வருமுன் காப்போம்


வருமுன் காப்போம் ( பேச்சுப் போட்டி)

தித்திக்கும் தீந்தமிழ் திக்கெட்டும் ஒலிக்கட்டும்.  என் தாய்த் தமிழ்மொழி தரணியை ஆளட்டும்.

நற்றமிழ் கேட்டு நல்லதோர் தீர்ப்பு வழங்க வந்திருக்கும் நடுவர் அவர்களே!

செந்தமிழ்த் தேன் அள்ளிப் பருக ஆவலோடு அமர்ந்திருக்கும் ஆன்றோரே!

சான்றோரே! ஆசிரிய பெருமக்களே!

அணிசெய் மாணவ  மணிகளே!

அனைவர்க்கும் முதற்கண் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்  பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 

"வருமுன் காப்போம் "

தலைப்புக்குள் செல்வதற்கு முன்பாக

நான் உங்களிடம் சில  கேள்விகள் கேட்க விரும்புகிறேன். 

மழை பெய்த பிறகு... குடை தேடலாமா?

வீடு எரிந்த பிறகு... தண்ணீர் தேடலாமா?

தீர்ப்பு எழுதிய பிறகு  

வாதத்தை முன்வைக்கலாமா?

சற்றே சிந்தியுங்கள் .

எல்லாம் வந்து முடிந்தபின்னர்,

எங்கே தீர்வு கிடைக்கும் என்று

ஓடி அலைவதால்  என்ன பயன்?

முடியாதல்லவா?

ஆபத்து வருவதற்கு முன்பே அறிந்து,
அழிவு வருவதற்கு முன்பே தடுத்து,
இழப்பு வருவதற்கு முன்பே பாதுகாத்து

வாழ்வதுதான் புத்திசாலித்தனம் .

இதைத்தான் "வருமுன் காப்போம்"

என்று சொல்லி புரிய வைக்க வந்திருக்கிறேன்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.”

என்றார் வள்ளுவர்.

"வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணராமல் வாழ்பவனின் வாழ்க்கை,
நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல எரிந்து அழிந்துபோகுமாம்."

எவ்வளவு பெரிய உண்மை !

நோய் வருமுன் தடுப்போம்!

நீர் வற்றுமுன் சேமிப்போம்!
நெருப்பு பற்றுமுன் பாதுகாப்போம்!

இயற்கை அழியுமுன் காப்போம்!

இதுதான்...

வருமுன் காப்போம்!

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

ஆம்....

சுவர் இருந்தால் தானே சித்திரம் 

வரைய முடியும்.?

உடல் ஆரோக்கியம் இருந்தால்தானே

ஓடியாடி உழைக்க முடியும்.


"உடலில் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்;

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ?"

என்று கேட்கிறார் கவிமணி.

சிந்தியுங்கள்....

சற்றே சிந்தியுங்கள்.

பொன் பொருள் 

நிலபுலன் 

வீடு பணம் எல்லாம் 

மகிழ்ச்சியைத் தந்துவிடுமோ?

மகிழ்ச்சி என்பது மனத்தில்

 இருக்கிறது.  

உடல்நலத்தில் இருக்குகிறது.

சுற்றுச் சூழலில் இருக்கிறது.


நோய் வந்த பிறகு மருத்துவரைத் தேடுவதைவிட,
நோய் வராமல் தடுப்பதே அறிவு!

உணவை முறைப்படுத்துவோம்.
உடலைப் பாதுகாப்போம்.

உயிரை உறவை

உயிரினங்களை

மகிழ்விப்போம்!

ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்....

அது நமக்குத் தந்த நிழலின்

அருமையை நினைத்துப் பாருங்கள்.

தண்ணீரை வீணாக்குவதற்கு முன்....

தாகத்தால் தவித்த

நேரங்களை நினைத்துப் பாருங்கள்.

கானல் நீரை நம்பி ஓடும் காட்டுவிலங்குளின் நிலைமையைக் கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

நீரை வீணாக்க மனம் வருமா?

மரங்களையும்  வெட்டி வீழ்த்த

துணிவு தான் வருமா?

"நீரின்றமையாது உலகு"

நீர்தான் உலகில் உயிர்நாடி.

அந்த நீரைப் பெற மழை வேண்டும்.

மழையைப் பெற மரங்கள் வேண்டும்

மரங்கள் வளர மறுபடியும் நீர் வேண்டும்.

ஒன்றையொன்று சார்புடையதுதான் 

மனிதனும் உயிரினங்களும்.

அதனால்....

மரம் காப்போம் — மழை பெறுவோம்!
நீர் காப்போம் — உயிரினங்கள் காப்போம்!

இயற்கை காப்போம் — 

இடரில்லா எதிர்காலத்திற்கு

வழி அமைப்போம் !

சாலைப் பாதுகாப்பிலும்
வருமுன் காப்போம் என்ற சிந்தனை வேண்டும்!

தலைக்கவசம் அணிவது காவல்துறைக்காக அல்ல...

நம் தலைக்காக!

நம் உயிருக்காக!

சீட் பெல்ட் அணிவது 

சட்டத்திற்காக அல்ல...

சடுதியில் நம் உயிர் பறிக்கப்பட்டு

போய்விடக்கூடாது என்ற நல்ல 

நோக்கத்திற்காக...

சாலை விதிகளை மதிப்பது 

பயத்திற்காக அல்ல...

நம் பாதுகாப்பிற்காக!

ஒரு நொடியின் அலட்சியம்...

சடுதியில் மரணம் 

குடும்பத்தின் வாழ்நாள் 

நம் கையில் என்ற உணர்வு 

உள்ளத்தில் இருக்கட்டும்!

வேகம் வேண்டாம் 

விவேகம் வேண்டும்!
அவசரம் வேண்டாம் 

அறிவு வேண்டும்!
அலட்சியம் வேண்டாம்

அக்கறை  இருக்கட்டும்!

அருமை நண்பர்களே!

வருமுன் காப்பது என்பது
ஆபத்தைப் பார்த்து அஞ்சுவது அல்ல!

ஆபத்தை உணர்ந்து...

அறிவுடன் செயல்படுவது!

தீமை வந்த பிறகு தீர்வு தேடுவது 

எதற்கு?

தீமை வருவதற்கே இடம் கொடுக்காமல் தடுப்பதுதான் விவேகம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கணியன் 

பூங்குன்றனார்.

அவர் "

"தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன" 

என்பார் .

நமக்கு வரும் நன்மை தீமைகளுக்கு நாம்தான் காரணம். அதுபோல  

நமக்கு ஒரு நோய் வருகிறதென்றால் அதற்கும் நாம்தான் காரணமாம்...

அதோடு விட்டுவிட்டாரா நோய்  தணிக்கும் மருந்தும் நம் கையில்தான்  இருக்கிறது என்கிறார்.

எவ்வளவு பெரிய உண்மை!

நாம் இன்று எடுக்கும் ஒரு சிறிய முன்னெச்சரிக்கை...

நாளை ஒரு பெரிய துயரத்தைத் தடுக்கலாம்!

நாம் இன்று நடும் ஒரு மரம்...

நாளை ஒரு தலைமுறைக்கு நிழலாகலாம்!

நாம் இன்று சேமிக்கும் ஒரு துளி நீர்...

நாளை ஒரு உயிரின் தாகம் தீர்க்கலாம்!


ஆகவே நண்பர்களே...

வருமுன் சிந்திப்போம் .
வாழ்வைச் சிறப்பிப்போம்!

வருமுன் தடுப்போம் .
வளத்தைப் பெருக்குவோம்!

வருமுன் காப்போம் .
வருங்காலத்தைக் காப்போம்!

இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்

"தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்த பின்உணவும்

நோயை ஓட்டி விடுமப்பா

நூறு வயது தருமப்பா!"என்ற  கவிமணி யின் பாடல் வரிகளை மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் காக்கும் ஒவ்வொரு உயிரிலும்...

நம் மனிதநேயம் வாழ்கிறது!

நாம் காக்கும் ஒவ்வொரு மரத்திலும்...

நம் எதிர்காலம் துளிர்க்கிறது!

நாம் காக்கும் ஒவ்வொரு துளி நீரிலும்...

நாளைய தலைமுறையின் நம்பிக்கை ஒளிர்கிறது!

ஆபத்து வந்தபின் ஓடாதே...

ஆபத்து வருமுன்பே விழித்துக்கொள்!

வருமுன் காப்போம்!
வாழ்வை வளமாக்குவோம்!
வருங்காலத் தலைமுறைக்கு...

வாழத் தகுந்த உலகை விட்டுச் செல்வோம்!

நன்றி!
வணக்கம்!

கருத்துகள்

Popular Posts