Adsense

Saturday, January 23, 2021

அன்னக்கிளி

                 அன்னக்கிளி


விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து
அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி.

"நிஜமாத்தான் சொல்லுறீயளா...
யாரு சொன்னா...மாப்பிள்ளை
 சொன்னாவளா அவுங்க
ஆத்தாகாரி சொன்னாவளா..."
அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து
அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு
 குடைந்து எடுத்து விட்டார் அம்மா.

" என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல...
இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்"
சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில்
போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா.

"என்ன சொல்றிய...சட்டியா?  பானையா?
உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி
மாத்துகிறதுக்கு...."
வார்த்தைகளைக்  குறுக்கே போட்டு
அப்பாவைப் போக விடாமல் தடுத்தார்
அம்மா.

"பின்ன என்னை என்ன 
செய்யச் சொல்லுற..."
அப்பாவின் குரலில் ஒரு இயலாமை
தெரிந்தது.

என்ன செய்ய முடியும்?
வேறு எப்படித்தான்  சொல்ல முடியும் ?
அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே...
வருத்தம் இல்லாமலா இருக்கும்...

"ஐயோ...நல்ல நல்ல சம்பந்தம்
எல்லாம் வந்துதே....நீங்க தானே...
நல்ல தோட்டமும் தொரவும் இருக்கு...
நல்ல குடும்பம் என்று சொன்னிய...
இந்தப் பாழாப் போன குடும்பத்துல
கட்டிக் கொடுக்க சம்மதிச்சிய...."
அம்மா இந்த நேரத்திலும் அப்பாவை
நோகடிக்கத் தவறவில்லை.

"இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
நல்ல குடும்பம்தான்.
மாப்பிள்ளைக்குப் பிள்ளையைப்  பிடிக்கல என்று
சொன்ன பிறகு என்ன பண்ண முடியும்.?"


"இந்த இழவ கலியாணத்திற்கு முன்னேயே
சொல்லி தொலைச்சிருக்க வேண்டியதுதானே...
ஊருல ஒரு  பொட்ட பிள்ளை 
கண்ணுல தெரியல 
என் பிள்ளைதான் கிடைச்சாளாக்கும்...
எதுக்கு வேண்டாம் என்கிறாவளாம்..."
இப்போது அம்மாவின் கோபம் 
மாப்பிள்ளை பக்கம்
திரும்பியது.

"பொண்ணு சுறுசுறுப்பு காணாதாம்.
நாகரீகம் தெரியாதவளாம்"

"என் பிள்ளைக்கு என்ன சுறுசுறுப்புக்குக்
குறைச்சல்.
சோறு ஆக்கிப் போடலியா.. ஊடு கூட்டலியா...
மாட்டுக்குத் தண்ணி எடுத்து ஊத்தலியா...
சாணி அள்ளிப் போடலியா...
துணி துவச்சிப் போடலியா....
இதுக்கு மேல என்ன சுறுசுறுப்பு வேணுமாம்."
புலம்பித் தள்ளினார் அம்மா.

"புலம்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா...
கொஞ்சம் மனுசனை நிம்மதியா இருக்க விடு ."
அப்பாவை கொஞ்சம்கூட யோசிக்க விடாமல்
புலம்பிக் கொண்டிருந்தார் அம்மா.

"உமக்கு என்ன ... நீருபாட்டுக்குச் சொல்லிபுட்டுப்
போயிடுவீரு...
நித்தம் நித்தம் அது என் கண்ணுமின்ன 
கண்ணைக் கசக்கிட்டு நிக்கும...
இப்ப பாரும். இப்பவும் மூலையில உட்கார்ந்து
அழுதுகிட்டுத்தான் இருக்கு....
என் மவளுக்கு அழத்தான் தெரியும்.
நாலு சனத்த மாதிரி 
ஒரு கடுஞ்சொல் சொல்லத் தெரியாது.
அப்படி தங்கமா என் பிள்ளையை வளர்த்து
வச்சுருக்கேன்...சும்மா சொல்லிப்புட்டான்
ஒத்த வார்த்தையில.  சுறுசுறுப்பு காணாது...
நாகரீகம் தெரியாது என்று...."
பெத்த மனசு கெடந்து தவிப்பது
வார்த்தையாய் வந்து விழுந்தது.


" இப்போ நீ என்னதான் சொல்ல
வார...என்னையும் சேர்த்து கண்ணைக் 
கசக்கிட்டு மூலையில உட்காரச் சொல்லுறீயா..."
அப்பாவுக்கு அம்மா பேசப் பேச 
மேலும் எரிச்சல்  கூடியது.

"உம்ம ஒண்ணும் சொல்லலய்யா...
நீரு போவும்...மாப்பிள்ளை மாதிரி ஊரைச்
சுத்தி வாரும் "
அப்பாவைப் போட்டுத் தாக்கிவிட்டு
விருட்டென்று அழுது கொண்டே
மாட்டுத் தொழுவு பக்கம் போனார் அம்மா.


அங்கே ஒரு தூணில் சாய்ந்தபடி
வாய் பேச முடியாமல் உள்ளுக்குள்
ஊமையாய் அழுது கொண்டிருந்தாள்
அக்கா.

அம்மாவைக் கண்டதும் விசும்பல்
கொஞ்சம் அதிகமானது.
"சத்தமா கூட என் பிள்ளைக்கு
அழ தெரியாது... பாவிப்பயலுக்கு ஈவு 
இரக்கமே கிடையாதா...."அம்மா வாயை மூடுதாக
இல்லை.
இதைக் கேட்டதும் அக்கா 
அதிகமாக கேவிக் கேவி அழுதாள் .

இந்தப் பாவத்திற்கு அழுவதைத் தவிர
அதிகமாக ஏதுவும் படபடப்பாகப் பேசத்
தெரியாது...அதுவே இப்போ அவள்
வாழ்க்கையை தொலைக்க வந்து நிற்கிறது.

அம்மா பின்னாலேயே போய் நின்ற எனக்கு
 அக்காவைப் பார்த்ததும் ஓவென்று 
 ஒப்பாரி வைக்க வேண்டும்போல் இருந்தது.
 
மெதுவாக  அருகில் உட்கார்ந்து 
அக்கா கையைப் பிடித்தேன்.

அவ்வளவுதான் ...சிறுபிள்ளையைப்போல
என் தோளில் சாய்ந்து அக்கா அழுதது 
 எனக்குள் ஆத்திரத்தைக் கூட்டியது.
 
"நீ அழாதக்கா...அவங்க நல்லாவே இருக்க
மாட்டாங்க.."

இயலாதவர்களுக்குச் சாபமிடுவதைத்
தவிர வேறென்ன தெரியும் ?
இதற்கு மேல அக்காவை எப்படிச் சொல்லி
தேற்ற முடியும் ?

இது என்ன இப்படிச் சொல்லி
அக்காளைத் துரத்திவிடப் பார்க்கிறார்கள்...
நாகரீகம் தெரியாதவள் என்றால்
என்ன சொல்ல வருகிறார்கள்...
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

கிராமத்துப் பெண்.. படிக்காதவள்.
இப்படித்தானே இருப்பாள்...
மாப்பிள்ளை என்ன லண்டனிலிருந்து வந்தவரா? 
அவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தானே..

நாகரீகத்தின் அளவுகோல்தான் என்ன? 
இப்படி ஏதேதோ நினைவுகள் 
என்முன் கேள்விகளாக வந்து விழுந்தன.

"யாராவது நாலு சனத்துட்ட சொல்லி 
மாப்பிள்ளை கிட்ட
பேசிப் பார்க்கச் சொல்லலாம் இல்லையா "
மறுபடியும்  அம்மாவின் குரல்
என் நினைவுகளுக்குத் தடை போட்டது.

அப்பாவும் என்ன செய்வார்...
பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிற்றே 
என்ற வருத்தம்தான் அவரையும்
கோபத்தோடு பேச வைக்கிறது.
மற்றபடி அப்பா இப்படி எல்லாம் கோபப்பட்டு
நான் பார்த்ததில்லை
அக்கா வீட்டுக்காரர் மேல் உள்ள கோபத்தை
எங்களிடம் தவிர  அப்பாவால் 
வேறு யாரிடம் காட்ட முடியும்...


"பேசிப் பார்ப்போம்..."
விரக்தியில் பேசியபடி வெளியில் சென்றார்
அப்பா.

