எத்தனுக்கு எத்தன்
எத்தனுக்கு எத்தன்
எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் நிச்சயம்
இருக்கும்.
ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை
வைத்து விட்டோம்.
அதனால் அவர்மீது எதிர்பார்ப்பும்
அதிகமாக வைத்து விடுவோம்.
அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதபோது
விரக்தி ஏற்படுகிறது.
ஏமாற்றமடைந்து புலம்ப
ஆரம்பித்துவிடுவோம்.
அதிக நம்பிக்கை வைப்பதுகூட
பல நேரங்களில் ஆபத்தாக முடிவதுண்டு.
குடும்பத்தில் சண்டை வருவதற்கான
முதற்காரணமே இந்த எதிர்பார்ப்புதான்.
நீ இன்னது தந்தால் நானும் உனக்குப் பதிலுக்கு ஏதாவது செய்வேன்.
செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்து விடுகிறது.
அது பல இடங்களில் பொய்த்துப் போய்விடுகிறது.
அதனால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது
என்பதல்ல.
எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தச் செயலும் நிகழாது.ஊதியம் கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பில்தான்
வேலை நடைபெறுகிறது.
ஊதியம் கிடைக்காது என்று தெரிந்தால்
யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர
மாட்டார்கள்.
அந்தக் காலத்தில் புலவர்கள்
மன்னர்களைப்
புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர்.
மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார்
என்றால்
யார் பாடுவார்?
இப்படித்தான் ஒரு மன்னனிடம் ஏதாவது
கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு
புலவர் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்.
தனது முழு திறமையையும் காட்ட எண்ணி
இரவு முழுவதும் தூங்காமல் எதுகை
மோனை நயத்தோடு மன்னனைப் புகழ்ந்து
அழகான பாடல் ஒன்று எழுதிக்
கொண்டு சென்று மன்னர் முன்னர்
பாடினார்.
மன்னனுக்கு மிக்க மகிழ்ச்சி.
பாடல் முடிந்தது. இப்போது
பரிசளிக்க வேண்டிய நேரம்.
மன்னனுக்கு பொருள் ஏதும் கொடுக்க
மனமில்லை.
உங்கள் பாடலில் எதுகை மோனை
நன்றாக இருக்கிறது. ஆனால் பொருளில்
எங்கேயோ குறைபாடு உள்ளதுபோல
உணர்கிறேன்.நாளை
தரமான பாடலாக எழுதி வாருங்கள்
என்று வெறுங்கையோடு திருப்பி
அனுப்பிவிட்டார்.
வயிற்றுப்பசிக்கு ஏதாவது கொடுப்பார்
என்று எதிர்பார்த்துச் சென்ற புலவருக்கு
ஏமாற்றமே மிச்சம்.
மறுநாள் இன்னும் பல திருத்தங்கள்
செய்து அதே பாடலை எடுத்துக்
கொண்டுபோய் அவையில்
பாடினார் புலவர்.
மன்னருக்கு இன்றும் பொருள்
கொடுக்க மனமில்லை.
இதற்கு முன்னால் இப்படிப்பட்ட
பாடலைக் கேட்டிருக்கிறேன்.
யாரும் பாடாத பொருளில்
புதுமையான பாடல் ஒன்று
எழுதி வாருங்கள் என்று
அனுப்பி திருப்பி அனுப்பிவிட்டார்.
புலவர் வீட்டில் நாலு நாட்களாக
அடுப்பு எரியவில்லை. தன் குடும்ப
வறுமையைப் போக்க ஏதாவது கிடைக்குமா
என்ற ஒரு எதிர்பார்ப்போடு வந்த
புலவருக்கு மிஞ்சியது
மறுபடியும் ஏமாற்றம் மட்டுமே .
சோர்வாக திரும்பிச் சென்று ஒரு
மரத்து நிழலில் உட்கார்ந்திருந்தார் புலவர்.
அப்போது அந்தவழியாக முதியவர்
ஒருவர் வந்தார். சோர்வாக அமர்ந்திருக்கும்
புலவரைப் பார்த்ததும் அவரிடம்
தங்கள் சோர்வுக்கான காரணம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
என்று கேட்டார்.
புலவர் "என்னங்க...இந்த நாட்டு மன்னர்
எப்படி பாடல் எழுதி கொண்டு கொடுத்தாலும்
நன்றாக இல்லை என்கிறார் ."
என்று நடந்ததைக் கூறி சலித்துக் கொண்டார்.
எங்கே தாங்கள் எழுதி
வந்தப் பாடலைக் கொடுங்கள் என்று
பாடலை வாங்கிப் பார்த்து
வாசித்துப் பார்த்தார் முதியவர். பாடல் அருமையாக இருந்தது.
இந்தப் பாடலில் என்ன குறை கண்டார்?
ஏன் மன்னர் பரிசில் கொடுக்க மறுக்கிறார்.
இதில் ஏதோ ஏமாற்று இருக்கிறது .
இந்த ஏழைப் புலவரை ஏமாற்றப் பார்க்கிறார் . இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என்று நினைத்தபடி,
" புலவரே! நாளை இதே இடத்திற்கு வந்து
காத்திருங்கள் . நான் பொருளோடு
வருகிறேன் "என்று சொல்லிவிட்டு
பெரியவர் சென்றுவிட்டார்.
புலவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
இருந்தாலும் பெரியவர் பொருள்
கொடுப்பதாக கூறியதால் அதே இடத்தில்
வந்து காத்திருந்தார்.
மறுநாள் அரண்மனைக் காவலனோடு
ஒரு குதிரையில் வந்து இறங்கினார்
பெரியவர்.
பின்னால் மூன்று மூட்டைகளில்
தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட
பெட்டிகள் இருந்தன.
பெரியவர்" இதோ உமது பாடலுக்கான
சன்மானம் "என்று கூறி
ஒரு தங்க நாணயம் பெட்டியைத் தூக்கி
புலவர் கையில் கொடுத்தார் .
புலவருக்கு என்ன நடந்தது . என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.
நடப்பது கனவா நனவா என்று பெரியவரை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றார்.
புன்னகைத்தார் பெரியவர்.
"தங்களுக்கு இவ்வளவு தங்க
நாணயங்கள் எப்படி கிடைத்தது ?"என்று
விசாரித்தார் புலவர்.
"உன்னை ஏமாற்றிய மன்னரை நான்
ஏமாற்றினேன் "என்றார் பெரியவர்
சாதாரணமாக.
"புரியவில்லையே...கொஞ்சம் புரியும்படி
சொல்லுங்கள் "என்று கேட்டார் புலவர்.
"ஒரு ஞானியைப் போல வேடமணிந்து அரண்மனைக்குச்
சென்றேன். நீர் எழுதித் தந்த பாடலை
மனனம் பண்ணி அரசவையில் அச்சுபிசகாமல்
அப்படியே ஒப்பித்தேன்.
ஒப்பிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை
நிறுத்தாதபடி மழமழவென வார்த்தைகள்
வந்து விழுந்தன. அதனால் மன்னரால்
எளிதில் பொருள் புரிந்து
கொள்ள முடியவில்லை.
புரிந்து கொள்ள முடியாதபடி பாடலாக
இருந்ததால் இதுதான் தரமான பாடல்
என்பது மன்னர் கணித்துவிட்டார்.
அதுவும் ஒரு ஞானி பாடும் பாடல்
ஆஹா...ஓஹோ...என்று பாராட்டினார்.
ஞானிக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து
பாடலுக்கு எடைக்கு எடை தங்க
நாணயம் கொடுக்கும்படி ஆணையிட்டார்."
"அப்புறம்..."
"அப்புறம் என்ன அப்புறம் ...
நான் விடாகண்டனுக்குக் கொடாகண்டனாயிற்றே.
சும்மா...
பாடல் இப்போது என் கையில்
இல்லை. பாடலை என் வீட்டு முற்றத்தில் கிடக்கும் ஒரு பாறையில் எழுதி வைத்திருக்கிறேன். என்னோடு வீரர்களை அனுப்புங்கள். எடுத்து வருகிறேன்"
என்றேன்.
"ம்...ஏன் இப்படி?"
"மன்னன் பாடலுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்க ஆணை பிறப்பித்துவிட்டார்.
என் கையில் எதுவுமில்லை .
இப்போது பொன்னை வாங்க வேண்டும்.
அதுவும் உம்மை ஏமாற்றிய மன்னனுக்கு
நானும் பதிலுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.
அதற்குத்தான் இப்படி"
"அதற்கு இப்படி ஒரேயடியாகவா?
அப்புறம் மன்னர் ஒத்துக்கொண்டாரா?"
"ஒத்துக்கொள்ளாமல் வேறு என்ன செய்ய முடியும்?
பாறை எடைக்கு எடை தங்க நாணயம்
கொடுக்க வேண்டும் என்றதும்
மன்னர் முகம் அப்படியே வாடிப்போய்விட்டது"
"இருக்காதா பின்னே..
.கொஞ்சநஞ்ச பொன்னா..
பாறை அளவுக்கு... மறுப்பேதும் சொல்லவில்லையா?"
."பாடல் பாடியவர்
துறவியாயிற்றே....ஏதாவது
சாபம் விட்டுவிட்டால் என்று அஞ்சிய
மன்னருக்கு எடைக்கு எடை தங்க
நாணயங்கள் தருவதைத் தவிர
இப்போது வேறு வழியில்லாமல் போய்விட்டது"
"மூன்று மூட்டை தங்கமா?"
"இதோ இந்தக் குதிரையில்
இருப்பவை தான். அவற்றைப்
பெற்றுக்கொண்டடேன்" என்றார் பெரியவர்.
"பாடல் எழுதிய பாறை எங்கே என்று கேட்டால்.."
."அதோ அந்தப் பாறையைக் காட்டுவேன்."
"பாறையில்தான் பாடல் இல்லையே..."
"பாடல் மழை நீரில் அழிந்துவிட்டது என்று கூறுவேன்.."
"அடேங்கப்பா...என்னவொரு புத்திசாலித்தனம்!"
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று சொல்வார்கள்.
எத்தனுக்கு எத்தன் இல்லாமலா போய்விடுவான்?"
சொல்லிச் சிரித்துவிட்டு வந்த வழியே போய்விட்டார் பெரியவர்.
எத்தனுக்கு எத்தன்...சொல்லி உள்ளுக்குள் சிரித்தார் புலவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக