படியுங்கள்

படியுங்கள் 



"கற்றது கைமண்ணளவு
 கல்லாதது உலகளவு "

கற்று விட்டேன் என்ற கர்வம் வேண்டாம்.
 நாம் கற்க வேண்டியவை 
 இன்னும் எவ்வளவோ உள்ளன.
 யாரும் நான் எல்லாம் படித்து முடித்துவிட்டேன்
 என்று சொல்லிவிட முடியாது.
  
  "நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
  நூலளவே ஆகுமாம் கல்வி "
என்றார் வள்ளுவர்.

நீர்மட்டம் உயர உயர ஆம்பல்
தண்டு உயர்ந்து கொண்டே இருக்கும்.
அதுபோல நாம் கற்கும் நூலின் அளவுக்கு ஏற்ப
நமது அறிவு கூடும்.
ஆதலால் படியுங்கள் என்பது
வள்ளுவர் பரிந்துரை.

ஆசிரியர்கள் எல்லாம் படித்தவர்கள் தான்
மறுப்பதற்கில்லை.
ஆனால் நாளும் படித்து தமது
அறிவை மேருகேற்றிக் கொண்டே
இருப்பவர்தான் நல்ல
ஆசிரியராக இருக்க முடியும்.
 படித்த ஆசிரியரைவிட படிக்கின்ற 
 ஆசிரியர்கள் மாணவர்களைக்
காலத்திற்கு ஏற்ப உருவாக்கும்
திறன் படைத்தவர்களாக இருப்பர்.
ஆதலால் ஆசிரியர்களே படியுங்கள்
என்கின்றனர் கல்வியியலாளர்கள்.

அரைமணி நேரம் பாடம் நடத்த 
 ஆறுமணி மணி நேரமாவது படித்தல் வேண்டும் .
 கூர்தீட்டப்படாத ஆயுதம் துருபிடித்து 
 பயன்படுத்த லாயக்கற்றுப் 
போய்விடும்.
அது போன்றதுதான் கல்வியும். 
 நாளும் புத்தகங்களைப் படித்து
 நம்மை 
 கூர்தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் படித்தவை மாணவர்களுக்குப்
பயன்படத் தக்கதாய் இருக்க வேண்டும்.


ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் லெனின் 
 செஞ்சதுக்கத்திலே உரையாற்ற்றிக் கொண்டிருக்கிறார்.
 
" உலக அரங்கில் அமெரிக்காவைவிட 
ரஷ்யா வல்லரசு நாடாக மாற வேண்டும் .
 அதற்காக நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை 
 செவ்வனே செய்ய வேண்டும் "என 
 வீர உரையாற்றிவிட்டு அமர்கிறார்.
 
  அப்போது கூட்டத்தில் இருந்த 
  ஒரு மாணவன் எழும்பி  
  "அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்" 
  எனக் கேட்கிறான்.
"  படியுங்கள் "என்கிறார் லெனின்.

  மாணவனுக்கு படியுங்கள் என்று சொல்லிவிட்டார்.
  நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அறிய  
  ஆசைப்பட்ட ஒருபெண், "பெண்களாகிய நாங்கள் 
 என்ன  செய்ய வேண்டும் "என்று கேட்டார் .
  
  புன்முறுவலோடு  அந்த பெண்ணைப் பார்த்த லெனின்,
 "படியுங்கள்" என்றார்.
மாணவனைப் பார்த்து படியுங்கள்.
என்றார்.
பெண்களைப் பார்த்து படியுங்கள் என்றார்.
வயதான நமக்கு என்ன சொல்லப் போகிறார்
என்று அறியும் ஆவலில்
பெரியவர் ஒருவர் எழும்பி"
நாங்கள் என்ன செய்ய வேண்டும்
என எதிர் பார்க்கிறீர்கள் "என்று கேட்டார். 
  
அவருக்கும் "படியுங்கள் "என்றே பதிலளித்தார் லெனின்.

அப்படியானால் படிப்பது இளம்பிராயத்தினருக்கு 
 மட்டும் உரியதல்ல. 
 எல்லா வயதினரும்  எப்போதும் படித்துக்கொண்டே 
 இருக்க வேண்டும் என்பதுதான் 
 சாதித்தவர்களின் கருத்தாக இருக்கிறது.
படிப்பும் படிப்புச் சொல்லித்தரும்
ஆசிரியரும்தான் ஒரு மனிதன் வாழ்க்கையின்
திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக
அமைகின்றனர்.
 
 தன்னால்  இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை 
உருவாக்க  முடிந்தமைக்கு காரணம் தன் 
ஆசிரியர் அரிஸ்டாட்டில் மட்டும்தான் 
என்று பெருமைபட்டுக்கொள்வார் அலெக்சாண்டர்.
 
 ஒருமுறை அரிஸ்டாட்டிலிடம் தங்களைப்போன்ற 
 சிறந்த ஆசிரியர் எனக்கு வாய்க்கப் பெற்றமையால்தான் 
 என்னால் இத்தனை நாடுகளை வெல்ல முடிந்தது.
  " உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் .
 நான் செய்து தருகிறேன் "என்றாராம் 
  அலெக்சாண்டர் .
  
   "எனக்கு பெரிய ஆசை
   ஒன்றுமில்லை.
   புத்தகம் படிப்பதற்கு ஒரு நூலகம் மட்டும்
    அமைத்துத் தந்தால் போதும் "
   என்றாராம் அந்த மாமேதை.
   
   மாமேதைகள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் 
   ஒருபோதும் தாம் படிப்பதை நிறுத்தியதே இல்லை.
   வாசிப்பு! வாசிப்பு ! வாசிப்பு!
வாசிப்பு மீது தாகம் உள்ளவர்கள்
ஒருநாள் படைப்பாளியாக மாறக்கூடும்.
அல்லது நல்ல ஆளுமைத்திறன் மிக்கவர்களாக மாறக்கூடும்.

அறிஞர் அண்ணா ஒரு படைப்பாளி.படிப்பதில்
பேரார்வம் கொண்டவர்.
ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால்
அதை வாசிக்காமல் கீழே வைக்க
  மாட்டார்.
 அறிஞர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை
  நடைபெற இருந்த நேரம்.
   தன் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் 
  படித்து முடிக்கவில்லை.
   
அதனால் அறுவை சிகிச்சையையே மறுநாளைக்கு 
மாற்றி வைக்கச் சொன்னாராம் அண்ணா.
அண்ணாவுக்குத்தான் புத்தகத்தின் மீது
எவ்வளவு பெரிய காதல்.!


 நம் எல்லோருக்கும் பகத்சிங்கை 
 ஒரு விடுதலைப் போராட்ட 
 வீரராகத்தான் தெரியும்.
 ஆனால் பகத்சிங்  வாசிப்பை மிகவும்
 நேசிப்பவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
 
 தூக்குக்கயிற்றை முத்தமிடும்வரை 
 படித்துக் கொண்டிருந்தவர்  பகத்சிங்.
 தூக்கிலிடும் நாள்வரை லெனின் எழுதிய 
 புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார்
 பகத்சிங்.
 
 விடியற்காலை தூக்கிலிடுவதற்காக 
 ஜெயிலர் போய்  பகத்சிங்கை எழுப்ப செல்கிறார்.
  அங்கே பகத்சிங் கையில் லெனின் 
  வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தைப்
   படித்துக் கொண்டிருக்கிறார்.
   
ஜெயிலரைப் பார்த்ததும் பகத்சிங்
பதற்றப் படவில்லை.

 "ஐயா, கொஞ்சம் நில்லுங்கள் .
 நான் இந்த புத்தகத்தின் கடைசி 
 பக்கத்தைபா படித்துவிட்டு வருகிறேன் "
 என்று தான் தூக்குமேடைக்குச்
 செல்ல இருந்த கடைசி நிமிடங்களிலும்
 படிக்க  சற்று அனுமதி தாருங்கள் என்று கேட்டிருக்கிறார் பகத்சிங்.
 
 "தூக்குமேடை போகும்போதுகதட
  உன்னால் எப்படி இப்படி நிம்மதியாக வாசித்துக் 
கொண்டிருக்க முடிகிறது "என்று  
கேட்டு வியந்திருக்கிறார் ஜெயிலர்.
  
வாசிப்பின்மீது கொண்ட ஆர்வம்தான் 
பலரின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படுவதற்குக்
காரணமாக இருந்திருக்கிறது.
  
எப்படி ஒரு நல்ல பேச்சாளர் அத்தனை 
பார்வையாளர்களையும் தன் பேச்சால்
கட்டிப்போடுகிறாரோ அப்படி ஒரு ஈர்ப்பு  
நல்ல  புத்தகங்களுக்கும் உண்டு.
  
டால்ஸ்டாய் எழுதிய புத்தகம்தான் 
சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 
ஒரு மகாத்மா காந்தியாக நமக்குத் தந்தது.
   
மகாத்மாவின் சத்திய சோதனைதான் ஒரு மார்ட்டின் லூதரை உருவாக்கியதாக 
 அவரே கூறியுள்ளார்.
   
 "எற்றர்னல் வெலாசிட்டி "என்ற புத்தகம்தான்
அப்துல் கலாம்  ஒரு அணு விஞ்ஞானியாக  
 வருவதற்கு காரணமாக அமைந்ததாக
அவரே சொல்லியிருக்கிறார்
    
தலை தாழ்த்திப் பிடித்தாலும் 
மேல் நோக்கிதான் எரியும் 
தன்மை கொண்டது தீ.
தலை குனிந்து நாம் படிக்கும் படிப்புதான் நம்மை தலை நிமிர வைக்கும்.
தன்னம்பிக்கையை வளர்க்கும்.
இன்னும் நாம் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்ற உண்மையைப் புரிய வைக்கும்.

 புத்தகங்கள் முன்னால் எத்தனை மணி நேரமும் 
தலை குனிந்திருக்கலாம்.
தப்பே இல்லை. 
புத்தகம் முன்னர் நாம் தலைகுனிந்து
இருக்கும் நேரம் கூடக்கூட
அதற்கான பலனும் கூடிக்கொண்டே இருக்கும்.
மாறுபட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களோடு பேச்சுவார்த்தை நடத்த 
பல கோணங்களில் சிந்தித்துப் பார்க்கும் ஆர்வம் மேலோங்கும்.அதனால்
சிந்தனா சக்தி வளரும்.

சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளும் மனிதன் இறப்பதற்கு சமம்.
 
 
 " பெற்ற பிள்ளை கைவிட்டாலும் 
கற்ற கல்வி ஒருபோதும் நம்மை
கைவிடாது" என்றார் காந்தியடிகள்.


 கற்றல் பிறப்புமுதல் இறப்புவரை
 நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் கற்றதும் பெற்றதும் கைமண்ணளவு மட்டுமே.
இன்னும் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்.
தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன புத்தகங்கள்.

நல்லதோர் வீணை செய்து
 நலங்கெட புழுதியில் வீசலாமா?
 நல்ல நல்ல புத்தகங்கள் 
 வாசிக்கப்படாமல் கிடக்கலாமா?
 
" படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் 
இருப்பதே மேல் "என்றார் பிளேட்டோ.

" நான் இறந்த பின்னர் என் உடல் மீது 
மலர் மாலைகளை வைக்க வேண்டாம்.
 என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் "
  என்றார் ஜவகர்லால் நேரு அவர்கள்.
  
சாதனையாளர்கள் அனைவரும் தம் 
மூச்சுக்காற்று நிற்கும்வரை தம்  
படிப்பை நிறுத்தியதே இல்லை.

நாமும் படிப்போம்..படிப்போம்..
படித்துக் கொண்டே இருப்போம்.

வரலாற்றில் இடம் பெறாவிட்டாலும் 
வரலாறாக வாழ்ந்தவர்களை அறிந்தவர்களாக இருக்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள
சிந்தனையைச் சீர்படுத்தி
மெருகூட்டி உயிரூட்ட
வாசிப்பை நேசிப்போம்.

-செல்வபாய் ஜெயராஜ்

கருத்துகள்

Popular Posts