நீலச் சிற்றாடைக்கு நேர்

நீலச் சிற்றாடைக்கு நேர் 

கடையேழு வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்து
 எண்ணப்படுபவர் பாரி.
 முல்லைக்கு  தேர் கொடுத்தார் பாரி என்று காலமெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பாரியை அறிந்திருக்கிற நாம்
பாரி மகளிர் பற்றி அதிகமாக
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
பாரி மகளிர் என்றால் அங்கவை,சங்கவை
 அவ்வளவுதான் நாம் தெரிந்து
வைத்திருப்பது. அவர்கள் வரலாறும்
நெடியது. இலக்கியத்தோடு
தொடர்புடையது.

பாரி தன்  இரண்டு மகள்களுக்கும்
திருமணம் செய்து
வைக்கும் முன்பாகவே 
இறந்து விடுகிறார். அதனால்  இவர்களுக்குத்
திருமணம் செய்து வைக்கும்
பொறுப்பை பாரியின் நண்பரான 
கபிலர் என்ற புலவர் கையிலெடுத்து
வேற்று நாட்டு மன்னர்களோடு
பேசிப் பார்க்கிறார். யாரும்
பாரி மகளிரை மணம் முடிக்க
முன்வரவில்லை.
அந்தக் கவலையில்  இறுதியில் கபிலரும்
உயிர் துறந்து விடுகிறார்.

மன்னன் இல்லா நாடு கதவு இல்லா
வீடு போன்றது.
யாரும் எந்த நேரத்திலும் வீட்டிற்குள் நுழைந்து
அத்தனை பொருட்களையும் அள்ளிப் செல்லலாம்.
இந்தச் சூழலை மூவேந்தர்கள்
தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
மூவேந்தர்கள் பறம்பு நாட்டை 
அபகரித்து கொண்டனர்.

இப்போது பாரி மகளிருக்கு
நாடுமில்லை. இருக்க வீடுமில்லை.
ஆதரிக்க ஆளுமில்லை
என்ற சூழல் ஏற்பட்டது.

என்ன செய்வது?
யாரிடம் போய் உதவி கேட்டு
நிற்பது?
காட்டிற்குள் ஒரு குடிசை அமைத்து 
அதில் வாழ்ந்து வருகின்றனர்.

பாரியின் மகளிருக்கு திருமணம் செய்து
 வைக்க முடியாத கவலையில்
 கபிலர் உயிர் துறந்தார் என்ற செய்தி
 நாடு முழுவதும் பரவியது.
 ஔவையார் காதுகளுக்கும்
 வந்து  சேர்ந்தது.
பாரியின் மகள்கள் ஏதிலர்களாக
நிற்கலாமா?
 பதறிப் போகிறார் ஔவை.

அந்தப் பிள்ளைகளைப் பார்த்து எப்படியாவது அவர்களுக்கு 
திருமணம் செய்து 
ஓர் அடைக்கலம் தேடி
கொடுத்துவிட  வேண்டும் என்று நினைக்கிறார் ஔவை.
ஆனால் அவர்களை
 எங்கே போய் தேடுவது?
இதுவரை
நான் அவர்களைப் பார்த்ததில்லை.

பார்த்திராதவர்களை
எப்படி அடையாளம் 
கண்டு கொள்வது ?
என்ன அடையாளத்தைச் சொல்லி தேடுவது?
இப்படி பல்வேறு குழப்பத்திற்கிடையில் கையில்
கம்போடு காட்டு வழியாகப் 
பயணமாகிறார் ஔவை.

கால்போன போக்கில்
நடக்கிறார். நேரமாகிக் கொண்டே இருந்தது.
வானம் கருமேகம்  சூழ
இருட்டிக் கொண்டு வந்தது.
இப்பவோ இன்னும் சிறிது நேரத்திலோ
மழை கொட்டிவிடும் என்று நினைக்கும் 
அளவுக்கு கும்மிருட்டு வந்து
கவ்விக் கொண்டது.
சிறு தூரல்களை அனுப்பி
பூமியைத் தொட்டு விளைட்டுக்
காட்டிக்கொண்டிருந்தது வானம். 

மழைக்கு எங்கே ஒதுங்குவது?
எங்கும் வீடுகள் தெரியவில்லையே.
கண்கள் அங்குமிங்கும் ஏதாவது வீடுகள்
இருக்கின்றனவா என்று தேட
தொலைவில் ஒரு பழைய குடில் ஒன்று இருப்பது கண்களில் பட்டது.
வேகவேகமாக நடக்கிறார் ஔவை.
அதற்குள் சேலை முழுவதும் நனைந்து
 கால்களுக்குத் தளையிட
போராடிக் கொண்டிருந்தது.
போராடி முன்னேறி எப்படியோ குடிசை தாழ்வாரத்தில்
போய் நின்று கொண்டார் ஔவை.

அப்போது உள்ளிருந்து வந்த ஒரு பெண்
"அம்மா...உள்ளே வாருங்கள்"
என்று அழைத்தார்.
நிமிர்ந்து பார்த்த ஔவை சற்று 
தடுமாறிப் போனார்.
தயக்கத்தோடு அவளையே
பார்த்து நின்றார்.

தடுமாற்றம் தணியும் முன்னே
"ஔவையே வாருங்கள் "என்று
உள்ளிருந்து மற்றுமொரு குரல்.
அசந்து போகிறார் ஔவை.

"யாரம்மா நீங்கள்?
 என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?"
 சாதாரணமாக கேட்கிறார் ஔவை.

"பார்த்திருக்கிறேன் ."
ஒற்றை வார்த்தையில் பதில்
சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்
அந்தப் பெண்.

"என்னை பார்த்திருக்கிறாயா?
நான் உன்னைப் 
பார்த்ததே இல்லையே."

"நாங்கள் பார்த்திருக்கிறோம்."
மறுபடியும் ஒத்த குரலில் இருவரும் சேர்ந்து பதிலளித்தனர். 

அத்தோடு நின்றுவிடாமல்
"மழையில் தலையெல்லாம்
நனைந்திருக்கிறதே" என்று
துவட்டிவிட தொடங்கினாள் ஒரு பெண்.

"உடை யெல்லாம் நினைந்திருக்கிறது.
தங்களுக்கு
மாற்றுத் துணி வழங்க எங்களிடம்
விலை உயர்ந்த ஆடை எதுவுமில்லை.
இதோ இந்த
நீலச் சிற்றாடையைத் தவிர வேறு
எதுவுமில்லை. இதனை மாற்றிக்
கொள்ளுங்கள்" என்று கையில்
நீல சிற்றாடையை நீட்டியபடி
நிற்கிறாள் இன்னொருத்தி.

நெகிழ்ந்து போகிறார் ஔவை.

துணியை மாற்றிவிட்டு வந்த ஔவை யாரிந்த பெண்கள் என்று ஒரு குழப்பமான மனநிலையில்
கீழே அமர்கிறார்.

"அம்மையே! தங்களைப் பசியாற்றி
அனுப்ப இந்தக் கூழையும்
கீரையையும் தவிர வேறு எதுவும்
எங்களிடம் இல்லை. நீங்கள்
இதனை உண்டு சிறிது 
பசியாறுங்கள் தாயே "
என்றனர்.

"நல்லது...அன்போடு தரும்
  உணவு இனிதென்பேன்.
அமுதென்பேன் "
என்றபடி உணவு உண்டார்.

"என்னைத் தெரியுமா "
மறுபடியும் அதே கேள்வி.

"ஓ..தெரியுமே.."

"யார் நீங்கள்?
என்னை எங்கே பார்த்தீர்கள்?"

"அரண்மனையில் பார்த்திருக்கிறோம்"

"அரண்மனையிலா?
யார் அரண்மனையில்?"

"எங்கள் அரண்மனையில்தான்."

"உங்கள் அரண்மனையிலா?
யார் நீங்கள்"

"நாங்கள் பாரி மன்னனுடைய
மகள்கள்"

"என்ன...பாரியின் மகள்களா?
அதனால்தான் பாரியின் 
பண்பு உங்களிடமும் 
அப்படியே இருக்கிறது."
கட்டி அணைத்து கண்கலங்கி நின்றார்
ஔவை.

என்மீது எத்துணை  அன்பு
இந்தக் குழந்தைகளுக்கு!
தங்களிடம் இருந்த
ஒரே ஒரு நீலச் சிற்றாடையையும் எனக்குத் தந்து அழகு 
பார்த்து நிற்கும் அன்பினை என்னென்பேன்!
யாது சொல்லி பாராட்டுவேன்.?
யாருக்கு இணையென்பேன்?

சிந்தனையோட்டத்தின் நடுவே
வாழ்த்துப் பாடலொன்றை
உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்தன.

"பாரி பறித்த கலனும்- பழையனூர்க்

காரி கொடுத்த களைக்கொட்டும் - 

சேரமான்

வாராய் என அழைத்த வாய்மையும்

இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு நேர் "

என்ற பாடலால் பாராட்டுப் பத்திரம்
வாசித்தளித்தார் ஔவை .

பாடலைக் கேட்டு ,
பாரி மகளிர் புன்னகைத்திருந்தனர்.

அது என்ன நீலச் சிற்றாடைக்கு
நேர் என்று  பாரியையும்
காரியையும் சேரமானையும்
முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஔவை.
என்ற குழப்பம் இருவரின் முகத்திலும்
நிழலாடியது.

"இந்த நீலச் சிற்றாடைக்கும் 
இந்த மூன்று மன்னர்களுக்கும்
என்ன தொடர்பு?
அப்படியொன்றும் நாங்கள் பெரிதாக செய்துவிடவில்லையே....
அப்படி இருக்க அவர்களை தாங்கள்
இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கு காரணம் ?"


"சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு முறை பாரி அரண்மனைக்குச்
சென்றிருந்தேன்

பாரி என்னை நல்லமுறையில்
கவனித்து தனது அரண்மனையில்
நிறைய நாட்கள் வைத்து மரியாதை
செய்தார்.
நாட்கள் பல கடந்தன.
எனக்கு வேறு சில ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.
என் விருப்பத்தை பாரியிடம்
கூறினேன்
பாரிக்கு என்னை உடனே
அனுப்ப மனமில்லை.
எனினும் என் விருப்பத்திற்கு
குறுக்காக பேச மனம் வரவில்லை.
பொன்னும் பொருளும் கொடுத்து
அனுப்பி வைத்தார்.

நானும் மகிழ்ச்சியோடு சென்றேன்..
வழியில் சில அசம்பாவிதங்கள் நடந்ததால்  மறுபடியும் அரண்மனைக்குத்
திரும்ப வேண்டியதாயிற்று.

நேரே மன்னர் முன் போய் நின்று,
"மன்னா! நின் நாட்டில் கள்வரும்
உளரோ ?"
என்றேன்.

" என் ஆட்சியில் கள்வர்களா?
இருக்காது.... இருக்கவும் கூடாது.
தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்."
என்று நம்ப மறுத்தார் மன்னர்.

"நீ வழங்கிய பொன்னையும் பொருளையும் கள்வர் கவர்ந்து
சென்று விட்டனர். இதுதான் உண்மை.
நீ தான் அவர்களைக் கண்டுபிடிக்க
வேண்டும்."
என்று பிடிவாதமாக முறையிட்டு நின்றேன்.

மன்னர் புன்னகைத்தார்.

"நான் கள்வர் நடமாட்டம் இருக்கிறது என்கிறேன்.
தாங்கள் நம்ப மறுத்து சிரிக்கிறீர்கள்."
என்று சற்று குரலை உயர்த்தி 
கோபமாகக் கேட்டேன்.

"என் ஆட்சியில் கள்வர் பயம்
என்பதை நான் 
ஒரு போதும் ஒத்துக் கொள்ளமாட்டேன்."

"அப்படியானால்...."

"கள்வர் இல்லை என்கிறேன்."

"என் பொருளைக் கவர்ந்து சென்றவர்கள்.."

"தங்களுக்கு வேண்டியவர்களாக இருக்கலாம்."

"எனக்கு வேண்டியவர்கள் என் பொருளைக் கவர்ந்து செல்வரோ?"

"ஏன் ...அந்தக் கள்வன் நானாக இருக்கக் கூடாது..."

"மன்னா...
என்ன சொல்கிறீர்கள்?
எனக்கு ஒன்றும் புரியவில்லை "

"இன்னும் புரியவில்லையா?
அந்தக் கள்வனை நான்தான்
 அனுப்பினேன்."

"தாங்கள் அனுப்பினீர்களா?
ஒன்றுமே புரியவில்லையே..."

ஔவையே ! என்னை மன்னித்து
விடுங்கள்.
இன்னும் அதிக நாட்கள் எங்கள்
அரண்மனையில் இருந்து 
தாங்கள் கவி பாட வேண்டும். 
அதை நான் கேட்க வேண்டும்.
அந்தத் தமிழின்பத்தேன் அள்ளிப்
பருக வேண்டும்  என்று
எனக்கொரு ஆசை.
ஆசையல்ல பேராசை.
அதற்கு இப்படிச் செய்வதைத் தவிர எனக்குவேறு
வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் தாயே" என்றார்.

கலன் நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து அதைப் பறித்துப் சென்ற பாரியின் செயலில் இருந்த அன்பின் 
ஆழத்தைப் புரிந்து கொண்டேன்.
மேலும் சில நாட்கள்
அங்கேயே தங்கி இருந்து
கவி பாடி மகிழ்வித்தேன்.

"அறிந்த ஒன்று. 
 அந்த பழையனூர் காரி
களை கொட்டுக் கதை 
ஒன்று உண்டு என்றீர்களே
அது என்ன?!"

"ஓ...அதுவா?
ஒரு முறை பழையனூரை ஆண்ட
காரி என்ற மன்னன் அரண்மனைக்குச்
சென்றேன்.

