தொண்ணூறும் தொள்ளாயிரமும்

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

ராகவன் கையைப்  பிடித்துக் கொண்டு
துள்ளல் போட்டு நடந்து வந்தாள்
தாரணி.
தாரணி தமிழாசிரியர் ராகவனின்
பேத்தி.
நேற்றுதான் நகரத்திலிருந்து
ஊரிலிருக்கும் தாத்தா வீட்டிற்கு 
வந்திருந்தாள்.
வந்த நேரத்திலிருந்து தாத்தா
ஆற்றைப் பார்க்கப் போகவேண்டும் 
என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.
இன்று காலையிலேயே இருவரும்
ஆற்றை நோக்கி நடந்து வந்தனர்.

வரும் வழியில் ஆற்றோரமாக நிற்கும்
பனை மரங்களை எல்லாம் 
எண்ணிக் கொண்டே வந்தாள் தாரணி.
ஒன்று, இரண்டு, மூன்று,
நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு
என்று சொல்லிக் கொண்டு வந்தவள்
ஒன்பது என்பதைச் சொன்னதும்
தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள்.

"என்ன ?"என்றார் தாத்தா.

"தாத்தா இந்த எண்களுக்கு எல்லாம்
யார் பெயர் கொடுத்தது தாத்தா?"

"நம் முன்னோர்கள் எண்களை 
அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு 
பெயரிட்டு வேறுபடுத்தி சொல்லி
இருக்கிறார்கள்."

"அப்படியானால் இவை இடுகுறிப் 
பெயர்கள் இல்லையா தாத்தா?"

"ஆம்...எந்த ஒரு காரணமும் கருதாது
நம் முன்னோர்கள் இட்டு வழங்கியப்
பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் "

"அப்படியானால் எல்லா எண்களும்
இடுகுறிப் பெயர்கள் இல்லையா தாத்தா?"

"ஏன்.... அதில் என்ன ஐயம்?

"ஐயம் இருக்கு தாத்தா?
அதனால்தானே கேட்கிறேன்."

"சரி கேள். எந்த எண்ணில் ஐயம்?"

"ஒன்பது,தொண்ணூறு,தொள்ளாயிரம்
இவற்றை எல்லாம் சொல்லும்போது
குழுவோடு ஒத்துப்போகாமல் தனித்து
நிற்பது போல தெரியலியா தாத்தா?"


"என்ன சரியில்லை  என்கிறாய்?"

"அதுதான் சொல்லிப் பாருங்களேன்.
ஒன்று, இரண்டு, மூன்று, 
நான்கு, ஐந்து, ஆறு , ஏழு ,எட்டு
ஒன்பது , ....

ஒன்பது மட்டும் மாறுபட்டு ஒலிப்பது
போல் தெரிகிறது இல்லையா தாத்தா.
அது ஏன் என்பதுதான் என் கேள்வி?

"ஒன்பது என்பது பழங்காலத்தில்
தொண்டு என்றுதான் அழைக்கப்பட்டதாம்.
தொண் என்றால் முன்னால் என்று
ஒரு ஒரு பொருள் உண்டு.
தொண்டு என்பது பத்துக்கு
முன்னால் உள்ள எண் என்பதைச்
சொல்வதற்காக வந்திருக்கலாம்."

"உண்மையாகவா?"

காலென பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென
ஐந்தென ஆறென
வேழென வெட்டெனத்
தொண்டென..."
என்று பரிபாடலில் ஒன்பது என்பது
தொண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒன்பதுடன் பத்து
சேர்ந்தால் தொண்பது
என்று அழைத்தனராம்."

"ஒரே குழப்பமாக இருக்கிறது. 
எனக்கு உங்கள் தொண்டும் 
புரியவில்லை.
தொண்பதும் புரியவில்லை.
வாங்க இந்த மரத்து நிழலில் 
உட்காருவோம். விளக்கமாக 
சொல்லுங்க."

"இரண்டு + பத்து = இருபது
மூன்று + பத்து =முப்பது
நான்கு + பத்து =நாற்பது 
ஐந்து + பத்து =ஐம்பது
ஆறு + பத்து =அறுபது
ஏழு + பத்து =எழுபது
எட்டு + பத்து =எண்பது

சரியா தாத்தா? "

"கெட்டிக்காரி நன்றாக 
படித்திருக்கிறாய்."

"பத்து
இருபது
முப்பது
நாற்பது
ஐம்பது 
அறுபது
எழுபது 
எண்பது
அடுத்து ஒன்பது
என்றுதானே எழுத வேண்டும்.
நாம் தொண்ணூறு என்று
ஏன் எழுதுகிறோம்.?
அல்லது
ஒன்பது + பத்து = தொன்பது
என்றுதானே வர வேண்டும்.
தொண்ணூறு என்று சொல்வது
எப்படி சரியாகும்?

"தொன்பது என்றுதான்
இருந்திருக்க வேண்டும்.
உன் கேள்வி சரியானதுதான்."

"ஒத்துகிட்டீங்களா....ஒத்துகிட்டீங்களா?
இன்னும் கேளுங்கள்.

இரண்டு + நூறு = இருநூறு
மூன்று + நூறு = முந்நூறு
நான்கு + நூறு = நானூறு
ஐந்து + நூறு = ஐந்நூறு
ஆறு + நூறு = அறுநூறு
ஏழு + நூறு = எழுநூறு
எட்டு+ நூறு = எண்ணூறு

நூறு
இருநூறு
முந்நூறு
நானூறு
ஐந்நூறு
அறுநூறு
எழுநூறு
எண்ணூறு

இதுவரை சரியாக வருகிறதா?"

"ம்...சொல்லு."

"அடுத்து தொண்ணூறுதானே
வர வேண்டும். 
அதெப்படி தொள்ளாயிரம்
ஒன்பது + நூறு = 
ஒன்நூறு அல்லது தொண்ணூறு
என்று வர வேண்டும்.
ஏன் தொள்ளாயிரம் என்று
சொல்கிறோம்?"

"தொள் என்றால் முந்தைய
என்று பொருள். அதனால்
ஆயிரத்திற்கு முன்னால் வரும்
என்ற பொருளில் வந்திருக்கலாம்."

"எல்லாம் வந்திருக்கலாம். போயிருக்கலாம்
என்று மழுப்பலாகவே தெரிகிறதே."


"இந்தத் தொண்டுதான்
தொண்ணூறு, தொள்ளாயிரம்,
என்று மாறி வந்துள்ளதாம்.

"தொள் + நூறு =தொண்ணூறு
தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம்
என்று தொல்காப்பியர்
புணர்ச்சி விதியில் கூறியுள்ளார்.


"தொல்காப்பியர் கதை எல்லாம் வேண்டாம்.
இந்தத் தொள் என்றால் என்ன?"

"தொள் என்றால் குறைவு என்றும்
இன்னொரு பொருள் உண்டு."

"தொண்ணூறு என்றால் குறைவு
பெற்ற நூறு. தொள்ளாயிரம் என்றால்
குறைவு பெற்ற ஆயிரமா?"

"அதிக குழப்பம் வேண்டாம்.
ஒன்பதின்  பழைய பெயர் தொண்டு.
தற்போது ஒன்பது என்று மருவி
வந்துள்ளது என்பதை
மனதில் பதிய வைத்துக்கொள்."

"ம்...அப்புறம்?"

"தொண்பது _ தொண்ணூறு
தொண்ணூறு - தொள்ளாயிரம்
தொள்ளாயிரம் - ஒன்பதினாயிரம்
என்று வந்துள்ளது. அவ்வளவுதான்.

"குழப்பத்திற்கு மேல் குழப்பம்"

"பத்தாம் இடப்பெயரான
ஒன்பது ஒன்றாம் இடத்துக்கு வந்துள்ளது."

"அப்படியானால் நூறாம் இடப்பெயரான
தொண்ணூறு பத்தாம் இடத்துக்கு
வந்துள்ளது என்று சொல்லப் போகிறீர்கள்.
 நான் சொல்வது சரியா?"

"சரிதான். அவ்வாறே ஆயிரமாவது
இடப்பெயர் தொள்ளாயிரம் 
நூறாம் இடத்திற்கு  வந்துள்ளது
என்பதையும் புரிந்துகொள்.

"இடமாறிப் போச்சு என்று
சொல்றீங்க....இல்லையா?
முன்னோர்கள் சொன்னதை ஏற்றுத்தானே
ஆக வேண்டும்?"

"ஒன்பது என்ற சொல்லே பன்னிரண்டாம்
நூற்றாண்டில்தான் வழக்கத்தில் வந்ததாம்."

"தாத்தா...போதும்....போதும்...போதும்.
ஒன்பது, தொண்ணூறு,
தொள்ளாயிரம் கதையை இதோடு
நிறுத்திக்கிடுங்க...அப்புறம் நான்
உங்களிடம் கதையே கேட்க மாட்டேன்."









.



 







Comments

  1. எண்களின் உட்பொருளை மிக எளிய முறையில் பதிவிட்டது மிகச் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts