பிச்சைக்கு மூத்த குடி

பிச்சைக்கு மூத்தகுடி



"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்"

 என்றார் வள்ளுவர்.

இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் அங்குமிங்கும்  அலைந்து கெட்டொழிந்து  போவானாக என்று  இறைவன்மீதே வள்ளுவர்  கோபப்பட்டு எழுதிய பாடல் இது. 


பிச்சை எடுத்து வாழ்தல் 

அவ்வளவு இழிவானதா?

ஏன் இல்லை...

இழிவானது தான். இதுதான் வள்ளுவரின் ஆணித்தரமான கருத்து.

நம் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால்  என்ன செய்ய்ய முடியும்?

உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது.

தவறான செயல்.

ஆனால் உழைக்க இயலாதவர்கள்,

மாற்றுத்திறனாளிகள் 

என்ன செய்ய முடியும்?

இரந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்?

படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.?


வெறுமனே குறை சொல்லிவிட்டு கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை.

ஏன் இப்படிப் படைத்தாய் என்று

கேள்வி கேட்கிறார்.

இவர்கள் இரந்து வாழ்வதற்கு நீதானே காரணம் ...அப்படியானால் அதற்கான தண்டனை உனக்கும் உண்டு.

நீயும் அவர்களைப்போல அலைந்து திரிந்து 

கெடுவாயாக என்று சொல்வது கோபத்தின் உச்சம் அன்றி வேறென்ன சொல்வது?

ஆனால் இரப்பவர்கள் வாழ்வு எல்லாம் பரிதாபத்திற்குரியதாக இருப்பதில்லை.

வயிற்றுப் பசிக்காக இரப்பவர்கள் ஐயோ பாவம் என்று அனைவராலும் 

பரிதாபமாகப் பார்க்கப்படுவர்.

இவர்களைத் தவிர இரப்பவர்களில் 

வேறு சில வகையினருய் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள்  பிடுங்கித் தின்னும் வகையைச் சார்ந்தவர்கள்.ஒருவர் மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வயப்படுத்தி அதாவது பிறரது மனதில் ஆசையைத் தூண்டி

அவரிடமிருந்து பொருளைப்பெற்று வயிற்றை வளர்க்கும் நம் வஞ்சகர்கள்.

அவர்கள் அப்படி வாழ்வதைவிட

உயிர் விடுதல் சிறந்தது. 

பிடுங்கித் தின்று உயிர் வாழ்த்தை விட

சாகலாமே என்று கேட்கிறார் ஒரு புலவர்.

யாரிவர் ?

சீச்சீ இதெல்லாம் ஒரு பிழைப்பா 

உழைத்து வாழய்யா ...உழைத்து வாழ்

என்று  சொல்கிற  யார் இவர் ?

என்று கேட்கத் தோன்றும்.

வேறு யாரால்  இப்படி சட்டென

கோபப்பட்டுப் பட்டென்று போட்டுடைக்க முடியும்.

ஔவையார்தான் தனது  நல்வழிப் பாடலில்‌

இப்படியொரு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாடல் இதோ உங்களுக்காக...


"பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கைபேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம்அழியாது

உயிர்விடுகை சால உறும் "

           நல்வழி பாடல் : 14


"பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை 

ஒன்று உண்டு. அது எது தெரியுமா? சொல்கிறேன் கேள். 

ஒருவருடைய மனதில் பல்வேறு ஆசைகளைத் தூண்டி 

கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக  தன் வசப்படுத்தி

அவர் ஆசை  கொள்ளும்படிச் செய்து அவரிடமிருந்து  பொருளைப் பெற்று தன் வயிற்றை வளர்த்தல் ஆகும்.

 சீச்சீ! இப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா? மானக்கேடு.

இப்படி  ஒரு மானங்கெட்ட வாழ்க்கை நடத்துவதை விட   தன் உயிரை விடுவது மேலானது." என்பது பாடலின் பொருள்.

சரியான கேள்வி.

இதுதான் ஏமாற்றிப் பிழைத்தல் என்பது.

பிறரின் ஆசையைத் தூண்டி

அவரை தன் வலையில் விழ வைத்து  ஏமாற்றி அதனால் ஆதாயம்  தேடும் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

அப்படி ஒரு வாழ்க்கை வாழ்தலை விட சாகலாம் என்று உச்சந்தலையில் ஓங்கியடித்துவிட்டார் ஔவை.

சரியான அடி.

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட

ஒருவருக்கு மட்டுமே சமூகத்தின் மீது கோபப்படும் உரிமையும் உண்டு.

இந்தப் பாடலின் மூலம் தான் ஒரு சமூகப்

போராளி  என்பதை ஔவை மெய்ப்பித்துள்ளார்.

என்னவொரு கோபம்!

கருத்துகள்

Popular Posts