நளிமலை நாடன் நள்ளி
நளிமலை நாடன் நள்ளி
புலவர் ஒருவர் கண்டீரம் நாட்டுக்குட்பட்ட தோட்டி மலைப் பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
காதுகள் அடைத்து கண்கள் மங்குவதுபோல இருக்கிறது.கால்கள் தள்ளாடுகின்றன.இதற்குமேல் நடக்க முடியாது என்ற நிலை. நடக்கமுடியாமல் ஒரு பலாமரத்தடியில் அப்படியே அமர்ந்துவிடுகிறார்.
அப்போது வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு வீரன் ஒருவன் அந்த வழியாக வருகிறான்.பார்ப்பதற்கு வசதியான வீட்டுப் பிள்ளை போல தெரிகிறது.
யாராயிருக்கும்?.
இளவரசனாக இருப்பானோ?
இருக்கலாம்.... இருக்கலாம். இளவரசனாக இருந்தால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் .இப்படி ஒரு எண்ணத்தில் புலவர் எழும்ப முயன்றார்.
இளைஞனும் புலவரைப் பார்க்கிறான்.
பார்த்த மாத்திரத்தில் புலவரின் நிலைமை புரிந்து போயிற்று.
அதற்குள் புலவர் கையைக் குவித்துக்கொண்டே எழும்ப எத்தனிக்கிறார். "பரவாயில்லை....அப்படியே அமர்ந்திருங்கள்" என்று தட்டிக் கொடுக்கிறான் அந்த இளைஞன்.
அங்குமிங்கும் பார்த்த இளைஞன்
விறகுகளைப் போட்டு தானே தன் கையால் தீயை மூட்டுகிறான் .தான் வேட்டையாடி , கொண்டு வந்த மானின் தசையை தீயில் வாட்டி எடுத்து
"புலவரே! தாங்கள் மிகவும் களைப்புடன் இருக்கிறீர்கள்.இந்த உணவை உண்டு சற்று பசியாறுங்கள்" என்கிறான்.
புலவருக்கோ மிக்கப்பசி..மறுத்துப் பேசும் மனநிலையில் அவர் இல்லை.
பசிக்கு இப்போது அவருக்குத் தேவை உணவு. அது எந்த உணவாக இருந்தால் என்ன? யார் கொடுத்தால் என்ன?
வாங்கி வயிறார உண்டார்.
புலவர் உண்ணும்வரை அவரையே பார்த்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன்.உணவு சற்று விக்குவதுபோல இருந்ததால் திணறினார் புலவர்.
"ஐயா! இருங்கள் இதோ வந்துவிடுகிறேன்" என்றபடி ஓடோடிச் சென்று அருகிலிருந்த அருவியிலிருந்து நீரை மொண்டு கொண்டு வந்து கொடுத்து, புலவரை ஆசுவாசப்படுத்தினான் அந்த இளைஞன்.
புலவர் நன்றியோடு அந்த இளைஞனைப் பார்த்து மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டார்.
"பரவாயில்லை... "கண்களால் பதிலளித்தபடி மெல்லப் புன்னகைத்தான் அந்த இளைஞன்.
புலவருக்கு விடைபெற்றுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
நன்றிப் பெருக்கோடு விடைபெற்றார்.
அப்போது அந்த இளைஞன், "ஐயா!உங்களைப் பார்த்தால் புலவரைப் போல இருக்கிறது. உங்களுக்கு மன்னர்கள் தக்க பரிசில்களை வழங்குவார்கள். காட்டு வாசிகளாகிய என்னிடம் உங்களுக்கு வழங்க பொருட்கள் யாதும் இல்லை. என் செய்வது!" என்று சொல்லி வருத்தப்பட்டான்.
சற்று நேரத்தில் ஏதோ நினைவு வந்தவனாக மார்பைத் தடவினான்.அணிந்திருந்த முத்துமாலை கைகளில் பட மெல்ல மார்பில் அணிந்திருந்த விலை உயர்ந்த முத்துமாலையைக் கழற்றினான்.கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றினான். அவற்றைப் புலவர் கையில் கொடுத்து,"வேறொனாறும் தர இயலவில்லை. இவற்றையாவது பெற்றுக்கொள்ளுங்கள்" என்று புலவர் கையில் தந்தான்.
புலவர் ஆச்சரியமாக அந்த இளைஞன் முகத்தையே பார்த்து நின்றார்.வார்த்தைகள் வரவில்லை.
இத்தனை விலை உயர்ந்த அணிகலன்களைக் கொடுப்பவன் ஒரு சாதாரணமான குடிமகனாக இருக்க வாய்ப்பில்லை.கண்டிப்பாக இவன் ஒரு அரசகுமாரனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து,
"நீங்கள் எந்த நாட்டவர் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் புன்னகையை மட்டுமே விடையாகத் தந்தான்.
"யார் நீரோ "என்று மறுபடியும் கேட்டார்
புலவர். பதிலேதும் தராமல் கடந்து போனான் அந்த இளைஞன்.
மறுபடியும் தன் பயணத்தைத் தொடர்ந்தார் புலவர்.அந்த இளைஞனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்த,
எதிரில் வந்தவர்களிடம் தான் பார்த்த அந்த இளைஞனைப் பற்றி விசாரித்துக்
கொண்டே வந்தார்...அவர்கள் இவ்வளவு விலை உயர்ந்த மணிமாலையைப் பரிசிலாக வழங்கியவர் மன்னன் நள்ளியாக மட்டுமே இருக்க முடியும் என்று உறுதியாகக் கூறினர்.
"நாம் கேட்காமலேயே நமக்கு உதவியும் செய்து, முத்து மாலைகளையும், கடகத்தையும் தந்துவிட்டு , தான் யாரென்ற அடையாளமும் கூடச் சொல்லாது சென்றது, வள்ளல் கோப்பெரு நள்ளியா ? " வாயடைத்துப் போனார் புலவர்.
அங்கேயே நள்ளியைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடினார்.
பாடல் இதோ உங்களுக்காக
| வன்பரணரை அடுத்து நிறைய புலவர்கள் நள்ளியைக் காண வந்து, அவனது கொடைத்திறத்தையும் வீரத்தையும் புகழ்ந்து, பாடல்கள் பாட ஆரம்பிக்க, அவன் புகழ் எங்கும் பரவியது . |
"நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி"
"தங்கள் மனதில் உள்ளதை மறைக்காது, தன்னிடம் அன்புடன் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை இடையூறு இல்லாது நன்றாக வாழ்வதற்காக எல்லையில்லாதுப் பொருட்களைக் கொடுத்தவனும், போரில் வெற்றி பெற்ற பெரிய கைகளையுடையவனும், துளியையுடைய மழை பொய்யாது பொழியும், காற்றுத் தங்கும் உயர்ந்த உச்சிகள் கொண்ட அடர்ந்த மலைகளையுடைய நாட்டையுடையவன் நள்ளி"
கருத்துகள்
கருத்துரையிடுக