செய்தி சொல்லும் சேதி -2


 செய்தி சொல்லும் சேதி - 2

அதிகாலை 6. 30 மணி.
 வாசலில் பத்திரிகை வந்து விழுகிறது.
 எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
 ஒரு இடத்தில் என் கண்கள்அப்படியே
 நிலைகுத்திப் போனது.
 காரணம் வாழ வேண்டிய
 வயதில் இரண்டு குழந்தைகள்.
 ஆயிரம் கனவுகளோடு
 பதினேழு வருடம் கூடவே
 வாழ்ந்த மனைவி. மூவரின் படம்.
 மூவரையும் கொன்றுவிட்டு
 கணவன் கடன்தொல்லையால் 
 தற்கொலை செய்து கொண்டார்
 என்பது செய்தி.
 
 பதினாறு வயது மகன்.
 இன்னும் ஐந்தாறு வருடத்தில்
 தன் காலில் நின்று விடுவான்.
 பதின்மூன்று வயது மகள்.
 பலபல கற்பனைகள்
 வந்து கீச்சுமூச்சு காட்டும் பருவம்.
 வாழ்க்கையில் பாதிகாலம்கூட
 கடந்திராத மனைவி. பிள்ளைகளை
 எப்படியெல்லாம் வைக்க வேண்டும்
 என்று ஓராயிரம் கனவுகளோடு
 இருந்தவர்.
கணவன்மீது உள்ள அசையா
நம்பிக்கையில் ஏன் ?எதற்கு ?
என்ற எந்தக்
கேள்வியுமே கேட்காது  உடன் நடந்தவர்.
இவர்களைக் கொல்ல இவருக்கு
எப்படி மனம் வந்தது? என்று
கேள்வி கேட்க வைக்கும் முகங்கள்.

தான் மட்டும் தற்கொலை செய்து
கொள்ள வேண்டும் என்றுதான் 
நினைத்திருப்பார்.
தான் இல்லையென்றால் இவர்களால்
எப்படி வாழ முடியும் ?
கடன்காரர்கள் இவர்களையும்
விட்டுவைக்க மாட்டார்களே என்ற
அச்சம்.என்ன செய்வது?
மனதைக் கல்லாக்கிக் கொண்டார்.
இறுதியில் மூவரையும்
கொலை செய்துவிட்டு தானும் 
தற்கொலை செய்து கொண்டார் .
 
அதிக கடன் வாங்கி 
வீடு கட்டிவிட்டார்.
கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்.
 கொரோனா காலம் என்பதால் 
 நினைத்ததுபோல்
 வருமானம் வரவில்லை.
 அதற்காக கடன் கொடுத்தவர்கள் 
 இன்று போய் நாளை வா என்று
 சொன்னால் விட்டு வைப்பார்களா
 என்ன? 
 கட்டத்துக்குள் நிறுத்தி வைத்து 
 கடனைக் கேட்க ஆரம்பித்தனர்.
அவமானம் பிய்த்துத் தின்றது.
 இத்தனைநாள் மெப்பாக வாழ்ந்தாயிற்று.
 இனி மானம் போய்விடுமோ என்ற
 அச்சம். வேறு வழி தெரியவில்லை.
 விபரீத முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.
 
இவரது செயலை யாராலும்
ஞாயப்படுத்திவிட முடியுமா?

இன்னார் குடும்பத்தோடு இறந்துவிட்டார்
என்ற மரண அறிவிப்பா இந்த செய்தி?
இல்லை. அதிக கடன் வாங்காதீங்க.
அழிந்து போவீங்க ...
இதனைப் பாடமாக எடுத்து
இருப்பவர்களாவது புத்திசாலித்தனமாக
பிழைத்துக் கொள்ளுங்கள் என்று
சொல்வதற்காகத்தான் இந்த செய்தி.

கடன்...கடன்...கடன்.
தேவைக்கு அதிகமான ஆசை.
ஆடம்பர வாழ்க்கைமீது மோகம்.
அது தன் நிலைமைக்கு அதிகமாக
கடன் வாங்க வைக்கிறது.
கடன் வாங்குவது எப்போதும்
தலைக்குமேல் கத்தி இருப்பது
போன்றது.
 
 இதனால்தான் ராவணன் துயரத்தை
"கடன் கொண்டான் நெஞ்சம் போல 
கலங்கினான் இலங்கை வேந்தன் "
என்று அருணாச்சல கவிராயர் 
நெஞ்சம் நெகிழப் பாடியிருப்பார்.

ஆமாங்க...கடன்பட்டவனுக்கு நிம்மதி
இருக்காது.நிம்மதி போனால்
வாழ்க்கை போச்சு.

திருப்பிக் கொடுக்கும் திறன் இருந்தால்
கடன் வாங்கலாம். இடையில் ஏதாவது
முடை ஏற்பட்டுவிட்டால்...
என்ன செய்வீர்கள். ?இப்படி குடும்பத்தோடு
மாண்டு போவீர்களா? 

கேட்கிறது இந்த செய்தி.





 

Comments

  1. சுகபோகங்களில் அதிக நாட்டம் கொண்டு கடன் வாங்குவோரின் நிலைமை குறுகிய காலத்தில் முடிந்துவிடுகிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு நல்லப்பதிப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts