அவரவர் நியாயங்கள்
அவரவர் நியாயங்கள்
உலகத்தில் உளள ஒவ்வொருவரிடமும் ஒரு நியாயம் இருக்கிறது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு நியாயமான காரணம் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறது.ஒவ்வொரு தவறுக்குப் பின்னாலும் அவரவர்க்கு ஏற்ற ஒரு நியாயம் கற்பிக்கப்படுகிறது. . ஆனால் அவர்கள் கூறும் விளக்கங்கள் எல்லாம் உண்மையான நியாயங்கள் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்டவைதானா என்பதில்தான் சிக்கல் தொடங்குகிறது.நியாயம் என்பது சிலருக்கு உண்மையின் குரல்.ஆனால் இது பலருக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு கவசம் என்பதன்றி வேறொன்றுமில்லை.
நியாயத்தின் முகங்கள்:
ஒரே நிகழ்வை இருவர் இருவேறு விதமாகப் பார்க்கிறார்கள். ஒருவருக்குச் சரி என்று தோன்றுவது இன்னொருவருக்குத் தவறாகத் தெரிகிறது. அவரவர் பட்டறிவு, கருத்து ,எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றைப் பொறுத்து நியாயத்தின் முகமும் மாறுபட்டுப் போய்விடுகிறது.ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு செயல்களை நியாயப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.ஆனால் அடுத்தவர்கள் செயல்களை விமர்சிப்பதில் மட்டும் மிகுந்த நேர்மையாளர்கள்போல நடந்து கொள்வோம்.நாம் கோபப்பட்டால் அது நியாயமான உணர்வு.பிறர் கோபப்பட்டால் அது ஆணவம். நாம் பேசினால் அது வெளிப்படையான கருத்து.மற்றவர் பேசினால் அது எதிர்த்துப் பேசுவது. நாம் உதவி செய்ய முடியாவிட்டால் சூழ்நிலை காரணம்; மற்றவர் உதவி செய்யாவிட்டால் அவரிடம் மனிதநேயம் இல்லைஎன்னே மனித மனத்தின் விசித்திரம்!
முரண்பட்ட நியாயங்கள்:
தவறு செய்யும்போது காரணம் தேடி தப்பிக்கப் பார்க்கிறோம் பிறர் தவறு செய்யும்போது எப்படியாவது தண்டனை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்றுஅதற்கான வாய்ப்புகளை ஆராயத் தொடங்கிவிடுவோம். இதுதான் அவரவர் நியாயங்களில் இருக்கும் அடிப்படை முரண்பாடு.
.நமக்குப் பிடித்தவர் தவறு செய்தால், அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். பிடிக்காதவர் அதே தவறைச் செய்தால், அவருடைய குணத்தையே குறைச்சொல்லிக்கொண்டு திரிகிறோம்.
மாறும் நியாயங்கள்:
உறவுகளில் பிரச்சினை ஏற்படுவது கருத்து வேறுபாட்டால் மட்டுமல்ல.அவரவர் நியாயமே இறுதியானது என்ற தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பதும்தான் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது.சூழ்நிலைக்கேற்ப மனசாட்சியும் மாற்றி மாற்றி யோசிக்கிறது.சில நேரங்களில் நியாயம் என்பது சூழ்நிலையின் கைப்பாவையாகிவிடுகிறது.
ஒரு செயல் நமக்குச் சாதகமாக இருக்கும்போது அதைச் சரி என்று ஏற்றுக்கொள்ளும் நாம் அதே செயல் நமக்குப் பாதகமாக மாறும்போது தவறு என்று முத்திரை குத்த முன் வந்து நிற்கிறோம்.
நமக்கு வேண்டியபோது விதிவிலக்கு கேட்கிறோம். பிறருக்கு வேண்டியபோது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி தடுக்கப் பார்க்கிறோம்.இதில் வேடிக்கை என்னவென்றால்,
சுயநலம் பேசும்போது நியாயம் ஊமையாகிவிடுகிறது. மனசாட்சி பேசும்போது சுயநலம் மௌனமாகிவிடுகிறது.
அவரவர் நியாயங்கள்:
நியாயம் பேசுவதற்கு முன் நம்மை மட்டுமே பார்ப்போம்
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொருவருடைய சூழ்நிலையும் ஒன்று போல இருப்பதில்லை. அவரவர் அனுபவங்களும் வாழ்க்கைப் போராட்டங்களும் வெவ்வேறானவை.
ஒவ்வொருவர் அமைதிக்குப் பின்னாலும் ஒரு வலியிருக்கலாம். ஒருவர் விலகிச் செல்வதற்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கலாம். ஒருவர் எடுத்த முடிவு நமக்குத் தவறாகத் தோன்றினாலும் அவருடைய சூழலில் அதுவே சரியான முடிவாக இருக்கலாம்.எனவே ஒருவரைப் பற்றிமுடிவான தீர்ப்பு எழுதுவதற்கு முன்பாக அவருடைய தரப்பையும் கேட்க வேண்டும்.
இதைத்தான் திருவள்ளுவர் ,
"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு"
என்று கூறுகிறார்.
பிறருடைய குற்றங்களை ஆராய்வதற்கு முன்பு நம்முடைய குற்றங்களையும் ஆராய வேண்டும் என்பது இக்குறள் சொல்லித் தரும் செய்தி.
நம்முடைய நியாயத்தைப் பேசுவதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை எதிர்த்தரப்பினருக்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
முடிவுரை
வாழ்க்கையில் அவரவர் நியாயங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் எல்லாருடைய நியாயங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்குச் சாதகமானதெல்லாம் நியாயம் என்றும், நமக்குப் பாதகமானதெல்லாம் அநியாயம் என்றும் முடிவெடுப்பது நடுநிலையற்ற மனப்பான்மையாகும்.
நம்முடைய தவறுகளுக்கு நாமே வழக்கறிஞராகவும் பிறருடைய தவறுகளுக்கு நாமே நீதிபதியாகவும் மாறிவிடக்கூடாது.
நியாயத்தை நமக்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்ளலாம்.ஆனால் உண்மையை ஒருபோதும் வளைக்க முடியாதுஅவரவர் நியாயங்கள் மாறலாம். அந்தந்த நேரத்து நியாயப்படுத்தல்களும் மாறிக்கொண்டே இருக்கலாம்.ஆனால் காலத்தால் மாறாத ஒன்றாக இருக்க வேண்டியது நம்முடைய நேர்மையும் மனசாட்சியும் மட்டுமே.
"என் பக்கத்தில் இருப்பதெல்லாம் நியாயம். எதிர்ப்பக்கம் இருப்பதெல்லாம் அநியாயம் என்ற மனநிலை மாறாதவரை உலகத்தில் அவரவர்க்கான நியாயங்கள்பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்"
கருத்துகள்
கருத்துரையிடுக