ஆற்றில் போட்டியைக் குளத்தில் தேடலாமா

ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடலாமா 


எங்கேயோ தவறவிட்ட ஒன்றை 

அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில்

போய் தேடிக் கொண்டிருப்போம்.


மூக்குக் கண்ணாடியை கண்களில் போட்டுவிட்டு

அறை முழுவதும்  தேடுவோம்.


வீட்டுச்சாவியைக் கையில் வைத்துக் கொண்டு

வீடெல்லாம் தேடுவோம்.


இவை மறதியால் நடைபெறும் நிகழ்வுகள் என்பதைவிட

பெரும்பாலும் பதற்றத்தால் ஏற்பட்ட

நிகழ்வுகளாகத்தான் இருக்கும்.


போட்ட இடம் ஒன்று; தேடும் இடம் மற்றொன்றாக

இருக்கும் போது ஆற்றில் போட்டதைக்

குளத்தில் தேடுவது போல என்ற

சொலவடையைப் பயன்படுத்துவதைக் கேட்டிருப்போம்.


அனுபவப்பட்டவர்கள் வாயிலிருந்து 

புறப்படும் வார்த்தைகள் சொலவடைகளாக

காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு சொலவடையும் ஏதோ ஒரு

அனுபவத்தின் அடிப்படையில் ஏதோ ஒரு காரணமாகச்

 சொல்லப்பட்டதாகத்தான் இருக்கும்.

 இந்தச் சொலவடை பிறந்த வரலாறு 

 மிகவும் சுவாரசியமானது.



சுந்தரமூர்த்தி நாயனார்

வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு

சுவாரசியமான ஒரு நிகழ்வின் போது

எழுந்ததுதான் இந்த சொலவடை.

என்பது செய்தி.


சிவபெருமானைத் தன் தோழனாகவே எண்ணி

வழிபட்டு வந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.


பித்தா பிறைசூடி அருளாளா ....என்று

உரிமையோடு சிவபெருமானை அழைத்து

தனக்கு வேண்டியவற்றைச் செய்து தர

வேண்டும் என்று பிடிவாதமாகக் கேட்பவர்.


எந்த ஊரில் சிவதலம் இருந்தாலும் அங்கு

சென்று வழிபடும் வழக்கம் இவருக்கு உண்டு.


ஒருமுறை ஒரு சிவாலயத்திற்குச் சென்றுவிட்டு

விருத்தாச்சலம் அருகே தனிமையில்

வந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் 

அசரீரியாக அவர் காதுகளில் வந்து

ஒலிக்கிறது.


"எம்மை மறந்தனையோ சுந்தரா?" என்ற

அந்தக் குரலைக் கேட்டதும் அப்படியே திகைத்துப்

போய் நிற்கிறார்.

பக்கத்தில் ஒரு சிவாலயம் இருக்க வேண்டும்.

அதற்கு செல்லாமல் போகிறாயே என்று

தடுத்து நிறுத்தத்தான் அந்தக் குரல் ஒலித்திருக்க வேண்டும் 

என்று அவர் நம்பினார்.


ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்த

சிவாலயமும் தென்படவில்லை.

சற்று தொலைவில் இருக்கலாம்.

எப்படி செல்வது என தடுமாறி

நின்றபோது,


தொலைவில் ஒரு வயதான தம்பதியினர்

வருவதைக் காண்கிறார்.

இவர்களிடம் கேட்டால் தெரிந்துவிடப்

போகிறது என்று எண்ணி அவர்களிடம்,


"ஐயா ,அருகில் எங்காவது சிவாலயம் இருக்கிறதா? "

என்று கேட்கிறார்.


"சிவாலயத்திற்குத்தானே....நாங்களும் அங்குதான்

செல்கிறோம்...வாருங்கள்...

சேர்ந்தே செல்வோம்" என்று சொல்கின்றனர்.


இப்போது மூவருமாக

சிவாலயத்தை நோக்கிச் செல்கின்றனர்.


ஆலயத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

ஆலயத்திற்குள் சென்றதும் பக்திப்

பெருக்கில் பாடல்கள் பாட ஆரம்பிக்கின்றார்

சுந்தரர்.

பாடலை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த தம்பதியினர்

பதினைந்தாயிரம் தங்கக்கட்டிகளைக் 

சுந்தரரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.


"பதினையாயிரம் தங்கக் கட்டிகளா?

இவை அத்தனையையும் எப்படி சுமந்து

செல்வது? 

தனியாக என்னால் கொண்டு செல்ல இயலாதே"

எனத் தயங்கி நிற்கிறார் சுந்தரர்.

ஆனால் தங்கக்கட்டிகளை விட்டுவிடவும்

மனம் வரவில்லை.


கையைப் பிசைந்து கொண்டு

நிற்கிறார்.


என்ன செய்யலாம்?  எல்லாவற்றிற்கும்

வழி சொல்லும் இறைவன் இதற்கு

ஒரு வழி சொல்லாமலா போய்விடுவார்?


நேரே இறைவன் சந்நிதானத்தில்

நின்று ஒரு வேண்டுகோள்

வைக்கிறார்.

"அப்பனே! என்னால் இந்த பதினையாயிரம்

தங்கக் கட்டிகளையும் சுமந்து செல்ல இயலாது.

இதோ ஓடுகிற திருமணி முக்தா நதியில்

போடுகிறேன்.

அவற்றை திருவாரூரில் இருக்கும்

கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி

நீ தான் அருள் செய்ய வேண்டும் "என்று வேண்டிக் கொள்கிறார்.


"உன் விருப்பப்படியே திருவாரூர் கமலாலயத்தில்

இந்தத் தங்கக் கட்டிகளை நீ எடுத்துக்

கொள்ளலாம் "என்று இறைவனிடமிருந்து

மறு உத்தரவு கிடைத்துவிடுகிறது.


தங்கக் கட்டிகள்மீது அடையாளமிட்டு

திருமணிமுக்தா நதியில் போட்டுவிட்டு

மகிழ்ச்சியோடு வீடு செல்கிறார்.


திருவாரூருக்கு வந்தவர் தன் மனைவியிடம்

நடந்தவற்றை கூறி, "வா நாம் போய்

கமலாலயத்திலிருந்து அந்தத் தங்கக் கட்டிகளை

எடுத்து வருவோம் "என்கிறார்.


மனைவிக்கு அவர் சொல்வதில்

நம்பிக்கை இல்லை.


"உங்கள் செயல் உங்களுக்கே

நகைப்பாக இல்லையா?

அது எப்படி விருத்தாச்சலத்தில் உள்ள

நதியில் போட்ட தங்கக் கட்டி 

திருவாரூர் குளத்தில் கிடைக்கும்? எனக்கு

நம்பிக்கை இல்லை. "


என்று நம்ப மறுக்கிறார்.


"எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நீ வாயேன் " என்று அழைக்கிறார்.


"நீங்கள் அழைப்பதால்

வருகிறேன் "என்று  அரைகுறை மனதோடு

தங்கக் கட்டிகளை எடுத்து

வருவதற்காக சுந்தரரோடு கமலாலயம்

செல்கிறார் சுந்தரரின் மனைவி

பரவை நாச்சியார்.


குளத்தில் இறங்கி தங்கக் கட்டிகளைத்

தேடுகிறார் சுந்தரர். ஒன்றும் அகப்படவில்லை.

மறுபடியும் மறுபடியும் தேடுகிறார்.

ம்ஹூம்....ஒரு தங்கக்கட்டி கூட கிடைக்கவில்லை.

குளத்தில் கிடந்து சுந்தரர் துழாவுவதைப்

பார்த்த  மனைவி பரவை

நாச்சியாருக்கு அடக்கமுடியாத சிரிப்பு.


வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.


"ஏன் சிரிக்கிறாய்?" என்றார் சுந்தரர்.


"நீங்கள் தங்கள் கட்டைகளை எங்கே போட்டீர்கள்?"


"திருமணி முக்தா ஆற்றில் போட்டேன்."


"இப்போது நீங்கள் தேடும் இடம் எது?"


"கமலாலய குளம்"


"ஆற்றில் போட்டதைக் குளத்தில்

தேடுவார் உண்டோ?" என்று சொல்லி

மறுபடியும் கேலி செய்ய ஆரம்பித்தார்.


 இப்போது சுந்தரருக்கு பரவை நாச்சியார்  சொன்னதில் இருக்கும் உண்மை புரிந்தது. இருப்பினும் தன்மானப் பிரச்சனை குறுக்கே வந்து கேள்வி கேட்டு நின்றது.


"இறைவா! என் மனைவியே என்னைக்

கேலி செய்யம்படி வைத்துவிட்டாயே...

நீ எனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற

வேண்டும். எனக்கு இதே இடத்தில் அந்தத்

தங்கக் கட்டிகள் கிடைத்தருளச் செய்ய

வேண்டும் "எனப் பிடிவாதமாக அங்கிருந்து

செல்ல  மறுக்கிறார்.


சுந்தரரின் நம்பிக்கையை கண்ட இறைவனும்

திருவாரூர் கமலாலயத்தில் அந்தத் தங்கக்

கட்டிகள் கிடைக்க வழி செய்தார்

என்பது வரலாறு.


அடேங்கப்பா... ஆற்றில் போட்டதை

குளத்தில் தேடலாமா ?

இந்தச் சொலவடைக்குள்

இத்தனை நெகிழ்ச்சியான  வரலாற்றுக் கதை உள்ளதா? 


எல்லா சொலவடைகளும் ஏதோ ஒரு காரணம் கருதி நிறைந்ததாகவே இருக்கும்

என்பது இப்போது புரிகிறதல்லவா!



Comments