கவி பாடினேன்
கை நிறைய பொருள் கிடைக்கும்  என்று காத்திருந்தேன்.
தந்ததோ கையிலொரு களை கொட்டுக் கருவி. அதிர்ந்து போய்
நிமிர்ந்து பார்த்தேன் .

களை யெல்லாம் வெட்டி முடித்த பின்னர்
தாங்கள் இங்கிருந்து செல்லலாம் என்று பணித்துவிட்டுச்
சென்றுவிட்டார்.
உங்கள் அப்பாவைப் போலவே  மன்னனுக்கும் என்னை
அனுப்பிவிட மனமில்லாமல்தான்
கையில் களை கொட்டுவைத் திணித்து விட்டார் உண்மை
 அறிந்தபோது இப்படியொரு அன்பா? இதற்கு என்ன கைம்மாறு  செய்துவிடப்  போகிறேன் என்று நெக்குருகிப் பாடி
நிற்பதைக் தவிர வேறு வழி தெரியவில்லை.

" களை மறுபடியும் மறுபடியும் முளைத்துவிடுமே...." 

"நெடுநாள் தங்க வைப்பதுதானே
அவரின் நோக்கம். நானும் வயலில் களை எடுத்தபடி
மேலும் பல நாட்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று."

"அப்புறம்? உங்களுக்கு மன்னன் மீது கோபமே வரவில்லையா?
களை வெட்டியைக் கையில் கொடுத்து
உங்கள் உள்ளத்தை வென்றுவிட்டார்
பழையனூர்க் காரி...இல்லையா?"

"உண்மை"

"சேரமான் கதையும்  இப்படித்தானா?"

"சேரமான் கதை சற்று மாறுபட்டது.
ஒருமுறை சேரமான் இரும்பொறை
அரண்மனையில் ஒரு பெரிய
விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
வாருங்கள் என்று அழைத்தார்.
நானும் மன்னன்  அழைப்பிற்கு
இணங்க அரண்மனைக்குச் சென்றேன்.
நான் போன நேரத்தில்
அரண்மனையில் விருந்து
தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வேற்று நாட்டு மன்னர்கள் ,தளபதிகள் 
என்று பெரும் பொறுப்பில் இருக்கும் அனைவரோடும்
மன்னர் விருந்தில் கலந்து கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும்
வாராய் என்று கூடவே அழைத்துச் சென்று தன்னோடு  அமர வைத்து 
விருந்தளித்தார். 
ஒரு சாதாரண பெண்ணாகிய என்னை 
உயர்ந்தோர் மத்தியில் அமர வைத்து
மரியாதை செய்த அன்பைக் கண்டேன்.
அந்த அன்பும் மரியாதையும் இன்றுவரை என் நெஞ்சில்
நிறைந்திருக்கிறது."

" மெய் சிலிர்த்து
நிற்கின்றோம்..மனதார வாழ்த்துகிறோம்" 

"இன்று நீங்கள் எனக்கு அளித்த இந்த
நீலச் சிற்றாடை அந்த மூவரின் 
அன்பிற்கு நிகரானது என்பதை
உணர்கிறேன்."
என்றார் ஔவை.

 விளக்கத்தைக் கேட்டு
அங்கவை ,சங்கவை இருவரும்
பெருமிதம் பொங்க ஔவையின்
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.

நீலச் சிற்றாடைக்கு நேர் "
என்ற  ஒற்றை வரி ஔவையின்
புலமையை மட்டுமல்ல 
வேறுபாடு பாராட்டாத
பண்புநலனையும்
மொத்தமாய்த் தூக்கிச் சுமந்து
கொண்டு நிற்கிறது .

அவர்களைவிட..
இவர்களைவிட
.என்று யாரையும் யாரோடும் 
ஒப்பீடு செய்யாத ஔவையை எப்படிப் பாராட்டுவது?
என்ன சொல்லிப் பாராட்டுவது? 
நால்வரையும் ஒத்த தராசில்
தூக்கி வைத்து ஒரே  மதிப்பீடு
வழங்கி, அதனை
நீலச்சிற்றாடைக்கு நேர் என்ற
ஒற்றை வரியில் முடிச்சுப் போட்டு
நம் கையில் தந்துவிட்டார்.
.
என்னவொரு அறிவு!
யாரையும் குறைத்து எண்ண
விரும்பாத    பேரியல்பு!
அதுதான் ஔவை
என்பது
என் முடிவு!


பாரி பறித்த கலன்,
காரி தந்த களை கொட்டு
சேரமான் வாராய் என்ற அழைத்த சொல்
இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு
நேர்....

Comments

  1. கருத்துள்ள இலக்கிய கதையை பதிவிட்டு விளக்கியது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts