ஒத்த ரூபா
ஒத்த ரூபா
பாண்டி தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்சல்.
நாக்கெல்லாம் கசந்து கொண்டு
ஒரு மாதிரியாக இருந்தது.
கொஞ்சம்போல சுடு கஞ்சி
யாராவது வச்சித் தந்தால்
தேவலாம் போல இருக்கிறது
என்று நினைத்தபடி படுத்திருந்தார்.
யார் வச்சித் தருவார்கள்.?
யாரிடம் போய் கேட்பது?
முந்தைய மாதிரி இருந்திருந்தால்....
கண்களை உருட்டி
ஓங்கி குரல் கொடுத்து
மொத்த வீட்டையும் கூட்டியிருப்பார்.
இப்போதெல்லாம் கொஞ்சம்
உரத்த குரலுல கூப்பிட்டால் போதும்.
"அங்கே என்ன...கிழம் கிடந்து
கூவுது "என்ற எதிர் குரல் வந்து
வழி மறைக்கும்.
பேரன் பாலன் பள்ளிக்கூடத்துக்குப்
போயிருக்கிறான். அவன் வந்த
பின்னர்தான் தண்ணீர் என்றாலும்
கேட்க முடியும்.
அவன் மட்டும்தான் கூப்பிட்டதும்
"என்ன வேணும் தாத்தா "என்று
ஓடி வருவான்.
கண்கள் பேரனையே தேடிக்
கொண்டிருந்தன.
பொழுது சாய வருவான்.
அது வரை ஏன் என்று கேட்க
ஒரு பாதி பக்கத்தில் வராது.
அப்படி நாதியற்றா போனார் பாண்டி தாத்தா.?
எல்லாரும் இருக்காவ...
இருந்து என்ன பண்ண?
எல்லாம் அவர்செய்த பாவம்தான்.
ராசக்கிளிக்கு கொஞ்சநஞ்ச
பாவமா செய்துருக்காரு ...?
அதுக்குதான் கடவுள்
இப்படி கட்டிலோட முடக்கி
போட்டுருக்காரு ....
கிடவும்...கிடந்து புலம்பும்.
மனசாட்சி அப்பப்போ வந்து
குரல் கொடுத்து கிண்டலடித்துச்
செல்லும்.
ஒரு காலத்துல ஓடக்காரர் வாரார்
என்று சொல்லிட்டா போதும்.
ஊரே கிடுகிடுன்னு
நடுங்கும். ஆறடி இரண்டு
அங்குல உயரத்தில்
கட்டபொம்மன் மீசையும் அதுவுமா
மனுசன் தெருவுல நடந்து
வந்தாலே போதும்.
அந்தக் காலத்து ராசாக்கமாரு வந்த
மாதிரிதான் இருக்கும்.
சும்மா வெங்கல குரல்.நாலு பேர்
கூட்டத்தில் பேசுனா
பேச்சு கணீருன்னு வந்து விழும்.
கூட்டத்தில் நின்னா நிற்கிற இடத்துல
இவர் மட்டும்தான் தெரிவாரு.
எல்லாம் ராசக்கிளி இருக்கும்
வரைக்கும்தான்.
பொண்டாட்டி போனா எந்த
கொம்பனா இருந்தாலும் அப்படியே
குன்னிப் போய்விடுவான்.
வீட்டுல ராசக்கிளி
இருந்ததால்
ஒரு கெத்தா நடமாடிகிட்டு
இருந்தாரு.
அந்த ராசக்கிளியை
ஒரு காலத்துல அவர்
படுத்திய பாடு என்னங்றீங்க.
ம்...என்னும் முன்ன எள்ளா
வந்து நடிக்கணும்.
கொஞ்சம் சுணங்கிட்டா போதும்.
போட்டு தாக்கிடுவாரு.
இவருகிட்ட அடிபட்டு... அடிபட்டு
ராசக்கிளி உடம்பு நொறுங்கி
நொம்பலமாகிப்போச்சு.
ஆம்பிள எங்கிற திமிரு...
ஒருமுறை" ராசக்கிளி தண்ணீர்
கொண்டு வா "என்றார்.
அடுப்பில் ஏதோ வேலையாக
இருந்ததால் ராசக்கிளியால்
உடனே வரமுடியவில்லை.
கொஞ்சம் பிந்திவிட்டாள்.
அவ்வளவுதான்.
ராசக்கிளி தண்ணீர் கொண்டு வந்த
செம்பை பிடுங்கி தரையில் வீச
அது எகிறி வந்து
அவர் காலிலேயே பட்டுவிட...
அன்று வீடு அல்லோல
பட்டுப் போச்சு.
அதற்கும் காரணம் ராசக்கிளிதான்
என்று அவளைப் போட்டு
கொன்னு எடுத்திட்டார்.
ராசக்கிளி அன்றே இவர்
கையால் செத்திருப்பார்.
ஏதோ ஓடக்கரகாரருக்கு
ஜெயிலு களி தின்ன கொடுத்து
வைக்கல....கொலையாளி
பட்டம் வாங்காம தப்புச்சிட்டாரு.
.
ராசக்கிளி ஒரு வாயில்லா பூச்சி.
இந்த பாழாய் போன மனுஷனுக்கு
வாக்கப்பட்டு நோவும் நொம்பலமும்
ஆனதுதான் தான் மிச்சம்.
பேரு தான் ஊரு பெரிய
மனுஷன் பொண்டாட்டி .
ஆனால் ஒரு கூலிக்காரனுக்கு
வாக்கப்பட்டுருந்தா கூட
நிம்மதியா வாழ்ந்திருக்கலாம்
என்று புலம்புவார் ராசக்கிளி.
ராசக்கிளிக்கு சொல்லி அழ கூட
நாலு சனம் கிடையாது.
ஒத்தப் புள்ளைய பெத்து
போட்டுட்டு அம்மக்காரி
செத்து போயிட்டா.
அப்பா இரண்டாம் தாரமா
ஒரு பொண்ணை கட்டிகிட்டு
வந்தாரு . அவருக்கு நாலு
ஆம்புள பிள்ளைகள்.
சொத்துல பாதி மூத்த தாரத்துப்
புள்ளைக்கு என்று வந்ததுனால
தம்பிமார் எவனும் அக்கான்னு
எட்டி பார்க்க மாட்டானுவ.
ஒரு கஷ்டம்னு சொல்லி இரண்டு
நாள் போய் உட்கார்ந்துட்டு வர
ஒரு அண்ணன் தம்பி வீடுன்னு
கொடுப்பனை இல்லாம போச்சு.
அந்த தைரியத்திலதான் இவ
நம்மள மிஞ்சி எங்க போயிருவா
என்று ஒரு அடிமையா வச்சி
நடத்தினாரு இந்த ஓடக்காரரு.
வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் இல்லாமலா
இருப்பான்.
அதுதான் நான் இருக்கேன் என்று
அந்த அடிமை சங்கிலியை அறுத்து
கூடவே கூட்டிட்டுப் போயிட்டான்
எமன்.
ராசக்கிளி இருக்கிறது வர
அவ அருமை தெரியல.
போன ஒரே வாரத்தில
ஓடக்காரரின் வேஷம் கலைஞ்சு போச்சு.
கஞ்சிக்கே அல்லோலபட
வேண்டியதாயிற்று.
மறந்து போய் "ராசக்கிளி
சோறு போடு" என்று கத்திகிட்டே
வீட்டுக்குள்ள வருவாரு.
"கிழவனுக்கு பொண்டாட்டி
போனதுல இருந்து கிறுக்கு
புடிசாசி போச்சி " என்று
மருமகள் ஓடக்காரர் காது
படியாகவே பேசுவாள்.
அப்போதான்
முதன்முறையா தான் ராசக்கிளிக்குச்
செய்த துரோகத்த எண்ணிப்
பார்த்தார்.
ராசக்கிளியை மாதிரி ஒரு ஜீவனை
நான் தொலைச்சிருக்கப்பிடாது.
ஆம்பிளை என்ற அகம்பாவம்
என் ராசக்கிளியை தொலைக்க
வச்சுட்டே என்று உள்ளுக்குள்
அழுது கொண்டுதான் இருக்கிறார்.
ஆண்டாண்டு அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்ப வருவரோ....
ராசக்கிளி செத்த பிறகும்
ஓடக்காரரு ஒருமாதிரியா
நடமாடிகிட்டுதான் இருந்தாரு.
ஒருநாளு தொழுவுல கிடந்த
மாட்ட அவுத்துவிடப் போனவரை
மாடு கயிரோட இழுத்துட்டு ஓடிச்சு.
பழைய நெனப்புல கயிற்றை இழுத்து
மடக்கிப் புடிக்கப் போனாரு.
மாடு கயித்தோட தரதரன்னு
இழுத்துப் போட்டுட்டு.
அதுல காலு எலும்பு உடைஞ்சு போச்சு.
ஆஸ்பத்திரிக்குப் கொண்டு போயி
பார்த்தாவ.
ஒருமாசம் ஆன பின்னரும்
முன்னமாதிரி காலை ஊன முடியல.
கைக்கம்பு ஊனி கொஞ்சம் வீட்டு
மட்டுக்கும் நடக்க முடிஞ்சது.
ஆஸ்பத்திரியில இருந்து வந்த
அன்னிக்குத்தான் மருமகள்
புறவாசலுல கட்டுல தூக்கி போட்டு
வச்சிருந்தா....
ஆத்திர அவசரத்துக்கு வெளியில
போகணும் என்னாலும் அதுதான்
வசதியா இருக்கும் என்று மவனும்
சொல்லிட்டான்.
கிடையில விழுந்த பிறகு எங்குன
கிடந்தா என்ன என்று ஓடக்காரரும்
ஒண்ணும் கேட்கல...
இப்போது புறவாசல்தான்
தஞ்சம்.
நார்ககட்டிலில் நடுவில் நாரெல்லாம்
அத்து தொங்கியது.
அதில் நாலு துணியை வச்சி
ஓட்டையை அடைப்பதுபோல
அடச்சி அதுக்கு மேல கிடந்தாரு.
நாளு முழுத்தும் அதுலேயே
கிடப்பதுனால கட்டுலு
தொய்வு விழுந்து போச்சு.
ஒவ்வொரு நேரம் அந்த
பொத்தல்குள்ள மாட்டிகிட்டு
வெளியில வந்துகிடாமல் கிடப்பாரு.
பேரன் பாலன்தான் வந்து
கையைக் கொடுத்து தூக்கி
விடுவான்.
வீட்டுக்குள்ள கிடந்ததுவரை அந்த
டிவியை கொஞ்சம் பாத்துகிடுவாரு.
இப்போ அதுவும் போச்சு.
இப்போ பேச்சு துணைக்கு
யாரும் இல்லாம கண்ணு
ஆலா பறக்குது.
பேரன் வந்ததும் கொஞ்ச நேரம்
வந்து பக்கத்துல உட்கார்ந்து
பள்ளிக்கூடத்து கதை எல்லாம்
பேசுவான் .
பேசி முடிந்ததும் "தாத்தா
ஒரு ரூபா தாங்க உண்டியலுல
போடணும் "என்பான்.
"உண்டியலுல எதுக்குப் போடுற .
ஆரஞ்சு முட்டாசி வாங்கித்
தின்னு மக்கா"
என்பாரு தாத்தா.
ஆனால் பாலன் கேட்கல....
கடவுள் போட்டாவுக்கு முன்னால
வச்சிருக்க உண்டியலுல
ஒத்த ரூபாயையும் போட்டுட்டு
"என் தாத்தாவுக்கு நல்லாயிரணும்
சாமி" என்று கும்பிட்டுவிட்டு
தாத்தா பக்கத்தில் வந்து உட்கார்ந்து
கொள்வான்.
உண்டியலுக்கு தாத்தா உண்டியலு
என்றே பேரும் வச்சுருக்கான்.
"அது என்ன தாத்தா உண்டியலு"
என்னு தாத்தா கேட்டுப்
பார்த்தார்.
"அதெல்லாம் சொல்லப்பிடாது.
சொன்னா காரியம் நடக்காது"
என்று புதிரா சொல்லிட்டுப்
போயிடுவான்.
பாலனுக்கு கொடுக்கணும்னு
தாத்தாவும் இடுப்பு வேட்டியில
ஒத்த ரூபாயா முடிஞ்சு
வச்சிருப்பாரு.
இன்றைக்கு நெடு நேரமா
படுத்து கிடந்ததால சட்டுனு
எழும்ப முடியல.
கட்டில் பக்கத்துல சாத்தி வச்சிருந்த
கம்பை பிடித்து ஊன்றி
ஒவ்வொரு நேரம் எழும்பி
முதுவ ஆத்திகிடுவாரு.
இன்றைக்கு எட்டி கம்பைப் பிடிச்சாரு
கம்பு கீழே விழுந்துடுச்சு....
இனி அவ்வளவுதான் பேரன் வரும்வரை
அப்படியே கிடக்க வேண்டியதுதான்.
அதுவரை அடக்கிகிட்டு
கிடக்க முடியுமா ?
படுக்கையிலே போயிட்டுன்னா
வீடெல்லாம் நாறுதுன்னு
மறுமவ கத்துவா...
ஒரு உந்தலுல எழும்பி
பார்த்தாரு.
கட்டுலு ஓட்டையில கிடந்த
துணி உள்ளமார போயி
உடம்பு ஓட்டையில மொடங்கி கிட்டது.
எழும்ப முடியல.
எம்பி எம்பி பார்த்தாரு.
நாலு ஐஞ்சு தடவை எம்பினவரு
அப்படியே கட்டுலோட சரிஞ்சி
கீழே விழுந்துட்டாரு.
அதுல மூக்குல அடிபட்டு
கீழே கிடந்தாரு.
எவ்வளவு தேரம் கிடந்தாரோ
தெரியல....
பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு
வந்த பாலன் "தாத்தா" என்று
குரல் கொடுத்தபடி ஓடி வந்தான்.
அங்கே....
தாத்தா கீழேயும் கட்டுலு மேலேயுமா
கிடந்தது.
"எம்மோ இங்க ஓடி வா...
தாத்தாவ பாரு....தாத்தா கீழ விழுந்து
கிடக்காவ "
உரக்கக் கத்தினான்.
பாலனின் அப்பா ஓடி வந்து
தூக்கிப் பார்த்தாரு.
கை காலெல்லாம் விறகு கட்டை
மாதிரி மரத்துப் போய்
மூச்சுபேச்சற்று கிடந்தாரு தாத்தா.
"அப்பா...அப்பா..".கூப்பிட்டுப் பார்த்தாரு
பாலனின் அப்பா.
எந்த அனக்கமும் இல்ல.
"என்னாயிற்றுப்பா "கேட்டான் பாலன்.
"தெரியல......
யாதுக்கும் நான்
ஓடிப்போய் டாக்டரை கூட்டி
வாரேன்...நீ தாத்தாவை
பார்த்துக்க "என்று வெளியில் ஓடினார்.
பாலன் "தாத்தா தாத்தா "என்று
உலுக்கிப் பார்த்தான்.
சத்தம் இல்லை.
"தாத்தா பாலன் வந்துருக்கேன்.
பேசுங்க தாத்தா....பேசுங்க தாத்தா"
மறுபடியும் மறுபடியும் உலுக்கினான்.
பாலன் உலுக்கிய உலுக்கலில்
தாத்தா இடையில் கட்டியிருந்த வேட்டி
அவுந்து ஒத்த ரூபா நாணயம்
ஒன்று உருண்டு ஓடியது.
ஓடிப்போய் நாணயத்தை எடுத்தான்.
கையில் எடுத்த ஒத்த ரூபாயையும்
உண்டியலையும் மாறி மாறி
பார்த்தான்.
இனி இந்த ஒத்த ரூபாய்க்கு
அவசியம் இல்லாமல் போய்விடுமா?
உண்டியல் உடைந்து காசுகள்
சிதறி ஓடுவதுபோல நினைவுகள்
எங்கெங்கெல்லாமோ ஓட ஆரம்பித்தன...
"ஒருவேளை தாத்தாவுக்கு ஏதாவது
ஆகியிருக்குமோ?
கூடாது....எங்க தாத்தாவுக்கு அப்படி
ஆகக்கூடாது.....சீ இது என்ன நினைப்பு.
என் வேண்டுதலை கடவுள் கேட்கலையா?"
சோகம் முகத்தைக்
கவ்விக் கொண்டது.
கண்கள் கையில் இருந்த
ஒத்த ரூபாயைப்
பார்த்தன.
"நீ எனக்கு உதவலல்ல....உன்னை நான்
இனி தொடவே மாட்டேன்......
எனக்கு ஒத்த ரூபா வேண்டாம்...
வேண்டாம்...வேண்டாம்."
ஆக்ரோசமாக கத்தியபடி ஒத்த ரூபா
நாணயத்தைத் தூக்கி வீசினான்
பாலன்.
பாலனின் கத்தலைக் கேட்டு
தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதுபோல
விழித்த தாத்தா,
".பாலா"என்றார்.
ஏதோ கிணற்றுக்குள் இருந்து
குரல் வந்தது போல இருந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தான்.
"யாரு கூப்பிட்டா...?
நம்ம தாத்தாவா?"
ஓடிப்போய் பக்கத்தில் அமர்ந்து
கையைப் பிடித்து நெஞ்சில்
வைத்துக் கொண்டான்.
உதடுகள் துடித்து உரக்க அழ
முடியாமல் விம்மினான்.
கண்கள் என்ன தாத்தா இது
என்று ஏதேதோ கேட்டுக்
கெஞ்சிக் கொண்டிருந்தன.
பாலன் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த
உணர்வுகளுக்கு கண்ணீர் துளிகள்
தாத்தா மார்பில் எழுத்துரு
தந்து கொண்டிருந்தன.
தாத்தாவின் கை பாலனின் கண்ணீரைத்
துடைக்க நீண்டது.
சிரித்துக்கொண்ட
பாலன்,
"போங்க தாத்தா...நான்
ரொம்ப பயந்திட்டேன்.
இருங்க.... அந்த ஒத்த ரூபாயை எடுத்து
உண்டியலுல போட்டுட்டு வாறேன்"
என்று ஓடினான்.
Comments
Post a Comment