கனவிலும் இன்னாது மன்னோ...


கனவிலும் இன்னாது மன்னோ....


"கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு"
                              குறள்  : 819

கனவிலும் - கனாவின் கண்ணும்
இன்னாது - தீமை தருவது
மன்னோ -  ( அசைநிலையாக வந்துள்ளது)
வினை - செய்கை
வேறு - பிறிது
சொல் வேறு - சொல்லும் சொல் பிறிது
பட்டார் - அப்படிப்பட்டவர்
தொடர்பு - நட்பு

பேசும் பேச்சும் செய்யும் செயலும்
வேறுவேறாக உள்ளவரோடு கொண்டிருக்கும்
நட்பு கனவிலும் துன்பம் 
கொடுப்பதாகவே இருக்கும்.


விளக்கம் :

சொல் வேறு ; செயல் வேறு என்று
மாறுபட்ட மனநிலையோடு செயல்படும்
ஒருவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். 
அப்படிப்பட்டோர் நட்பு எந்த நேரத்திலும்
தீமை தருவதாகவே இருக்கும்

சிலர் நம்மிடம் தேனொழுகப் பேசுவர்.
செயலில் நேர்மை இருக்காது.
அவர்கள் செய்யும் செயல்கள் அவர்கள்மீது
நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைக்
குலைப்பதாகவே இருக்கும்.

தமக்குச் சாதகமானதை முடித்துக்
கொள்வதற்காக எந்த நிலையிலும்
கீழிறங்கி செயல்படத் தயங்க மாட்டார்கள்.
பிறழ் நாக்கு உடையோர் தொடர்பு
கூடவே கூடாது.
அவர்கள் சொல்லும் செயலும் திட்டமிட்டு
நடத்தப்படும் ஒரு நாடகமாக இருக்கும்.

பேச்சும் செயலும் ஒன்றுபோல்
இருக்க வேண்டும். இது நல்லவர்களுக்கு
மட்டுமே வாய்த்திருக்கும் குணம்.

வஞ்சகர்களிடம் அதை நாம் எதிர்பார்க்க
முடியாது. 

நனவில் துன்பம் தருவது இயல்பு.
கனவிலும் துன்பம் தருவதாக இருக்கும்
என்று சொல்லப்பட்டுள்ளதால் தூங்கவிடாமல்
துரத்தும் .தூக்கத்திலும் துரத்தித்
துரத்தித் துன்பம் தரும்.
ஆதலால் அப்படிப்பட்டவர்களை அடையாளம்
கண்டு விலகி இருங்கள்
 என்கிறார் வள்ளுவர்.

இதைத்தான் இராமலிங்க அடிகளார்,

" உள்ளொன்று வைத்துப் புறமொன்று
 பேசுவார் உறவு கலவாமை வேண்டும்."
 என்கிறார்.

English couplet :

"E'en in a dream the intercourse is bitterness with men
whose deeds are  other than their profess"

Explanation :

The friendship of those whose actions do not
agree with their words  will distress one
even in one's dreams.

Transliteration :

"Kanavilum Innaadhu manno vinaiveru
solveru pattaar thoarpu "

Comments

  1. முற்றிலும் உண்மை. நமக்கு சாதகமாகப் பேசி நடிக்கும் நபர்களை விட்டு விலகுவது தான் நலம் பயக்கும்.அருமையான பதிவு.

    ReplyDelete
  2. Very good truth is revealed in this Kural. The human nature is pictured in this particular poem. The main idea of this kural is well explained by the writer and introduced one other poem by another author quoted is really made this article interesting.

    ReplyDelete

Post a Comment

Popular Posts