ஆரையடா சொன்னாயடா

ஆரையடா சொன்னாயடா 


இரண்டு பெரிய ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.

     நீயா நானா...  என்ற போட்டி வரும்போது   உரசல்  ஏற்படுகிறது.

அண்ணன் தங்கைகளுக்குள் போட்டி.

பள்ளியில் சக மாணவர்களுக்குள் போட்டி.  பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி.

அண்டை மாநிலத்தோடு போட்டி.

அண்டை நாட்டோடு போட்டி.

 இப்படிப் போட்டி நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

போட்டி இருக்கலாம்.

தப்பே இல்லை.


போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

 அப்போதுதான் அது பகையாக மாறாது.

 மாறவும் கூடாது.


இப்போது இரு பெரும்  புலவர்களுக்கிடையே நடைபெற்ற

 போட்டியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆரோக்கியமான போட்டியா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.


கம்பர் சோழ மன்னனின் ஆஸ்தான கவி.

கம்பர் வாயால் தன்னைப் புகழ்ந்து 

பாடிக் கேட்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு.

இதேபோன்ற ஆசை சிலம்பி என்ற ஒரு பெண்ணுக்கும்  ஏற்பட்டுவிட்டது.

அதற்கான வாய்ப்பு கிடைக்காமலா

போய்விடும் என்ற நம்பிக்கையோடு

காத்திருந்தாள்.


ஒருநாள் கம்பரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது ஆசையை தீர்த்துக் கொள்ள நினைத்தாள் சிலம்பி.


"  ஐந்நூறு பொன்  தருகிறேன்...

 என்னைப் புகழ்ந்து  ஒரு பாடல் பாடுங்கள்" என்று கம்பரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள் சிலம்பி.


 சோழனின்   ஆஸ்தான கவி ஐந்நூறு பொன்னுக்கு பாடுவாரா என்ன?


"ஆயிரம் பொன் தந்தால்தான் பாட முடியும்" என்று கம்பர்.


  "ஆயிரம் பொன்னா..".வாயைப் பிளந்தாள் சிலம்பி.

   

தன்னிடம் ஐந்நூறு பொன்தான் இருக்கிறது என்று பேரம்பேசி பார்த்தாள்.


 கம்பர் இறங்கி வருவதாக இல்லை.

ஐந்நூறு பொன்னுக்குப் பாதி பாடல் தான் பாட முடியும்  என்று கறாராக சொல்லிவிட்டார் .


 குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டுபட வேண்டும்.

கம்பர் வாயால் புகழ்ந்து இரண்டு வரியாவது கேட்டுவிட வேண்டும்.

 ' சரி 'என்று ஒத்துக்கொண்டு ஐந்நூறு பொன்னைக் கொடுத்துப் பாடும்படி கூறினாள் சிலம்பி.


 ஐந்நூறு பொன்னுக்கு  இரண்டுவரியை மட்டும் பாடினார் கம்பர்.

பாடிய பாடலை அவள் வீட்டு சுவரில் எழுதியும் வைத்துவிட்டு அவர் போக்கில் சென்று விட்டார் கம்பர்.


 பாடல் இரண்டு வரியோடு முடிவு பெறாமல் இருக்கிறது.  

     

ஒருநாள் ஔவை அந்த வழியாக வந்து  அதே வீட்டுத் திண்ணையில் அமர்கிறார்.

சோர்வாக வந்த ஔவைக்கு தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொடுத்து உபசரிக்கிறாள் சிலம்பி.

  

பசியாறியதும் சுற்றும்முற்றும் பார்க்கிறார்.

சுவரில் ஒரு பாடல்.

வாசித்துப் பார்க்கிறார்.

பாடல் முடிவு பெறவில்லை.

யார் எழுதியது? ஏன் பாடல் முடிக்கப்படாமல் இருக்கிறது என்று சிலம்பியிடம் விசாரிக்கிறார் ஔவை.

" கம்பர் 500 பொன்னுக்கு அரைப் பாடல்தான் பாட முடியும் என்று எழுதி வைத்துவிட்டார் "என்றாள் சிலம்பி.