போனவரு ஒரு மணி நேரத்துல திருப்பி வந்தார்.
"நாளைக்கு பஞ்சாயத்து வச்சுருக்காவளாம்....
  பணம் கொடுத்தாவது ஒரேயடியா
 முடிச்சி உட்டுறதா 
பேசிகிட்டாவளாம்...."
என்றார் அப்பா கம்மிய குரலில்.
 
அதுவரை எனக்கு இருந்த கொஞ்சம்நஞ்ச
நம்பிக்கையும் அப்படியே நொறுங்கி
கீழே விழுந்து உடைந்ததுபோல்  இருந்தது.

" ஏதோ முகூர்த்தத் தேதி வைத்தது போல..
நாள குறிச்சு குடுத்துருக்காவ....
கேட்க ஆளுல்ல என்று நினைச்சாவளா...
நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்குற மாதிரி
கேட்க எனக்கும் தெரியும்"
கேட்டதும் ஆவேசமாக கத்த ஆரம்பித்தார்
அம்மா.

இவ்வளவு நேரம் அப்பா சொன்ன
விசயத்துல இவ்வளவு சீரியஸ்
இருக்கும்ன்னு நினைக்கல.....
அப்படியே ஈரக் கொலை நடுங்கிப்
போச்சு...

அக்காவைப் பார்த்தேன்.
உனக்காக்கா இப்படி ஒரு கதி வரணும்?
கேட்கத் தோன்றியது..

இப்போது எது பேசினாலும் அது
அக்காவின் சோகத்தை அதிகத்தான் படுத்தும்
என்ற நினைப்பில் அப்படியே விட்டு விட்டேன்.

அக்காளுக்கு இப்போது அழகூட
தெம்பில்லாமல் கண்ணீர் மட்டும்
கன்னங்களில் ஓடிக் கொண்டிருந்தது.
குனிந்த தலை
 நிமிரவில்லை.

அவள் எப்போதும் அப்படித்தான். 
அந்நியரை தலைநிமிர்ந்து
பார்க்க மாட்டாள்.
ரொம்ப வெட்கப் படுவா....நான் கூட
கலியாணத்தின்போது அத்தானை தலை
நிமிர்ந்து பார்ப்பியா....
என்று கேட்டு கிண்டலடித்தேன்.

ரொம்ப சாதுவா இருப்பாள்.
ஊருல ஒரு சனத்துகிட்ட கெட்டப் பிள்ளை 
என்று பெயர் எடுத்தது கிடையாது.
தங்கமான பொண்ணு.... யாரையும்
அநாவசியமா எதுவும் பேச மாட்டாள்...
இப்படித்தான் சொல்லி 
கேள்விப் பட்டிருக்கிறேன்.
அம்மாகூட அக்காவைக் காட்டி..."
"பிள்ளை என்றால்
அவள் பிள்ளை... வீட்டு சத்தம்
வெளியில்  கேட்காமல் எவ்வளவு 
 அமைதியாக இருக்கிறாள்.
நீயும் இருக்கியே ...."என்று சொல்லி 
சொல்லி என்னைத் திட்டுவார்.

 அந்த அமைதியும் பொறுமையுமே
அவள் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டது

சாதுவா இருப்பது ஒரு தப்பா..
இப்படியும் ஆண்களா....
நினைத்துப் பார்க்கவே 
ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

மறுநாள் ஊரு பஞ்சாயத்துக்கு
அம்மாவும் அப்பாவும்தான் போனார்கள்.
அக்கா போக மறுத்துட்டாள்.

போயிட்டு வரும்போதே அம்மா
அழுது கொண்டே வந்தார். எல்லாம்
முடிஞ்சு போச்சு என்பது அம்மாவின் 
அழுகையில் இருந்து தெரிந்தது.

"யாதுக்கும் என்ன சொன்னாங்க அம்மா"
என்று ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தேன்.

"அவன் ஆரம்பத்திலேயே இவள்
வேண்டாம் என்றுதான் சொன்னானாம்.
நாகரீகம் தெரியாதவள்....நாலு இடத்துக்குக்
கூட்டிட்டு போக முடியாது...
நாகரீகமா துணி உடுக்கத் தெரியாது....
என்று என்னென்னவோ அடுக்குறாவ....
அம்மாகாரிதான் நம்ம வீட்டுல வந்து 
விழவச்சுட்டாள் என்று அம்மாக்காரி மேல
குத்தம் சொல்லிட்டுப் பிடிவாதமா
 அக்காவை வேண்டாம்
என்று பேசுறான் ....சப்பகாலு பய...
என் பிள்ளையை குறை சொல்லுறான்"
மொத்தமாகக் கொட்டித் தீர்த்தார் அம்மா.

முதலிலேயே இந்தப் பிடிவாதம்
எங்கே போச்சு..
இப்போ எங்க அக்கா வாழ்க்கை 
அல்லவா போச்சு...

சீ... இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்....

"உங்க விருப்பத்துக்கு யாரையும் கட்டிக் கொள்ளுங்க..
எங்க அக்கா  மாதிரி 
வாயில்லா பூச்சிகள் வாழ்க்கையோடு
விளையாடாதீர்கள் "என்று ஓங்கி ஒரு
அறை கொடுத்து சொல்ல வேண்டும்
போல் தோன்றியது.

நானும் பெண்பிள்ளையாயிற்றே...
 நான் ஏதாவது பேசிவிட்டால்...
அடங்காப்பிடாரி என்று இன்னொரு
முத்திரையைக் கையில் வைத்து
எங்கள் சிறகுகளை முறிக்கக் காத்திருக்கும்
உலகம் இது !

வாழத் தெரியாதவன் வாயால்
வாழ லாயக்கில்லாதவள்
என்ற முத்திரை குத்தப்பட்டு 
ஆட்டத்திலிருந்து அக்கா  வெளியேறற்றப்பட்டாள்.

அக்காவை எண்ணி
உள்ளுக்குள் ஊமையாய் அழுவதைத் தவிர
வேறென்ன எங்களால் 
இப்போது செய்துவிட முடியும் ?

 

Friday, January 22, 2021

கணைகொடிது யாழ்கோடு செவ்விது....

கணைகொடிது யாழ்கோடு செவ்விது...

"கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல் "

                       குறள் :  279

கணை _ அம்பு
கொடிது _ தீயது
யாழ் _ வீணை போன்ற ஒருவகை நரம்பு
              இசைக்கருவி
கோடு _ வளைவு
செவ்விது _ நேரானது
ஆங்கு _ அவ்வகையே
அன்ன _ அது போன்ற
வினைபடு பாலால் _ செய்கைத் திறத்தால்
கொளல் _ அறிந்து கொள்க

நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது.
வளைந்திருந்தாலும் யாழ்
இன்னிசை தரக்கூடியது.
அதுபோல மக்களின் பண்புகளை அவர் செய்யும்
செயலால் அறிந்து கொள்க.

விளக்கம் : 

 அம்பு நேராக இருந்தாலும் அது செய்யும்
 செயல் தீயதாகவே இருக்கும்.
 யாழ் வளைந்து காணப்பட்டாலும்
 அதிலிருந்து இன்னிசை மட்டுமே வரும்.
 அதுபோல யாரையும் இருக்கும் தோற்றத்தை
 வைத்து இவர் கொடியவர். இவர் நல்லவர்
என்று முடிவு செய்யக் கூடாது.
நல்லவர் , தீயவர் என்பதை வடிவால்
முடிவு செய்யாமல் அவரவர் செயல்
வகையால்
அறிந்து கொள்ளல்  வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet"


Explanation : 

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight
, So by their deeds( and not by their appearance) let the
uprightness or crookedness of men be estimated.

Transliteration :

"Kanaikotidhu Yaazhkotu Sevvidhu Aaangkanna
Vinaipatu  paalaal kolal"
பூரணி

              பூரணி

எது வரைக்கும் இந்த நாடகம் ? 
ஒன்றுமே  புரியவில்லை . இன்று முடிவுக்கு வரும்
நாளை முடிவுக்கு வரும் என்று ஓரளவு நானும்
சமாளித்துத்தான் பார்த்தான்.

ஆனால் முடிவதாகத் தெரியவில்லை.
போதும் போதும் என்றாகி விட்டது. இதற்கு மேலும்
இப்படியே போய்க் கொண்டிருந்தால்  ....

இதற்கு என்னதான் வழி ? 
வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லாமல்
தவிப்பது போன்ற உணர்வு.

அலுவலகத்தில் இருக்கும்வரை வீட்டு
நினைப்பே வராது.
வீட்டிற்குப் புறப்படும்போது கூடவே
பரபரப்பும் தேவை இல்லாத கவலைகளும்
வந்து தொற்றிக் கொள்ளும்.

தேவை இல்லாத கவலையா...
நான்தான் அதிகப்படியாக அதைப் பற்றிய
சிந்தனைகளை மனதில் போட்டுக் கொண்டு
என்னையே வருத்திக் கொண்டிருக்கிறேனா ?
எனக்குள்ளேயே எப்போதும் ஒரு போராட்டம்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

இன்றும் அப்படித்தான் காலையில் அலுவலகம்
புறப்படும் முன்னர் வெளியில் வந்து
பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர் வீட்டு அண்ணி அலுவலகத்திற்குச்
 செல்ல வீட்டைவிட்டு வெளியே 
 வந்தவர்கள் என்னைப் பார்த்ததும்
"என்ன கொழுந்தனாரே இன்னும்
புறப்படலியா? " என்று கேட்டுவிட்டார்கள்.

"புறப்பட்டு கிட்டுத்தான் இருக்கிறேன் "
என்று சிரித்துக் கொண்டே 
சொல்லிவிட்டு திரும்பினேன்.
வாசலில் பூரணி.

"என்ன பூரணி சாப்பாடு 
எல்லாம் எடுத்து வச்சுட்டியா...?
சீக்கிரம் புறப்படணும்... "
என்றபடியே வீட்டுக்குள் சென்றேன்.

அதற்குள் கையில் இருந்த 
கரண்டியை அப்படியே வீசிவிட்டு
சமையலறைக்குள் போய் நின்று கொண்டாள்.
சற்று நேரத்தில் பாத்திரங்கள் எல்லாம்
சத்தம் போட ஆரம்பித்தன.
எனக்கு பல்ஸ் எகிற ஆரம்பித்தது.

ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக
சமையலறையை எட்டிப் பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும் பூரிக்கட்டையால் 
தன் மண்டையிலேயே டங்கு டங்கு என்று
அடித்துக் கொண்டாள்.

 மெதுவாக கட்டையைப் பிடுங்கலாமா
  என்று நினைத்தேன்.
  இப்போது நான் ஏதாவது செய்யப் போக
  அது ஏடாகூடாவாகிடக் கூடாதே 
  என்ற பயத்தில் மௌனம் காத்து
  அப்படியே  நாற்காலியில் உட்கார்ந்தேன்.
  
 சற்று நேரத்தில் வீடு மயான அமைதியானது.

இன்று மட்டுமல்ல ...நெடுநாட்களாக
வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இது ஒருவிதமான 
மனநோயாக இருக்குமோ என்று
எனக்குள் ஒரு ஐயம் உண்டு .
ஆனால் எதையும் வெளியில் காட்டிக்
கொள்வதில்லை.

ஒருநாள் இப்படித்தான் வெளியில் போகும்போது
தூரத்து உறவுப் பெண் ஒருத்தியைப் 
பார்த்தேன்.
வீட்டிற்கு வாயேன் என்று அழைத்தேன்.
அவளும் கூடவே வந்து விட்டாள்.
வீட்டிற்கு வந்ததும் பூரணிக்கு  அவளை
அறிமுகம் செய்து வைத்தேன்.
அந்தப் பெண் என்னோடு பழைய 
நினைவுகளை எல்லாம் பகிர்ந்து சிரித்துப்
பேசிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் போனதும்
சற்று எல்லை மீறிப்போய்
தலையை சுவற்றில் முட்ட
ஆரம்பித்தாள்.
இரத்தம் வடிந்தது.
ஒருவழியாக பூரணியைச் சமாதானப்
படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குள்
போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இப்படியே விட்டுவைத்தால் ....
எப்படியாவது ஒரு மனநல மருத்துவரிடம்
பூரணியை அழைத்துச் சென்று வர வேண்டும்
என்று நினைத்தேன்.

தெரியாத்தனமாக பூரணியிடம் "மனநல 
மருத்துவரைப் போய் பார்த்து வருவோமாம்மா"
என்று கேட்டு விட்டேன்.

அவ்வளவுதான் இதே கத்தலும் ....
கண்டதையும் தூக்கி வீசலுமாக வீடே
ரண களப்பட்டுப் போனது.
 
 அதன் பின்னர் அந்தப் பேச்சே 
 இதுவரை எடுப்பதில்லை.
ஆனால் எப்போதும் அவளைக் கண்டால்
 ஒரு பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

எப்போது என்ன நடக்குமோ என்ற கவலை.
நான் மட்டும் இருந்திருந்தால் என்றோ
 கழட்டிவிட்டுவிட்டு
ஓடப்பார்த்திருப்பேன்.

கூடவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனவே 
அவர்களை என்ன செய்வது?

அவர்கள் எதிர்காலம் குறித்த 
அச்சம்தான் என்னை
முன்னும் பின்னும் 
நகரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படித்தான் ஒருநாள் என் நண்பன் பாலன் 
தன் மனைவியோடு
என் வீட்டிற்கு வந்திருந்தான்.
பாலன் மனைவி எந்தவித சங்கோஜமும்
இல்லாமல் எல்லோரிடமும் பழகக் கூடியவள்.

நன்றாக சிரித்துப் பேசுவாள்.
நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
மெதுவாக வந்து எட்டிப் பார்த்தவள்
காபி கொண்டு வரவா என்று பவ்வியமாகக்
கேட்டாள்.
 நானும் சிஸ்டர் நீங்க என்ன சாப்பிடுவீங்க....
 என்று கேட்டுவிட்டேன்.
நீங்க கேட்டதே காபி குடித்த மாதிரிதான்
இருக்கிறது என்று ஜோக் 
அடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்
பாலனின் மனைவி.

சற்று நேரத்தில் பாத்திரக் கடையில் 
யானை புகுந்தது போன்ற 
சத்தம் கேட்க ஆரம்பித்தது.

ஐயையோ.. வேதாளம் முருங்கை மரம்
 ஏறிவிட்டது.
இப்போது என்ன நடக்கப் போகிறதோ 
ஒரு பயத்திலேயே உட்கார்ந்திருந்தேன்.

முதலில் எதுவுமே கவனிக்காததுபோல 
இருந்தவர்கள்
என் முகத்தை மறுபடியும்
மறுபடியும் உற்றுப் பார்த்தனர்.
நான் எதுவுமே நடக்காததுபோல
போலியாகச் சிரித்துக் கொண்டிருந்தேன்.

நண்பனும் அவன் மனைவியும் 
எதுவுமே கேட்காமல் விடைபெற்றுச் சென்றனர்.

மறுநாள் அலுவலகத்தில் மதிய இடைவேளை.
வா.. வெளியில் போய் சாப்பிடலாம்
என்று அழைத்தான் பாலன்.
நான் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு 
வந்திருக்கிறேன்.
நீ போயிட்டு வா. நான் வரவில்லை என்று
முதலில் மறுத்தேன்.

"ஒருநாள் சாப்பிடாமல் திருப்பிக்கொண்டு 
போனால்
என்ன ஆகப் போகிறது ? "என்றான் பாலன்.

"மனைவி சாப்பாட்டை வீணாக்கினால்
திட்டுவாடா "என்று பேச்சு வாக்கில்
சொல்லி விட்டேன்.

இதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல
கபக்கென்று பிடித்துக் கொண்டான்.

"மனைவி மீது இவ்வளவு பயமா? "

மெதுவாகக் கொக்கிப் போட்டான்.
"அப்படி ஒன்றுமில்லை...எனக்கும்
 உணவை வீணாக்குவதில்
உடன்பாடு இல்லை "என்றேன்.

"சும்மா பீலா உடாதே...
நீ திருமணத்துக்கு முன் வீட்டிலிருந்து
கொண்டுவரும் சாப்பாட்டை திறந்து
பார்க்காமலேயே
அப்படியே திருப்பிக் கொண்டு போனதை 
அவ்வளவு சீக்கிரமாக நான்
மறந்திருப்பேன் என்று நினைச்சியா...".என்று
விடாமல் துரத்திப் பிடித்தான்..

எவ்வளவோ நழுவிப் பார்த்தேன்.
அவன் விடுவதாகத் தெரியவில்லை.

இறுதியில் உண்மையை ஒத்துக்கொண்டு
மதிய உணவு சாப்பிட வெளியில் சென்றோம்.
அப்போதுதான் நான் உன் வீட்டிற்கு வந்த 
அன்றே கேட்க வேண்டும்
என்று நினைத்தேன்.
சரி..இப்பவாவது சொல்லு...உனக்கும்
உன் மனைவிக்கும் என்ன பிரச்சினை ? 
நேரடியாகவே கேட்டுவிட்டான்.

