ஒட்டா ஒரு மதிகெட்டாய்
போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.
ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக
போட்டி போட்டுக் கொள்கிறான்.
தான்தான் பெரியவன் என்பதைக்
காட்டிக் கொள்வதற்காக
போட்டி போடுகிறான்.
போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....
இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு.
ஆனால் அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று நமக்கு அறிவுரை கூறும் பெருமதியாளரிடமும் பொறாமை காணப்படும்போது அது சற்று
நம்மை அதிர்ச்சி அடையத்தான் வைக்கிறது.
இப்படியும் இருப்பார்களா
என்று வியக்க வைக்கிறது.
நகைக்க வைக்கிறது.
சற்றே சிந்திக்க வைக்கிறது.
யாரிந்த போட்டியாளர்கள்?
புலவர்கள்தான்.
புலவர்களிடையே அப்படி என்ன போட்டி?
புலமையை மெய்ப்பிப்பதில்
முந்தி நிற்பது நீயா நானா
என்பதுதான் போட்டி.
குறை கண்டு பிடிப்பதிலேயே சிலர் குறியாக இருப்பர்.
ஒருவர் எழுதும் பாடலில் எழுத்தில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க வேண்டும் என்றே ஒரு கூட்டம் அலையும்.
ஆனால் யாராவது தன் மீதுள்ள குறையையோ தன் படைப்புகளின் மீதுள்ள குறையையோ ஒத்துக் கொள்வார்களா?
மாட்டார்கள் இல்லையா?
என் பாடலில் குறை காண்பதா?
என் எழுத்தில் யாது குறை கண்டீர்?
சொல்லில் குற்றமா
இல்லை பொருளில்தான் குற்றமா?
கூறும் கூறிப் பாரும்.
ம்உம்....இது என் தன்மானத்திற்கு இழுக்கல்லவா.... ஏற்க மனம் மறுக்கிறது
என்று ஒருவர் பொங்கி எழ...
அதனால் நிகழ்ந்தது ஒரு கவிப்போர் . அது இலக்கியப் போராக மாற களிப்போர் தமக்கு
தமிழ்த்தேன் பருக வைத்து
திக்குமுக்காட வைப்பது புலவர் தொழில்.
தமிழ்த்தேன் பருக ஆவலா?
வாருங்கள்.
ஔவைக்கும் கம்பருக்கும்
எப்போதும் ஒரு உரசல் உண்டு.
"கூழுக்குப் பாடும் கூனக் கிழவி" என்று
குறைவாகவே எடைபோட்டு வைத்திருந்தார்.
ஔவை மட்டும் குறைந்தவரா என்ன?
போடா போடா புண்ணாக்கு...
போடாத தப்புக் கணக்கு....
என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருந்தார்.
புலமை இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பது உண்மை தான்.
அது ஞானச்செருக்கு.
கம்பரைப் போலவே ஒட்டக்கூத்தருக்கும்
ஔவை மீது பொறாமை இருக்கத்தான் செய்தது.
ஒருநாள் ராஜவீதியில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் தனது இரு கால்களையும் நீட்டியபடி ஔவை அமர்ந்திருக்கிறார்.
அப்போது மன்னன் அந்த வழியாக
வீதி உலா வருகிறார்.
மன்னனைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்த ஔவை படக்கென்று தனது ஒரு காலை மடக்கிக் கொண்டார்.
அரசருக்கு அருகில் வெண்பா புலி என்று அழைக்கப்படும் புகழேந்தி புலவரும் வருகிறார் .
புகழேந்தியைக் கண்டதும் தன் இரண்டு கால்களையுமே மடக்கி மரியாதையாக அமர்ந்து கொண்டார் ஔவை.
அவர்களுக்குப் பின்னால் ஒட்டக்கூத்தர் வருகிறார்.
ஒட்டக்கூத்தரைப் பார்த்ததும்
பழையபடி தன் இரண்டு கால்களையும் நீட்டி கண்டும் காணாதது போல
இருந்துகொண்டார் ஔவை.
ஒட்டக்கூத்தருக்கு தன்னை இந்தக் கிழவி வேண்டுமென்றேதான் அவமானப்படுத்துகிறாள்
என்பது புரிந்து போயிற்று.
பல்லை நறநறவென்று கடித்தார்
என்ன திமிர் இந்த கிழவிக்கு?
"ஏய் கிழவி ....நான் வரும்போது ஏன் கால்களை நீட்டி உட்கார்ந்திருக்கிறாய்?
" ஏன் ஏதாவது பிரச்சினையா"
" அரசன் வரும்போது ஒற்றைக் காலை மடக்கினாய்"
"ஆமாம்...மடக்கினேன்...நாடாளும் மன்னனுக்கு மரியாதை கொடுப்பது குடிமகளாகிய எனது கடமை"
" புகழேந்தியைக் கண்டதும் இரண்டு கால்களையும் மடக்கினாயே அவர் மன்னனை விடவும் பெரியவரோ?"
"இதிலென்ன சந்தேகம். ?
புகழேந்தி மகாமதியாளர். அதனால் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினேன்.
இதில் வேறென்ன குறை கண்டீர்?
"என்னைக் கண்டதும் இரண்டு கைல்களையும் நீட்டி அமர்ந்தீரே .
அதற்குக் காரணம்?
" காரணம்.....மரியாதை கொடுக்கிற அளவுக்கு நீர் ஒன்றும் பெரியவரல்ல என்பதாக இருக்கலாம்."
"ம்உம்... என்ன சொன்னீர் ...என்ன சொன்னீர்?மரியாதை கொடுக்கும் அளவிற்கு
நான் பெரியவனில்லையா?"
ஆமாம்...
ஔவை இப்படிச் சொல்வார் என்று ஒட்டக்கூத்தர் எதிர்பார்க்கவில்லை.
முகம் அப்படியே மாறிப் போயிற்று.
ஒட்டக்கூத்தரின் மன நிலை மன்னனுக்கும் புரிந்து போயிற்று.
இருவருக்கும் இடையில் மனக்கசப்பு
ஏற்படுவதை மன்னர் விரும்பவில்லை.
"ஔவையே தங்கள் புலமையை நான் மெச்சுகிறேன்.
இருப்பினும் ஒட்டக்கூத்தரை அவமானப்படுத்துவதுபோல் தாங்கள் நடந்து கொண்டதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நீங்கள் அப்படி நடந்து கொண்டதற்கான உண்மையான காரணத்தை இப்போது நீங்கள் கூறவேண்டும்." என்றார் மன்னர்.
"ஒட்டக்கூத்தர் என்ன ...பெரிய அறிவாளியா நான் அவரை மதிப்பதற்கு? " மறுபடியும் அதே கர்வமான பேச்சு.
"ஒட்டக்கூத்தர் மதியற்றவர் என்று உங்களால் எப்படி கூறமுடியும்.?"
" காரணம் தானே கேட்டீர்கள் .....இதோ நிரூபிக்கிறேன்."
"கடைசி வரியில் மூன்றுமுறை 'மதி' வரும்படி ஒரு பாடலைப் பாடச் சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி அவர்
பாடி விட்டால் நான் அவரை பெருமதியாளர் என்று ஒத்துக்கொள்கிறேன்"
"பாடல்தானே இதோ...இப்போதே பாடுகிறேன்.கேளுங்கள் " என்ற ஒட்டக்கூத்தர் சிறிதும் தாமதிக்காமல்
பாடலைப் பாடினார்.
"வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறி
துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோ டிறங்குஞ் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா!
பிள்ளை மதியா லென்மாது பேதை மதியு மிழந்தனளே. "
பாடலை க் கேட்டதும் உரக்கச் சிரித்தார் ஔவை.
ஏன் சிரிக்கிறார் என்பது ஒருவருக்கும் புரியவில்லை.
வெள்ள நீரிலும் அடங்காத கோபத்தையுடைய வாளை மீனானது வயல்வெளிகளின் வேலியாக இருக்கும் பாக்கு மரத்தின் உச்சியில் துள்ளி எழுகிறது.
அவ்வாறு பாய்ந்த மீன், வானில் உள்ள மேகத்தைக் கிழித்துக் கொண்டு மீண்டும் விழும் மழைத்துளியோடு தரையிறங்கும் வளம் பொருந்திய சோழ நாட்டு மன்னன்
கள்ளத்தனம் மிக்க பகைவர்களை அழிப்பவன்.இத்தகைய சிறப்புகள் கொண்ட சோழ மன்னனைக் கண்டு, இளம்பெண் ஒருத்தி தன் அறிவை (மதியை) இழந்து அவன் மேல் காதல் வயப்பட்டு நிற்கிறாள் என்பதானே இப்பாடலின் பொருள்.
இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?
சரியாகத்தானே பாடியிருக்கிறார் "
என்றார் மன்னர்.
"கடைசி வரியை மறுபடியும்
ஒருமுறை பாடப் சொல்லுங்கள்."என்றார் ஔவை.
" .... பிள்ளை மதிகண்டெம்ப் பேதை பெரிய மதியுமிழந்தாளே "என்றார் ஒட்டக்கூத்தர்.
" ஒட்டா ஒரு மதி கெட்டாய் "என்று சொல்லிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ஔவை.
மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மதிகெட்டவனே என்று கேட்பது போல் இருந்தது.
அவையில் இருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.
ஏன் என்பது போல புருவம் உயர்த்தி கேட்டார் ஔவை.
"பாடலில் தவறு ஒன்றுமில்லையே...பிறகு ஏன் ஒட்டா ஒரு மதிகெட்டாய் என்றீர்கள்"
ஆறாறாமையினால் மன்னர் மறுபடியும் ஒட்டக்கூத்தர் பக்கம் நின்று பேசினார்.
"பிள்ளை மதிகண்டு எம் பேதை பெரிய மதியும் இழந்தாளே"
என்று ஒட்டக்கூத்தர் பாடலில் 'பிள்ளை மதி ' 'பெரிய மதி 'என்று இரண்டு முறைதானே' மதி் 'வந்திருக்கின்றது"
கடைசி வரியில் மூன்று மதி வரவேண்டும்
என்றேனல்லவா?
ஒரு மதி குறைந்துவிட்டது.
அதைத்தான் "ஒட்டா ஒருமதி கெட்டாய்" என்று கூறினேன். இதிலென்ன தவறு இருக்கிறது" என்று தன் கூற்றில் தவறில்லை என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார் ஔவை.
ஆமாம்... உண்மை தான் அனைவரும் புரிந்துகொண்டு
வாய் பேசாமல் அப்படியே நின்றனர்.
வார்த்தைகளை வைத்து விளையாட
புலவர்களுக்குச் சொல்லியா கொடுக்க
வேண்டும்.
இதற்குமேல் மன்னனால் என்ன சொல்ல முடியும்?
மதி கெட்டவனே ...என்று சொல்வதற்கு இப்படியும் ஒரு வழியா?
அப்பப்பா....குறை கண்டுபிடிக்கலாம் .....அதற்கு இப்படியா....?
இந்தப் பாட்டிகளே இப்படித்தான்.
இல்லை...இல்லை புலவர்களே இப்படித்தான்.
"ஒட்டா ஒரு மதி கெட்டாய்"
கருத்துகள்
கருத்துரையிடுக