      "சரி ...போகட்டும்   நானே இரண்டு வரி எழுதி, பாடலை முடித்து வைக்கிறேன் "என்று எழுதி முடித்து வைத்துவிட்டு 

போய்விட்டார் ஔவை.

அதைக் கேள்விப்பட்ட கம்பருக்கு

ஔவைமீது கோபம் 

    " நான் ஐந்நூறு பொன்னுக்கு எழுதிய பாட்டுக்கு வெறும் கூழை வாங்கி குடித்துவிட்டு எழுதுவதற்கு இந்த கிழவிக்கு என்ன தைரியம்."

 உள்ளுக்குள் புகைச்சல்.

  அன்றிலிருந்து "கூழுக்குப் பாடுபவள் " என்று ஔவையைக்  கிண்டலாக பேசுவார்.


 இந்தச் சூழலில் ஒருநாள் சோழமன்னன் அரசவையில் ஔவையைப் பார்க்கிறார் கம்பர்.

இந்தக் கிழவியிடம் ஏதாவது பேசி

மடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

சட்டென்று ஒரு  விடுகதை நினைவுக்கு 

வருகிறது.

 விடுகதையைச்  சொல்லி அதற்கான விடையைக் கூறும்படி கேட்கிறார் கம்பர்.


    "  ஒரு காலடி   நாலிலைப் பந்தலடி"  

என்பதுதான் அந்த விடுகதை.

தன்னை "வாடி... போடி.." என்பதற்காகவே கம்பர் இந்த விடுகதையைச் சொல்லுகிறார்  என்பது ஔவைக்குப் புரிந்து போயிற்று.


"  .என்னையா ... 'டி'  என்கிறாய்.?

 என்னை அவமரியாதை செய்த   இந்த மனிதருக்குச்  சரியான பதிலடி கொடுக்க  இதுதான் சரியான தருணம்.

உன்னைப் பாட்டாலே போட்டுத் தாக்குறேன் பார் என்று நினைத்தபடி,

         

  " எட்டைகால் லட்சணமே

   எமனேறும் பரியே

   மட்டில் பெரியம்மை வாகனமே

   முட்டமேல் கூரையில்லா வீடே 

   குலராமன் தூதுவனே

   ஆரையடா சொன்னாயடா"


என்று விடுதலைக்கான பதிலைப் பாடலாகச் பாடி முடித்துவிட்டார் ஔவை.

அவலட்சணமே!

 எமன் ஏறிவரும் எருமையே !

 மூதேவி வாகனமான கழுதையே! 

 கூரையில்லா குட்டிச்சுவரே!

 குரங்கே!

 நீ சொன்ன விடுகதைக்கான பதில்

 ஆரைக் கீரையடா "என்பது பாடலின் மேலோட்டமான பொருள்.

ஆரையடா சொன்னாயடா 
என்பதற்கே

" யாரைப் பார்த்து சொன்னாயடா" என்று இன்னொரு பொருளும் உண்டு.

அப்பப்பா...

டி...டி.க்கு 

டா....டா...போட்டு பதில் சொல்லி முடித்துவிட்டு அமர்ந்து கொண்டார்.

சரியான நேரம் பார்த்து

சரியான பதிலடி .

இனி கிண்டலடிப்பாரா கம்பர்?

ஔவையா...கொக்கா?


எது எப்படியோ

சொற்போரைச் சுவைப்போராக்கி 

கவிப்போர் தொடுத்து

கேட்போரை 

மலைப்போராக்கி

காப்போர் அவையில் 

படைப்போர் ஔவையும் கம்பனும் நிகழ்த்திய

 இலக்கியப்போர் 

 படிப்போர் நினைவில் என்றென்றும்

இனித்திடும்

இலக்கிய இன்பப்போராக இருந்தது

என்பதை மறுப்பதற்கில்லை.


"ஒரு காலடி

நாலிலைப் பந்தலடி"

   -கம்பர்


"ஆரையடா 

சொன்னாயடா"

      -ஔவை


நல்ல விடுகதை.

நல்ல பதில்.


போட்டி ஆரோக்கியமானதாக இருந்ததா....இல்லையா. ...முடிவு உங்கள் கையில்.

கருத்துகள்

Popular Posts