நாய் பெற்ற தெங்கம் பழம்
நாய் பெற்ற தெங்கம் பழம்
நல்ல வாய்ப்பு சரியான நபரிடம் வழங்கப்பட வேண்டும்.
அப்படி இல்லாது போனால் அது பயனில்லாது போகும்.
ஓர் ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.
நித்தம் தோட்டத்தில் போய் மாங்கு மாங்கென்று உழைப்பார்.
வேகாத வெயிலில் அவர் கஷ்டப்படுவதைப் பார்க்கிற அனைவரும் ஐயோ பாவம் என்று சொல்லி கடந்து போவர்.
ஒருநாள் அந்த நாட்டு ராஜா அந்தப் பக்கமாக மாறுவேடத்தில் வந்தார்.
அவருக்கு இந்த மனிதனைப் பார்க்க பாவமாக இருந்தது.
உடனே தனது சேவகனிடம் சொல்லி அந்த மனிதரை அழைத்து வரச் சொன்னார்.
அந்த மனிதனை அழைத்து வந்து மன்னர் முன்பு நிறுத்தப்பட்டது.
மன்னர்,"உனக்கு ஆயிரம் பொற்காசு வழங்குகிறேன். அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்" என்று கூறி பொற் காசுகளைப்
பொட்டலமாக கட்டி அந்த மனிதரிடம் கொடுத்தார்.
"ஆயிரம் பொற்காசுகளா?" வியந்து போன மனிதர் அதை அப்படியே தன் வீட்டில் ஒரு மண்பானையில் வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்துவிட்டார்.
ஆசை வரும்போதெல்லாம் அந்த பொற்காசுகளை எடுத்து எண்ணிப் எண்ணிப் பார்ப்பார்.
குலுக்கிக்குலுக்கிப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார்.
மறுபடியும் அதே போல பானையில் வைத்து மூடி வைத்துவிடுவார்.
மூன்று நான்கு மாதங்களுக்குப் பின்னர்
மறுபடியும் மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். அந்த ஏழை விவசாயி அதே போல் வெயிலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அதே பழைய குடிசைவீடு.
மன்னருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"நாய் பெற்ற தெங்கம் பழம்" என்று ஒற்றை வரியைப் சொல்லி புன்னகைத்தபடி கடந்து போய்விட்டார்.
மன்னரோடு வந்த வீரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
எதற்காக மன்னர் அந்த விவசாயியைப் பார்த்து
நாய் பெற்ற தெங்கம்பழம் என்று கூறினார்.
அதற்கான பொருள் ஒன்று இருக்கத்தான் செய்யும். யாரிடம் கேட்பது ஒன்றும் புரியவில்லை.
நேரே அந்த ஊர் பெரியவரிடம் போய் நின்றான். அவரிடம்
நடந்தவற்றைக் கூறி மன்னர் கூறிய
"நாய் பெற்ற தெங்கம்பழம் என்பதற்கான பொருள் என்ன "என்று கேட்டார்.
அவரும் வா முன்றுறையரையனாரிடம் போய் கேட்போம் என்று அழைத்துச் சென்றார்.
"ஏன் அவரிடம் செல்ல வேண்டும்?
தங்களுக்கு அதன் பொருள் தெரியாதா"என்று கேட்டான் வீரன்
சற்று பொறு தம்பி
என்ற அந்தப் பெரியவர் ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்து அவனையும் பக்கத்தில் அமர வைத்தார். தான் வைத்திருந்த
பழமொழி நானூறு புத்தகத்தை எடுத்து பாடல் 260 ஐ வாசித்தார்.
"வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கும் முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். "
என்று பாடலைப் படித்துவிட்டு
அந்த வீரனைப் பார்த்தார்.
இப்போது வீரனுக்கு குழப்பம் அதிகமாகியது.
புரியவில்லையா? பாடலின்
பொருள் வேண்டுமா?
இதோ கேள்:
“நாய்க்குக் கிடைத்த முழுத்தேங்காயை அதனாலும் தின்ன முடியாது. பிறர் எடுத்துச்சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே கருமியின் செல்வமும் எவருக்கும் பயன்படாமல் அழியும் .
பயன்படுத்தப்படாத செல்வம் அல்லது அதிகாரம் ,உரிமை எதுவாக இருந்தாலும்
நாய்க்குக் கிடைத்த முழு தேங்காயைப் போன்று பயனற்று போகும் என்பதைத்தான் மன்னர்
நாய் பெற்ற தெங்கம்பழம் என்று சொல்லியிருக்கிறார் என்றார் .
நாய் தேங்காயைக் கடித்தால் உடைக்க முடியாது, உண்ணவும் முடியாது; ஆனால், அதை உருட்டிக்கொண்டு விளையாடும். அதேபோல, ஒரு கருமி தன் செல்வத்தைத் தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்து வீணாக்குவான்.
சிறந்த வாய்ப்பு சரியான நபரிடம் சேராமல், அதை பயன்படுத்தத் தெரியாதவரிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுவதுதான் நாய் பெற்ற தெங்கம்பழம் போல என்ற பழமொழி.
கொடுக்கப்பட்ட பொற்காசுகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை வசதி படுத்தத் தெரியாதவனாக அந்த விவசாயி இருந்திருக்கிறான். அதற்காகத்தான் மன்னர் அந்தப் பழமொழியைச் சொல்லி கடந்து போயிருக்கிறார் என்று விளக்கமாகக் கூறினார் பெரியவர்.
புரிந்தது போல தலையை ஆட்டியபடி எழுப்பிச் சென்றான் வீரன்.
பயன்படுத்தத் தெரியாதவன் கையில்
அதிகாரத்தைக் கொடுப்பதும்
நாய்க்கு முழு தென்னம்பழம் கொடுப்பதும் ஒன்று. இரண்டும் பயனற்றது.
.
கருத்துகள்
கருத்துரையிடுக