வள்ளுவரும் வாசுகியும் போல
வள்ளுவரும் வாசுகியும் போல
வள்ளுவரும் வாசுகியும் போல வாழ்க
என்ற வாழ்த்து காதில் வந்து கேட்க...
வள்ளுவராலேயே பேதை என்று அழைக்கப்பட்டவர் இப்படி ஒரு பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனது எதனால் இருக்கும் என்ற தேடல்..
கிடைத்தது செய்தி. கொண்டுவந்தேன் உங்களுக்காக..
வாசுகி கணவன் பேச்சுக்கு
மறுபேச்சு பேசாதவர்.
கணவன் என்ன சொன்னாலும் ஏன்
எதற்கு என்று கேள்வியே கிடையாது.
இப்படியும் ஒரு பெண்ணா? உங்கள்
நினைவோட்டம் புரிகிறது.
அது...அது...வள்ளுவர் காலம்.
ஒருமுறை வள்ளுவர் வீட்டிற்கு முனிவர்
ஒருவர் வந்திருக்கிறார்
அவர் வந்த நேரத்தில் வீட்டில் பழைய
சாதமே இருந்திருக்கிறது.
வள்ளுவருக்கும் முனிவருக்கும்
பழைய சோறு பறிமாறினார்
வாசுகி.
சோறு சுடுகிறது...பக்கத்தில் இருந்து
விசுறு என்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
பழையசோறு எப்படிச் சுடும் என்று கேட்க வேண்டும் போல தோன்றுகிறதல்லவா?
அதே கேள்விதான் எனக்கும்.
ஆனால்
வாசுகி "பழைய சோறு எப்படி
சுடும் ?"என்று கேட்கவே இல்லை.
உடனே பக்கத்தில் இருந்த ஒரு விசிறியை எடுத்து விசிறிக்
கொண்டே இருந்தாராம்.
எங்கேயாவது பழைய சோறு சுடுமா?
இதனைக்கூட கேட்கவில்லை என்றால்...
அதனால்தான் வள்ளுவர் வாசுகியைப்
பேதை என்று பாடினாரோ?
ஒருநாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்
கொண்டிருந்தார் வாசுகி.
வீட்டுக்குள் இருந்த வள்ளுவர்
வாசுகி என்று அழைத்தார்.
அழைத்ததுதான் தாமதம்...
நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்
என்ற நினைப்பு கொஞ்சம்கூட இல்லை.
கிணற்றில் நீர் இறைத்த வாளிக்
கயிற்றை அப்படியே விட்டுவிட்டு
வீட்டிற்குள் வந்து நின்றார் வாசுகி.
மறுபடி கிணற்றில் போய்ப் பார்த்தால்....
அங்கே ஓர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
அவர் விட்டுவிட்டு வந்த வாளி....
அப்படியே அந்தரத்தில் நின்று
கொண்டிருந்திருக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ?
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை "
என்று பாடியிருக்கிறாரே...
மழையே பெய்யும்போது
தண்ணீர் இறைக்கும் வாளி
அந்தரத்தில் நிற்பதில் என்ன வியப்பிருக்கப் போகிறது.?
இது மட்டுமா?....
இன்னும் இருக்கிறது.
எப்போதும் வள்ளுவர் சாப்பிட
உட்கார்ந்ததும் ஒரு கொட்டாங்குச்சியில் நீரும்
ஒரு ஊசியும் கொண்டு வந்து பக்கத்தில்
வை என்பாராம் வள்ளுவர்.
நித்தம் நித்தம்
கொட்டாங்குச்சியில் நீரும்
பக்கத்தில் ஊசியும் வை என்று சொல்கிறீர்களே அது எதற்கு என்று கேள்வி கேட்கும்
தைரியம் வாசுகிக்கு கிடையாது.
இருப்பினும் எதற்கு இவை எல்லாம்
வைக்க வேண்டும் என்ற உண்மை
தெரிந்தாக வேண்டும் என்ற ஆவல் மட்டும்
மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள்...மரணப்படுக்கையில் வாசுகி கிடக்கிறார்.
"இப்போது அந்தக் கொட்டாங்குச்சி பற்றி
மெதுவாக கேட்டுவிடலாமா?"
மனசு உள்ளுக்குள்ளேயே கிடந்து வாதிட்டுக்கொண்டிருக்கிறது.
இருப்பினும் இப்போதும் கேட்பதற்கு ஒரு தயக்கம்..
ஆனால் இப்போதும் கேட்கவில்லை என்றால்...
வள்ளுவரின் முகத்தையே பார்த்தார் வாசுகி.
ஒரு நாளும் எதுவும் கேட்காதவள்.
முதன்முறையாக ஏதோ கேட்க
ஆசைப்படுகிறாள் என்பதைப் புரிந்து
கொண்டார் வள்ளுவர்.
"என்ன கேட்க வேண்டும் ? கேள் வாசுகி கேள் ."
என்கிறார் வள்ளுவர்.
எப்படியோ ஒரு துணிவை வரவழைத்து
கொண்டு,
"சாப்பிடும்போது கொட்டாங்குச்சியும்
நீரும் எதற்காக வைக்கச் சொல்வீர்கள்?"
என்று கேட்டுவிட்டார் வாசுகி.
"அந்த உண்மை தெரிய வேண்டுமா....
சாப்பிடும் போது கீழே விழும் பருக்கையை
எடுப்பதற்கு ஊசி "என்றார். சாதாரணமாக.
"அப்புறம் அந்தக் கட்டாங்குச்சியும் நீரும். எதற்காக?.."
என்றார் வாசுகி.
" கீழே விழுந்த பருக்கையை அப்படியே
எடுத்து உண்ண முடியுமா?
ஊசியில் குத்தி எடுத்து கொட்டாங்குச்சியில்
உள்ள நீரில் கழுவி தட்டில் உள்ள
சாதத்தோடு போட்டு
உண்ண வேண்டும்" என்றார் வள்ளுவர்.
" ஆனால் நீங்கள் ஒருநாளும் அவற்றைப்
பயன்படுத்தவில்லையே "எனக்
கேட்டார் வாசுகி.
"சாதம் கீழே விழுந்தால்தானே எடுக்க வேண்டும்.?
இதுவரை சாதம் கீழே விழவே இல்லையே...
அதனால் ஊசியையும்
நீரையும் பயன்படுத்த வேண்டிய அவசியம்
இல்லாமல் போயிற்று" என்றார் வள்ளுவர்.
வாசுகி உணவு பறிமாறும்போது
ஒரு பருக்கையும் சிந்துவதில்லை.
வள்ளுவரும் சாப்பிடும்போது
ஒரு பருக்கையும் கீழே விழாதபடி
கவனமாக சாப்பிடுவார்.
சிந்தாமல் சிதறாமல் சாப்பாடு பறிமாற
வேண்டும் என்பதை வாசுகியிடம்
கற்றுக் கொள்ள வேண்டுமாம்..
என்னவொரு பொருத்தமான இணையர்.
வள்ளுவரும் வாசுகியும் போல என்று வாழ்த்துவது இதற்குத்தானா?நல்ல வாழ்த்துதான் இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக