பகைமையும் கேண்மையும்....
பகைமையும் கேண்மையும்.....
"பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின் "
குறள். : 709
பகைமையும் - எதிரியும்
கேண்மையும் -நட்பும்
கண் - விழி
உரைக்கும் - சொல்லும்
கண்ணின் - நோக்கினது
வகைமை - வேறுபாட்டினை
உணர்வார் -அறிந்து கொள்வார்
பெறின்- நேர்ந்தால், பெற்றிருந்தால்
கண்ணின் பார்வை வேறுபாட்டினை
அறிந்து கொள்ளும் திறன் மட்டும் இருந்தால்
ஒருவன் பகைவனா?நண்பனா? என்பதை
அவன் கண்களே நமக்குக் காட்டிக்
கொடுத்துவிடும்
விளக்கம் :
ஒரு மனிதனைப் பார்க்கும்போதே அவன்
உள்ளக்கிடக்கையை அறிவிக்க வல்லது கண்.
கண்ணை வைத்தே ஒரு மனிதனை
எடை போட்டுவிடலாம்.
பார்க்கும் பார்வையில் பல வகை இருக்கும்.
அந்த நுட்பம் எல்லோருக்கும் தெரியாது.
அது தெரியாமல் போவதால்தான்
பல நேரங்களில் எதிரியையும் நண்பனாக
எண்ணி ஏமாந்து போகிறோம்.
அப்படிப்பட்ட நுட்பம் தெரிந்த அமைச்சர்களை
ஒரு மன்னன் தன் அமைச்சரவையில்
வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
அப்போதுதான் எதிரியை உடனடியாக
கண்டுபிடித்து தம்மையும் தன் நாட்டையும்
காத்துக் கொள்ள முடியும் என்கிறார்
வள்ளுவர்.
"இவன் முழியே சரியில்லையே!
திருட்டு முழி முழிக்கிறானே!
இவனிடம் ஏதோ கள்ளத்தனம் இருக்கு"
என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
அப்படியானால் பார்வை ஒரு மனிதனை
எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டிக்
கொடுத்துவிடும் என்பதுதான் உண்மை.
காவல்துறையினரும் கண்களை வைத்தே
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து
விடுவார்களாம்.
கண்வழி குறிப்பறிதல்
அரசனுக்கும் காவலர்களுக்கும்
இருந்தால் போதும் என்பதல்ல.
நம்மிடமும் பார்வை வேறுபாட்டை அறியும்
திறன் இருந்தால் ...
உண்மை எது?பொய் எது ?
நண்பர் யார்? பகைவர் யார்?
என்பதை எளிதில் கண்டுபிடித்து,
தீயவர்களின் கண்ணி வலைக்குள்
சிக்கிவிடாதபடி ஒதுங்கி
பாதுகாப்பாக இருந்து கொள்ளலாமல்லவா!
கண்வழி குறிப்பறிதல் மனித உறவுகளையும்
அவர்களிடம் உள்ள மாறுபாடுகளையும்
அறிந்து கொள்ள உதவும் என்பது
இந்தக் குறள் கூறும் செய்தியாகும்.
English couplet :
"The eye speaks out the hate or friendly soul of man,
To those who know the eye's swift varying moods to
scan"
Explanation :
If a king gets ministers who can read the
movements of the eye, the eyes of foreign kings
Will themselves reveal to him their
hatred or friendship.
Transliteration :
"Pakaimaiyum kenmaiyum kannuraikkum kannin
Vakaimai unarvaarp perin"
Comments
Post a Comment