துணிந்தவனுக்கு துக்கமில்லை
துணிந்தவனுக்குத் துக்கமில்லை
"துணிந்தவனுக்கு சமுத்திரமும்
முழங்கால் மட்டம் "என்பார்கள்.
ஒரு காரியத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்ற துணிவு வந்துவிட்டால்
எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும்
மலைப்பாக இருக்காது.
முனைப்போடு
களத்தில் இறங்கி வேலை செய்யும் தைரியம் வரும்.
இடையில் எந்த சக்தியாலும் அவர்களைத்
தடுத்து நிறுத்திவிட முடியாது.
பறந்தால் கீழே விழுந்துவிடுவோமோ என்ற அச்சமிருந்தால் எந்தப் பறவையும் கூட்டிலிருந்து வெளிவரவே முடியாது.
விழுந்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலோடு பறக்க முற்படும்போதுதான் பறவையால் பறக்க முடிகிறது.பறவை தன் இறக்கைமீது உள்ள ஒரே நம்பிக்கையில் துணிந்து பறக்கிறது.
ஏதோ ஒரு துணிச்சலில் மரத்தில் ஏறி விடுவோம்.இறங்கும் போது கால் நடுங்கும்.வியர்த்து விறுவிறுத்து அண்ணே கொஞ்சம்
இறக்கி விடுங்களேன்.அக்கா ஒரு கை பிடியுங்களேன் என்று கெஞ்சிக் கொண்டிருப்போம்.இவ்வளவுதான் நமது துணிவு.
கீழே விழுந்தால் என்ன ?
விழமாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே
துணிந்து யாருக்கும் தெரியாமல்
மரத்தில் ஏறினோம்.
இறங்கும்போது மட்டும் அக்காவும்
அண்ணனும் துணைக்கு எதற்கு?
தன்னம்பிக்கை இருக்கிற ஒருவனுக்குத்தான்
துணிச்சல் வரும்.
விழுந்தாலும் எழும்பிவிடலாம்
என்ற நம்பிக்கை இருக்கும் குழந்தைதான் மறுபடியும் மறுபடியும் துணிச்சலோடு எழும்பும்.
துணிச்சல் இருந்தால்தான் நீச்சல்
அடிக்க முடியும்.
இல்லை என்றால் முட்டளவு தண்ணீர்
இருந்தாலும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு
எட்ட நின்று தண்ணீருக்குள் வட்டமடிக்கும்
சிறுவர்களைப் பார்த்து வாயைப் பிளந்தபடி
நிற்க வேண்டியதுதான்.
இன்னும் ஒரு சிலருக்கு வேறு விதமான
அனுபவம் கிடைத்திருக்கும்.
குளத்தங் கரையில் நின்று
குளிக்காமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்போம்.
நம்மைவிட சின்ன பிள்ளைகள் எல்லாம்
நீச்சல் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
நமக்கு தண்ணீருக்குள் இறங்கவே
அச்சம். திடீரென்று யாரோ வந்து தண்ணீருக்குள்
தள்ளி விட்டுவிட்டார்கள்.
இப்போது நீச்சல் அடித்து ஆக வேண்டும்
என்ற நிர்ப்பந்தம்.
துணிந்து நீச்சலடித்து கரையேறிவிடுவோம்.
இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது ?
வேறு வழியே இல்லாதபோது ஒரு
துணிச்சல் வருகிறது பாருங்கள்.
அந்தத் துணிச்சல் ஆரம்பத்திலேயே இல்லாமல்
போனதற்கான காரணம் என்ன ?
நம் மீதே நமக்கு நம்பிக்கை
இல்லாமல் இருப்பதுதான் தயக்கமும் தடுமாற்றமும் ஏற்படக் காரணமாக அமைந்துவிடும்
செயலில் உறுதியாக இருக்க மனதில்
துணிவு வேண்டும்.
சொன்னதைச் சொன்னபடிச் செய்யவும்
எண்ணியதை எண்ணியபடி அடையவும்
மன உறுதியே முதன்மையானது.
ஒரு செயல் இன்பம் தருமோ
துன்பம் வந்து விடுமோ என்ற
ஐயம் சிறிதும் இல்லாமல் துணிவோடு
செயலாற்றும்போதுதான் செயலில்
வெற்றி காண முடியும்.
"சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
"ஒரு செயலைப் பற்றிய முடிவு எடுப்பதற்கு
துணிவு வேண்டும்.
அந்தத் துணிவு காலம் தாழ்ந்து
வந்தால் அதுவும் நல்ல பலன் தராது"
என்கிறார் வள்ளுவர்.
பல இடங்களில் துணிவோடு ஒரு செயலில்
ஈடுபடாததால்தான் நாம் பின்தங்கிப்
போயிருப்போம்.
எத்தனையோ இடங்களில் ஒதுங்கி
ஒதுங்கி நின்று நம் உண்மை முகத்தைத்
தொலைத்திருப்போம்.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
ஏன் வள்ளுவர் துணிக என்ற சொல்லைப்
போட்டிருக்கிறார். எண்ணிச் செய்க
கருமம் என்றுகூட எழுதியிருக்கலாமே
என்று எண்ணத் தோன்றும்.
எப்போதுமே ஒரு செயலில் இறங்கும்போது
ஆயிரம் கேள்விகள் நம் முன் வந்து
நிற்கும்.
ஒரு செயலைச் செய்ய வேண்டும்
என்றால் இப்போது செய்துவிடலாமா.... இல்லை
நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா...
அல்லது செய்யாமல் அப்படியே
விட்டுவிடுதல்தான்
நல்லதாக இருக்குமா ..என்ற
குழப்பமான கேள்விகள்
வந்து குமைந்துக் கொண்டிருக்கும்.
துணிந்து செயலில் இறங்கிவிட்டால்
தேவையில்லாத சிக்கல்கள் எழாது
என்ற மன உறுதி வேண்டும்.
அதைத்தான் "துணிந்தவனுக்குத்
துக்கமில்லை" என்று சொல்வார்கள்.
ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கி
விளையாடும்போதுதான் வெற்றி கிட்டும்.
எட்ட நின்று பார்த்தால் வெட்டாந்தரைதான்
தெரியும்.
நிமிர்ந்து பார்க்கும்தான் வானத்தின் எல்லை புரியும்.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்பதில்லையே
உச்சி மீது
வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் என்பதில்லையே
என்று பாரதியார் சொன்னதுபோல
துணிவோடு அச்சமில்லாமல் களத்தில்
இறங்கினால் மட்டுமே தலை நிமிர்ந்து
வாழ முடியும்.
துணிந்து களத்தில் இறங்குங்கள்.
தயக்கத்தோடு கொள்ளுங்கள் பிணக்கு. துணிவோடு தொடங்கட்டும் உங்கள் வெற்றிக் கணக்கு
கருத்துகள்
கருத்துரையிடுக