இரட்டைக்கிளவி _ அடுக்குத்தொடர்

            இரட்டைக்கிளவி  _  அடுக்குத்தொடர்

தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க

இன்னும் படி ...இன்னும் படி என்று

ஒரு ஆர்வத்தைத் தூண்டும்.

புரிந்து கொள்ள வேண்டும் என்ற

ஆர்வம் இல்லாமலேயே  இலக்கணத்தையும்

 மனனம் செய்து படித்திருப்போம்

கணிதம்கூட எளிதாக இருக்கிறது;

ஆனால் இந்த தமிழ் இலக்கணம் இருக்கே

ரொம்ப ரொம்ப கடினமான ஒரு பாடம்;

புரியவே புரியாது  என்று

சொல்லிச் சொல்லி புலம்பிய நாட்கள் உண்டு.

சிறிது கவனம் எடுத்திருந்தால் இந்தப்

புலம்பலுக்கான அவசியம் எழுந்திருக்காது

என இப்போது புரிகிறது.

தமிழ் இலக்கணம் மிகவும் எளிமையானது

 என்பது உங்களுக்கும் புரியும்.

                        இரட்டைக் கிளவி

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும். ஆனால் 

தனித்தனியே  பிரித்தால் பொருள் தராது.அத்தகைய 

சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும்.


மளமள என்று ஒப்பித்தாள்.

சடசட வென்று ஓடியது.

கிடுகிடுவென நடுங்கினேன்.

வழவழ என்று பேசினாள்.

வெலவெலத்துப் போனேன்.

 நங்குநங்கு என்று குத்தினேன்.

கொழுகொழு என்று இருந்தது.

 விக்கிவிக்கி அழுதான்.

 திபுதிபு என்று நுழைந்தது.

 சிலுசிலுவென்று காற்று வீசியது.

  தகதகவென்று ஜொலித்தது.

  லொடலொட என்று பேசுவாள்.

 காற்று படபடவென்று வீசியது.

 கண்ணீர் பொலபொல என்று வடிந்தது.

  கலகல என்று சிரித்தாள்.

 ஓடையில் தண்ணீர் சலசலவென்று ஓடியது.

மேற்கூறப்பட்ட இரட்டைக்கிளவி 

சொற்களைப் பிரித்துப் பாருங்கள்.
    
பொருள் தராது.
     
கலகல என்று சிரித்தாள்

என்பதை   கல என்று சிரித்தாள்

என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன கல சிரித்தாள்? 

பொருளில்லாமல் போய்விட்டதல்லவா!
       

பொலபொல என்று கண்ணீர்

வடிந்தது.

பொல என்று கண்ணீர் வடிந்தது

என்று எழுதிப் பாருங்கள்.

அது என்ன பொல...பொருளில்லாமல்

வேடிக்கையான சொல்லாகிவிட்டதல்லவா!

பிரித்துப் பார்த்தால் மேலே கூறப்பட்டுள்ள

சொற்களுக்கு  என்ன பொருள் சொல்ல முடியும்?


 இவை ஒலிக்குறிப்பு மற்றும் நிறம் முதலான 

காரணங்களால்  இரண்டு இரண்டாக சேர்ந்து

மட்டுமே வரும். 

சேர்த்து எழுதும்போதுதான்

இவற்றிற்கு இனிமையும் பொருளும் உண்டு.


பிரித்தால் பொருள் தராதது இரட்டைக் கிளவி

அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.


                           அடுக்குத்  தொடர்

ஒருசொல் தொடர்ந்து இரண்டு மூன்றுமுறை 

ஒரு சொற்றொடரில் வரும்.

 நான்குமுறைகூட வரலாம்.

ஒரு வாக்கியத்தில் வந்த சொல்லே 

மீண்டும் மீண்டும் 

வருவது அடுக்குத் தொடர் எனப்படும்.

 பிரித்துப் படித்தாலும்  பொருள் உண்டு.

சொன்னாலும் பொருள் உண்டு.

எழுதினாலும் பொருள் உண்டு.

புலி புலி  என்று கத்தினான்.

கற்கள்  குவியல் குவியலாகக் 

கொட்டிக் கிடந்தன.

கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து சென்றன.

வருக  வருக என்று வரவற்றனர்.

பாம்பு பாம்பு என்று கத்தியபடி ஓடினான்.

போ போ போ என்று விரைவுபடுத்தினர்.

கள்வனைப் பிடி பிடி என்று கத்தினாள்.

குத்து குத்து என்று கோபமாக கத்தினாள்.

பிரித்து எழுதினாலும் அதே பொருள் தரும்.

 போ போ போ  என்று விரைவுபடுத்தினர்.

அதே சொற்றொடரை 'போ' என்று

 விரைவுபடுத்தினர் என்று எழுதினாலும்

 பொருள் மாறாது.


கூட்டம் கூட்டமாக பறவைகள் வந்தன;

கூட்டமாக பறவைகள் வந்தன .

இரண்டிலும் சொல்ல வந்த பொருள்

மாறுபடவில்லை.

ஒரு அழுத்தம் கருதி, மொழி அழகு

கூடுவதற்காக ஒரே சொல் திரும்ப திரும்ப

கையாளப்பட்டுள்ளது.அவ்வளவுதான்.

இப்படி  தனித்தனி சொல்லாக அடுக்கி 

வருவது அடுக்குத் தொடர்.


 அச்சம், விரைவு, உவகை, 

வெகுளி, அவலம் போன்ற 

உணர்வுகளை வெளிப்படுத்தும்போது 

பெரும்பாலும் அடுக்குத் தொடர்களைப் 

பயன்படுத்துகிறோம் என்பதை மனதில்

பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.


பிரித்தால் பொருள் தராதது இரட்டைக்கிளவி.

பிரித்தால் பொருள் தருவது அடுக்குத்தொடர். 

 இந்தக் கருத்தை மட்டும் மனதில்

 பதிய வைத்துக் கொண்டால் போதும்

இரட்டைக் கிளவியையும் அடுக்குத்தொடரையும்

கண்டறிவதில் ஏற்படும் குழப்பம் 

ஒருபோதும்  ஏற்படாது.

மிகவும் எளிமையாக இருக்கிறது இல்லையா!

இந்தப் பாடலையும் பாருங்கள்.

ஐயோ! எவ்வளவு எளிமையாக 

இரட்டைக்கிளவியைப் புரிய வைத்துவிட்டார்

கவிஞர். நாம்தான் கவனிக்காமல்

விட்டுவிட்டோம்  என்று ஆச்சரியப்பட்டுப் 

போவீர்கள்.


பிரிக்க முடியாததுதாங்க ...இரட்டைக்கிளவி

என்று இலக்கணத்தோடு காதல் கவி

படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.


 சலசல சலசல இரட்டைக்கிளவி

தகதக தகதக இரட்டைக்கிளவி

உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை

பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை

இரண்டல்லோ

இரண்டும் ஒன்றல்லோ!......


ஜீன்ஸ் படத்திற்காக கவிப்பேரரசு

வைரமுத்து அவர்கள் எழுதிய

 வைர  வரிகள் காதுகளில் இனிமையாக ஒலிக்கின்றதல்லவா!

இனி இரட்டைக்கிளவி ஒருபோதும்

மறந்து போகாது.


    


         

    

Comments