கோயபல்ஸ்
கோயபல்ஸ்
"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் "
அதாவது நன்மை தரும் என்றால்
பொய்யும் வாய்மையாகவே
கருதப்படும்
என்கிறார் வள்ளுவர்.
யாருக்கு நன்மை பயக்கும்
என்பதெல்லாம் அடுத்தக்கட்ட
விவாதம்.
வள்ளுவரே பொய் சொல்லலாம்
என்று சொல்லிவிட்டார்?
அப்படியானால் என்ன?
நாளும் நாலு பொய் சொல்லிவிட்டு
வள்ளுவரைக் கூட்டி வந்து
வக்காலாத்து வாங்க வைத்துவிடலாம்
என்று மனம் கும்மாளம்
போடுகிறது.
சும்மாவே பச்சைக் காக்கா பறக்குது
என்போம். இனி என்ன... பச்சைபச்சையாகப் பொய்யை அவிழ்த்துவிட
வேண்டியதுதான் என்று
ஒரு மனக்கணக்கு
ஓடுகிறது.
அப்படியானால்.... அப்படியானால்...
"பொய் சொல்லக்கூடாது பாப்பா"
என்று பாரதி சொல்லியது
எல்லாம் சும்மாவா?
"நெஞ்சார பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம் "
என்று சொல்லித் தந்தது
சும்மா ஒரு பேச்சுக்குத்தானா?
மனம் குறுக்கும் நெடுக்குமாக
கேள்விகளைப் போட்டு
முட்டி மோத வைக்கிறது.
பொய் சொல்வது பாவம்.
இப்படித்தான் நினைத்துக்
கொண்டிருந்தோம்.
"பொய் சொல்லக்கூடாது.
பொய் சொன்னால் சாமி
கண்ணைக் குத்தும்"
என்று பொய் சொல்லக்கூடாது
என்பதைச சொல்லித் தரும்போதுகூட
பொய்யைச் சொல்லித்தான்
கற்றுத் தந்திருக்கிறார்கள்
என்று அறியும் போது பொய்யை
நம்மைவிட்டு பிரித்துப் பார்க்க
முடியாமல் போய் விடுகிறது.
ஆனாலும் பொய் என்றதும்
நமக்குள் ஒரு வெறுப்பு.
இப்படி வெறுக்கும் ஒன்றை மனம்
ஏற்கவா போகிறது?
அதற்காக பொய் சொல்லாமலேயேயா
இருந்துவிட முடியும்.?
அப்பப்போ ஓரிரு பொய்யைப்
சொல்லித்தான் சமாளிக்க
வேண்டியதிருக்கிறது.
மனசாட்சி என்னவோ
பெரிய அரிச்சந்திரன் போல
குத்திக்காட்டி குடைச்சல்
கொடுத்துக்கொண்டே
இருக்கும்.
"இந்த மனசாட்சி நமக்கு மட்டும்தான்
குடைச்சல் கொடுக்குமா?
பொய்யை தொழிலாகக்கொண்டவருக்கு
மனசாட்சி கிடையாதா?"
"எங்கள் ஊரில் ஒருவர் மனசாட்சியே இல்லாமல் கோயபல்ஸ் என்ற நினைப்பில் பொய் சொல்லிக் கொண்டே திரிகிறார்.
அவரை யார் கேள்வி கேட்பது?"
"என்ன கோயபல்ஸ் என்ற நினைப்பிலா?
என்ன புது கதையெல்லாம் விடுறீங்க?
வெளிநாட்டுப் பெயரெல்லாம் சொன்னால்
நாங்கள் கேள்வி கேட்டு விடாமல் விட்டு
விடுவோம் என்ற நினைப்பா? யார் அந்த கோயபல்ஸ் சொல்லிட்டு போங்க" என்று
துரத்துகிறாள் என் தங்கை.
"விட்டு விடு. உனக்கு
கோயபல்ஸ் யாரு என்றுதானே தெரியணும்.
நம்ம ஊரு பொய்யாங்கண்ணன்
மாதிரி ஜெர்மனி நாட்டுப் பொய்யாங்கண்ணன்"
"பொய்யாங்கண்ணனா...அப்போ அரசியல்வாதியாகத்தான்
இருப்பார் இல்லையா?"
எப்படி சரியாக கண்டுபிடித்தாய்.?
"நாங்களும் துப்பறியும் புலியில்ல..."
போதும்...போதும் நிறுத்து.
நீ ...எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி.
பொய் பேசுவான்
ஆனால் பொய்யன் அல்ல.
மெய் உரையான்
அவ்வளவுதான்.
மேதகு பொய் பொதி மெய்யன்.
பெருமதியன்.
ஹிட்லரின் வலது கை."
"யாரு ஹிட்லரின் வலது கையா ?
என்ன குழப்பத்திற்கு மேல்
குழப்பமாக இருக்கிறதே?"
கோயபல்ஸ் ஒரு பொய்யர்
பொய்யை மெய்போலப் பேசி
நம்மை மதிமயங்கி நம்ப
வைத்து விடுவார். நாமும்
உண்மைதான் பேசுகிறார் என்று
கைகட்டி வாய்பொத்தி நிற்போம்.
ஆனால் அது பொய் என்பது
தெரியாமலே போய்விடும்
மகுடிக்கு மயங்கி ஆடும் பாம்பு போல
அவர் பேச்சைக் கேட்டு ஆடுவோம்.
காலம் எல்லாவற்றிற்கும்
விடையைக் கையில் வைத்துக் காத்துக்
கொண்டிருக்கும்....
இந்தப் பொய்யனின் சாயமும் வெளுக்காமலா போயிருக்கும்."
"யாரவர் விளக்கமாகச் சொல்லுங்கள். "
வேறு யாருமில்லை... எல்லாம் நம்ம
ஹிட்லரின் நாஜி கட்சியின்
கொள்கைப் பரப்பு செயலாளர் தான்
இந்த கோயபல்ஸ்.
நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.
அவருடைய பேச்சு எதிரே இருப்பவரை அப்படியே கட்டிப்
போட்டு விடும்.
எதிர்த்து அப்படியா என்று
கேட்க இடமளிக்காது.
ஆமாம்...ஆமாம் அவர் சொல்வதுதான்
உண்மை என்று நம்ப வைக்கும்.
ஆனால் அவர் சொல்வதெல்லாம்
பொய்யாகத்தான்
இருக்கும்.
முழு பூசனிக்காயைச் சோற்றில்
அப்படியே அமுக்கி விடுவார்.
பார்வையாளர்களை உளவியல் ரீதியாக
கட்டிப்போடும் வல்லமை அவர் பேச்சில்
இருந்தது.
ஜெர்மனி மக்களாகட்டும்
ராணுவ வீரர்களாகட்டும் அவர்
சொல்வதை அப்படியே
நம்பிவிடுவார்கள்.
அந்த அளவுக்கு பொய்யை
தேன்கலந்து கொடுத்து
மதிமயங்க வைத்திருந்தார்
இந்த நாஜி கட்சியின் கொள்கை பரப்புச்
செயலாளர்.
இவரது தேசிய சோசலிசத்தின்
பத்து கட்டளைகள் அந்தக் கட்சியின்
கருத்தியலுக்கு
வலு சேர்ப்பதாக அமைந்தது.
இவரால் தான் ஹிட்லர்
நம் நன்மைக்காகத்தான் எல்லாம் செய்கிறார்
என்று மக்கள் நம்பினர்.
அந்த அளவுக்கு மக்களை
தனது பொய் பேச்சால்
மயங்கி வைத்திருந்தார் கோயபல்ஸ்.
ஒரு பொய்யை மறுபடியும் மறுபடியும்
சொன்னால் உண்மை என்று உலகம்
நம்பத்தானே செய்யும்.
அப்படி செய்து பெயர் வாங்கியவர்தான்
கோயபல்ஸ்.
அதனால்தான் அரசியலில்
பொய் பேசுபவர்களை
கோயபல்ஸ் என்று அழைக்கின்றனர்.
ஓஹோ...நான் கேட்டிருக்கிறேன்...
கேட்டிருக்கிறேன்.
அந்தக் கோயபல்ஸ்
ஹிட்லரின் கோயபல்ஸ்சா...
கோயப்பஸ் பொய் இதுதானா?
சரியாக புரிந்து கொண்டீர்கள்
தற்காலத்தில் கோயபல்ஸ்கள்
நிறைய உண்டு .
அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள்.
ஏன்...எதற்கு...எப்படி
என்று ஆயிரம் கேள்வி கேட்டு
உண்மை அறிந்து
உள்ளம் சொல்வதற்கு ஏற்ப முடிவெடுங்கள்..... வரட்டா...
கட்டுரை மிக அருமை. கோயபல்ஸ் போன்றோரை கண்டுகொண்டு செயல்பட்டாலே போதுமானது.
ReplyDelete