சுருக்கவிழ்ந்த முன்குடுமி சோழியா

சுருக்கவிழ்ந்த முன்குடுமி சோழியா


சுருக்கவிழ்ந்த முன் குடுமி சோழியா

கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.

கோபமிருக்குமிடத்தில்தான் புலமையும் இருக்குமோ?

ஔவை  கோபப்படும் போதுதான்

ஆரையடா சொன்னாயடா

என்று பாடி அனைவரையும்

அதிர்ந்து போக வைத்தார்.

அது தன் புலமையைக் கிண்டலடித்ததால் வந்த கோபம்.

ஆனால் இங்கு ஒரு புலவருக்கு

பசி வந்ததால் கோபம்.

அதனால் தான் என்ன பேசுகிறோம் என்பதையே மறந்து கண்டபடிப்

பேசிவிட்டார்.

ஒருமுறை காளமேகப் புலவர்  கும்பகோணத்திற்குச் 

சென்றிருக்கிறார்.

அங்கு ஒரு திருமண வீடு.

அனைவரும் உணவருந்த வரிசையில் அமர்ந்திருக்கின்றனர்.

காளமேகமும் அமர்ந்திருக்கிறார்.

பக்கத்தில் தலையில் குடுமி வைத்த ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார்.

அனைவர்க்கும் வாழையிலையில்

உணவு பரிமாறப்படுகிறது.

உணவின் மணம் ,பசி இரண்டும்

வயிற்றைக் கிள்ளுகிறது.

சாப்பிட  தொடங்கப் போகும் நேரத்தில் 

பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தவரது குடுமி   அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்துவிட்டது.

அவ்வளவுதான்.

முடி அவிழ்ந்து வீழ்ந்த உணவை  உண்ண

மனம் ஏற்றுக்கொள்ளுமா?

அருவெறுப்பாகிவிட்டது

பசி மயக்கத்தில் இருந்த காளமேகத்திற்கு உணவு கிடைத்தும் உண்ண முடியாமல் உணவு பாழ்பட்டுப் போயிற்றே என்று அடக்கமுடியாக் கோபம்.

கோபத்தில் குடுமி வைத்தவரைப்  பார்த்து கத்த ஆரம்பித்தார்.

காளமேகம்  கோபத்தில் எப்படிக் கத்தியிருப்பார்.

கேட்க ஆசையாக இருக்கிறதல்லவா?

இதோ பாடல் உங்களுக்காக....

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்  சோழியா!  சோற்றுப்

பொருக்குலர்ந்த  வாயா ! புலையா ! – திருக்குடந்தைக்

கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்

போட்டாளே ! வேலையற்றுப்  போய் !

என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.


"முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ,  என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டவனே! உணவை வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளும்படியாக அநாகரிகமாக  உண்டு, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே ! குடந்தை நகரில் வாழும் கோட்டானே அதாவது   ஆந்தையே ! நாயே!, குரங்கே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி ! "என்பது பாடலின் பொருள்.

என்னவொரு கோபம்!

உன்னையும் ஒருத்தி வேலையற்றுப்போய் 

பெத்துப் போட்டிருக்கிறாளே

என்ன வார்த்தை இது?

கோபத்தில் வாய்க்கு வந்த 

படி பேசுவது என்பது இதுதானோ?

பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு புலவரும் வறுமையும் என்று இதுவரை சொல்லிக் கொண்டிருந்தோம்.

இனி பிரிக்க முடியாதது புலவரும் கோபமும் 

என்ற வரியையும் சேர்த்துக்கொள்ளலாமோ?

உண்மைதான்.

பசி வந்தால் கண்ணு மண்ணு தெரியாமல்

கோபமும் வருமோ?

இருக்கலாம்.... இருக்கலாம்.





கருத்துகள்

Popular Posts