கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்
கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்-
பெண்ணே
பேதை என்றழைக்க வைத்து பெருமிதம்
தந்தாய்!
வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய்
வளர் பருவ குறும்புகள் செய்தாய்
விரல்பிடித்து வீதிக்கு அழைத்தாய்- பெண்ணே
பெதும்பையாய்ப் பெருமிதம் செய்தாய்!
உணர்ந்ததை உணர்ந்தபடி உரைத்திட நினைத்தாய்
உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய்
உயர் உயரப் பறந்திட விழைத்தாய் - பெண்ணே
மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்
மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய்
மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய்
மயங்கிட வைத்து மனமதைத் துவைத்தாய்- பெண்ணே
மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்
இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய்
இமையாய் இருந்து எம்மைக் காத்தாய்
எம்பால் அன்பால் உன்பால் ஈர்த்தாய் - பெண்ணே
அரிவையாகி அளவிலா ஆனந்தம்
தந்தாய்
உலக விழுமியம் உரைத்திட வந்தாய்
உன்னில் எம்மை உணர வைத்தாய்-
உலகொடு நன்நடை பயிற்சி தந்தாய்- பெண்ணே
தெரிவையாகி தெரியாதன தெரிந்திடச்
செய்தாய்
போராளியாய் நின்று வீட்டாளுமை செய்தாய்
பேராண்மையில் பேருவகை கொண்டாய்
பேரறம் பேணிப் பேர்சொல்ல வைத்தாய் - பெண்ணே
பேரிளம் பெண்ணாகிப் பேரன்பு தந்தாய்
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்
கண்ணின் கருவிழி எனதானாய் -பெண்ணே
காலமெல்லாம் என் வாழ்வே நீயானாய்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
கருத்துகள்
கருத்துரையிடுக