இசையா பாடலா

இசையில்லாப்  பாடலா?

நீயா....நானா என்ற போட்டி இன்று நேற்று

ஏற்பட்டதல்ல.

சங்ககாலம் முதற்கொண்டே இப்படிப்பட்ட 

போட்டிகள்  நிகழ்ந்திருக்கின்றன.

இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருப்பதுண்டு.

ஔவை, கம்பர் ,ஒட்டக்கூத்தர் ,புகழேந்தி 

என்று எந்தப் புலவரும் இதற்கு விதி விலக்கல்ல.

கம்பர் விடுகதைச் சொல்லப் போகிறேன் என்று 

ஒருகாலடி ஆலிலைப் பந்தலடி என்று

ஒரு விடுகதையைப் சொல்ல.....

பதில் சொல்கிறேன் என்று

ஆரையடா சொன்னாயடா என்று

ஔவை போட்டுத் தாக்க அங்கே

ஒரு இலக்கியப் 

போரே நடந்தது.

அந்த இலக்கியப்போர் கற்போருக்கு இன்றுவரை நல்ல விருந்தாகவும் 

அமைந்திருக்கிறது.


கல்வியா? செல்வமா? வீரமா?

என்று ஒரு போட்டி.

அவரவர் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்க 

அவர்கள் கொண்டுவந்து நிறுத்திய கதாப்பாத்திரங்கள் இன்றுவரை நெஞ்சோடு உலா வருகின்றன.

பொழுதுபோக்கு போட்டியாக இருந்தாலும்

அது வாசிப்போருக்கு கேட்போருக்கு

நல்ல விருந்தாகத்தான் இருந்திருக்கிறது.

அதன்மூலம் நாம் அடைந்த நன்மைகள் 

ஏராளம். நடந்து முடிந்த காலத்தில் அது விவாதம் பொருளாக இருந்தாலும்கூட 

இன்றுவரை இலக்கிய இன்பத்தை அள்ளி வீசி நம்மை அந்தக் காலக்கட்டத்திற்கே கட்டி இழுத்துச் செல்கிறது.

இன்றைய காலக்கட்டத்திற்கும்

இயைந்த கருத்தைச் சுமந்து நிற்கிறது.

சுவைப்போரைக் களிப்போராக்கி

இனிப்போர் எப்போர் வருமென்று 

ஏங்க வைக்கிறது.


இன்றும் இப்படியொரு 

பனிப்போர் நடந்து மலைப்போராகி

நம்மை மலைப்போராக்கி

நிற்க வைத்திருக்கிறது.


ஆளுமைகளுக்குள்ளான

இந்தப் போட்டி அதிரடி காட்டி

ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.


இசையா? பாடல் வரிகளா?

எது சிறந்தது?

எதனால் ஒரு பாடல் மக்கள் மனதில்

நிறைந்திருக்கும்?

ஆளாளுக்கு விவாதத்தைத் கையிலெடுத்து 

விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் 

யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசுகின்றனர் சிலர்.

தமக்குப் பிடித்தவர்கள் பக்கம் நின்று

பேசுவோர் சிலர்.

பிடித்தவர் பிடிக்காதவர் என்பதைத் தாண்டி

உண்மையின் பக்கம் நின்று உரக்கப் பேச அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தயக்கம் 

இருப்பதென்னவோ உண்மை.


எனினும் இந்தக் கருத்தைப் பற்றி

யார் யாரோ பேசியிருந்தால் உண்மை

என்ன என்று நமக்குத் தெரிந்த நாலு பேரிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று தோன்றியது.


யார் அந்த நாலுபேர்?

நாலு பேரைக் தேர்ந்தெடுக்கும் முன்னர்

போதும் போதும் என்றாகிவிட்டது.


சலிப்போடு இது நமக்கு வேண்டாத விவாதம். விட்டு விடுவோம் என்று முன் வைத்துக் காலை பின்நோக்கி இழுக்க எத்தனித்த போது

படக்கென்று யாரோ கையைப்பிடித்து இருப்பதுபோல இருந்தது.

யாராக இருக்கும்.?

திரும்பினேன். 

யாருமில்லை..

வீண் பிரம்மையா?

யாராவது இதற்கு ஒரு தீர்வு சொல்லிவிட மாட்டார்களா என்று ஆசை

என்னை கடக்கவிடாமல் செய்திருக்கிறது.


.

என் மனசாட்சி தான் என்னைச் செல்லவிடாமல் தடுத்திருக்கிறது.

நாலுபேரிடம் கேட்டால் இரண்டு பேர்

உடன்பட்டும் இரண்டுபேர் மறுத்தும் கருத்து சொன்னால்...ஐந்தாவது நீதிபதியைத் தேடி எங்கு செல்வது?


அதைவிட நேரே பெரிய நீதிபதியிடம் சென்றுவிடலாம் என்று என் உள்மனதில் ஏதோ ஓர் உணர்த்தல்.

யார் அந்தப் பெரிய நீதிபதி என்கிறீர்களா?

வேறு யாராக இருக்கும்?

ஔவைதான்.


ஔவை இந்த விவாதத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஒரு தேடல்.


கிடைத்தது ஒரு பாடல்.

பாடல் உங்களுக்காக....


.இழுக்குடைப் பாட்டிற்கு இசை நன்று-சாலும்

ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று

வழுக்குடைய வீரத்தின் நன்று 

விடாநோய் - பழிக்கஞ்சா 

தாரத்தின் நன்று தனி 

                                      -   31


இசை எதற்குத் தேவை?


நன்றென்று நாலு கருத்தினை முன்வைக்கிறார் ஔவை.


முதலாவது இழுக்குடைப் பாடலுக்கு

இசை நன்று.


இரண்டாவது ஒழுக்கம் உயர்குலத்தைவிடவும் நன்று.


மூன்றாவது வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்.

அதாவது தயங்கும் வீரத்தைவிட விடா நோயில் இருப்பது நன்று.


நான்காவது பழிக்கஞ்சா தாரத்தின்

நன்று தனிமை.

அதாவது இப்படி நடந்து கொண்டால் குடும்பத்திற்கு ஒரு பழி ஏற்படுமே என்ற எந்தவொரு அச்சமும் இல்லாது வாழும் மனைவியோடு வாழ்வதைவிட 

தனிமையாக வாழ்வது மிகவும் நன்று.


இப்போது நமது விவாதப் பொருளான

இசைக்கு வருவோம்.

இசையைப் பற்றி ஔவை என்ன சொல்லியிருக்கிறார் ?

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று

என்று சொல்லிவிட்டார்.

இதுதான் நமக்குத் தேவையான

பதில்.


இசை வேண்டும்.

அது எப்போது வேண்டும்?

எப்படிப்பட்ட பாடல் வரிகளுக்கு

இசை  வேண்டும்.?

இசை மட்டுமே எல்லாப் பாடல்களுக்கும்

தேவையான ஒன்றா?

இப்படி பல கேள்விகளைச் 

சுமந்து நிற்கும் நமக்கு ஔவை

பதிலாக இந்த வரியைத் தந்திருக்கிறார்.


இழுக்குடைய பாடல் என்றால் என்ன?

பொருளில்லாத இலக்கண

வரம்புக்குட்படாத பாடல் வரிகள் 

இழுக்குடையவை என்று கொள்ளலாம் இல்லையா?


இப்படிப்பட்ட பாடல்களுக்கு இசை இருந்தால் நல்லதாக அமையும்.

அப்படியாயின் எல்லாப் பாடல்களும் 

இசையினால் மட்டுமே மக்கள் மனதில் இடம்  பிடிக்கும் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை என்பது புரிகிறதல்லவா!



இசை வேண்டும்.

இழுக்குடைய பாடல்களாக இருந்தால்

மட்டும் இசை வேண்டும் என்பது ஔவையின் முடிவான கருத்து.


அதனால் வெறும் பாடல் வரிகளால் பயனில்லை

என்று எடுத்துக் கொள்ளல் வேண்டாம்

என்று ஔவை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இனி என்ன?

இவையே தீர்ப்பு எழுதிவிட்டார்.

இனி இதற்கு மேலும் வழக்கு

தேவையான என்ன?







Comments