துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக
துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக
தள்ளு.. தள்ளு ....தள்ளு குரல் எழுப்பியபடி குறும்புக்கார சிறுவன் ஒருவன் ஓடி வந்தான்.
எந்தப் பக்கம் தள்ளுவது ?
எதற்காகத் தள்ள வேண்டும்?
இப்படிக் கேள்விகளோடு அந்தச் சிறுவனை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் அவன் என்னைக் குப்புறப் தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.
எழுந்து முழங்கையைத் தடவியபடி அந்தச் சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
"தள்ளி நில்லு ....தள்ளி நில்லு தெருவில் நின்றபடி வாய்ப்பார்த்துக் கொண்டிருந்தால் வருவோர் போவோர் எல்லாம் குப்புற தள்ளிவிட்டுத்தான் போவார்கள்" என்று சொல்லி வாயைப் பொத்தி படி சிரித்தாள் தங்கை.
"அப்படியே அடித்தேன் என்றால்...."கையை ஓங்கினேன்.
கையை மடக்கிப் பிடித்த அண்ணன்,
"கொம்புள திற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக் காயிரந் தான் வேண்டுமே
வம்புசெரி துர்ச்சனர் கண்ணிற் படாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி."
என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் .கோபப்படுவதை விட்டுவிட்டு யோசி...யோசி நன்றாக யோசி என்றான்.
யோசித்தேன். அண்ணன் கூறியதில் இருந்த உண்மை புரிந்தது.
தாங்கள் அறிந்ததை உணர்ந்ததை முன்னோர்கள் நறுக்குத் தெறித்தாற்போல நான்கு வரிப் பாடல்களாகத் தந்து விட்டுப்போய் இருக்கிறார்கள்.
அனுபவம் அழகான பாடல்களாக வந்து நிற்கின்றன.
எத்தனையோ முறை படித்திருப்போம்.
ஆனால் தேவையானபோது நினைவுக்கு வருவதில்லை.
அந்த நீதி வெண்பா பாடலைத் தான் அண்ணன் நினைவுபடுத்தியிருக்கிறான்.
கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களின் அருகில் போகக்கூடாது.
குறைந்தது அவற்றிலிருந்து ஐந்து முழ தூரமாவது தள்ளி நிற்க வேண்டும்.
அப்படி நின்றால்தான் அவை கொம்பைக்கொம்பை ஆட்டி முட்ட வரும்போது தப்பித்துக் கொள்ள முடியும்.
குதிரை பக்கத்தில் நிற்கக்கூடாது.
பத்து முழ தூரத்தில் நின்றால்
மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.
முட்டும் அல்லது உதைக்கும்.
யானை நிற்கிறது என்றால் எப்போதும் ஆயிரம் அடி தூரத்திலேயே தள்ளி நிற்க வேண்டுமாம்
அப்போதுதான் யானை திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் ஓடி பாதுகாப்பான இடத்தில் போய் நின்றுவிட முடியும்.
ஆனால் தீயோரைக் கண்டால் அதாவது துஷ்டர்களைக் கண்டால் கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள்.
அவர்கள் கண்முன்னே வந்து நின்று விடாதீர்கள்.
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பார்கள் .
ஆனால் நீதி வெண்பா ஆசிரியர் துஷ்டன் கண்ணில்பட்டுவிடாதீர்கள் அவ்வளவுதான் உங்களுக்குத் தீமை வருவது நிச்சயம் என்கிறார் செய்குத் தம்பி பாவலர் .
"துர்ச்சனர் கண்ணிற் படாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி."
கருத்துகள்
கருத்துரையிடுக