கொடை மடம் கொண்ட பேகன்

கொடைமடம் கொண்ட பேகன் 

கடையேழு வள்ளல்கள் வரிசையில் முதன்மையாக வைத்துக் கொண்டாடப்படுவர்கள் முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி மன்னனும்

மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன்

மன்னனும் ஆவர்.


அப்படி இவர்கள் இருவரும் என்ன செய்துவிட்டார்கள்?

இவர்களை ஏன் அதிகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்குக்கிறோம்?

அதற்கான பின்னணி என்ன?

என்ற கேள்வி எழாமலில்லை.


ஒருவர் வள்ளல் என்பது எதை வைத்து வரையறை செய்யப்படுகிறது?

வள்ளண்மை என்பது

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது செய்யப்படும் உதவி.

தன்னைவிட  பொருளாதாரத்தில் தாழ்ந்தநிலையில் இருப்பவர்களுக்கு செய்யப்படும் உதவி  .

கொடை எல்லா மன்னர்களும் கொடுப்பார்கள்.

கொடை நாம் அறிந்த ஒன்று.

ஆனால்  இங்கே கொடை மடம் என்றால் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது.


கொடைமடத்திற்கான விளக்கத்தை அறிவதற்கு முன்னர் அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்

என்பதை நாம் அறிந்து கொண்டால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பரணர் என்ற புலவர் பாடிய 

ஒரு புறநானூற்றுப் பாடலைத் திரும்பிப் பார்த்தால் நமக்கு கொடை மடம் என்றால்  என்ன என்பது நன்குப் புரியும்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆவியர் குறுநில மன்னன் பேகன் .

பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல்.

பாணர்கள் யாழிசைத்துப் பாடி

வருவர்.

அவர்களுடைய இசையின்பத்தை ​நுகர்ந்து களிப்பான் பேகன். 

அவர்கள் விடை பெற்றுச் செல்லும்போது பலவகைப் பரிசில்களை அளித்து மகிழ்ச்சிப்படுத்தி  அனுப்புவது வழக்கம்.

அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம்.

அவ்வாறே  பொற்றாமரை அளித்து பெருமை படுத்துவான்.

பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பலவகை அணிகலன்களைப் பரிசளிப்பான். சில புலவர்களுக்கும் தேரையும் அளித்துப் பெருமைப்படுத்துவான்


⁠ஒருநாள் பேகன் காட்டிற்குக் காலாற நடந்து வரப் புறப்பட்டான். மன்னனுடன் அவனது  மெய்க்காவலர்களும் சென்றனர். அது கார் காலம். 

வான் முழுதும் கருமை அப்பிக் கிடந்தது.சில்லென்ற குளிர் காற்று மெல்ல வீசி மெய்யைச் சிலிர்க்க வைத்தது.

அந்தக் குளிரும் அந்தக் குளிரில்மெல்லத் தலையைத்  துவட்டிக் கொண்டிருக்கும் மரங்களும் மன்னனை அங்குமிங்கும் நகரவிடாமல் செய்தது.நெடுநேரம் இயற்கை அழகை ரசித்தபடி அங்கேயே நின்றிருந்தான் பேகன்.


திடீரென்று ஏதோ ஒரு குரல்.

குரல் என்பதைவிட ஏதோ ஒரு சிணுங்கல்

பேகனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.


அங்கே ஓர் அழகிய  மயில்.தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

நான் கேட்டது மயிலின் அகவல் இல்லையே...

வேறெதுவாக இருக்கும்?

இந்தச் சிணுங்கல் ஏன் வந்தது?

கேள்விகள் வந்து விடைகேட்டு நிற்க

இன்னும் கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான் பேகன்.


சர் சர் என்ற ஒலி மயிலிடமிருந்துதான் வருகிறது.

மயில் ஆடும்போது எதற்காக இப்படி ஒரு ஓசை எழுப்ப வேண்டும்?

ஒருவேளை மயிலுக்குக் குளிர்கிறதோ?குளிரால் வரும் நடுக்கத்தினால் பிறக்கும் ஒலியாக இருக்குமோ?


இருக்கலாம்.இருக்கலாம்.

ஐயோ...இந்த மயில் குளிரால் நடுங்குகிறதே.

என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்

உடனே சற்றும் தயங்காமல் தான் போர்த்தியிருந்த விலை உயர்ந்த போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்திவிட்டான் பேகன்.

அருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு மன்னன் முகம் பார்த்திருந்தனர்.

"ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்.

நான் ஏதும்  தவறாக செய்துவிட்டேனா?"

என்று கேட்டார் மன்னன் .


