வல்வில் ஓரியின் சிறப்பு
வல்வில் ஓரியின் சிறப்பு
கடையேழு வள்ளல்கள் யார்யார்
என்றால் பாரி, காரி ,ஓரி ,பேகன் ,அதியமான்,
ஆய் ,நல்லி என்று வரிசையாக
சொல்லி விடுவோம்.
இதில் பாரியைப்பற்றிக் கேட்டால் முல்லைக்குத்
தேர் கொடுத்தான் பாரி என்று
சொல்லி விடுவோம்.
அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி
கொடுத்தான்
என்பது நாடறிந்த செய்தி.
ஓரி யார் என்றால்....சற்று தடுமாறி நிற்போம்.
வல்வில் ஓரி என்று சொல்லுவோம்.
வல்வில் ஓரிதான் .ஏன் அவருக்கு
அந்த பெயர் வந்தது.?
அந்தப் பெயருக்கும் அவரை
கடையேழு வள்ளல்களுள் ஒருவராக
கொண்டாடுவதற்கும் காரணம் என்ன?
இந்தக் கேள்விகளை முன் வைத்தால்....
சற்று சிந்திக்க ஆரம்பிப்போம்.
கோயபல்ஸ் பொய் என்பதுபோல
உண்மையையும் மறுபடியும் மறுபடியும்
உரக்கச் சொல்ல வேண்டும்.
அப்போதுதான் உண்மை என்று
நம்பப்படும்.
.அப்போதுதான் நம் மனதும் அதனைப்
பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
அல்லது ஒரு ஓரத்தில் தூக்கி
வைத்துவிட்டு கடந்து சென்று கொண்டே
இருக்கும்.
வாருங்கள். யாரிந்த வல்வில்
ஓரி என்று பார்ப்போம்.
எல்லா மன்னர்களுக்கும் இயல்பாக
ஒரு குணம் உண்டு.
தங்களைப் புகழ்ந்து பாடும்
புலவர்களுக்குப் பரிசில்களை
அள்ளி வழங்குவர். இது நாம்
அறிந்த செய்தி.
இவர்களிலிருந்து சற்று மாறுபட்டவர்
வல்வில் ஓரி.
பாடல் என்பது தானாக வர வேண்டும்.
ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில்
வரக்கூடாது என்று நினைப்பவர்
இந்த வல்வில் ஓரி.
அதனால் அவர் யாரிடமும் பாடல்
பாடும்படி கேட்டுக்கொள்வதில்லை.
பெருமை, புகழ் யாவும்
தானாக வர வேண்டும்.
கேட்டு வாங்குவதில் பெருமை இல்லை
என்று நினைப்பவர் ஓரி.
ஆனால் அவர்களாகப்
புகழ்ந்து பாடல் பாடுவதாக இருந்தால்
மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்.
கூடவே வைத்து
உணவளித்து கொண்டாட வைப்பார்.கை நிறைய பொருளும் கொடுப்பார்.
இவருக்கு வல்வில் ஓரி என்ற பெயர்
வரக் காரணம் என்ன?
இவர் அம்பு எய்தலில் வல்லவர்.
வைத்த குறி தப்பியதே இல்லை.
அதற்கு சாட்சியாக இதோ ஒரு
பாணர் பதிவிட்ட செய்தியைக் கேளுங்கள்.
ஒருமுறை காட்டு வழியாக
பாணர்களும் அவர்களின் மனைவியரான
விரலியரும் நடந்து
வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் காட்டின் அழகை ரசித்தபடி
கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டு
மகிழ்ச்சியாக வருகின்றனர். அப்போது திடீரென்று ஒரு யானையின்
பிளிறல் ஒலி கேட்டது.
அப்படியே அனைவரும் திகைத்துப்
போய்விட்டனர்.
அச்சம் கண்களில் தெரிய
வாய் பேச இயலாது நின்றனர் .
அஞ்சியபடியே ஒலி வந்த
திசையைப் பார்க்கின்றனர்.
அங்கே ...தொலைவில் குதிரைமீது
இருந்தபடி ஒரு வேட்டைக்காரன்
யானையைக் குறி வைத்தபடி
இருப்பது தெரிகிறது.
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
என்ன நடக்கப் போகிறதோ
என்ற அச்சத்தில் குதிரை மீது
இருந்த வீரனையும்
யானையையும் மாறி பார்க்கின்றனர்.
இதோ அந்த யானை ஒரு மரத்தின் அருகில் வந்துவிட்டது.
பாணர்களுக்கோ
உயிர் கையில் இல்லை.
விரலியர் இந்தக் காட்சியைக் காண
அஞ்சி பாணர்களுக்குப் பின்னால்
மறைந்து நின்று கொண்டனர்.
வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது...
அவ்வளவுதான்.
மறுநொடி குன்றன்ன யானை கீழே
சரிந்தது.
யானைததான் கீழே விழுந்தது
என்று பார்த்தால்...
அதன் பின்னால் வாயைப் பிளந்தபடி
புலி ஒன்றும் வீழ்ந்து கிடக்கிறது.
இது எப்படி நடந்தது?
யானையின் பின்னால் புலிபதுங்கி வந்து கொண்டிருந்திருக்கிறது.
யானையின் மீது எய்த அம்பு
புலியின் வாய் வழியாக
வெளியேறியது.
அத்தோடு நின்றுவிடவில்லை.
புலியின் பின்னால் நின்றிருந்த
மானையுமல்லவா துளைத்துப் போட்டுவிட்டது.
இப்படி வியந்து நிற்கையில்
மானின் பின்னால்
வந்த பன்றி ஒன்றும் சரிந்து
கிடக்கிறது.
அப்பப்பா...என்னவொரு
அசாத்திய திறமை.!
இத்தனையையும் ஒரே அம்பில்
வீழ்த்திய வில்லாளனை மெச்சுவதா?
வீழ்ந்து கிடக்கும் விலங்குகளுக்காக
பரிதாபப்படுவதா?
எங்கே அந்த அம்பு?
கண்கள் அம்பு வீழ்ந்துகிடக்கும்
இடத்தைத் தேடின.
அங்கே மற்றுமொரு ஆச்சரியம்
காத்துக் கிடந்தது.
அம்பு கடைசியாக ஒரு மரப்பொந்தில்
குத்தி நின்றது.
மரப்பொந்தில் இருந்த உடும்பும்
அம்பு தைய்த்து மாண்டு போனது.
அப்பப்பா...
யானை,புலி ,மான்,
பன்றி,உடும்பு இத்தனை விலங்குகளையும்
தன் ஒற்றை அம்பில்
ஒரே நேரத்தில் சாய்க்கும்
திறன் பெற்ற இந்த வேடன் யார்?
கம்பீரமாக நின்றிருந்த
அந்த வில்லாளனையே
வியந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.
கண்கள் இமைக்க பறந்தன.
எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது?
இந்த மாவீரனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அருகில் சென்றனர்.
குதிரையில் இருந்தவர் கீழே
இறங்கி வந்தார்.
கழுத்து நிறைய அணிகலன்கள்.
யாரிவர்...அரசகுல அணிகலன்களோடு
நின்றிருக்கும் யாரவர்?
கேட்டுவிட ஆசை...
வார்த்தைகள் வர மறுத்தன.
நிலைமையைப் புரிந்து கொண்டு
மெல்லச் சிரித்தார் அந்த வேடன்.
அப்பாடா....போன உயிர்
திரும்ப வந்ததுபோல இருந்தது.
இவர் அவராக இருக்குமோ?
தயக்கத்தோடு தாங்கள் வல்வில் ஓரியோ என்று கேட்டுவிட்டனர்
அதற்கும் பதிலேதும் இல்லை.
புன்னகையைப்
பதிலாகத் தந்தார் ஓரி.
இப்போது இவர் வல்வில் ஓரி
என்பது உறுதியாகிவிட்டது.
இத்தனைத் திறமை வாய்ந்த
மன்னனைப் பாடாமல் இருப்பதா?
மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டும்
கையில் கொண்டு வந்த
இசைக் கருவிகளை எடுத்தனர்.
வல்வில் ஓரியின் வில்லாற்றல்
இசையோடு கூடிய பாடலாக
பாடப்பட்டு அந்த இடம் மகிழ்ச்சியால்
நிறைந்தது.
இடையிடையே
வல்வில் ஓரி புகழ் வாழ்க என்று
வாழ்த்திய வாழ்த்து
காடெங்கும் எதிரொலித்தது.
மன்னர்
மெய் மறந்துகேட்டு மகிழ்ந்தார்.
மகிழ்ச்சியில் பிறந்த பாடல்.
தன்னை மகிழ்வித்தது.
அதுபோல நாமும் அவர்களை
மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்த மன்னர்
வயிறார உணவளித்து பொன்னும்
மணிகளும் கொடுத்து அனுப்பினார்.
எங்கும் ஓரியின் புகழ் பரவியது.
இல்லை என்று வந்தோருக்கு
பாடல் பாடக்கேட்டு பொருள் கொடுக்கும்
வழக்கம் ஓரிடம் கிடையாது.
நல்ல விருந்து நடைபெறும்.
பாணர்கள் வந்த வேலையை மறக்கும்
அளவுக்கு மகிழ்ச்சியான உணவு.
திரும்பிச் செல்லும்போது கைநிறைய பொன்னும் பொருளும்.
சிலருக்கு சிற்றூர்களையும் வழங்கியதாக வரலாறு உண்டு. இப்படிப்பட்ட ஓரி
கடையேழு வள்ளல்களுள் ஒருவரானார்.
வல்வில் ஓரி என்று வரலாற்றில்
பதிவானார்.
அருமையான வீரர் மட்டுமல்ல...
நல்ல உள்ளம்....நாடி வந்தோரை
தேடி வர வைக்கும் அன்பு
புலவர்களைக் கொண்டாடி நிற்கும்
பண்பு .இத்தனையும் கொண்டவர்
கொல்லிமலையின் மன்னர்
வல்வில் ஓரி.
இனி ஓரி என்றால்
யானை புலி மான் பன்றி
உடும்பு என ஐந்து விலங்குகளையும்
ஒற்றை அம்பில் கோத்த காட்சிதான்
கண்முன் வந்து நிற்கும் இல்லையா?
அதற்காகவா இவர் கடையேழு
வள்ளல்களுள் ஒருவராக கொண்டாடப்
படுகிறார்.?
இல்லையே....
தன்னை நாடி வந்தோர்க்கு
வயிறார உணவளித்து
நெடுநாள் அரண்மனையில் தங்கவைத்து மகிழ வைக்கும் விருந்தோம்பல் பண்போடு
பொன் பொருள் கொடுக்கும் நற்பண்பும் சேர்ந்து அவரை கடையேழு வள்ளல்களுள் ஒருவருராக
வைத்து அழகு பார்த்தது.
வல்வில் ஓரியை இனி
நம்மாலும் மறக்க
முடியுமா?
இலக்கிய கட்டுரையை மிகவும் எளிய நடையில் பதிவிட்டது மிக அருமை.
ReplyDelete