கண்ணதாசன் ஒரு காலக்கணிதம்

 கண்ணதாசன் ஒரு காலக்கணிதம்

காலத்தை வென்ற கவிதைகளுக்கு
என்றென்றும் நம் இதயத்தில் நிரந்தர
இடமுண்டு.
கண்ணதாசனின் அனைத்து 
கவிதைகளுமே காலத்தை வென்றவைதான்
என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து
இருக்க முடியாது.
சில கவிதைகள் நம்மோடு நடக்கும்.
சில கவிதைகள் பேசும்.
சில கவிதைகள் சிந்தனையைத்
தூண்டும்.
எண்ணவோட்டத்தில் இடைவிடாது வந்து
இடையூறு செய்யும்.
எழும்பி ஓட வைக்கும்.
இதுதான் கவிதைக்கான உண்மையான
ஆற்றல்.
ஈடுபாட்டோடு படிப்போர் அனைவரும்
இந்த அனுபவங்களைக் கடந்துதான்
வந்திருப்பர்.
அப்படி எனக்குள் திரும்பத்திரும்ப
ஏதோ ஓர் உணர்வைத் தூண்டி
வாசிக்க வைத்த கண்ணதாசனின்
கவிதைகளுள் ஒன்று
" கவிஞன் யானோர் காலக் கணிதம்."
என்ற பாடல்.

இந்தக் கவிதையில் கண்ணதாசன் தன்னை எப்படி 
அறிமுகப்படுத்திருக்கிறார் பாருங்கள்.!

கவிஞன் யானோர் காலக் கணிதம்.
இல்லை...இல்லை...அவர் தன்னைக்
காலக்கணிதமாகவே உருவகப்படுத்தி
இருக்கிறார்.

காலத்தைக் கணிப்பவர் யார்?
கவிஞராகிய யான்.
எவ்வளவு திடமான நம்பிக்கை.

மனதில் பட்டதைப் பட்டென்று
சொல்லும் பண்பு கொண்டவர்
கண்ணதாசன்.
உள்ளதை உள்ளவாறு சொல்லுவார்.
தன்னைப்பற்றிய குறைகளையும்
ஒத்துக் கொள்ள தயங்க மாட்டார்.
தனக்குச் சரி என்று பட்டதை 
சரி என்று உரைப்பார்.
யாருக்காகவும் எதற்காகவும்
வளைந்து கொடுக்கும் பண்பு இல்லை.
அவரைப்பற்றி அவரே சொல்கிறார்
கேளுங்கள்.


கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் நானுமே அறிந்தவை அறிக

செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்

பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுங்கள் தீர்ப்பு

கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்

மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை

தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்.

                       -  கவிஞர் கண்ணதாசன்
                       -  
எளிய நடை ,உயர்ந்த கருத்து,
உயர்வான தத்துவம் பொதிந்த
அருமையான கவிதை.

"கவிஞன் யானோர் காலக் கணிதம்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்"
தன்னை எப்படியெல்லாம் உருவகப்படுத்தி
இருக்கிறார் பாருங்கள்.
புவியில் நானொரு புகழுடை
தெய்வம்.
நான்தான் தெய்வம் என்று சொல்ல
யாருக்குத் துணிச்சல் வரும்?
இத்துணைத் துணிச்சல் எதனால் வந்தது ?

ஆக்கல்,அளித்தல்,அழித்தல்
ஆகிய முத்தொழிலும் செய்ய
என்னால் கூடும்.
இறைவனும் இந்த முத்தொழிலும்
செய்பவர்.
நானும் அதே தொழில்களைச் செய்பவன்.
அதனால் நானும் இறைவன்தான் என்கிறார்.


அணியில்லா கவிதை
மணியில்லா மாலை போன்றது.
அதில் அழகிருக்காது.
அணிவதில் நலமிருக்காது.
அதனால் உருவக அணி ஏற்றி
கவிதையை மெருகூட்டியிருக்கிறார்.

வார்த்தைகளைக்
கட்டமைத்தப் பாங்கு,
தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை,
சுயமரியாதை யாவற்றையும் இந்த
ஒற்றைக் கவிதை
சுமந்து நிற்கிறது.
கண்ணதாசன் யார் என்பதை அடையாளப்படுத்திய
கவிதை.

போற்றுவார் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்
என்பதை வார்த்தைகள் மாற்றி
கொள்வோர் கொள்க 
குரைப்போர் குரைக்க

என்று சாதாரணமாகச் சொல்லி 
கடந்து போய்விட்டார்.

மாறாதிருக்க நானோரு மரமா ?
விலங்கா? என கேள்வி 
கேட்டு,
மாற்றம் ஒன்றே மானிடத் தத்துவம்
என்று நமக்கோர் செய்தி
சொல்லி நகர்ந்துபோன விதம்
நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
சிந்தனையில் ஒரு கிளர்ச்சியை
ஏற்படுத்துகிறது.

"உள்வாய் வார்த்தை
உடம்பு தொடாதாம்"
எவ்வளவு அருமையான தத்துவத்தைச்
சொல்லி முடித்துக் கொண்டார் பாருங்கள்!

உலகம் பற்றிய தனது
கண்ணோட்டத்தை
 ஒற்றைக் கவிதையில்
கற்றையாய்ச் சொல்லிச் சென்ற 
கண்ணதாசன் ஒரு காலக்கணிதம்
என்பதில் மாற்றுக் கருத்து
இருக்கவா போகிறது?

நானே தொடக்கம் நானே முடிவு.
ஆதியும் அந்தமும் நான்தான்.
என்னவொரு அழுத்தமான
செய்தியை எளிதாகச் சொல்லிக்
கடந்து போய்விட்டார்.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது
இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
நான் இவை எல்லாவற்றையும் கடந்தவன்.
யாரால் இவை எல்லாவற்றையும் எளிதாக
எடுத்துக் கொள்ள முடியும் ?
நான் காலத்தைக் கணிக்கும் காலக்கணிதன்.என்னால் கூடும்
என்று தான் கடவுள் என்பதற்கு
ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார் .
கண்ணதாசன்.
அருமையான கவிதை இல்லையா?



Comments

  1. கண்ணதாசன் பாடல்களுக்கு விளக்கம் தேவை இல்லை.எளிமையான சொற்கள். அருமையான கருத்துக்கள்.பாடலுக்கு நன்றி tr

    ReplyDelete

Post a Comment

Popular Posts