வல்லினம் மிகா இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
இரண்டு சொற்கள் சேரும்போது நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் எந்தெந்த எழுத்துகள் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை புணர்ச்சி இலக்கணத்தில் படிக்கலாம்.
இப்போது இரண்டு சொற்கள் சேரும்போதுவருமொழி முதல் எழுத்து வல்லினமாக இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம் வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
க ,ச ,ட ,த , ப , ற ஆறு எழுத்துகளும் வல்லினம் எனப்படும்.
இவற்றுள் ட , ற ஆகிய இரண்டு எழுத்துகள் மொழிமுதல் வராது.
மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும் வருமொழி முதல் எழுத்தாக வரும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல் இயல்பாக வரும் என்பதைக் காண்போம்.
1. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
இரண்டு சொற்களின் இடையில் அல்லது இடையிலும் இறுதியிலும் வரும் 'உம் 'என்னும் இடைச்சொல் மறைந்து நிற்பது உம்மைத்தொகை எனப்படும்.
இத்தகைய உம்மைத்தொகை சொற்களில் வல்லினம் மிகாது.
தாய் + தந்தை = தாய்தந்தை (தாயும் தந்தையும்)
இரவு + பகல் = இரவுபகல். ( இரவும் பகலும்)
2. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
பெயர்ச்சொல்லின் ஒரு பகுதி மூன்று காலத்துக்கும் பொருந்திவருமாறு வரும் வினைச்சொல் அடங்கிய பெயர்ச்சொல் வினைத்தொகை எனப்படும்.
எடுத்துக்காட்டாக எரிதழல் என்பது எரியும் தழல், எரிந்த தழல், எரிகின்ற தழல் என முக்காலமும் உணர்த்தும்.
இத்தகைய வினைத்தொகை சொற்களில் வல்லினம் மிகாது.
பாய்புலி. குடிதண்ணீர்
படர்கொடி
சுடுசோறு
ஓடுதளம்
3. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
பிரித்தால் பொருள் தராதது இரட்டைக்கிளவி.
பிரித்தால் பொருள் தருவது அடக்குத்தொடர்.
இத்தகைய இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் சொற்களில் வல்லினம் மிகாது.
சலசல _ இரட்டைக்கிளவி
கலகல. _ இரட்டைக்கிளவி
ஆடு ஆடு _ அடுக்குத்தொடர்
ஓடு ஓடு ஓடு _ அடுக்குத் தொடர்
4. விளித்தொடரில் வல்லினம் மிகாது.
கண்ணா வா !
இறைவா கேள் !
தம்பி பார் !
5. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.
முதலாவது வியங்கோள் வினைமுற்று பற்றி அறிவோம்.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க , இய ,இயர் என்பனவாம்.
வாழ்க , வாழிய , வாழியர் என வரும் .
இத்தகைய வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வரும்
க , ச ,த ,ப மிகாது.
வாழிய + செந்தமிழ். = வாழிய செந்தமிழ்
வீழ்க படைகள் = வீழ்க படைகள்
வாழ்க + பல்லாண்டு. = வாழ்க பல்லாண்டு
வெல்க + தமிழர் = வெல்க தமிழர்
வருக + சான்றோரே = வருக சான்றோரே
6. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ ' மறைந்து வந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதை நினைவில் கொள்க.
(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என்பது வேறு.)
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மட்டும் க , ச ,த ,ப மிகாது.
கதை + சொன்னார் = கதை சொன்னார்.( கதையைச் சொன்னார்)
தமிழ் + கற்றேன் = தமிழ் கற்றேன். (தமிழைக் கற்றேன்)
7. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகாது.
அத்தனை + பழங்கள் = அத்தனை பழங்கள்
இத்தனை + பேர் = இத்தனை பேர்
எத்தனை + கடைகள் = எத்தனை கடைகள்
8. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் தவிர பிற எண்ணுப் பெயர்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
ஐந்து + பழங்கள் = ஐந்து படங்கள்
இரண்டு + பேர் = இரண்டு பேர்
மூன்று + புலி. = மூன்று புலி
9. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
வண்டு +பறந்தது. = வண்டு பறந்தது
முல்லை + படித்தாள் = முல்லை படித்தாள்
10 . அவை, இவை என்னும் சுட்டுப் பெயர்களின் பின்
வல்லினம் மிகாது.
அவை + பறந்தன = அவை பறந்தன
இவை + சென்றன = இவை சென்றன
11. அது, இது என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
அது + போனது = அது போனது
இது + சென்றது = இது சென்றது
12. எது, எவை என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
எது + கேட்டது = எது கேட்டது
எவை + பார்த்தன = எவை பார்த்தன
13. ஆ, ஏ , ஓ என்னும் வினா எழுத்துகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
அவனா + சொன்னான் = அவனா சொன்னான்
அவனோ + போனான் = அவனோ போனான்
அவனே + கேட்டான். = அவனே கேட்டான்
14. மூன்றாம் வேற்றுமை உருபுகளில் ஒடு, ஓடு ஆகியவற்றின் பின் வரும் வல்லினம் மிகாது.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல் , ஆன் ஓடு, ஒடு என்பனவாம்.
இவற்றுள் ஒடு , ஓடு என வரும் சொற்களுக்கு பின் வரும் க, ச , த , ப மிகாது.
பூவொடு + சேர்ந்த = பூவொடு சேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடு பரணர்
15. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
படித்த பையன் என்ற சொல்லில் படித்த என்ற வினைச்சொல் முற்று பெறவில்லை. பையன் என்பது ஒரு பெயர்.
எனவே படித்த பையன் என்பது பெயரெச்சம் ஆகும்.
பெயரெச்சங்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
படித்த + பெண் = படித்த பெண்
நடித்த + கலைஞர் = நடித்த கலைஞர்
16. படி என்னும் சொல்லுக்குப் பின் வரும் வல்லினம் மிகாது.
சொன்னபடி + செய்தார் = சொன்னபடி செய்தார்
பாடியபடி + தொடர்ந்தார் = பாடியபடி தொடர்ந்தார்
இப்போது பல கேள்விகள் மனதில் எழலாம்.
இலக்கணத்தில் ஓரளவு புலமை இருந்தால் எளிதாக புரிந்துவிடும்.
அப்படி இல்லை என்றால்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்றால் என்ன ?
பெயரெச்சம் என்பதை எவ்வாறு கண்டறியலாம்?
உம்மைத்தொகை என்பது யாது?
வினைத்தொகை என்றால் என்ன?
வியங்கோள் வினைமுற்று என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
வேற்றுமைத்தொகை என்பது யாது?
என்பன போன்ற பல கேள்விகள் வந்து விடும்.
அதற்காக தனித்தனியான கட்டுரைகள் கொடுத்துள்ளேன்.
அவற்றைப் படித்துவிட்டு வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் கட்டுரையைப் படித்தால் எளிதில் புரிந்துவிடும்.
இவ்வளவு எளிதா...என்று நீங்களே பிரமித்துப் போய்விடுவீர்கள்.
இனி எழுதும்போது ஐயம் எழ வாய்ப்பே இருக்காது.
வாழ்த்துகள்!
I have learnt already வல்லினம் மிகா இடங்கள்.but I
ReplyDeletedon't I was not able to Keep it in in mind but your explanation and example D were simply superb easy to keep it in mind I will surely teach my students with the same
😆😆😆😆😆
ReplyDeleteஅருமையான விளக்கம், வாழ்த்துகள் அம்மா 🙏
ReplyDelete