது ஆகும்.
ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், பிறரை இழிவாகப் பேசினால் அவர் தரம் தாழ்ந்தவராகிவிடுகிறார்.
அவர் தரம் தாழ்ந்தவர் என்று முத்திரை குத்தப்பட்டு நம் இதய சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கி வைக்கப்படுகிறார்.
அதே நேரத்தில் ஒரு சாதாரண உதவியாளர் கூட அவரது பேச்சால் நம் உள்ளங்களை வென்றுவிடுகிறார்.
இதய சிம்மாசனத்தில் சம்மணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.
உங்களுக்கான மதிப்பு நீங்கள் வகிக்கும் பதவியில் இல்லை. பேசும் பேச்சில் இருக்கிறது.
ஒரு வார்த்தை கொல்லும்
ஒரு வார்த்தை வெல்லும்
வார்த்தைகள் வெறும் ஒலிகள் அல்ல; அவை விதைகள்.
நாம் விதைப்பதைத்தான் நாளை அறுவடை செய்கிறோம்.
வாளால் ஏற்படும் காயம் ஆறிவிடலாம்; ஆனால் வார்த்தையால் ஏற்படுத்தப்படும் காயம் கொல்லாமல் கொல்லும்.
அதுவும் நமக்கு எதிராக சரிக்குச் சமமாக நின்று நீங்கள் பேசும் அதே வார்த்தையைப் பிடித்துத் திருப்பி வீச இயலாத ஒருவரைக் காயப்படுத்தினால் ஒருநாள் அந்த வார்த்தைகளே உங்களைத் திருப்பித் தாக்கும்.
அதனை நம்மால் தாங்க முடியாது.
கோபத்தில் நாம் பேசும் ஒரு நிமிட வார்த்தை, பல ஆண்டுகளாகக் கட்டிய உறவை உடைத்துவிடும். அதனால் பேசுவதற்கு முன் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும்.
பேசும் வார்த்தை உனக்கு அதிகாரி .
அது உன்னைக் கட்டுப்படுத்தும். நாம் பேசும் வார்த்தை நம்மைக் கட்டுப்படுத்துவதும் கட்டுபடுத்தாமல் இருப்பதும் நாம் பேசும் வார்த்தையில்தான் இருக்கிறது.
மௌனமும் ஒரு மொழிதான்.
எல்லா இடங்களிலும் பேசுவதுதான் அறிவு அல்ல.
சில நேரங்களில் மௌனம் கோபத்தை வெல்லும்.
பிரச்சினைகளைக் காணாமல் செய்துவிடும்.
மௌனம் உறவைக் காப்பாற்றும்.
மௌனம் நம்முடைய பண்பை இன்னும் மெருகேற்றிக் காட்டும்.
தேவையில்லாத இடத்தில் பேசாமல் இருப்பதற்கு தனித் திறமை வேண்டும் .
எப்போது பேச வேண்டும் என்பதைவிட, எப்போது பேசக்கூடாது என்பதை அறிதலே முதிர்ச்சி.
இணையத்திலும் நம் முகவரி நம் வார்த்தையே ஆகும்.
இன்றைய உலகில் நாம் பேசும் வார்த்தைகள் நம்முடன் மட்டும் தங்குவதில்லை. சமூக ஊடகங்களில் எழுதப்படும் ஒரு கருத்து நொடிகளில் ஆயிரக்கணக்கானவர்களைச் சென்றடைகிறது.
எனவே, எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் முழு பொறுப்பாளி நாம் மட்டுமே.
விரல்கள் தட்டும் எழுத்துகளும் நம் குணத்திற்காக நாம் இடும் ஒப்புதல் கையொப்பம் என்பதை மறந்து விடக்கூடாது.
முகம் தெரியாத ஒருவரை இழிவுபடுத்துவது வீரமல்ல.
முகம் தெரிந்தவர்களிடமும் முகம் தெரியாதவர்களிடமும்
மனிதநேயத்துடன் நமது வார்த்தைப் பரிமாற்றத்தை வைத்துக் கொள்வதே
நமக்கான முகவரியாக இருக்கட்டும்.
வார்த்தை — உறவுகளின் பாலம்
“எப்படி இருக்கிறீர்கள்?”
“கவலைப்படாதீர்கள்; நான் இருக்கிறேன்.”
“உங்களால் முடியும்.”
“மன்னித்துவிடுங்கள்.”
“நன்றி.”
இந்தச் சிறிய சொற்களுக்கு பெரிய கதவுகளைத் திறக்கும் சக்தி உண்டு.
ஒரு நல்ல வார்த்தைக்கு பணம் தேவையில்லை. ஆனால் அதன் மதிப்பு அளவிட முடியாதது.
வீட்டு முகவரி மாறலாம்.
தொலைபேசி எண் மாறலாம்.
பதவி மாறலாம். பொருளாதார நிலை மாறலாம்.
ஆனால் நாம் பிறரிடம் விட்டுச் செல்லும் வார்த்தைகளின் நினைவு மட்டும் நீண்ட காலம் வாழும்.
எனவே, நம் வார்த்தைகள் பிறரைக்
காயப்படுத்தாமல் காக்கட்டும்.
குறைகூறாமல் ஊக்கப்படுத்தட்டும்.
அன்பு பேசும் மனிதனுக்கு
அன்பே முகவரி.
பண்பு பேசும் மனிதனுக்கு
பண்பே முகவரி.
உண்மை பேசும் மனிதனுக்கு
அவன் உண்மையே முகவரி.
வார்த்தையைப் பார்த்துப் பேசாதே;
வார்த்தைக்குப் பிறகு வரும் விளைவுகளைப் பார்த்துப் பேசு.
உன் வார்த்தை வெறும் சொல் அல்ல.
அதுதான் உன் முகவரி என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக