தாயுமானாள்

தாயுமானாள்

வெகு நேரமாகியும் 
ஆட்டுக்குட்டியைக் 
காணவில்லை.

டேய்...
குட்டி எங்கடா...கேட்டாள்
செல்லம்மா.

செல்லம்மாவின் கேள்வியைப்
புரிந்துகொண்ட ஆடுகள்
ஒட்டு மொத்தமாக வந்த
 வழியை திரும்பிப் பார்த்தன.


பக்கத்து ஒடங்காட்டு வரைதான்
போகும்.
எங்கே சுத்திச்சுத்தி வந்தாலும்
நாலுமணி ஆனா போதும்
டாண்ணு  செல்லம்மா முன்னால்
 வந்து நிற்கும்.
 இன்று என்னாயிற்று....
 நாலரை ஆகப் போகுது.
 அந்த ஒத்த குட்டிய காணலியே....
 எங்கேயும் நிற்காத.....
 ஏதும் காட்டு விலங்கு வந்து
 இழுத்துட்டு
 போயிற்றோ?....
ஏதோ ஒரு இனம்புரியாத
கவலை வந்து அப்பிக் கொண்டது.

ஒரு பரபரப்போடு 
அங்கேயும் இங்கேயும்
பார்த்தாள்.

எல்லா ஆடுகளும் செல்லம்மா
உட்கார்ந்திருந்த புளியமரத்துக்குக்
கீழ வந்து வரிசை கட்டி 
நின்றன.
வீட்டுக்குப் போகணுமே 
சின்னக்குட்டியைக் காணலியே 
என்று ஏக்கத்தோடு குரல் கொடுத்துப் பார்த்தன.

எந்த அனக்கமும் இல்லை.

"குட்டிய எங்களா காணோம்.
உன்கூடதான வந்தது"
தாய் ஆட்டிடம் மறுபடியும்
கோபமாகக் கேட்டாள்
செல்லம்மா.

புரிந்தது போல...மே...என்று குரல்
கொடுத்தபடி வந்தவழியே  ஓட ஆரம்பித்தது
ஆடு.

"ச்சூ...எங்க போற
இங்கேயே நில்லு.
நான் போயி பார்த்துட்டு
வாறேன்.
ஏய்...அங்கிட்டு இங்குட்டு
நகர்ந்திய தொலைச்சுப்புடுவேன்"
கறாறாகப் பேசியபடி ஒடங்காட்டுக்குள்
திரும்பிச் சென்றாள் செல்லம்மா.

ஆடுகள் யாவும் அப்படியே
 படுத்துக் கொண்டன.
தாய் ஆட்டுக்குப் படுக்க முடியவில்லை.
மே...மே...என்று குரல் கொடுத்தபடி
செல்லம்மா பின்னாலேயே ஓடியது.

"சூ...சொன்னால் கேட்க மாட்ட...
போ...நான் போய்  உன் பிள்ளையை
கூட்டிட்டு வாறேன்".என்று 
சொல்லிப் பார்த்தாள் செல்லம்மா.

ஆடு திரும்பிப் போவதாகயில்லை.
நானும் வருவேன் என்று 
அடம் பிடித்தபடி
கூடவே சென்றது.

சரி வரட்டும்...
வழித்துணையா இருக்கும்.
என்று நினைத்துக்கொண்டு 
பேசாமல் நடந்தாள் செல்லம்மா.
கண்களில் ஒரு தேட்டம்
இருந்தது. ஆனால் ஆட்டால்
சும்மா வரமுடியவில்லை.
பதறியபடி கதறிக்கொண்டே வந்தது.
சற்று நேரத்தில் 
எதிர்க்குரல் ஒன்று வந்தது.

இங்கிருந்துதானே குரல் வருகிறது.
ஏதும் முள்ளுக்குள்ள 
மாட்டியிருக்குமோ?

பதறிப்போன செல்லம்மா...
"ஜிம்மி குட்டி வாரேன் ...
அம்மா வாரேன்டா
எங்க இருக்க...."
என்றபடியே குட்டி குரல் வந்த
திசையில் குனிந்து பார்த்தாள்.


அங்கே...குட்டி முள்ளில் மாட்டிக்கொண்டு
வெளியில் வர முடியாமல்
போராடிக் கொண்டிருந்தது.

"பார்த்து...பார்த்து கால உதறாத ஆத்தா...
நான் வந்துட்டேன்ல்ல..."
முள்ளை விலக்கிவிட்டு 
கிட்டே போனாள்
செல்லம்மா.

எட்டி கையை நீட்டினாள்.
போய் கரிசனமாக
தலையைத் தடவி 
தைரியம் சொன்னாள்.

ஆடு சுற்றிச் சுற்றி வந்து
குரல் கொடுத்து தைரியம் 
கொடுத்துக் கொண்டே
இருந்தது.

முள்ளை விலக்கி குட்டியை
வெளியில் இழுத்த செல்லம்மா 
"முள்ளு குத்திட்டோம்மா...
யாரு உன்ன இங்க வரச்
சொன்னது? "என்று தடவியபடியே
ஆட்டுக்குட்டியை கீழே விட்டுவிட்ட்டாள்.
குட்டி ஒரே துள்ளலில் ஆட்டுப் பக்கம் போய்
நின்றது.

ஆடு தலையைக் கோதிக்
கொடுப்பதுபோல் முகத்தில் தலையை
வைத்துத் தேய்த்தது.
இப்போதுதான் மூவருக்கும் போன உயிர் வந்தது.

"சரி... போங்க .."
ஆட்டையும் குட்டிகளையும்
போகச் சொல்லி விட்டு..

எழும்ப எத்தனித்தாள் செல்லம்மா.
முடியவில்லை.
பின்னாலிருந்து ஏதோ இழுப்பது போலிருந்தது.
சட்டையில..முள் மாட்டிகிட்டோ..
என்று முணுமுணுத்த
செல்லமா," நீங்க போங்க.
நான் வாரேன்" என்று சொல்லியபடியே 
பின்னால் திரும்பினாள் .
குட்டியும் தாயும் தயங்கி தயங்கி
நின்றன

போங்றேன்ல...
அம்ம வந்தாதான் போவியாக்கும்
என்று சொல்லி முடிக்கும் முன்பே 
ஒரு கை வாயைப் பொத்தி
பின்னால் இழுத்தது.

யாரு....கேட்க வாயைத் திறந்தாள்
முடியவில்ல..
மூச்சுக் காற்று முட்டி மோதியது.

திமிறிப் பார்த்தாள் 
முட்டிப் பார்த்தாள்.

அந்த முரட்டுக்கரமும்...முடை நாற்றமும்
அவளை திக்குமுக்காட வைத்தது.
திணற வைத்தது.

ஏய் விட்டுரு...என்னைக் கொலைகாரி ஆக்காத...
கத்திப் பார்த்தாள்.எடுபடல...

மனிதனா இருப்பவரிடம்
கொஞ்சிப் பார்க்கலாம்.
மிருகமாகிப் போனவனிடம்
என்ன பேச முடியும்.

பலம் கொண்ட மட்டும்
விலகி ஓடப் பார்த்தாள்.
அவன் சட்டென்று காலைப் பிடித்து
இழுத்து
கீழே தள்ளினான்.

குப்புற விழுந்ததில் ஒடமுள் ஒன்று
உள்ளங்கையில் குத்தி
ரத்தம் சொட்டாக வந்து
எட்டிப் பார்த்தது .
உடனே அந்த முள்ளை எடுத்துப் போடும் மனநிலையில் அவளில்லை.
இப்போது இந்த மிருகத்திடமிருந்து 
தப்பித்துக் கொள்ளவேண்டும்.

 செல்லம்மாளை எழும்ப 
விடாமல் அமுக்கினான் அந்தக் கயவன்.

இதற்கு மேல் என்ன செய்வது?
கீழே விழுந்ததில்
கையில் வைத்திருந்த கொக்கி
கம்பு எட்ட போய் விழுந்தது.
நிராயுத பாணியாக நிற்பதுபோல உணர்ந்தாள்.
சட்டென்று கை இடுப்பிற்குப் போக
கையோடு இடுப்பில் சொருகி வைத்திருந்த அருவாளைக் கையில்
எடுத்தாள்.

"வாடா...வா..
என்னைத் தொட்டுருவ....
பத்திரகாளியாட்டம் மாறி
கத்தினாள் செல்லம்மா.

தொட்டா என்ன செய்வ...
இப்போ தொடுறேன்...
என்ன செய்துதுடுவா  என்று
கையை நீட்டி சேலையைப் பிடித்து
இழுத்தான்.

விருட்டென்று விலகிக்கொண்ட
செல்லம்மா சேலையை ப்பிடித்த
கையில் ஒரே வெட்டு...
 அவ்வளவுதான்.
அவன் ஆ...அம்மா என்று கத்தியபடி
கீழே விழுந்தான்.

இனி ஒரு நிமிடம் கூட இங்கே
நிற்கக் கூடாது.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 
ஆபத்துத் தான்.

ஓட்டமும் நடையுமாக புளி மரத்தை நோக்கி ஓடி வந்தாள். 
அங்கே ஆடுகளைக் காணவில்லை.
வேறு எங்கும் போயிருக்காது.
குழைக் கட்டுமட்டும் 
அவளுக்காக
காத்துக் கிடந்தது.

குழைக் கட்டைத் தூக்கி தலையில் வைத்து
 ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தாள்.

அவளை கண்டதும் ஆட்டுகள்
ஓடி வந்து கையை நக்கியபடி
சுற்றி சுற்றி வந்தன.

கண்கள் மகனைத் தேடின.
வெகு நேரமாயிற்றே என்ன ஆனதோ ஏதானதோ என்று கலங்கியபடி
தொட்டிலைப்பார்த்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சி அதிர்ந்து போனாள்.

ஆடு தொட்டிலில் கிடந்த மகனுக்கு
மடுவிலிருந்து பாலூட்டிக் கொண்டு
நின்றது.

கண்கள் தானாய் கண்ணீரைச் சொரிந்தன.
ஓடிப்போய் தாய் ஆட்டை கட்டிப்
பிடித்தபடி ஒற்றைக் கையில்
மகனைத் தூக்கி மார்போடு அணைத்துக்
கொண்டாள்.
"இன்று முதல் நான்  மட்டும்
தாயல்ல... என் புள்ளைக்கு
நீயும் ஒரு  தாய்தான் தாயி"
என்று கண்ணீர் மல்க கூறினாள்.
புரிந்ததுபோல ஆடு 
தலையாட்டி அருகில் போய்
நின்று கொண்டது.
 Comments

Popular Posts