உடன்போக்கு

 இலக்கியத்தில் உடன்போக்கு


அன்றொருநாள்....
அதிகாலை வேளை.... கதிரவன் செம்முகம்
காட்டித் தன் சிரிப்பலையைச்  சிந்திவிட
சோம்பல் முறித்துப் படுக்கையிலிருந்து
எழுந்தாள் செவிலித்தாய்.
கண்கள் அருகில் படுத்திருந்த
 அழகு மகளைத் தேட... அதிர்ச்சியுற்றாள்.
 படுக்கை அப்படியே விரிந்து கிடக்க...
 அறை  பதுமை இல்லாது  வெறுமையாய்க் 
 கிடந்தது.
 அக்கம்பக்கம் தேடினாள்.
அண்டை அயலாரிடம்  போய்
கேட்டுப் பார்த்தாள். எல்லோரும் கையை விரித்தனர்.
அங்குமிங்கும் ஓடினாள்....
எங்கேயும் மகளைக் காணவில்லை.
இப்போது முகத்தில் கூடுதலாக ஒரு கலக்கம்
வந்து அப்பிக் கொண்டது.
....
என்ன செய்வேன்? 
அவள் அன்னைக்கு யாதுரைப்பேன் ?
கலங்கிப்போனாள்...கலக்கத்தில்
மனம் குழப்பமடையலானாள்.
குழப்பத்தில் கூடுதலாக என்னென்ன 
எண்ணமெல்லாமோ வந்து எட்டிப் பார்த்தது.

அவனோடு ஓடி இருப்பாளோ...?
ஒருவேளை அப்படி செய்திருந்தால்...
என்ற ஐயம் வந்து தொற்றிக் கொள்ள
காண்போரிடம் எல்லாம் என் செல்வம்
யாருடனும் செல்வதைக் 
கண்டீரோ என வெளிப்படையாகவே
விசாரிக்க ஆரம்பித்தாள்.

ஆளாளுக்கு உதட்டைப் பிதுக்கிவிட்டுச்
சென்றனர்.
இனி எங்கு தேடுவது? யாரிடம்
போய் கேட்பது?

எந்த தகவலும் கிடைக்கலியே!
வியர்க்க விறுவிறுக்க 
கால் போன போக்கில் நடந்தாள்.
அப்போது எதிரே முதியவர் ஒருவர்
வருவதைக் கண்டாள்.

அவராவது தன் மகளைப் பார்த்தேன்
என்று சொல்லிவிட மாட்டாரா?
என்ற ஏக்கத்தில் அவரையே பார்த்துக்
கொண்டு நின்றாள்.

அவள் கண்களில் ஒரு தாயின்
பரிதவிப்பு தெரிந்தது.

"என்னம்மா எதையாவது தொலைத்துவிட்டாயா?"
வலிய வந்து கேட்டார் பெரியவர்.

"எதைத் தொலைத்தேன் என்று
சொல்வது? என் குலக்கொழுந்தைத்
தொலைத்துவிட்டு நிற்கிறேன் என்று
சொல்வதா?என் குடும்ப மானத்தைத்
தொலைத்துவிட்டேன் என்று சொல்வதா?
எதைச் சொல்வது?"
சற்று நேரம் வாயில் வார்த்தை வராது
மௌனியாக நின்றாள்.

"அம்மா உங்களைத்தான்....
யாரைத் தேடுகிறீர்கள் ?"

"என் அருமை மகளைத் தொலைத்துவிட்டேன்
ஐயா....
என் மகள் பிறள் மகன்
ஒருவனோடு செல்லக் கண்டீரோ ?"
எனக் குற்ற உணர்வோடு கேட்டாள் செவிலி.

சிரித்துக் கொண்டார் பெரியவர்.

"என் பரிதவிப்பு தங்களுக்கு 
நகைப்பைத் தருகிறதோ?"

"நகைப்பதைத் தவிர வேறென்ன 
தந்துவிட முடியும் என நினைக்கிறாய்?
பார்த்தேன் என்றால் எங்கே பார்த்தீர்? 
எப்போது பார்த்தீர் ? 
ஆண்மகனோடு சென்றாளா என்று
ஆயிரம் கேள்வி கேட்பாய்."

"அதைத்தானே நான் கேட்கிறேன்? 
அவள் ஒரு ஆண்மகனோடு சென்றதை
நீர் பார்த்தீரோ? "

"உன் மகள் தனியாகப் போகவில்லை.
தனக்குப் பிடித்த கட்டழகு நாயகனோடு 
களிப்போடு
போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
போதுமா..."என்றார் பெரியவர்.

"ஐயோ... அவள் என்னை மறந்து
இன்னொருவனோடு மகிழ்ச்சியாக
சென்று கொண்டிருக்கிறாளா?"

"இதில் என்ன தவறு இருக்கிறது?
அவள் தனக்குப் பிடித்த
ஆண்மகனோடுதானே சென்றிருக்கிறாள்."

"ஒரு தாயின் பரிதவிப்பு உங்களுக்குப்
புரியவில்லையா? "

"புரிகிறது....நன்றாகப் புரிகிறது."

"புரிந்துமா வேடிக்கை செய்கிறீர்?"

"நான் வேடிக்கை செய்யவில்லை.
உன் கேள்விகள்தான் வேடிக்கையாக
இருக்கின்றன."

"அப்படி என்ன வேடிக்கையான
கேள்விகள் கேட்டுவிட்டேன்?"

"அன்னையே! நான் சொல்வதைச் சற்று
செவிமடுத்துக் கேட்பீரோ?"

"சொல்லுங்கள் கேட்கிறேன் "

"சந்தனமரம் மலையில் வளர்கிறது.
ஆனால் சந்தனத்தைப் பூசிக் 
கொள்பவர்களுக்குப் பயன்படுமே தவிர 
மலைக்கு அதனால் ஏதாவது பயன் உண்டோ? "

"இல்லை..."

" நினைக்குங்கால் நின்மகளும் நினக்கு 
ஆங்கு அனையளே !

முத்து கடலில் பிறக்கிறது.
முத்தை எடுத்து அணிந்து அழகு
பார்ப்பவர்களுக்குத்தான் அதனால்
அழகு கிடைக்குமே தவிர
கடலுக்கு அதனால் எந்த 
அழகும் கிடைத்துவிடக் கூடுமோ?"

"அது எப்படி கிடைக்கும் ?"

"நினைக்குங்கால் நின்மகளும் நினக்கு 
ஆங்கு அனையளே!

யாழிலிருந்து இசை பிறக்கிறது. 
யாழை மீட்டி இசைத்து இன்பம்
காண்பவருக்கு மட்டும் அல்லாமல்
யாழுக்கு அதனால் ஏதேனும்
இன்பம் கிடைத்திடுமோ?"

"இசை இன்பத்தை நுகரத் தெரியாதிருந்தால்
யாருக்குப் பயன்படப் போகிறது?"

நினைக்குங்கால் நின்மகளும் 
நினக்கு ஆங்கு அனையளே !

"தாயே!  உன் மகள் இன்பத்தையும்
மகிழ்ச்சியையும் பெறுவதற்குத்தான்
சென்றிருக்கிறாள்.
கலக்கம் வேண்டாம்.
பிள்ளைகளை வாழ்த்தி
அனுப்பி வைப்பதுதான் பெற்றோரின்
கடமை. 
அதுதான் தர்மம் "
என்று சொல்லி 
செவிலியைச் சமாதானப்படுத்தி 
வீட்டிற்கு அனுப்பி 
வைத்தார் முதியவர்.

இவ்வளவு அருமையான விளக்கம்
தந்து அனுப்பிய முதியவர் யாராக
இருப்பார்?

இப்பாடலைப் பாடிய பெருங்கடுங்கோ
அன்றி வேறு யாராக இருக்க
முடியும்?

பெருங்கடுங்கோ 
அறிவுரை வழங்கிய
பாடல் இதோ: 

பலவுறு நறுஞ்சாந்தம் 
படுப்பவர்க்கு  அல்லதை
மலையுளே பிறப்பினும்  
மலைக்கவைதாம்  என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள்
நுமக்குமாங்கு அனையளே !
 
சீர்கெழு வெண்முத்தம் 
அணிபவர்க்கு  அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு 
அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள்
நுமக்குமாங்கு  அனையளே !

ஏழ்புணர் இன்னிசை 
முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழுக்கு 
அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் 
நுமக்குமாங்கு அனையளே !

                  _  கலித்தொகை -8

வளரும் வரை சந்தனம்
மலைக்குச் சொந்தம்.

விளையும்வரை முத்து
கடலுக்குச் சொந்தம்.

மீட்டும்வரை இசை
யாழுக்குச் சொந்தம்.

பருவம் எய்தும்வரை மகள்
தாய் வீட்டிற்குச் சொந்தம்.

அதன்பின்னர் அவள் தன் அன்பிற்கு
உரியவனுக்கு மட்டுமே சொந்தம்.

எதார்த்த நிலையை எளிமையாகப்
படம்பிடித்துக் காட்டிய அருமையான
பாடல்.

"கற்றறிந்தார் ஏத்தும் கலி "
என்று கலித்தொகையைப் புகழ்வது 
இதனால்தானோ!













Comments

  1. வாழ்வின் யதார்த்த நிலையை காட்டும் பாடல்.உங்கள் விளக்கம் பாடலை இன்னும் எளி மைப்படுத்தி விடுகிறது.நன்றி


    ReplyDelete
  2. மிக எளிய முறையில் விளக்கம் தந்து வாழ்க்கை தத்துவத்தை பாடல் மூலம் எடுத்துரைத்தது மிக அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. She made the poem very realistic by her simple explanation. She is encouraging others to know the Tamil literature through her articles. Best Wishes for her work. Excellent writer and orator too.

    ReplyDelete

Post a Comment

Popular Posts