கண்டாங்கி

கண்டாங்கி 


கண்டாங்கி  கண்டாங்கி 

என்னைக் கட்டி இழுத்த 

 என்றன் அம்மா

 கண்டாங்கி   

                      

தொட்டில்  கட்டித் துயில வைக்க            துணைக்கு வந்த 

என்றன் அம்மா 

கண்டாங்கி.  


தொட்டுப்  பிடித்து 

விளையாடும்போது

திரைச் சீலையான

கண்டாங்கி  


கண்ணீர் சிந்தும்  வேளையில் 

கன்னம் தழுவி 

கனிவு தந்த

கண்டாங்கி  


தூரல் மழையில்  நனைந்தபோது

உச்சந் தலையைத் தழுவி மெல்ல

அன்பு செய்த

கண்டாங்கி 


அப்பாவிடம் தூது போக 

முந்தானைக்குள் முகம் மறைத்து

பின்னணி பேசிய             

கண்டாங்கி             


வெற்றுத் தரையில்  படுத்தபோது 

பஞ்சு மெத்தையாகி மெல்ல

இனிமை  தந்த

 கண்டாங்கி  


விட்டம் தொட்டு  தொட்டில் கட்டி

ஊஞ்சலாக முன்னும் பின்னும் 

ஒய்யார ஆட்டம் போட்ட 

கண்டாங்கி


 உண்ணும்போது  உதட்டைத் தாண்டி

 எட்டிப் பார்த்த பருக்கையைத் 

 தொட்டுத் துடைத்த  

  கண்டாங்கி 


நைந்து போன  போதும்கூட  

பைய முகத்தைத் தூக்கிப் பார்த்து 

பக்கம் இழுத்த

 கண்டாங்கி 


கண்டம் தாண்டி வந்த போதும்

 நித்தம்  நித்தம் நினைவில் வரும்

 என்றன் அம்மா

 கண்டாங்கி!

 -செல்வபாய் ஜெயராஜ் 



              






கருத்துகள்

Popular Posts