கால் நொந்தேன் நொந்தேன்

கால் நொந்தேன் நொந்தேன் 


"யாரை எங்கே வைப்பது என்று 

யாருக்கும் தெரியலே

அண்டங்காக்கைக்கும்

குயில்களுக்கும் 

பேதம் புரியலே

பேதம் புரியலே...."

கண்ணதாசனின் இந்தப் பாடல் காதோடு வந்து மோத ஏதேதோ நினைவுகள்

வந்து இதயத்தைத் தட்ட

மெல்லச் சிரித்துக் கொண்டேன்.


அன்றொருநாள்....

சோழமன்னன் ​சோலைவளம் கண்டுவர காவிரிக் கரையோரம் நடந்து வந்துகொண்டிருந்தான்.காவிரிக்

கரையோரத்தில் ஒரு சங்கு ஒன்று வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கி அண்ணாந்து கிடந்தது.

அப்போது ஆற்றங்கரையில் உள்ள

ஒரு மரத்தில் பூத்திருந்த பூவிலிருந்து ஒரு துளி தேன் திறந்திருந்த அந்த சங்கின் வாயில் விழ...

ஆஹா...என்னவொரு அருமையான காட்சி!


அந்தக் காட்சியில் தன்னைத் தொலைத்து சிறிது நேரம்  அப்படியே நின்றிருந்தான் மன்னன்.

அந்த காட்சியை அசை போட்டபடி  அரண்மனைக்குத் திரும்பினான் .



இயற்கைக்குத்தான்  எத்துணை கருணை!அந்தக் காட்சியும் அதன் நேர்த்தியும் மன்னன் நினைவைத் தட்டித் தட்டிச் செல்ல

இரவு முழுவதும் தூக்கம் வராமல் அந்தகாட்சியின் நினையில் தூக்கம் தொலைத்துப் புரண்டு கொண்டிருந்தான் .


அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினை விழச்செய்து இன்பம் பெற வைத்த பெருங்கருணை 

எப்படி நிகழ்ந்தது? 

யாரால் நிகழ்ந்தது?

இரவெல்லாம் அந்தக் காட்சி 

மனதை விட்டு அகலவேயில்லை.


பொழுது விடிந்தது. 

சோழனின்  அரசவையில் அனைவரும்

கூடினர்.


புலவர்களும் அமைச்சர்களும் ஒருங்கே 

அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மன்னன் நேற்றைய நினைவுகளில் அசை போட்டபடி அமர்ந்திருந்தான்.

அப்போது ஔவையார் சோழனின் அவைக்குள் மெல்ல நடந்து வந்தார்.


 ஔவையைக் கண்டதும் "வருக...

வந்து அமர்க" என்று வரவேற்ற மன்னன்

அப்படியே வேறு பக்கம்  திரும்பி மற்ற புலவர்களோடு பேச ஆரம்பித்தான்.


ஔவை அமர்வதற்கு இருக்கை ஒன்றும் அங்கே இல்லை..ஔவை நின்று கொண்டிருப்பதை வேறு யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.


ஔவையாரோ நெடுந்தொலைவிலிருந்து நடந்து வந்திருக்கிறார் .

நடந்து வந்தக் களைப்பும் சோர்வும்

அவரை எங்கேயாவது இருக்கை 

இருக்கிறதா என்று  தேட வைத்தது.


ஆனால்...எங்கே அமர்வது?  


என்னது....சோழன் இப்படி நடந்து கொள்பவன் இல்லையே...

 தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும்

உரிய மரியாதை கொடுப்பவராயிற்றே..

இன்று என்னாயிற்று....?

ஏன்...ஏன்...

இந்தக் கேள்விகள் மனதுக்குள் 

வந்து விடை கேட்டு நிற்க பாடலொன்று மன்னனை நோக்கிக் கேள்வியாக வந்து விழுந்தது

அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பார் ஔவை?

இதோ பாடல் உங்களுக்காக 

"கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று - கூனல்
கருந்தேனுக் கங்காந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே இடம்?"

என்று கேட்டார் ஔவை.

"சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல்நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றாற் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்து வந்தேன்.

என் கால்கள் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு அரிதான நெடுந்தூரம். அங்ஙனம் தொலைவிலிருந்து வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம் எங்கே?”

என்பது பாடலின் பொருள்.

ஔவையின் இப்பாடலைக் கேட்டதும்,

மன்னன் அதிர்ந்து போனான்.

நேற்று தான் கண்ட காட்சியை அப்படியே 

நேரில் கண்டவர் போலப் பாடுகிறாரே...

இதுதான் ஔவை.

 ஔவையின் ஞானத்திறனை என்னவென்பது! 

ஔவையே ...மன்னித்தருள்க...

நேற்றைய நிகழ்வு என்னை 

மெய்மறக்க வைத்துவிட்டது...அதனால் வந்த நெகிழ்ச்சியான மனநிலையில் உள்ளம் தொலைத்த நிலையில்

தங்களை உபசரிக்க மறந்துவிட்டேன்

இப்போது அமருங்கள் என்று இருக்கை அளித்து...உரிய சிறப்பு செய்தான் மன்னன்.

'கூனலுக்கும்  அதாவது சங்கிற்கும் கருந்தேன் கிடைக்கின்ற நாட்டிலே, புலவரான எனக்கு மட்டும் இருக்கவோர் இடம் கிடையாதோ? நின் அன்புப் பரிசிலும் வாயாதோ?’  என்ன அருமையான கேள்வி!

புண்படுத்தாத கேள்வி.

புரிய வைத்தக் கேள்வி.

புலமைக்கு மகுடம் சூட்டி நிற்கும் கேள்வி.

இதுதான் ஔவை.




கருத்துகள்

Popular Posts