கல்வி அழகு

               கல்வி அழகு

ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப்
பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச்
செல்வமாகும்.
கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால்
வாழ்நாள் முழுவதும் கூடவே வரும்.
என்னிடம் நிறைய கல்வி இருக்கிறது.
 யாராவது களவாடி சென்று விடுவார்களோ ?
 அச்சமே வேண்டாம்.
 விலைமதிப்பற்ற பொருளைக் கூடவே
 வைத்துக் கொண்டு கவலை இல்லாமல்
 நிம்மதியாகத் தூங்கலாம்.
 
 ஐயோ பெருமழை வந்துவிட்டதே....
வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ ?
அஞ்ச வேண்டாம்.
அக்கம்பக்கத்தில் தீவிபத்து ஏற்பட்டு
விட்டதே . என் கல்வி எரிந்து சாம்பலாகிவிடுமோ?

நினைத்து நினைத்து வெதும்பிக் 
கிடக்க வேண்டாம்.
எப்போது நான் உங்களுடையவள்
ஆகிவிட்டேனோ
இனி எப்போதும் உங்களுடையவள்தான்.
எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து
என்னைப் பிரிக்க முடியாது .
பிரிக்க முடியாத
பந்தம் உங்களுக்கும் எனக்கும் உண்டு
என்கிறது கல்வி.


இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர்

"வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்ளர்க்கோ மிக அரிது
காவலோ மிக எளிது
கல்வி என்னும் உள்ளத்தே
பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உமல்வதேனோ !"

என்று கூறுகிறார்.


கல்விதாங்க செல்வம் என்று விவேக சிந்தாமணி 
சொல்ல....
இல்லை...இல்லை...இல்லை...
செல்வம்மட்டுமல்ல...உங்களுக்கு
அழகைத் தருவதும் நாங்கதாங்க 
என்கிறதாம் கல்வி. 

இதைத்தான் நாலடியார்,


"குஞ்சியகுங் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல _ நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்
கல்வியழகே அழகு "
                         
கூந்தல் அழகும் ஆடை அலங்கார அழகும்
மஞ்சள் பூசிய முக அழகும்
அழகு என்று நினைத்துவிடாதீர்கள்.
பல நூல்களை கற்றுப் பெற்ற 
கல்விதாங்க இவை எல்லாவற்றைவிடவும்
அழகு என்று ஆணித்தரமாகக்
கூறுகிறார் நாலடியார்.

நாலடியாரின் கருத்துக்கு வலுசேர்க்கிறார்
சிறுபஞ்சமூல ஆசிரியர் காரியாசான்.

அழகுக்கு அழகு சேர்ப்பது கல்வி
என்பதை வழிமொழிவதாக வந்த
சிறுபஞ்சமூலம் பாடல் இதோ:


"மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்_செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு "
                                       _  சிறுபஞ்சமூலம்

முடியழகு, முன்னழகு, நக அழகு,
காதின் அழகு, தெற்றில்லாப் பல்லழகு
இவை யாவும் அழகல்ல.நல்ல நூற்களைப்
படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதுதான் உண்மையான அழகு.
உச்சந்தலையில் உரைக்கும்படியாக
உரக்கக் கூறிவிட்டார்.
                                       

நீங்கள் மட்டும் வழிமொழிந்தால் போதுமா..?
நானும் வழிமொழிகிறேன் என்கிறார்
ஏலாதி ஆசிரியர் கணிமேதாவியார்.
கல்வியைப் பாடுவதில் எவ்வளவு போட்டா
போட்டி பாருங்கள்.

அழகைச் சுற்றிதான் உலகமே இயங்கிக் 
கொண்டிருக்கிறது.
இன்றைய தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும்
வளர்ச்சி... கல்வியால் மட்டுமே சாத்தியமாகியது.
இடைவனப்பும் தோள் வனப்பும்
நடைவனப்பும்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல...
எண்ணோடு எழுத்தும் கற்று 
அதனால் வரும் வனப்பே 
வனப்பு என்கிறது ஏலாதி.

"இடை வனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின்வனப்பும் _ படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு "

கல்விதான் அழகு .மாற்றுக் கருத்து
இல்லை. கல்விதான் செல்வம்.
அதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

நீங்க என்னதான் சொன்னாலும் கல்வி
மட்டுமே எல்லாச் செல்வங்களிலும்
உயர்ந்தது என்று தனது ஆணித்தரமான
கருத்தைச் சொல்லிவிட்டு கடந்து
சென்றுவிட்டார் இன்னொருவர்.
                              
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்ற பிற "

என்று உலகின் முதன்மையான 
செல்வமே கல்விதான்
என்கிறார் வள்ளுவர்.

"எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர் "

ஆதலால் கல்வி கற்போம் என
அறிவுரை சொல்லும்
புலவர்கள் ஏராளம்.... ஏராளம்!
கல்விக்காக நேரத்தைச் செலவிடுவோம்
தாராளம் !தாராளம்!

"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"



Comments

  1. The article on the topic 'Education is the real beauty' is very beautifully described by the writer Mrs. Selvabai. Her vast knowledge is expressed by the supporting poets and their poems on education. Very good.

    ReplyDelete
  2. கல்வி அழகை எடுத்துக்காட்டுகள் பல தந்து பதிவிட்டது மிகச் சிறப்பு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts