செய்தி சொல்லும் சேதி

  செய்தி சொல்லும் சேதி -  1


அதிகாலை எழும்பியதும் காபி
குடிக்கிறோமோ இல்லையோ
கண்கள் நாளிதழைத் தேடும்.
ஒருமுறை அதிகாலையிலேயே
நாழிதழ் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்திக்கொண்டால்...
அதற்கு நாம் அடிமையாகிவிடுவோம்.
நாளிதழ் வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டால்
கண்கள் எதையோ தேடி காத்திருக்கும்.

நாளிதழ் படிப்பதிலேயே நான்
முந்தி ...நீ முந்தி ...என்று வீடுகளில்
சண்டை ஏற்படுவதுண்டு.

பத்துப் பதினைந்து நிமிடம்தான் இந்த
நாளிதழ்  களேபரம்.

படித்து முடித்தப் பிறகு 
நாளிதழ் மேசைமீது 
அனாதையாகக் கிடந்து ஆடி
ஆடி அழைக்கும்.
யாரும் சீண்டுவார்களா என அசைந்து
அசைந்து எட்டிப் பார்க்கும்.
அசைவில் கீழே விழ பழைய பேப்பர்
அடுக்குக்குமேல் கொண்டுபோய்
வைக்கப்பட்டுவிடும்.

அத்தோடு நாழிதழுக்கும் நமக்குமான
உறவு முடிந்து போயிற்று.
ஆனால் செய்திக்கும் நமக்குமான
தொடர்பு அத்தோடு முடிந்து போயிற்றா?
முடித்துக் கொள்ளலாமா? அதற்காகவா
நாளிதழ்கள் இத்தனை செய்திகளை
சுமந்து வருகின்றன ?

எவ்வளவு கரிசனமாக
அங்கேயும் இங்கேயும் ஓடி ,
அல்லும்பகலும் பாராது 
ஊண் உறக்கமின்றி,
தேடித்தேடி செய்தி சேகரித்து, தணிக்கைக்கு
உட்படுத்தப்பட்டு ,
அச்சிடப்பட்டு நம் இல்லம் தேடி
வரும் செய்திகள்
எதற்காக?
எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
விற்பனை மட்டும்தான் 
பத்திரிகையாளர்களின்
இலக்கா?
இருக்காது...இருக்கவும் முடியாது.
ஊடகங்களும் பத்திரிகைகளும்
சமூக அக்கறை கொண்டே செய்திகளை
வெளியிடுகின்றன என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

 
எல்லா செய்திகளையும் சாதாரண 
செய்தியாக சொல்லிவிட்டுப்
போவதில்லை. நமக்குள் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 
பெரும்பாலான செய்திகள் 
பிரசுரிக்கப்படுகின்றன.

நாம் செய்தியை வாசித்துவிட்டு 
அப்படியே கடந்து
போய்விடக்கூடாது.
அந்த ஊரில் இப்படி ஒரு
சம்பவம் நடந்திருக்கிறது.
அதே சம்பவம் இங்கும் நிகழலாம்
கவனமாக இருங்கள் என்று
சொல்வதற்காகத்தான் செய்திகள்.

அப்படி நம்மை விழிப்புடன் இருக்கச்
சொல்லும்  இன்றைய செய்தி
சொல்லும் சேதி உங்களுக்காக:


ஒரு பெண் சாலையில் தனியாக
நடந்து செல்கிறாள். எதிரே ஒரு
ஆண். பார்ப்பதற்கு  போலீஸ் போன்று
திடகாத்திரமான உடம்பு.
அந்தப் பெண் அருகில் சென்றதும்
முன் முன் யாரும் வருகிறார்களா 
என்று பார்க்கிறார். யாரும்
வருவதாகத் தெரியவில்லை.
பெண்ணின் கழுத்தைப் பார்க்கிறார்.
கழுத்தில் தங்கச் செயின்.
உடனே வேலையைக் காட்ட
அருகில் செல்கிறார்.
 நான் ஒரு போலீஸ் என்று
 தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஏன் கழுத்தில் தங்க நகையைப்
போட்டுக் கொண்டு தனியாக வருகிறீர்கள்?
இது திருட்டுபயம் உள்ள இடம்.
அந்தப் பக்கம் கலவரம் வேறு
நடந்துகொண்டிருக்கிறது.
கழுத்தில் கிடக்கும் நகையைக்
கழற்றி இந்த பேப்பரில் வைத்துவிட்டு
பத்திரமாகச் செல்லுங்கள் என்று
ஒரு பேப்பரை எடுத்து நீட்டுகிறார்.
அவர் பேச்சில் இருந்த கரிசனம்
அவர்மீது ஒரு நம்பிக்கையை
ஏற்படுத்திவிடுகிறது.
துணிந்து நகைகளைக் கழற்றி
பேப்பரில் வைக்கிறார்  அந்தப்பெண்.
நன்றாக பொதிந்து அந்தப் பெண்ணிடமே 
கொடுத்து பைக்குள் பத்திரமாக வைத்துக்
கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி
கரிசனமாக அனுப்பி வைக்கிறார் அந்த
மனிதர்.
நன்றி சொல்லிவிட்டு திரும்புகிறார்
அந்ததப் பெண்.நல்ல காலம் நாம் பிழைத்தோம்
என்று ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டபடி
வீடு வந்து சேர்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக
கைப்பையைத் திறந்து பார்க்கிறார்.