அதற்கு மேலும் என்னால் 
உண்மையை மறைக்க முடியவில்லை..
வீட்டில் நடப்பவற்றை அவனிடம் 
அப்படியே கொட்டினேன்.

எனக்கு கொஞ்சம் பாரத்தை இறக்கி 
வைத்துவிட்டது போன்று இருந்தது.
அவன் என்ன சொல்லப்போகிறான்
என்று அவன் முகத்தையே 
பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாலன் கொஞ்ச நேரம் அப்படியே 
அமைதியாக இருந்தான்.
ஏதோ யோசிப்பதுபோல இருந்தது.

இது வேறு ஒன்றுமில்லடா...
சாதாரணமாகப் பேச்சைத்
தொங்கினான்.
உன் மீதுள்ள அபரிமிதமான 
அன்புதாண்டா அவளை இப்படிச்
செய்ய வைக்குது.
நீ வேறு எந்தப் பெண்கூட பேசினாலும்
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நீ அவளை இப்படியே விட்டுவிட்டால் ....
ஒருநாள் உன் மனைவி பெரிய மனநோயாளியாக
மாறிவிட வாய்ப்பு இருக்கு...
என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டான்.

ஏதாவது ஆறுதல் சொல்வான் என்று
எதிர்பார்த்த எனக்கு அப்படியே 
தூக்கிவாரிப் போட்டது.

இதயத்துக்குள் ஏதோ ஒரு நடுக்கம்.
பதட்டத்தோடு ஒரு சிறு குழந்தையைப் போல
பாலனின் கைகளைப் பிடித்தேன்.

கூல்....கூல்....பதட்டப்படாதடா....இது ஒன்றும்
அவ்வளவு சீரியசான மேட்டர் இல்ல..
உடனே ஒரு மனநல மருத்துவரைப் போய்ப்
பார்த்தோம் என்றால்
எல்லாம் சரியாயிடும் என்று 
 நான் இருக்கிறேன். பயப்படாதே என்பதுபோல
 தோளில் தட்டிக் கொடுத்தான்.
 
எனக்குப் பாலனின் தோளில் சாய்ந்து
ஓவென்று அழ வேண்டும்போல் இருந்தது.

"எத்தனையோ முறை கேட்டுப் பார்த்துட்டேன்.
எனக்கு ஒன்றுமில்லை.
என்னை கிறுக்கு என்று சொல்றீகளா ..."
என்று கத்த ஆரம்பித்துவிடுவாள்
என்று சொல்லத்தான் நினைத்தேன்.

எப்படித்தான் நண்பனாக இருந்தாலும்
மனைவிப் பற்றிச் சொல்ல சற்று
கூச்சமாகத்தான் இருந்தது.

வாய்வரை வந்த வார்த்தையை அப்படியே 
வாய்க்குள் போட்டு அமுக்கிக்
கொண்டேன்.

 இருவரும் மறுபடியும் அலுவலகத்திற்கு வந்து
இருக்கையில் அமர்ந்தோம்.

நினைவு முழுவதும் பூரணியைச்
சுற்றிச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது.

இப்படியே விட்டால் இதற்குத் தீர்வுதான்
என்ன?
வெளியில் தெரிந்தால் ஒரு மனநோயாளியோடு
குடும்பம் நடடுத்துகிறான் என்று சிரிப்பார்களே
அதனால்தான் கூடுமான மட்டும் 
அவளை வெளியில்
கூட்டிப் போவதைத் தவிர்த்து விடுவேன்.

வெளியில் போகவில்லை
 என்றால் மன இறுக்கம்தான்
அதிகமாகும் என்பது எனக்குத் தெரியும்.

பொது இடங்களில் இப்படி நடந்து கொண்டால்...
என் சிக்கல் யாருக்குத் தெரியப் போகிறது.
தீர்ப்பதுதான் எப்படி என்று
தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் ஏதோ உருளுவது போல்
இருந்தது.

என்ன பாவம் பண்ணினேன் எனக்குள்ளே
கேட்டுக் கொண்டு உள்ளுக்குள்
அழுது கொண்டிருந்தேன்.

தன் இருக்கையில் இருந்தே என்
மனவோட்டத்தைத் தெரிந்து கொண்ட 
நண்பன் மறுபடியும் அருகில் வந்து,
"சரிப்பா ...ஒன்றுக்கும் ஒரி பண்ணிக்காத...
என்ன செய்யலாம் என்று பார்ப்போம்."
என்றுஅப்போதைக்கு  அந்தப் பிரச்சனைக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
 "வேலையைப் பாரு "என்று
கையில் ஒரு பைலைக் கொடுத்துவிட்டுச்
சென்றான்.

"என்ன இரண்டு பேரும் எஸ்கேப் ஆகிட்டீங்க..."
வலுக்கட்டாயமாக வம்புக்கு வந்தார்
அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் சித்ரா.

"ஏன் கூப்பிட்டால் வந்திருப்பீர்களாக்கும்"
என்றான் பாலன்.

"ஏன் உங்க கூட வருவதற்கு என்ன... 
சொல்லி இருந்தால்
நானும் வந்திருப்பேன்...
எனக்கும் இன்று சாப்பாடு சரியில்ல..
வெறும் பிரட்தான் கொண்டு வந்தேன்."
என்று சம்மன் இல்லாமலேயே ஆஜராகி 
முழு வாக்குமூலத்தையும் அளித்துவிட்டு
சிரித்தார் சித்ரா.

"ஏதாவது வாங்கி வரவா?"
கரிசனையாகக் கேட்டு நானும் பேச்சில்
அவர்களோடு இணைந்து கொண்டேன்.

"வேண்டாம்...உங்க வயிறு நிறைந்ததுவே
 என் வயிறு நிறைஞ்ச
மாதிரிதான்.." என்று சொல்லிவிட்டு
ஏதோ பெரிய ஜோக் அடித்ததுபோல
கலகலவென்று சிரித்தாள் சித்ரா.

சித்ராவின் சிரிப்பு அலுவலக ஊழியர்களின்
கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியது.

எங்கள் பக்கத்து வீட்டு தங்கப்பன்
என்னை முறைத்துப் பார்த்ததும் 
எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
தலை கவிழ்ந்து வேலை பார்ப்பதுபோல
பைலுக்குள் கண்களை மேய விட்டேன்.

இப்போதும் சித்ரா பக்கத்தில்தான் 
நின்று கொண்டிருந்தார்.

சித்ரா என் பக்கத்தில் நிற்கிறார் என்ற
நினைப்பு எனக்கு உள்ளுக்குள் ஒரு
சிலிர்ப்பைக் கொடுத்தது.

சித்ராவைப் போன்ற மனைவி மட்டும்
எனக்குக் கிடைத்திருந்தால்...
முதல்முறையாக சித்ராவை ஒரு
ஏக்கத்தோடு பார்த்தேன்.

சித்ராவைப் போல சகஜமாகப் பேசும்
மனைவி எனக்கு வாய்க்கவில்லையே ...
என்ற ஏக்கம் என் கவனத்தைச் சித்ரா பக்கம்
விழ வைத்தது.

என்றுமில்லாத திருநாளாக அலுவலகம்
முடிந்ததும் மறுபடியும் 
சித்ராவிடம் போய் நின்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்த சித்ரா
"என்ன சார் இன்னும் கிளம்பலியா.."
என்றாள் அதே சிரிப்போடு.

"கிளம்பணும்...கிளம்பணும்...
பாலன் வரட்டுமே 
என்று காத்திருக்கிறேன்..."
பக்கத்தில் வந்து நின்றதற்கு 
இப்படி ஒரு பொய்யைச் சொல்லித்
தப்பித்து அங்கிருந்து  நகர்ந்தேன்.

வீட்டுக்கு வந்த பின்னரும் சித்ராவின்
சகஜமான பேச்சு என் மனசுக்குள்
மறுபடியும் மறுபடியும்
வந்து போனது.

 சித்ராவின் சிரிப்பும் பேச்சும் எங்கோ என் 
 ஆழ்மனதை ஆட்டிப் பார்த்துவிட்டது
 என்றுதான் சொல்ல வேண்டும்.
இல்லை என்றால் நினைவு எல்லாம்
ஏன் சித்ராவைச் சுற்றிச் சுற்றி
ஓடுகிறது.

"சீ..இது என்ன ...இப்போதுபோய் கண்ட கண்ட
 நினைப்பெல்லாம் வந்து..."
என்னையே நொந்து கொண்டு பிரேக்
போட பார்ப்பேன்.

ஆனாலும் மனசு என்ன நாம்
சொன்னபடியா கேட்கிறது.
அப்பப்போ முரண்டு பிடிக்கத்தான்
செய்தது.

"சாப்பிட வாங்க...".மெதுவாக வந்து கூப்பிட்டாள்
பூரணி.

"வேண்டாம் ...வயிற்று்க்கு சரியில்ல..."
பொய் சொல்லிக் கொண்டு சித்ரா நினைவை 
இடையில் கட் செய்துவிட முடியாமல் 
திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

"என்ன செய்யுது..சுக்குக் காபி போட்டுத் தரவா..."
அப்பாவியாகக் கேட்டாள் பூரணி.

"கொஞ்சம் தூங்க விடுறியா...
எரிந்து விழுந்தேன் "

சற்று நேரம்வரை எந்த சப்தமும்
இல்லை.

திடீரென்று ஒரு விசும்பல்....
மெதுவாக திரும்பிப் பார்த்தேன்.

அப்பாவியாக என்னையே பார்த்தபடி
தரையில் உட்கார்ந்து 
அழுது கொண்டிருந்தாள் பூரணி.
 
என்னைத்தவிர வேறு உலகமே இல்லை என்று
வாழ்ந்து கொண்டிருக்கும் 
பூரணியைப் பார்க்கவே பாவமாக இருந்தது.


மெதுவாக போய் கையைப் பிடித்தேன்.
அதற்குள் பொலபொலவென்று
கண்ணீர் உகுத்தபடி 
என்னைப் பிடிக்கலியா...
என்றாள் அப்பாவியாக..

"சீ...போடி அசடு உன்னைப் பிடிக்காமல்
வேறு யாரைப் பிடிக்கப்போகிறது...
சரி....சாப்பிட்டியா..."

"இல்லை....நீங்க சாப்பிட்ட பின்
சாப்பிடணும் "

"வா...சோறு போடு இருவரும் 
சாப்பிடுவோம் "என்றபடி
பூரணி முகத்தைப் பார்த்தேன்.

"அப்படிப் பார்க்காதீங்க...வெட்கமாக
இருக்கிறது.."என்று கையால் முகத்தை
 மறைத்தாள்.
முதல் நாள் பார்த்த அதே வெட்கம்
பூரணியிடம் அப்படியே இருந்தது.

அதே வெகுளித்தனம்...
பூரணி இன்னும் மாறவில்லை.
நான்தான் மாறிவிட்டேன்.
பூரணி மனநோயாளி அல்ல....
மனசு பூரா என்னையே ....என்னை 
மட்டுமே நினைத்துக்
கொண்டிருக்கும் ஒரு அப்பாவி
என் பூரணி.


 


 

 

அறம் வைத்துப் பாடுதல்


அறம் வைத்துப் பாடுதல்


நாம் வாழ்கிற வாழ்வு அறம் சார்ந்ததாக
 இருக்க வேண்டும்.
 
இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு.
ஆனால் அனைவரும் அப்படி ஒரு
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
அறம் சார்ந்த வாழ்வு என்பது
எல்லோராலும் சாத்தியப்படக் கூடியதா?
எல்லா இடங்களிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லோராலும் பின்பற்ற முடிகிறதா?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.

முதலாவது அறம் என்றால் என்ன 
என்று பார்ப்போம்.

 மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும்
 என்று தனக்கென வகுத்துக்கொண்ட
 ஒழுக்கநெறியே அறம் எனப்படும்

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்பார் வள்ளுவர்.

மனத்தில் எந்தவிதமான குற்றமும்
இல்லாமல் இருத்தலே அறம்.
உள்ளத்தில் அன்பில்லாது செய்யப்படும்
எந்த தர்மமும் அறம்  எனப்பட மாட்டாது.

எண்ணம், சொல், செயல் மூன்றும்
தூய்மையாக இருந்து செய்யப்படும்
செயல்தான்  அறமாகக் கொள்ளப்படும்.

இந்ந அறத்தைத் தவிர இன்னொரு
அறமும் இலக்கியத்தில் சொல்லப்படுவதை
அறிந்திருக்கலாம்.

அறம் பாடுதல் என்ற
ஒரு சொல் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த அறம் பாடுதல் மேலே கூறப்பட்ட
அறத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒரு புலவன் தனக்கு அநீதி இழைக்கப்படும்போது
அநீதி இழைத்தவர் அழிய வேண்டும்
 என்று சாபமிட்டுப் பாடுவதுதான் 
 இந்த அறம் வைத்துப் பாடுதல் ஆகும் .
 
சரியாக அதுவும் உண்மையாகச் சொல்லப்படும்
வார்த்தைக்குக் கொல்லும் ஆற்றல்
உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத்தில்
இருந்திருக்கிறது.

அதன் அடிப்படையில் தோன்றியதே அறம்
பாடும் பாடல்கள் ஆகும்.

அறம் பாடுதலின் மூலம் புகழ்பெற்ற
நூல் ஒன்று உண்டென்றால் அது் 
நந்திக் கலம்பகம்.

அறம்பாடுதல் மூலம் ஒருவரைக் கொல்ல
முடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட
நூல் இது.

பாட்டுப் பாடியே மனிதனைக் கொன்றுவிடலாமா? 
என்று  ஐயத்தோடு கேட்போருக்கு
இந்த நந்திக் கலம்பகம் நூல்தான் சாட்சி.

இரண்டாம் நந்திவர்ம பல்லவன்
பற்றிய கதை இது.

நந்தி வர்மனின் மாற்றாந்தாய் மகன்
ஒருவனுக்கு  நந்திவர்மனை அழித்தே தீர
வேண்டும் என்ற தீராப் பழி உணர்வு 
ஏற்பட்டது.
போரில்தான் அவனைக் 
கொல்ல முடியவில்லை.
அறம் பாடியாவது கொன்றுவிட வேண்டும்
என்று ஒரு சபதம் எடுத்துப்  பாடப்பட்டதுதான்
நந்திக் கலம்பகம்.
 
பாடல் நல்ல இலக்கிய நயம்
கொண்டதாக இருந்தது.
பாடல்கள் முழுவதுமாக எழுதி முடிப்பதற்குள் 
நந்தி வர்மனைக் கொல்ல வேண்டும்
 என்ற  அவரது தம்பியின் எண்ணம் முற்றிலும்
 காணாமல் போயிற்று.
 
முற்றும் துறந்த முனிவராக மாறிப்போனார்.
தன் அண்ணன் மீது இருந்த கோபமும்
காழ்ப்புணர்ச்சியும் இருந்த இடம்
தெரியாமல் மறைந்து போனது.

துறவு வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டார்.

அப்படியே  ஊர் ஊராக
சுற்றித் திரிய ஆரம்பித்தார்.

சுற்றித்திரிந்தபோது அண்ணன்மீது
பாடிய பாடல் அறம் வைத்துப் பாடப்பட்டது
என்பதையே மறந்து போய்விட்டார்.
 
ஒருநாள் தெருவழியாக சென்று
கொண்டிருக்கும்போது அண்ணன் மீது
பாடிய அந்தப் பாடலைப் பாடிவிட்டார்.

அந்தப் பாடலைக் கேட்ட ஒருபெண்மணி
அந்த துறவியை அழைத்து மேலும்
சில பாடல்கள் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
அவற்றை மனனம் செய்தும் வைத்திருந்தார்

நாட்கள் கடந்தன.
ஒருநாள் அரண்மணை வழியாகச் செல்லும்போது
அந்தப் பெண்.... 
துறவியார் பாடிய பாடலைப்
பாடிக் கொண்டே செல்கிறார்.
உப்பரிகையில் நின்ற மன்னன் காதுகளில்
அந்தப் பாடல் வரிகள் வந்து விழுகின்றன.

ஆஹா...எவ்வளவு அருமையான பாடல்
என்று வியந்து போகிறார் மன்னர்.

பாடல் பாடிய பெண்மணியை அழைத்துவர
கட்டளை  இடுகிறார்.
வீரர்கள் அந்தப் பெண்மணியை அழைத்து வந்து
மன்னர் முன் நிறுத்தினர்.

அஞ்சியபடியே மன்னன்முன் 
வந்து நிற்கிறாள் அந்தப் பெண்.

நீ இந்த வழியாகச் செல்லும்போது 
பாடிய பாடலைப் பாடியவர் யார் என 
விசாரிக்கிறார்.
அந்தப் பெண் ஒரு துறவியைக் கை காட்ட
துறவியைக் கொண்டு வந்து மன்னன் முன்
நிறுத்துகின்றனர்.

துறவியிடம் "தாங்கள் பாடிய 
பாடலின் இனிமை என்னை மெய்மறக்கச் 
செய்துவிட்டது.
எனக்காக நீங்கள் அந்தப் பாடலை
இன்னொருமுறை பாட வேண்டும்"
என்று கேட்கிறார்.

துறவிக்கோ தர்ம சங்கடமான நிலை."
" மன்னா!
 நான் அந்தப் பாடல்களைப் பாடினால்
 தாங்கள் உயிர் துறக்க நேரிடும்..
 அதனால் வேண்டாம் "என்று 
 பாடலைப் பாட மறுக்கிறார் துறவி
 
 மன்னனுக்கோ தமிழ்மீது தணியா காதல்.
 அந்தப் பாடல்களை 
 எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற
 ஆவல்.
" உயிர் போனாலும் பரவாயில்லை எனக்காக
 நீங்கள் அந்தப் பாடலைப் பாடியே ஆக வேண்டும்"
 என்று வற்புறுத்துகிறார்.
 
வேறு வழியின்றி  துறவியும் பாடலைப் பாட
ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் ஒரு நிபந்தனை . 
அதற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்
என்று சொல்கிறார் .
மன்னரும் நிபந்தனைக்கு
ஒத்துக் கொண்டு பாடல்களைக்
கேட்கத் தயாராகிவிட்டார்.

"மன்னா! நூறு பந்தல்கள் பச்சை ஓலையால்
அமையுங்கள்.
நான் ஒவ்வொரு பாடல் பாடும்போதும் 
நீங்கள் ஒரு பந்தலில் இருந்து
அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் .
அடுத்தப் பாடலுக்கு அடுத்தப் பந்தலுக்குச்
சென்றுவிட வேண்டும் "என்கிறார்.

மன்னரும் சம்மதித்துப் பாடல் கேட்கத்
தயாராக முதல் பந்தலில் போய் அமர்ந்தார்.

பாடல் தொடங்கியது.
பாடல் முடிந்ததும் பந்தல் தீப்பற்றிக்
கொண்டது.
மன்னர் அடுத்தப் பந்தலுக்குச்
தாவிச் சென்று விட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு பாடலும்
பாடப்பாட ஒவ்வொரு பந்தலும்
எரிந்து போனது. 
இப்படியாக தொண்ணூற்று ஒன்பது
பந்தல்களும் எரிந்து தீர்ந்தன.

கடைசியாக நூறாவது பந்தலில்
மன்னர் பிணம் போல படுத்துக் கொண்டு
பாடலைக் கேட்டார்.

துறவி கண்ணீரோடு கடைசிப்
பாடலைப் பாடினார்.
பந்தல் மொத்தமாக தீப்பற்றிக் கொள்ள
மன்னரும் மாண்டு போகிறார்.

இதுதான் அறம் வைத்துப் பாடிய
பாடலைக் கேட்டதால் நந்தி வர்மனுக்கு
நிகழ்ந்த சோகம்.

அப்படி என்னதான் பாடியிருப்பார்
என்பதைக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!

இறுதியில்  கதறி அழுதவாறு துறவி பாடிய
பாடல் இதோ :

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே !

"உன் முக அழகினை நிலவு பெற்றுக்
கொண்டது.
உன் புகழ் கடலுக்குள் சென்றுவிட்டது.
உன் வீரம் காட்டில் வாழும் புலிகளிடம்
தஞ்சம் அடைந்து விட்டன.
உன் கரங்கள் கற்பக மரத்திடம் சென்றுவிட்டன.
உன்னிடம் இருந்த திருமகளும் திருமாலிடம்
சென்று விட்டாள்.
நானும் என் வறுமையும் எங்கே செல்வோம் இனி"
என்று அழுது புலம்புகிறார் துறவி.

அறம் வைத்துப் பாடுதலுக்கு இவ்வளவு
சக்தியா?

இப்படி அறம் வைத்துப் பாடுதல் சரியா?
என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

ஆழ்மனதில் ஏற்படும் காயமே சாபமாக
வெளி வருகிறது.

வலியோர் எளியோர் மீது வலுக்கட்டாயமாக
இழைக்கும் அநீதிக்கு எதிராக 
எளியோரால் எதுவும் செய்ய முடியாத நிலை.
தனது இயலாமையை வார்த்தையால்
வெளிப்படுத்த முயல்வர்.
அதுதான் கடைசியில் சாபமிடுவதற்கும் 
அறம் வைத்துப்
பாடும் நிலைக்கும் கொண்டு செல்கிறது.

இதுதான் நந்திக் கலம்பகம் மூலம்
நாம் அறியும் செய்தி.
மனத்துக்கண் மாசிலன் ஆதல்.....

மனத்துக்கண் மாசிலன் ஆதல்...


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற "
                         குறள்  :34

மனத்துக்கண் _ உள்ளத்தில்
மாசிலன் _  குற்றம் இல்லாதவன்
ஆதல்  _  ஆக இருத்தல்
அனைத்து _ எல்லாம்,  அவ்வளவுடையதே
அறன் _ அறம்
ஆகுல _ ஆரவாரம், பகட்டு
நீர _ தன்மை உடையவை
பிற _  மற்றவை எல்லாம்

ஒருவன் தன் மனதில் குற்றம்
இல்லாதவனாக இருத்தல் மட்டுமே அறமாகும்.
மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம்
வெளிப்பகட்டுத் தன்மை
கொண்ட அறமாகவே கொள்ளப்படும்.

விளக்கம் :

மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாக
இருத்தல் அறமாகும்.
உள்ளத்தில் குற்றம் நிறைந்தவனாய்
இருந்து ஒருவன் செய்கிற நற்செயலும்
நற் செய்கைகளும் அறம் என்று 
கருதப்பட மாட்டாது.
 உலகம்  மெச்சட்டும் என்பதற்காக
 பலபேர் அறிய 
செய்யப்படும்  நற்செயல்கள்
போலியானவை.

பிறர் அறிய வேண்டும் என்பதற்காக
பல உதவிகளைச் செய்பவர்கள் உண்டு
ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஒருபோதும் 
நற்சிந்தனை இருந்திருக்காது.
அதனையும் நாங்கள் அறச் செயல்கள் 
செய்கிறோம் என்று விளம்பரப் படுத்திக்
கொள்வர்.

எந்த தர்மம் செய்தாலும் உண்மையான
உள்ளன்போடு செய்யப்பட வேண்டும்.
ஒரு சுயநலத்திற்காகவோ 
விளம்பரத்திற்காகவோ
செய்யப்படும் தான தர்மங்கள
அறத்தின்பாற்படாது 
என்பது வள்ளுவர் கருத்து.
அறம் என்பது சொல்லாலும் செயலாலும்
எண்ணத்தாலும் தூயதாக 
செய்யப்பட வேண்டும். 

English couplet :

"Spotless be thou in mind !This only merits virtue's name.
All else, mere pomp of idle sound,no real worth can claim "

Explanation : 

Let him who does virtuous deeds be of spotless mind; 
to that extent is virtue ;all else is vain show.

Transliteration:

"Manaththukkan Maasilan Aadhal Amarnthaal
Aakula Neera Pira "


 

Thursday, January 21, 2021

பத்து பவுனு

                பத்து பவுனு 


நேற்றிலிருந்தே பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு
வாங்கிக் கொண்டிருந்தது.
இன்றைக்கோ நாளைக்கோ உசுரு
போயிரும் என்று ஊரு சனம்
எல்லாம் வந்து பார்த்து அழுதுட்டுப்
போனாவ...

பாட்டியின் நாலு மகன்களும்
வெளியில் அமர்ந்திருந்து
வர்றவுங்க போறவுங்க கிட்டே எல்லாம்
பேசிகிட்டு இருந்தாவ..

வெளி இடங்களில் இருக்கும்
உறவினர்கள்கூட
வந்துட்டாவ...
ஆனால் உள்ளுரில் இருக்கும் அன்னத்தாயி
சித்தி மட்டும் வரல...

"அன்னத்தாயி இன்னும் வரலியா....
அன்னத்தாயி இன்னும் வரலியா..."
என்று ஆளாளுக்கு அன்னத்தாயி
சித்தியை பற்றியே
கேட்டுக் கொண்டிருந்தாவ...

" பெத்த தாய்க்கு சேத்துமா கட்டி
இழுக்குது...
இன்னுமா அன்னத்தாயிக்கு இந்தத்
தாயை வந்து பார்க்கணும் என்று
நினைப்பு வரல..."
என்றார் மூத்த அத்தை.

