தீதொழிய நன்மை செயல்

தீதொழிய நன்மை செயல்
மனித மனங்கள் வேறுபடுகின்றன.
ஆனால் மதங்கள் என்றும் எங்கும் வேறுபடுவதில்லை.
சொல்ல வந்த கருத்தில் மாறுபடவுமில்லை.
மாறுபடப்போவதுமில்லை.

எல்லா மதங்களும் போதித்ததும்
போதித்துக்கொண்டிருப்பதும்
அன்பை மட்டும்தான்.

தீமை செய்யுங்கள்  என்று
எந்த மதமும் சொல்வதில்லை.
தீமையை அனுமதிப்பதும் இல்லை.
நன்மை செய்தால் நல்லது கிடைக்கும்.
தீமை செய்தால் தீமைதான் கிடைக்கும் 
என்ற கருத்துக்களை ஆழ விதைத்துச் செல்கின்றன மதங்கள்.

ஆனால் மதங்களுக்குள்
ஏன் இத்தனை மாறுபாடுகள்?
வேறுபாடுகள்?
மதத்தின் பெயரால் ஏன் சண்டைப்
சச்சரவுகள் ?
யாருமே மதம் என்ன போதிக்கிறது
என்பதை கேட்பதில்லையா?
இப்படி ஓராயிரம் கேள்விகள் உங்கள் மனதில்
எழலாம்.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் 
மனித மனங்களுக்குள் 
நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும்
வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது?

அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது?
நானும் நீங்களும் சொன்னால்
கேட்டுவிடவா போகிறார்கள்?
மதம் சொல்லியே புரியவில்லை.
நாம் சொல்லியா புரியப்போகிறார்கள்?

நமக்கென்ன வந்தது?

இப்படி ஒவ்வொருவரும் 
நமக்கென்ன ...நமக்கென்ன ...
என்று விலகிச் சென்றால் எப்படி?
யாராவது ஒருவர் பேசித்தானே
ஆக வேண்டும்.பேசிப் புரிய வைத்து
மக்களை நல்வழிப்படுத்த வேண்டாமா?

அதற்குதான் யாம் இருக்கிறோம்
என்கிறார் ஔவை.

தனது நல்வழி பாடல்களின்
முதல் பாடலே  நல்வழிப்படுத்தவதாக
அமைந்துள்ளது.

இதோ பாடல் உங்களுக்காக...

"புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள்
செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்
எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர்
சொல்லும்
தீதொழிய நன்மை செயல் "

             நல்வழி பாடல் -1



இம்மண்ணில் பிறக்கும் போதும் இறக்கும்போதும்
ஒரு மனிதன் கூடவே வருபவை
இரண்டு மட்டும்.
ஒன்று நாம் உயிரோடிருக்கும் காலத்தில்
செய்த பாவக்கணக்கு.
மற்றொன்று நாம் செய்த புண்ணியக்கணக்கு.

இவை இரண்டடையும் தவிர
வேறு எதுவும்  கூட வரப்போவதில்லை.

எவ்வளவுதான் பொருள்
சேர்த்து வைத்தாலும் 
இறக்கும்போது கூடவே எடுத்துச் செல்ல முடியாது.
ஆதலால் வாழும் காலத்தில் தீயவை செய்யாது நன்மை செய்யுங்கள்.

அனைத்து சமயங்களும்
சொல்லித் தருவதும் இவையன்றி வேறொன்றுமில்லை "
என்கிறார் ஔவை.

இதனை ஔவை தன் கருத்தாகச்
சொல்லவில்லை.
அனைத்து மதங்களும் சொல்லிச்
செல்லும் செய்தி இதுதான் என்று
தன் கருத்துக்கு வலுவான சாட்சியாக
மதங்களைக் கொண்டு வந்து
நிறுத்திவிட்டார்.

வாழும் காலத்தில் உன்னால் முடிந்த அளவுக்கு நன்மை செய்.
தீமை செய்யாதே. இதுதான் மதங்களின் 
போதனை.

இதனைக் கேட்டால் போதும்.
உலகம்
அமைதியாக இருக்கும்.
என்று அனைத்து மதங்களையும் கூட்டி வந்து நல்வழியின்
முதல்பாடலைத் தொடங்கியிருக்கிறார் ஔவை .

நல்ல தொடக்கம்  இல்லையா?

வரட்டா....



Comments

  1. நல்வழிப் பாடல் மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts