குருதட்சணையான கட்டைவிரல்

குருதட்சணையான கட்டைவிரல் 


"அண்ணா... குருதட்சணை...குருதட்சணை

என்று கூறுகிறார்களே அது என்ன ?"

கேட்டான் பாலனின் தம்பி முகிலன்.


"படிப்பதற்கு ஆசிரியருக்கு கொடுக்கும்

பொருள் அல்லது பணம் குருதட்சணை.

ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?"

என்று தம்பியை ஏற இறங்க பார்த்தான்

பாலன்.


"பணமும் பொருளும்தான்

குருதட்சணை என்கிறாய்...ஆனால்

கட்டைவிரலையே குருதட்சணையாக கொடுத்தான்

ஏகலைவன் என்று ஆசிரியர் 

சொல்லித் தந்தாரே....அது என்ன ?"


"ஓ...அதுவா அது பெரிய கதை..

அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு?"


"ஏன்  ...நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?"


"ஏன் கூடாது...எல்லோரும் தெரிந்து

வைத்திருப்பதில் தப்பில்லை."

 

"அப்படியானால் எனக்கும் அந்தக்

கட்டைவிரல் கதையைச் சொல்லுங்களேன்."என்று பிடிவாதம் பிடித்தான் முகிலன்.


"ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே...,"

"எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தப்பா?"


"தப்பில்லை.... உன்னைப்போலவே

எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற

ஆர்வம் உள்ள சிறுவன் ஒருவன்

காட்டில் வசித்து வந்தான்"


"தனியாகவா...? "


."தனியாக எப்படி இருப்பான்? 

தன் பெற்றோர்களுடன்தான் காட்டில்

வசித்து வந்தான் போதுமா ?"


"எனக்காக பொய்  கதை ஏதும்

சொல்லலியே!"


"இது புராணக்கதைப்பா....

நான் ஏன் போய் சொல்லப் போறேன்.

கொஞ்சம் அமைதியாகக் கேள்..அல்லது நான் கதையைச் சொல்ல மாட்டேன்."


"கோபப்படாதே....சொல்...சொல்.."


"அந்தச் சிறுவன் பெயர் ஏகலைவன்.

ஒருநாள் அவன் காட்டில் 

விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது

மருளும் கண்களோடு மான் ஒன்று 

பயந்தபடி ஓடி வருவதைப்

பார்த்தான்."


"மானா...எனக்கு ரொம்ப பிடிக்கும் 

அப்புறம் சொல்லு சொல்லு.."


"பின்னாலேயே வேட்டைநாய்

 ஒன்று மானைத்

துரத்திக் கொண்டு வந்தது.

அதைப் பார்த்த சிறுவனுக்கு

எப்படியாவது அந்த மானை

இந்த வேட்டை நாயிடமிருந்து 

காப்பாற்றிவிட வேண்டும் என்று ஆசை." 


"ஆனால் எப்படி முடியும்?

அவன்தான் சிறுவனாயிற்றே.

அவனுக்குத்தான் வில்வித்தை தெரியாதே!"


"அதையேதான் சிறுவனும் நினைத்தான்.

அன்றிலிருந்து மனம் முழுவதும்

வில்வித்தைக் கற்றுவிட வேண்டும்

என்று ஆசை."


"காட்டில்தான் பள்ளிக்கூடம் இருக்காதே.

அவன் யாரிடம் போய் கற்பான் ?"


" நான் ஒரு காட்டு வேடனின் மகன்.

எங்கே போய் கற்றுக் கொள்ள முடியும் ?

இதையேத்தான் அவனும் தனக்குள்ளேயே 

சொல்லி  சமாதானம் 

 அடைந்து கொண்டான்."

 

"அப்புறம்....அந்தக் கட்டைவிரல்....கட்டைவிரல்..

அந்தக் கதையைச் சொல்லுங்கள்"


"வருகிறேன்....பறக்காதே...

அவன் மனதில் இருந்த 

வில் வித்தைப் படிக்க வேண்டும் 

என்ற ஆசை மட்டும்

அனலாக இருந்து கொண்டே இருந்தது.

ஒருநாள் தற்செயலாக துராணாச்சாரியர்

பஞ்ச பாண்டவர்களுக்கு வில்வித்தை

கற்றுக் கொடுப்பதைப் பார்த்தான்."


"துரோணாச்சாரியாரா? .

எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே....ஆ...நினைவு வந்துவிட்டது.

அவர் கௌரவர்களுக்கும் வில்வித்தை

சொல்லிக் கொடுப்பவராயிற்றே!"


"ஆமாம்....அஸ்தினாபுரத்து

அரச குடும்பத்து அத்தனை குழந்தைகளுக்கும்

அவர்தான் கலைகளைக் கற்றுத் தருவார்."


"அவர் ஏகலைவனுக்கும் 

கற்றுக் கொடுத்தாரா?"


" அவர் எப்படிக் கற்றுக்கொடுப்பார்.?


"ஏன்... கற்றுக்கொடுக்க மாட்டாரா?

அப்புறம்?"


"அப்புறம் என்ன...அதைப் பார்த்த நேரத்தில் இருந்து

தனக்கு எப்படியாவது  

வில்வித்தை கற்றே ஆக வேண்டும்

என்ற வேட்கை மிகுந்துவிட

நேரே அப்பாவிடம்போய் தான் பார்த்த

ஆசிரியர் பற்றிக் கூறுகிறான் ஏகலைவன்."


"ஏன் அப்பாவிடம் போக வேண்டும்..

நேரே ஆசிரியரிடம் போய்  கேட்க வேண்டியதுதானே!"


"அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு

வித்தை சொல்லிக் கொடுக்கும்

ஆசிரியரை எளிதில் 

நெருங்க முடியுமா என்ன..?."


"உண்மைதான்....

அதுவும் ஏகலைவன் சிறுவன்.

சொல்லுங்க...சொல்லுங்க..

அப்பா என்ன சொன்னார்?..."


"அப்பா என்ன சொல்வார்?...

அரச வீட்டுப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்

ஆசிரியர் நம்மைப் போன்ற சாதாரண

வேட்டுவ குல பிள்ளைகளுக்குக் கற்றுத்தர 

 சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார் ."

 

"அவ்வளவு தானா அப்போ

 ஏகலைவன் படிக்கலியா...."


"ஏகலைவன் கேட்பதாக இல்லை .

அழுது அடம்பிடித்தான்.

இறுதியாக வேறு வழியில்லாது மகனையும் 

அழைத்துக் கொண்டு துராணாச்சாரியரிடம்

சென்றார் ஏகலைவனின் அப்பா"


"அப்பாடா...ஒருவழியா ஏகலைவனுக்கு

 வில்வித்தைப் படிக்க ?

 வழி கிடைத்தது  இல்லையா?."

 

"அதுதான் இல்லை...

எப்படியாவது தன் மகனுக்கு

வில்வித்தை கற்றுத் தர வேண்டும்

என்று கெஞ்சிப் பார்த்தார் வேடன்.

நான் இளவரசர்களுக்கு வித்தைக்

கற்றுத்தரும் ஆசிரியர்.

என்ன தைரியத்தில் உன் மகனும்

இளவரசர்கள்போல வில்வித்தை கற்றுக்

கொள்ள வேண்டும் என்று கூட்டி

வந்துள்ளாய்? "என்றுகூறி

பிடிவாதமாக மறுத்துவிடுகிறார்

துரோணர்.


"இருந்தாலும் இந்த துரோணர்

 ரொம்ப மோசம்.ஏழைகள் என்றால்

 படிக்கக் கூடாதா என்ன !"


"ஏழைகள் பெரிய ஆசைப்படலாமா?

ஆசை நிராசையாகிவிட்ட நிலையில்

இருவரும்  கவலையோடு 

வீடு திரும்புகின்றனர்."


"ஐயோ! ஏகலைவன் ரொம்ப பாவமில்ல...

படிக்க ஆசைப்பட்டான்.

படிக்க முடியாம போயிடுச்சி.

ஏகலைவனை நினைத்தால் எனக்கு

பாவமாக இருக்கு.

அப்புறம் ஏகலைவனுக்கு வேறு ஆசிரியரே

கிடைக்கலியா?"


"கிடைத்தார்.....ஆனால் ஏகலைவன் 

அப்பா துரோணர்

மறுத்துவிட்டாரே என்று சும்மா இருக்கவில்லை.

தானே ஆசிரியராக இருந்து எல்லா

வித்தைகளையும் கற்பித்தார்."


"அப்பாவிடம் கற்றுங்கொண்டானா ஏகலைவன்?"

"அப்பாவிடம் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

ஏகலைவனும் துரோணாச்சாரியர்

பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்பிக்கும்போது

மரத்திற்கு பின்னால் மறைத்து  நின்று

கவனிப்பான்"


" நல்ல ஆர்வம் இல்ல..."

அதுமட்டும்ல துரோணாச்சாரியாரை குருவாக நினைத்து அவர் எதிரே நின்று கற்பிப்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்து பயிற்சியில் ஈடுபட்டான்."


"அப்பாடா...இப்போதுதான் நிம்மதியாக

இருக்கிறது.இருந்தாலும் அந்தக் 

கட்டைவிரல் பற்றி

நீங்கள் சொல்லவே இல்லையே!"


"சொல்கிறேன் கேள்.ஒருநாள் ஏகலைவன்  பயிற்சியில் இருக்கும்போது

காட்டுப்பன்றி் ஒன்று சத்தம் போட்டபடி

ஓடி வந்தது.

காட்டுப்பன்றியின் சத்தம் பயிற்சியில்

தன்னை ஒருமுகப்படுத்தவிடாதபடி

ஒரு கவனச்சிதறலை ஏற்படுத்தியது.

உடனே நான்கு வில்களை ஒன்றாக

குறுக்கும் நெடுக்குமாக செல்லும்படியாக 

எய்து  அந்தக் காட்டுப்பன்றியை

அதற்குமேல் மூச்சுவிடவிடாதபடி

செய்துவிட்டான் ஏகலைவன்.

நான்கு அம்புகளும் குறுக்கும்

நெடுக்குமாக நின்று  

காட்டுப்பன்றியைக் குரல் எழுப்ப

விடாதபடி தடுத்து நிறுத்தின.

தற்செயலாக இதைப் பார்த்துவிட்ட 

பீமன் ஆச்சரியத்தில் அப்படியே

உறைந்து போய்விட்டான்.

காட்டுப் பன்றியைக் கொல்லாமல்

தடுத்து நிறுத்தும் வித்தையை

அறிந்து வைத்திருப்பவன் யார்?

என்று அறிந்துவிட ஆசை.

நகுலனும் பீமனும் ஏகலைவனிடம்

சென்று இத்துணை அருமையாக 

வில் வித்தை 

யாரிடம் கற்றாய் என விசாரித்தனர் ."


"பொறாமை....அவர்களுக்கு துரோணர்

இப்படி எல்லாம்

சொல்லித் தரவில்லையோ?"


"அப்படித்தான் நினைக்கிறேன்.

ஓடிச்சென்று துரோணாச்சாரியாரிடம்

தாங்கள் பார்த்த காட்சியை

ஆச்சரியம் மேலிட கூறுகின்றனர்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சுனன்

மனதில்

தன்னைவிட திறமைசாலி

ஒருவன் இந்த காட்டில் இருக்கிறானா....?

என்ற கேள்வி எழுந்தது.

அர்ச்சுனன் முகம் 

அப்படியே வாடி கூம்பிப் போயிற்று."


"பின்னர் இருக்காதா என்ன? 

வில்லுக்கு விஜயன் என்று 

பட்டம் வாங்கி வைத்தவனாயிற்றே...

தன் பட்டத்தைப் பறிக்க இன்னொருவன்

வந்துவிடக்கூடாதே என்ற

அச்சம் இருக்குமில்லையா?"


துரோணர் அர்ச்சுனனைப் பார்க்கிறார்.

அவருக்கும் உள்ளுக்குள்  அனல்

மூண்டது

ஏகலைவனை அழைத்துவரும்படி

கட்டளை பிறப்பிக்கிறார்.

வீரர்கள் ஏகலைவனையையும்

அவனுடைய தந்தையையும்

கொண்டுவந்து துரோணர்முன்

நிறுத்துகின்றனர்.

துரோணரைக் கண்டதும் இருவரும் காலில்

விழுந்து வணங்குகின்றனர்..


"உன் மகனுக்கு இந்த வித்தையைக் 

கற்றுத் தந்தது யார் ?"

என்று கேட்கிறார் துரோணர்.


"வேறு யாரும் இல்லை.

தங்களைக் குருவாக நினைத்து

உங்களைப் போலவே ஒரு உருவச் சிலையை

வைத்து தங்களை மானசீக குருவாக

ஏற்று தினமும் பயிற்சி

செய்து வருகிறேன்"

என்றான் ஏகலைவன்.


"காட்டுப் பன்றியின் வாயில்

அம்பு எய்தவன்  நீதானோ?"என்று

கேட்டார் துரோணர்.


"அதுவும் நான்தான் "என்று பெருமையாகக்

கூறுகிறான் ஏகலைவன்.

இப்போது துரோணர் உள்ளத்தில்

கலக்கம்.அர்ச்சுனனை இந்த உலகத்திலேயே

சிறந்த வில்லாளியாக்குவேன்

என்று வாக்குக் கொடுத்திருக்கிறேனே.

இந்தச் சிறுவன் அர்ச்சுனனை விட

திறமைசாலியாக இருக்கிறானே

 என்ன செய்வது? என்ற கேள்வி

 ஓடியது.

 உடனே என்னை குருவாக

 ஏற்றுக் கொண்டேன் என்கிறாயே

 குருவுக்கு தட்சணையாக

 எனக்கு என்ன

 கொடுப்பாய் என்று கேட்டார்."



"எப்படி...அவர்தான் ஏகலைவனுக்குச்

பாடம் சொல்லித்தரவில்லையே...

அப்புறம் அவருக்கு எதற்கு குருதட்சணை?"


" சும்மா இரு....குறுக்க குறுக்கே

பேசாதே....

நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்

என்று வாக்குக்கொடுத்தான்

 ஏகலைவன்."


"துரோணருக்கு தட்சணை கொடுக்கும்

அளவிற்கு ஏகலைவனிடம்

என்ன இருக்கிறது?"


" என்ன இல்லை....அவனது மூலதனமாக

கட்டைவிரல் இல்லையா?

உன்னுடைய வலதுகை கட்டை விரலை

குருதட்சணையாக கொடுப்பாயா?"

என்று கேட்டார் துரோணர்."


"என்னது....வலது கை கட்டை விரலா?

கட்டை விரல்தானே வில்வித்தைக்கு

மிக முக்கியமான தேவை....

அந்த விரலைக் தட்சணையாகக் கேட்டாரா?


உன்னைப் போலத்தான் ஏகலைவனும்

அதிர்ந்து நின்றான்.

அழுது நின்றான்.

சொல்லாடாது நின்றான்.



"ஆனால் குரு கேட்டு தட்சணை கொடுக்காமல்

இருப்பது சரியாகப் படவில்லை.

என்ன நடந்தாலும் பரவாயில்லை.

ஒரு துணிவோடு தன் இடுப்பில்

இருந்த கத்தியை எடுத்து

தன்னுடைய கட்டை விரலை வெட்டி

குருதட்சணையாகக் கொடுத்தான்."


"ஆ....என்ன காரியம்

செய்திருக்கிறான்.....?

கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே!

மரத்தின் பின்னால் மறைந்துநின்று

தானாக கற்ற வித்தைக்கு தட்சணை

வாங்கிவிட்டார்  துரோணர்.

இப்போது துரோணருக்கு மகிழ்ச்சியாக

இருந்திருக்குமே.."


"இருக்காதா என்ன...மகிழ்ந்து

போகிறார் துரோணர்."



"ஏகலைவனுக்கு அபார அறிவு இல்ல...

துரோணரை நினைத்துக்கொண்டே

இவ்வளவு வித்தையைக் கற்றிருக்கிறானே!.

அப்புறம் அந்தக் கட்டைவிரல்

கதைதான் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது.

கட்டை விரலும்  இல்லாமல்

வில்வித்தையையும் தொடர முடியாமல் 

ஏகலைவன் என்ன பாடுபட்டிருப்பான்.?"


 

"அதுதான் இல்லை .

கட்டைவிரலை  இழந்த பின்னரும்

நான்கு விரல்களை வைத்து் பயிற்சி

பெற்று நல்ல வில்வீரனாக 

மாறினானாம் ஏகலைவன்."


"சரி போதும்...திரும்ப திரும்ப

கட்டைவிரலை நினைவுபடுத்தாதீர்கள்

ஏழைகள் படிக்கணும் என்றால்

எத்தனை தடைகள்....எத்தனை இடையூறுகள்!

அதையும் மீறி படித்துவிட்டால்

இப்படியுமா முடங்கிப் போட பார்ப்பார்கள்.

இது என்னமாதிரியான மனநிலை?

கட்டைவிரலுக்குப் பின்னால் இப்படியொரு 

கொடூரமான கதையா?

விடுங்கள்....நான் போகிறேன் 

எனக்கு படிக்கணும்...

எனக்குப் படிக்கணும்...."  உரக்கக் கத்தியபடி ஓடினான் முகிலன்.


கருத்துகள்

Popular Posts