பேப்பரில் பொதிந்து தந்தது
 பொதிந்ததுபோல்
இருக்கிறது. மெதுவாக பேப்பரைத் 
திறந்து பார்க்கிறார்.
 அப்படியே அதிர்ந்து போகிறார்.
பேப்பரில் போலீஸ்காரர் பொதிந்துவைத்து
 தந்த நகையைக் காணோம்.
என் கண் முன்னால்தானே அந்த
போலீஸ்காரர் பொதிந்து தந்தார்.
நகை எப்படி மாயமாகப் போனது?
பதைபதைத்துப் போனார் அந்தப் பெண்.
உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு
ஓடுகிறார்.
காவல் ஆய்வாளரிடம் விசயத்தைச் 
சொல்லி அழுகிறார்.
காவல்நிலைய ஆய்வாளர்  போலீஸ்
பெயரைப் பயன்படுத்தி யாரோ இந்தப்
பெண்ணை ஏமாற்றியிருக்கிறார் என்பதைப்
புரிந்துகொண்டார்.  
அம்மா, போலீஸ்காரர் என்று
சொல்லி யாரோ உங்கள் நகைகளை
ஏமாற்றிவிட்டார்.ஒரு கம்பிளைன்ட்
எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
விரைவில் கண்டுபிடித்துக் கொடுக்கிறோம்
என்கிறார்.
.

இதுதான் நாழிதழில் வந்த
செய்தி.
இதைப் படித்ததும்  எத்தனைபேர் மனதில்
பதிய வைத்துக் கொண்டார்களோ 
தெரியவில்லை. என் தோழி  பதிய வைத்துக்
கொண்டாள்.

ஒருநாள் என் தோழி அவளுடன் வேலை பார்க்கும்
ஆசிரியை ஒருவரோடு 
ரயிலிலிருந்து இறங்கி பள்ளியை 
நோக்கிச்  சென்று கொண்டிருந்திருக்கிறார்.
பேச்சு சுவாரஸ்யத்தில் எதிரில்
யார் வருகிறார்கள் என்றுகூட
கவனிக்கவில்லையாம்.
பள்ளிக்கு மிக அருகில் வந்துவிட்டார்.
ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும்
எங்களுக்கு முன்னால் சென்று
கொண்டிருந்திருக்கின்றனர்.
பள்ளியை வந்தடைய இன்னும் இருபது 
இருபத்தைந்து
மீட்டர் தொலைவுதான் இருந்தது.
திடீரென்று ஒரு மனிதர் அருகில் 
வந்திருக்கிறார். யார் என்று நிமிர்ந்து
பார்க்கும் முன்னர் நான் போலீஸ் 
என்றார்.
அவ்வளவுதான்...அதற்கு மேல் அவர்
என்ன பேசினார் என்பதைக்
கேட்கவில்லை.டீச்சர் ஓடிவாங்க....
ஓடிவாங்க ....என்று கூறியபடி
அவர் முன்னால் ஓட்டம் பிடிக்க
பின்னாலேயே என்ன யாது என்று
கேட்காமலேயே உடன் வந்த  ஆசிரியையும் 
ஓடி வர....
மூச்சிரைக்க இருவரும் பள்ளி வாசலில் போய்  
நின்று திரும்பிப் பார்த்திருக்கின்றனர்.
அதற்குள் அந்தப் போலீசைக் காணோம்.
எப்படியோ தப்பிவிட்டார்களாம்.
காரணம் பத்திரிகையில் படித்த
செய்தி.

மறுநாள் செய்தித்தாளில் எங்கள்
பள்ளி இருந்த ரோட்டில் ஒரு வயதான
பெண்ணிடம் இதேமாதிரி பேசி
நகையை ஏமாற்றிய செய்தி 
வந்திருந்ததை எங்களிடம் கூறினார்கள்.

நாங்களும்  கொஞ்சம் அசந்திருந்தால்
கழுத்தில் அணிந்திருந்த செயினைப்
பறிகொடுத்துவிட்டு வந்திருப்போம் 
என்று சொல்லியது இன்றும்
என் நினைவைவிட்டு அகலவில்லை.

இதே பாணி திருட்டு நடைப்பயிற்சி செய்யும்
பெண்களிடம் நடந்திருக்கிறது.

எவ்வளவோ செய்தியைப் படிக்கிறோம்.
போலீஸ் பெயரைச்  சொல்லிக்
கொண்டும் தெருவில் திருடன் அலைகிறான்.
பெண்களே விழிப்புடன் இருங்கள்.
போலீஸ் என்று சொல்லி யாரும்
அருகில் வந்தால் பேச்சுக் கொடுத்து
மாட்டிக் கொள்ளாதீர்கள் என்பதைச்
சொல்வதற்காகத்தான் இந்த செய்தி.

அப்புடியா ? 
நான் ஏதோ பேப்பரை நிரப்புவதற்காக
கண்ட கண்ட செய்திகளையும்
போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்
என்கிறீர்களா?

இதுவரை எப்படி நினைத்தீர்களோ...
இருந்துவிட்டுப் போகட்டும். 
இனியாவது செய்தி சொல்லும்
சேதியை அலட்சியமாக எடுத்துக்
கொள்ளாதீர்கள்.
போலீஸ்காரர் என்று ஒருவர்
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
அருகில் வந்தால் ஜாக்கிரதை.


நாளைய செய்தி சொல்லும்
சேதி என்ன தெரியுமா?.......
நாளை வருகிறேன்.....வரட்டா...?






Comments

Popular Posts