 "இல்லை மன்னா !தங்களின் மனிதாபிமானத்தை  எண்ணி வாயடைத்துப் போய் நிற்கிறோம்.மனிதனுக்கு மனிதன் உதவுவது இயல்பு.ஒரு சாதாரண விலங்கு. அது துன்பப்படுவதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத தங்கள் பண்பை என்னவென்பது?"என்று பாராட்டி நின்றனர்.


மயில் போர்வையை உதறிவிட்டுப் பறந்து போய்விட்டது. காவலர் பேகன் அளித்த போர்வையை கையில் எடுத்துக் கொண்டனர். உலகுக்கு அறிவிக்கக் காவலர்களுக்கு ஓர் நல்ல செய்தி கிடைத்துவிட்டது.மனம் உற்சாகத்தால் துள்ளிக் கொண்டிருந்தது.

பேகனுடைய உள்ளத்தின் மேன்மையை எடுத்துக்காட்டும் அந்த  நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நெகிழ்ந்தபடியே மன்னனோடு நடந்தனர்.


அனைவரும் அரண்மனையைச் சென்றடைந்தனர். காவலர்கள் மன்னன் மயிலுக்குப் போர்வை அளித்த நிகழ்வை அனைவரிடமும் சொல்லிச் சொல்லிக்

கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தச் செய்தி பரணர் என்ற புலவர் காதுக்கும் சென்றடைந்தது.

மனிதனுக்கு மனிதன் உதவுவதைப் பார்த்திருக்கிறேன்.

உயிர்களுக்கு ஊறு செய்யா உயர்ந்த உள்ளம் படைத்தவர் பண்பாளர்களைப் 

பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஒரு விலங்குக்கு போர்வை அளித்து அதைக் குளிரிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்றகொடைமடத்தானை இப்போதுதான் அறிந்திருக்கிறேன் என்ற வியப்போடு பரணர் பேகனைப் பாராட்டி ஒரு  பாடல் பாடினார்.

பாடல் இதோ உங்களுக்காக.


"அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி போலக்

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது

படைமடம் படான் பிறர் படைமயக் குறினே"



"தண்ணீரே இல்லாமல் போன குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயலிலும் மழை பொழிகிறது; சிறிதும் பயன்படாத உவர்ப்பு நிலத்திலும் மழை பெய்கிறது. இங்கேதான் பெய்ய வேண்டும், இங்கே பெய்யக் கூடாது என்று மழை யோசிப்பதில்லை. மதம் பொருந்திய யானையையும் வீர தண்டையை அணிந்த காலையும் உடைய பேகன் அந்த மழையைப் போன்றவன். வரம்பு இல்லாமல், ஆராய்ச்சி இல்லாமல் கொடையைப் பொழிகிற மழை அவன். அவன் கொடை மடம் உடையவனாக இருக்கிறான் .

கொடைமடம் கொண்டவன் என்பதால் வீரச் செயல்களிலும் அறியாமை உடையவன் என்று எண்ணிவிடாதீர்கள்.படையைக் கொண்டு போரிடும் திறத்தில், நன்றாகச் சூழ ஆராய்ந்து இடத்துக்கும் காலத்துக்கும் தன் வலிமைக்கும் மாற்றான் வலிமைக்கும் ஏற்றபடி  போர் வியூகம்  வகுத்துப் போரிடுவதில் வல்லவன். என் மன்னன் கொடை மடம் படுவானே அல்லாமல் படை மடம் படமாட்டான்” என்று பாடி முடித்தார் பரணர்   . 


“மயில் மேலாடையை உடையாக உடுக்குமா? அன்றி மேலே போர்வையாகத்தான் போர்த்திக் கொள்ளுமா?   இது எதைப்பற்றியும் பேகன் சிந்திக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவன் உள்ளத்தில் மயிலை குளிரிலிருந்து காப்பாற்ற வேண்டும் 

அதன் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்பது மட்டுமே இருந்தது. மயிர் மீது கருணை  இருந்தது.இரக்கம் பிறந்தது.

அதனைக் குளிரிலிருந்து எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மன்னனை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் தடுத்தது.

தன்னை மறந்து மயிலுக்குப் போர்வை போர்த்தி விட்டான்.  

இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டிராமல், கிடைத்ததைதன் கையில்  இருப்பதை நினைத்தும் கொடுத்துவிடுவதைத்தான் கொடை மடம் என்று சொல்வார்கள். அதைத்தான் பேகன் செய்திருக்கிறான்.

இப்போது கொடை மடம் என்றால் என்ன என்பது புரிகிறதல்லவா?

பேகன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்

என்றுச் சொல்லி மட மயிலுக்கு

கொடை மடம் கொடுத்ததவன் பேகன்

என்று இன்று வரை நம்மையும் கொண்டாட வைத்துவிட்டார் பரணர்.






கருத்துகள்

Popular Posts