புலம்பெயர் உலகத் தமிழர் நாள்


    புலம்பெயர் உலகத் தமிழர் நாள்


"பேப்பரில் அப்படி என்னதான்
எழுதியிருக்கிறது என்று விழுந்து
விழுந்து படிக்கிறீங்க" கிண்டலடித்தாள்
பானுமதி.

"பரிட்சைக்குப் படிப்பாங்களாக
இருக்கும் "என்றாள் கோமதி.

"படித்துப் பார்.என்ன எழுதியிருக்கிறது
என்பது உனக்குப் புரியும்" என்றேன்.

"ஏன் நியூஸ் சானலில் சொல்லுவதுதானே
செய்தித்தாளிலும் வருகிறது?
பிறகு எதற்குச் செய்தித்தாளைப்
போட்டு மாங்குமாங்குன்னு
படிக்கிறீர்கள் என்று புரியவில்லை"
மறுபடியும் கிண்டலடிப்பதை
விடாமல் தொடர்ந்தாள் பானுமதி.

"உங்களுக்கெல்லாம் என்னைப்
பார்த்தால் கிண்டலாக இருக்கிறது
என்ன.....ஒரு தடவை படிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
செய்தி வாசிப்பில் உள்ள மகிழ்ச்சி
என்ன என்பது அப்போது புரியும் .
இரண்டாம் வகுப்பில் தொடங்கிய
செய்தி வாசிப்பு..."
பெருமையாகக் கூறினேன்.

"இரண்டாம் வகுப்பிலிருந்தே படித்தும்
இன்னும் பாஸாகலியா?...அதே இரண்டாம்
வகுப்பில்தான் இன்னும் இருக்கிறீர்களா?"
சொல்லிவிட்டு கலகலவென்று
சிரித்தாள் கோமதி.

"நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
செய்தி வாசிப்பில் நான் இன்றும்
அதே இரண்டாம் வகுப்பு மாணவிதான்.
இரண்டாம் வகுப்பு படிக்கும்போது
எழுத்து கூட்டி வாய்விட்டுப்
படித்தேன்.
இப்போது மனதுக்குள் படிக்கிறேன்.
வேறு ஒன்றும் வேறுபாடு கிடையாது."

"இன்று அப்படி என்ன மனசுக்குள்
படித்து வைத்திருக்கிறீர்கள்?
கொஞ்சம் மனதைத் திறந்து
காட்டுங்கள் பார்ப்போம் "
வசனம் பேசி என்னை
வெறுப்பேற்ற நினைத்தாள்
கோமதி.

என்ன வெறுப்பேற்றினாலும்
என் கண்கள் மட்டும் இன்னும்
செய்தித்தாளை விட்டு
அகலவே இல்லை.

"இங்கே பார்...
நமக்கான ஓர் செய்தி வந்திருக்கிறது."
செய்தித் தாளை கோமதியிடம்
நீட்டினேன்.

"வேண்டாம் ....நீங்களே படித்து
என்னவென்று சொல்லுங்கள்
என்று சொல்லியபடி செய்தித்தாளைக்
கையில் வாங்க மறுத்தாள்
கோமதி.

இதோ செய்தி பானுமதிக்காக
மட்டுமல்ல...உங்களுக்காகவும்தான்
என்ற முன்னறிவிப்போடு
செய்தியை வாசிக்கத் தொடங்கினேன்.

"புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும்
வெளி மாநிலங்களிலும் வாழும்
தமிழர்களின் நலன் காக்க
" புலம்பெயர் தமிழர் நல வாரியம்"
என்ற ஒரு நல வாரியம் அமைக்கப்படும்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
அறிவிப்பு."

"நிறுத்துங்க...நிறுத்துங்க..."
கத்தினாள் பானுமதி.

"புலம் பெயர் தமிழர் என்றால் ..."
கேள்வி கேட்டு மடக்கினாள் பானுமதி.

"புலம்பெயர் தமிழர் என்றால் நாம்தான்.
சொந்த மாநிலத்தைவிட்டு
பிற மாநிலத்திலோ வெளிநாடுகளிலோ
வாழும் அனைத்துத் தமிழரும் புலம்பெயர்
தமிழர் என்றுதான் அழைக்கப்படுவர்."
விளக்கம் தந்தேன்.

"இதைக் கேட்கத்தான் நிறுத்தச்
சொன்னேன் "என்று தன்
கத்தலுக்கான காரணத்தைச்
சொன்னாள் பானுமதி.

