பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்

முட்டி நிற்கும் மஞ்சு தனை

தொட்டு விளையாடும் காற்றாலை

எட்டு நிற்போரையும் ஏந்தி முகம் 

பார்க்க வைக்கும் ஆவரை குளத்தில்

கட்டழகு செல்லத்துரை இணையர்

பெற்றெடுத்த தலைமகன் செல்லப்பா ஆசிரியர் 

வட்டமிட்டு மணமகள் லதாவைத் தொட்டநாள் 

திட்டமிட்டு இறைவன் வகுத்தநாள்!


ஆஸ்திக்கும் ஆசைக்குமாய்ப் பிள்ளைகள்

அன்புக்குக் கிடைத்தப் பரிசுகள் 

வானும் நிலவும் போல

வாய்த்த திந்த இனிய இல்வாழ்க்கை

தேனினும் இனிய திவ்விய நாமத்தைத்

தீர்க்கமாய்ப் பற்றி அருட்பணி செய்தலால்

வானாதி வானவராம் வல்ல நல்நாதர்

வரமாய்த் தந்தணி செய்த நல்வாழ்க்கை!


வாணிக்கு வார்த்தையால் தோரணங்கட்டி

மணியாம் மாணவரணிதிரட்டி அறப்பணி செய்தீர்

பணிசெய் இடமெங்கும் பேச்சுக்கலை வளர்த்தீர்

பேரணி திரட்டி பெரும்பெயர்ச்  சேர்த்தீர்

அறப்பணி பொதுப்பணி அருட்பணியென

தொடர்ப்பணி தொய்வில்லாச் சிறப்பணி

யாற்றினீர்

குமுகப் பிணி தீர்க்கும் நற்பணியில்

முதல்வனாய் நின்று முழுக்களப்பணி ஏற்றீர்!


யாருக்குமே நீ செய்வதில்லை வஞ்சம்

பாருக்குத் தெரியும் உன் நெஞ்சம்

பேருக்கு உழைப்பரிடம் இருக்கும் வஞ்சம்

பெருமை உன்னிடம் வெறுமனே துஞ்சும்

உண்மை உன்றன் நாவினில் கொஞ்சும்

கடமை கட்டளைக்காய்க் காத்திருந்து கெஞ்சும்

தீமை நின்னைத் தீண்டவும் அஞ்சும்

திறமை மட்டுமே உம்மிடம் விஞ்சும்


நின்பணி நிறைவுநாள் மாநகராட்சிப் பள்ளிகள்

வரலாற்றில் ஈடுசெய்யாப்  பேரிழப்பு

ஐயா நின்றன் அறப்பணி நாட்கள்

தமிழாசிரியர் குழுமம் கண்டதோர் சிறப்பு 

எஞ்சிய  நாட்கள் விஞ்சிய மகிழ்வால் 

கொஞ்சும் குழந்தைகளோடு களிப்பாக 

கடந்திடட்டும் 

 சித்தம் இறைவனோடு வைத்து சிறக்கட்டுமென

ஆசிரியர்கூடி அன்பால் வாழ்த்தி

மகிழ்கிறோம்!


    -செல்வபாய் ஜெயராஜ் 


Comments

Popular Posts