பொருள் வளத்தை விஞ்சும் விழுமியங்கள்

பொருள் வளத்தை விஞ்சிய விழுமியங்கள் 


முன்னுரை:

மனித வாழ்க்கை என்பது வெறும் பொருள்களைத் திரட்டுவதற்கான பயணமாக மட்டும் இருக்க முடியாது.மனிதநேயத்தை வளர்த்துக்கொள்வதற்கான இடமாகவும்  இருக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளாதார உயர்வு என மனிதகுலம் இன்று பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அதனால் ஒரு மனிதனிடம் வசதிகள் பெருகுகின்றன .அதே அளவுக்கு மனிதநேயம் இருக்கிறதா?   நல்லொழுக்கம் கடைபிடிக்கப்படுகிறதா??  ஆன்மீகச் சிந்தனை வளர்கிறதா  என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளுக்கான விடையில்தான் மனிதகுலத்தின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.

வசதி வாய்ப்புகளின் 

இருவேறு முகங்கள்:

பணம், பதவி, புகழ், அதிகாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவானவை. இவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றவும், வாழ்க்கையை எளிமையாக்கவும் துணைபுரிவதாக இருக்கலாம்.ஆனால் இத்தகைய வளங்கள் மனிதநேயத்தோடும் அறநெறியோடும் இணைந்திருக்க வேண்டுவது இன்றியமையாத  ஒன்றாகும். அப்படி இல்லையெனில் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளே தீமைக்குத் துணைபோகும் கருவிகளாக மாறிவிடும்.

ஆன்மீகம் என்பது வழிபாடு மட்டுமல்ல:

ஆன்மீகம் என்றதும் கோயில், தேவாலயம், மசூதி, வழிபாடு, சடங்குகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் மசூதி, வழிபாடு, சடங்குகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடக் கூடாது.

ஆன்மீகம் என்பது தன்னைத்தானே உணர்தல்,.பிற உயிர்களின் உணர்வுகளை மதித்தல், அன்பு, இரக்கம், பொறுமை, ஈகை, நேர்மை, மன்னிப்பு ஆகிய உயரிய  விழுமியங்கள்  யாவும் ஆன்மீகத்தில் அடங்கும்..பிறருடைய துன்பத்தைக் கண்டு மனம் இரங்குவதும், நம்மிடம் இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்துகொள்வதும், அதிகாரம் இருந்தும் அடக்கத்துடன் நடந்துகொள்வதும் ஆன்மீகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும்.பொருள் வளம் மனிதனுக்கு வெளிப்புற அழகைக் கொடுக்கிறது. ஆன்ம வளம் அவனுக்கு அக அழகைக் கொடுக்கிறது. வெளிப்புற அழகு பாராட்டுகளைப் பெற்றுத் தரலாம்; அக அழகு   மனிதர்களிடம் அன்பைப் பெற்றுத்தரும்.

விழுமியங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு என்பது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.

அறிவியல் வளர்ச்சியும்  சமூகப் பொறுப்பும்:

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு, இணையம், மருத்துவத் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.. இவை மனிதகுலத்திற்குப் பெரும் வரப்பிரசாதங்கள். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் மனிதனிடம் பொறுப்புணர்வு இல்லாவிட்டால், அதே தொழில்நுட்பம் தவறான தகவல்களைப் பரப்பவும், மனிதர்களைப் பிரிக்கவும், தனிமனித உரிமைகளைப் பாதிக்கவும் வழிவகுக்கும்.

எடுத்துக்காட்டாக மருத்துவம் வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டால் அதன் அடிப்படை நோக்கமே சிதைந்துவிடும்.எனவே, அறிவியல் வளர்ச்சியுடன் அறநெறி வளர்ச்சியும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டிருக்க வேண்டியது அவசிமாகிறது.

அறத்தால் வருவதே இன்பம்:

காந்தியடிகள் மனிதநேயமற்ற அறிவியல் ஆபத்தானது  என்பார்.அறிவியல் மனிதனின் வாழ்க்கையை உயர்த்த வேண்டுமே தவிர மனிதனின் மாண்பைக் குறைக்கக் கூடாது. செல்வம் சேர்ப்பது தவறல்ல. ஆனால் அந்தச் செல்வம் அறத்தின் வழியில் ஈட்டப்பட்டதாகவும் சமூக நலனுக்குப் பயன்படுவதாகவும் இருக்க வேண்டும். 

.அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல."

என்பார் வள்ளுவர் .அறத்தின் வழியாகக் கிடைக்கும் இன்பமே உண்மையான இன்பம் என்பதை இக்குறள் தெளிவாக உணர்த்துகிறது. அப்படிப்பட்ட அறம் சார்ந்த  நற்பண்புகள் ஒருவர்க்கு வருவதற்கு கடவுள் பற்றிய சிந்தனை காரணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பண்பாடும் நாகரிகமும்:

ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் உயரமான கட்டடங்களைக் கொண்டோ பொருளாதாரத்தின் அளவைக் கொண்டோ மட்டும் மதிப்பிட முடியாது.அந்த நாட்டில் ஏழைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது? முதியவர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? குழந்தைகளுக்கு எத்தகைய எதிர்காலம் உருவாக்கப்படுகிறது? இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது போன்ற எல்லாக் கோணங்களில் இருந்தும் ஆராயப்பட்டு  மதிப்பீடு செய்யப்பட வேண்டும் பொருள் வளம் என்பது ஒரு நாட்டின் வெளிப்புற வளர்ச்சி. ஆன்ம வளம் என்பது அதன் உள்மன வளர்ச்சி.

இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தால் மட்டுமே உண்மையான நாகரிகம் உருவாகும்.பண்பாடு மலரும்.

அர்த்தமுள்ள ஆன்ம வளம்:

பொருள் வளம் வாழ்க்கையை வசதியாக்கலாம் ஆன்ம வளம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

செல்வம் உயரும்போது செருக்கு உயரக்கூடாது; அதிகாரம் உயரும்போது அடக்கம் குறையக்கூடாது.

அறிவியல் மனிதனின் கைகளுக்கு வலிமை தருகிறது; ஆன்மீகம் அந்த வலிமைக்கு நல்ல திசையைக் காட்டுகிறது. ஒருவரிடம் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பது அவருடைய வசதியைச் சொல்லும். அவனிடம் எவ்வளவு மனிதநேயம் இருக்கிறது என்பதுதான் அவருடைய உயர்வைச் சொல்லும்.பொருள் வளம் பெருகுவது முன்னேற்றம். ஆன்ம வளம் பெருகுவது பண்பாட்டு வளர்ச்சி. 

விழுமியங்கள் என்பது ஆன்மீகத்தின் பயிற்சிக் களம்.

ஆன்மீகம் என்பது விழுமியங்களின் உயிர் நாடி.

முடிவுரை:

"மனிதன் பொருள்களை ஆளக் கற்றுக்கொண்டால் மட்டும்  போதாது.

அனைத்து மனங்களையும் ஆளக்கூடிய அறம் சார்ந்த செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். பொருள் வளத்தை விஞ்சி நாட்டில்  அறம் நடக்க வேண்டும்.பொருளைத் தேடும் கைகள், விழுமியங்களைக் காக்கும் மனதோடும், ஆன்மீகத்தை உணரும் உள்ளத்தோடும் இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையான வாழ்க்கையாக இருக்கும்.




கருத்துகள்

Popular Posts