"கடைக்குட்டி என்று மடியிலேயே போட்டு
வளர்த்தப் புள்ள...
இப்படியா கல்லு மனசாட்டும்
கிடப்பா..?.."
என்றார் பக்கத்து வீட்டு பெரியம்மா.

"பாரு...அந்தத் தாய் மனசு கடைக்குட்டியை
மட்டும் காணாம எப்படி கிடந்து
தவிக்குது...யாராவது போய்
ஒரு வார்த்தை கூப்பிட்டுப் பார்த்தியளா"
என்றார்  ஒரு தாத்தா.

"பெத்த தாயைப் பார்க்கிறதுக்குப் போய்
கூப்பிடணுமாக்கும்.தானா பதறி கிட்டு
ஓடி வரமாட்டா...
என்ன பிள்ளைகளோப்பா..."
சலித்துக் கொண்டார் மூத்த அத்தை.

"அவளுக்கு என்ன மன வருத்தமோ ...
யாரு கண்டா...."என்று அன்னத்தாயி
பக்கம் நின்று பேசினார் எதிர் வீட்டு சித்தி.

" இருக்கிறவுகளெல்லாம்
தொண்ட வொணராம கொஞ்சம் கொஞ்சம்
பாலு ஊத்துங்க...".என்று குரல் கொடுத்தார்
பாட்டியின் தம்பி.

"அந்த நெஞ்சு வதச்சு கிட்டு கிடக்கு...
நீயாவது ஒரு எட்டு போய் பார்த்துட்டு கையோடு
உன் மருமவள கூட்டிட்டு வரப்பிடாது..." என்று
தாத்தாவைப் பார்த்து கேட்டார்
எதிர்வீட்டுப் பாட்டி.

"ஒரு முறையா... இரண்டு முறையா....
எத்தனை நட போய் பார்த்தாச்சு..
அவள் கிளம்பி வரணுமில்ல...
அவ வந்தாலும் புருஷக்காரன் விடுவதா தெரியல..."
என்றார்  எங்க மாமா.

"அப்போ கடைசியா அவள் என்னதான்
சொல்கிறாள்.?"
பேச்சுக்கு முடிவு கட்ட வந்தாள் சித்தி.

"பத்து பவுன் பாக்கி இருக்கு...
அதை இன்னா தருவேன்
நாளைக்குத் தருவேன்
என்று சொல்லி சொல்லி
கடத்தி வருஷம் நாலு ஆகுது.
ஒத்த பவுனு தரல....தந்தா வருவா
இல்ல..அந்த வாசல வந்து மிதிக்க மாட்டா
என்று கறாரா சொல்லி அனுப்பி
விட்டுருக்கான் மருமவன்காரன்"
கோபமாகப் பேசினார் மாமா.

"பவுனு கேட்கிற நேரமா இது...
என்ன மனுஷன் இவன்...." சலித்துக்
கொண்டார் எதிர் வீட்டு சித்தி.

"இதை விட்டா வேறு சந்தர்ப்பம் கிடைக்காது
என நினைக்கிறான் போலிருக்கு..."

"நல்லா நினைச்சான் ...சொரைக்காக்கு
உப்புல்லன்னு."

"பொட்டப் புள்ளைகளை பெத்தா கடைசி வரை
கண்ணீரு என்பது உண்மையாகத்தான்
இருக்கும்போல..."
பாட்டியின் கண்களின் ஓரத்தில் கண்ணீரைப்
பார்த்துப் பேசினார் சித்தி.

எல்லாரும் பேசுவதைப் பார்த்த
எனக்கு அன்னத்தாயி
சித்திக்கு கொடுக்க வேண்டிய
பத்து பவுனு கடனையும்
அடச்சிடணும் என்று பாட்டி  பட்டபாடு
நினைவுக்கு வந்தது.

தன் உயிர் போகும்முன்னால்
ஒரு சீட்டு நாட்டப் போட்டாவது
அந்தப்  பத்து பவுனையும்
குடுத்துடணும் என்று
எவ்வளவோ பிரயாசப்
பட்டாவ...
ஆனால் அவங்களால முடியல..

கடைக்குட்டிப் பொண்ணு.
கடைசி மகனைவிட எட்டு வயசு இளசு.
அதனால நாலு மவனுகளுக்கும்
திருமணம் முடிஞ்ச பிறகுதான்
அன்னத்தாயி சித்திக்கு திருமணம் முடிக்க
வரன் பார்த்தாவ...
சித்தியைப் பெண் கேட்டு
வாரவங்க எல்லாம் முப்பது பவுன்
தர்ரியா?
நாற்பது பவுன் தர்ரியா என்று
ஏலம் போட ஆரம்பித்து
போயிட்டே இருந்தாவ...

வயசு ஆக ஆக ரேட்டும்
ஏறி கிட்டே போச்சே தவிர
குறைந்த பாடு இல்ல.
பாட்டி நம்ம நிலைமைக்கு ஒரு
இருபது பவுனு கொடுக்கலாம்
அதுக்கு மேல நம்மளால இயலாது
என்றுதான் சொல்லிகிட்டே இருந்தாவ..

சித்திக்கு வயசு ஏறிகிட்டே போச்சே தவிர
பவுனு கேட்பவர்கள் யாரும்
பவுனை குறைச்சு கேட்கல...

இனி பார்த்துகிட்டு இருந்தா முடியாதுன்னு
பாட்டி முப்பது பவுனுக்குச்
சம்மதிச்சாவ.....

மவனுவ  ஆளுக்கு ஐந்து பவுனாவது
கேட்டு வாங்கிக்கிடலாம்.

மீதம் பத்து பவுனு எப்படியாவது
தனது கழுத்து சுத்துருவு தண்டட்டியை
வச்சி ஒப்பேத்திபிடலாம் என்று
நினச்சி பாட்டி  ஒரு கடலை வியாபாரியாரு
மவனை  பேசி முடிச்சாவ....

ஆனால் நாலு அத்தைமாரும்
மூணுபவுனுக்கு மேல ஒத்த பவுனு
கொடுக்கக் கூடாது என்று
வீட்டுக்குள்ள சண்டை போட்டாவ....

அதனால் மாமன் நால்வரும் சொல்லி வச்சதுபோல
மூணு பவுனைத் தவிர
சல்லிக் காசு தரமுடியாது என்று
  கறாரா பேசிகிட்டு ஒதுங்கிட்டாவ...

பாவம் பாட்டி என்ன செய்யும் ?
ஏதோ இருபது பவுனு மட்டும்தான்
அவங்களால கலியாணத்து
அன்னக்கி கொடுக்க முடிஞ்சுது.

மீதி பத்து பவுனை ஒரு வருசத்துல
தந்துடுவேன் என்று கடன் சொல்லி
கலியாணத்தை முடிச்சி வச்சாவ...

வருசம் நாலாச்சு. பாட்டியால பத்து
பவுனை கொடுக்க முடியாம
கடன்காரியாப் போனாவ...

அன்னத்தாயி சித்தி ஓயாம வந்து
என் பவுன தா என்று பாட்டி
கிட்ட சண்டை போடுவாவ...

இன்னா தாறேன்...வருகிற
விளைச்சலுல எப்படியாவது உன்
கடனை அடைச்சுருவேன் என்று
சொல்லுவாவ....
பாட்டிக்கு சாப்பாட்டுக்கு என்று
ஒதுக்குன பத்து மரக்கா
விதப்பாட்டு நிலத்துல  சரியா விளைச்சல்
இல்லாம போச்சு...

பாட்டி ரொம்ப பிரயாசப்பட்டாவ...
எதுவும் சரியா கைகூடல...

பாட்டி ஒரு சிந்து பசு மாட்டை
வாங்கி போட்டு
வளர்த்தாவ....
அந்தப் பாலை வித்து ஒரு சீட்டு போட்டு
குறைஞ்சுதுன்னா
வட்டிக்கு பணம் வாங்கியாவது
அன்னத்தாயி சித்திக்கான பத்து பவுன்
கடனையும் எப்படியாவது தீர்த்துடணும்
என்று சொல்லிக் கிட்டே
இருப்பாவ...

மாடு குட்டி போட்டதுதான் தாமதம்
இளைய மாமா வந்து பசு மாட்டைக்
கொடு என்று வாசலில் வந்து நின்னாவ...

பாட்டிக்கு என்ன சொல்ல என்றே தெரியல...

"பாலை வித்துதான் தங்கச்சிக்கு
கொடுக்க வேண்டிய கடனுல
ஒரு ஐந்து பவுன் கடனையாவது
அடைத்துடலாம் என்று
பார்க்கிறேன் தம்பி "என்று
சொல்லி பார்த்தாவ...

மாமா  விடுவதாக இல்லை..
"என் பிள்ளைகளுக்கு குடிக்கப் பால்
இல்லை.... அடுத்த ஈத்துக்கு
அன்னத்தாயி கதையைப் பார்த்துக்கலாம்"
என்று சொல்லி மாட்டையும் கண்ணுக்குட்டியையும்
பத்திகிட்டுப் போயிட்டாவ....

அதன்பிறகு கடைசிவரை பாட்டியால
அந்த பத்து பவுனை கொடுக்க முடியல...

அன்னத்தாயி சித்தி வரும் போதெல்லாம்
வீட்டை வித்தாவது எனக்குத் தர வேண்டிய 
பத்து பவுனு பாக்கிய தர வேண்டியதுதானே என்று
சண்டை போடுவாவ...

பாட்டி என்ன செய்யும் பாவம்...
வீடு பாட்டி பெயருல இல்ல....
அதையும் இளைய மவனுக்குத்தான்
பூர்வீக வீடு என்று தாத்தா
உயிரோடே இருக்கும்போதே
எழுதி வச்சுபபுட்டாவ....

சாப்பாட்டுக்கே  அந்த மகன் தருவானா
இந்த மகன் தருவானா என்று அங்கேயும்
இங்கேயும் எட்டிப் பார்த்து காத்திருக்கும்
பாட்டியால பத்து பவுன் எப்படி கொடுக்க
முடியும்?

அது அன்னத்தாயி சித்திக்கும் புரியல..
சித்தி  வீட்டுக்காரருக்கும்
புரியல...

எங்க நாலு மாமாவுக்கும்
நம்ம ஒடப்பெறந்தாளுக்கு கலியாணத்துக்குப்
போடுவேன்
என்று சொன்ன பாக்கி பத்து பவுனை
கொடுக்கணுமே என்ற நினைப்பு
கொஞ்சம்கூட கிடையாது.

பாட்டி எப்பவாவது சொன்னா...நீ எதுக்கு
முப்பது பவுனுக்கு ஏத்தா..
உன் நிலைமைக்கு தக்க பேச
வேண்டியதுதான....
என்று ஏட்டிக்குப்
போட்டி பேசி மடக்குவாவ...

நடந்தை எல்லாம் நினைக்கும்போது
பாட்டியைப் பார்க்கப் பாவமாக
இருந்தது.

இப்போ எல்லாரும் சேர்ந்து பாட்டிய
பத்து பவுனு கடன்காரியா வழியனுப்ப
காத்திருக்காவ...
பாட்டிக்குத்தான் கடன்காரியா போக
மனமில்லையோ  என்னவோ....

பாட்டி இப்படி பரிதவிச்சுகிட்டுக் 
கிடப்பதைப்
பார்க்கும்போது எனக்கு ...
கடவுள் மேல்கூட கோபமாக வந்தது.

பாட்டியையே பார்த்துக் கொண்டு
அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

திடீரென்று பாட்டியின் கண்களிலிருந்து
மழமழவென்று கண்ணீர் வடிந்தது.

என்ன என்று பக்கத்தில்
ஓடி வந்து பார்த்தேன்.

அதற்குள் அன்னத்தாயி சித்தி ஒப்பாரி
வைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தாவ....

அவ்வளவுதான் பாட்டியின் கண்கள்
அன்னத்தாயி சித்தியை ஒரு ஏக்கத்தோடு
பார்த்து கண்ணீர் விட்டது.

அந்தப் பார்வையில்
"கடைசி வரை உன் கடனைதான் என்னால்
அடைக்க முடியாமலேயே போச்சு...
என்னை மன்னிச்சுடு தாயி" என்ற
ஒரு கெஞ்சல் இருப்பதுபோல் தெரிந்தது.

அதற்கு மேலும் என்னால்
ஒரு பார்வையாளராக நிற்க முடியவில்லை.

முட்டி வந்த கண்ணீரோடு கதறி
அழுதபடி
பாட்டியின் கைகளைப் பற்றினேன்.
அவ்வளவுதான்....
அன்னத்தாயி சித்தியைப் பார்த்த
பார்வையோடேயே பாட்டியின் கண்கள்
நிலை குத்தி நின்று  போயிற்று.

எல்லோரும் ஆளாளுக்கு ஓடிவந்து
கடைசி நேர ஒப்பாரியை அரங்கேற்றிக்
கொண்டிருந்தாவ...

எனக்கு மனசே கேட்கல....
சே....என்ன உலகம் இது....
பாவலாவுக்கு இப்படி ஒரு
ஒப்பாரியா ?

"பெத்த பிள்ளையை பார்ப்பதற்குத்தான்
இத்தனை நேரம் பெரிய மனுசி
உசுர புடிச்சுகிட்டு கிடந்துருக்கா"
என்றார் ஒரு தாத்தா.

அன்னத்தாயி சித்தி கிட்ட
பத்து பவுனு கொடுக்காததற்கு
மன்னிப்பு கேட்டுட்டு
போயிரலாம் என்றுதான் பாட்டி
காத்திருந்திருக்காவ...என்பது எனக்கு
புரிந்தது.

அன்னத்தாயி சித்தி புரிந்திருப்பாவளா?

Tuesday, January 19, 2021

பல, சில என்பவற்றின் புணர்ச்சி விதி

 பல ,சில என்பவற்றின் புணர்ச்சி விதி

பல நேரங்களில்  சில 
இடங்களில்  பல மற்றும் சில
ஆகிய சொற்களை எழுதும்போது
வல்லினம் மிகுமா ?மிகாதா...?
என்ற ஒரு குழப்பம் ஏற்படலாம்.

அதற்கான தீர்வாக நன்னூலார்,

"பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலும் உளபிற "

 என்று எழுதியுள்ளார்.

பல,  சில என்னும் சொற்களுக்கு முன்
 அதே சொற்கள் வந்து புணரும்போது

இயல்பாக அப்படியே வருதல் உண்டு.
எடுத்துக்காட்டு:

பல + பல  = பலபல
சில  + சில = சிலசில

வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டு :
 பல  + பல  = பலப்பல
 சில  + சில  = சிலச்சில


லகரம் றகரம் ஆதலும் என்ற விதிப்படி
நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட
லகரம் றகரமாகி வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டு :

பல  + பல  = பற்பல
சில  + சில  = சிற்சில

இப்போது மூன்று வழிகளில் அவை 
எழுதப்படலாம் என்பது பற்றிய
தெளிவு கிடைத்திருக்கும்.

 பல மற்றும் சில ஆகிய
 சொற்களின் பின் வேறு சொற்கள்
 வந்தால் இயல்பாகவும் புணரும்.
 நிலைமொழி ஈற்று அகரம் கெட்டு
 புணர்வதும் உண்டு.


எடுத்துக்காட்டு:

 பல +  கலை. = பலகலை
 சில +  வளை  = சிலவளை

இவ்வாறு இயல்பாக வரலாம்.

பல +  கலை  = பல்கலை
சில +  வளை = சில்வளை

என்று நிலைமொழி ஈற்று அகரம்
 நீக்கப்பட்டும் எழுதப்படலாம்.

விகற்பமாதலும் உள என்று
கூறியிருப்பதால்

சில + நாள் = சின்னாள்
பல  + தொடை  = பஃதொடை
பல  +  மலர்.      = பன்மலர்
பல +  நாடு  =  பன்னாடு
சில  +  மலர்  =  சின்மலர்
சில + அணி  = சில்லணி
பல  + நலம் = பன்னலம்

என்றும் எழுதப்படலாம்.

விகற்பமாதல் என்பதால் ஒரே புணர்ச்சியில்
அகரம் கெட்டுப் புணர்தல்
அகரம் கெடாது நின்று புணர்தல் என்ற 
இருநிலைகளிலும் எழுதுவது ஏற்றுக்
கொள்ளப்படுகிறது.
 
 இப்போது பல, சில ஒவ்வொருவரும்
 வெவ்வேறு விதமாக எழுதுவதில்
 உள்ள உண்மையான இலக்கண விதி
 புரிந்திருக்கும். மற்றவர்கள் எழுதுவது
 தவறு என்ற கணிப்பு மாறியிருக்கும்.
 பிழையில்லாமல் தமிழ் எழுத
 வாழ்த்துகிறேன்.