"வாரியம் எப்படி அமைக்கப்படுமாம்?"
இப்போது செய்தியைப்பற்றி
மேலும் அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆவல் கோமதியின்
குரலில் இருந்தது.

"13 பேர் கொண்ட
தமிழர் பிரதிநிதிகள் கொண்டு
இந்த வாரியம் அமைக்கப்படும்.
புலம் பெயர் தமிழர் நல நிதி
என்று 5 கோடி முன்பணத்தைக்
கொண்டு இந்த வாரியம்
செயல்படும் "என்கிறார்
தமிழக முதல்வர் ஸ்டாலின்.

"நல்ல செய்தியாக இருக்கிறதே..."

"தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும்
அவர்கள் தாய்வீடு தமிழ்நாடுதான்.
அவர்களை அரவணைப்பதும்
பாதுகாப்பதும் தாய்வீடான தமிழ்நாட்டின்
கடமை "என்று சொல்லியிருக்கிறார்
முதல்வர் ஸ்டாலின்.

"தமிழர்களின் மீது எவ்வளவு
பெரிய கரிசனை. கேட்கவே
பெருமையாக இருக்கிறது."

"வாரியம்மூலம் என்ன செய்வார்களாம் ?"

"வெளி இடங்களில் வாழும்
தமிழர்களுக்கு ஏதாவது
பிரச்சனை ஏற்பட்டால் இந்த
அமைப்புமூலம் அதனைத்
தீர்த்து வைப்பார்களாம்.
ஏதாவது சட்ட
உதவி தேவைப்படும் போது
அதனை இலவசமாக அளிக்கவும்
தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்."

"சொல்லுங்க....சொல்லுங்க
வேறு என்னவெல்லாம் கிடைக்கும்
என்று முதல்வர் சொல்லியிருக்கார்
என்று சொல்லுங்க..."
அவசரப்பட்டாள் கோமதி.

புலம்பெயர் தமிழர் குறித்த
தரவு தளம் ஒன்று அமைக்கப்படுமாம்.
இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு
விபத்து, ஆயுள்காப்பீடு மற்றும்
மருத்துவக் காப்பீடு, அடையாள அட்டை
இவை எல்லாம் வழங்கப்படுமாம்."

"என்னையும் சேர்த்துவிடுங்களேன்"
அவசரப்பட்டாள் பானுமதி.

"இரு...இரு..இன்னும் கேள்.
வெளி நாட்டுக்குச் செல்லும்
குறைந்த வருவாய் உள்ள தமிழர்
இறந்துவிட்டால் அவர்கள் குடும்பத்தில்
கல்வி பயிலும் குழந்தைகள் இருந்தால்
அவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்கப்படுமாம்."

"அடுத்து வேறு என்னென்ன...
உதவி உண்டாம்."

"இதற்காக 20 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்."

"பணமெல்லாம் ஒதுக்கி வேலையைத்
தொடங்கியாச்சா?"

"இன்னொரு முக்கியமான
செய்தியைக் கேளு...

தமிழர்களின் சங்கங்கள் யாவும்
ஒருங்கிணைக்கப்பட்டு,
ஜனவரி 12- ஆம் நாள் புலம்பெயர்
உலகத் தமிழர்
நாளாகக் கொண்டாடப்படுமாம்."

"நமக்காக  ஒரு நாளா?"

"தொண்டு செய்வாய்
துறைதோறும் துடித்தெழுந்தே"
என்ற வாசகத்தை நெஞ்சில்
நிலைநிறுத்தி , கருணாநிதி வழியில்
செயல்பட்டுவரும் இந்த அரசு
என்றென்றைக்கும் தமிழர்களின்
வாழ்வில் ஒளியேற்றும் விளக்காகவும்
அவர்களின் உற்ற தோழனாகவும்
விளங்கும் " என்ற அறிக்கையை முதல்வர்
ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

"இனிக்கும் செய்தி....இனி என்னென்ன
அறிவிப்பு வரும் என்ற
ஆர்வத்தைத் தூண்டும் செய்தி."
ஒப்புதல் வாக்குமூலம் அளித்து
விவாதத்தை முடித்து வைத்தாள் கோமதி.

"பயனுள்ள செய்தி...இல்லையா?"

வரட்டா....?


Comments

Post a Comment

Popular Posts